சில ஆசைகளுக்கு ஆயுள் கிடையாது; வயது வித்தியாசம் கிடையாது; அப்படி ஒரு ஆசை தான் கோவா. அதிலும் குறிப்பாக சாலைப் பயணம். என் வாழ்க்கையில் நான் நடக்கும் என்று நினைத்திடாத, எதிர்பார்த்திடாத, ஆனால் மனதளவில் பல முறை மேற்கொண்ட ஒரு பயணம். அது நிகழ்ந்த காலமும் சூழலும் மிக முக்கியமானது. அவசியமானது.
Katheyondu Shuruvagide எனும் இயல்பும், யதார்த்தமும், காதலும் கொண்ட கன்னடப்படம். அந்த படத்தின் மீதான ஈர்ப்பு அது படமாக்கப்பட்ட கர்நாடக கடற்கரையின் ரம்மியத்தில் இருந்தது. அந்த படத்தை பற்றிய நினைவுகள் அந்த கடற்கரையிலேயே நிகழ்ந்தது. கால ஓட்டத்தில் மங்கிய அந்த உணர்வு, சில காலம் கழித்து (dia) எனும் மற்றொரு கன்னடப்படத்தை பார்க்கும் பொழுது மீண்டும் கிளர்ந்தது. இம்முறை அது ஆர்வமாக பரிணாமம் பெற்றது. கடற்கரை நகரான கார்வாரின் புறநகர் பகுதியை ரசனைக்குரிய வகையில் பதிவு செய்திருந்தனர். மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் இந்தியாவின் மிக அழகிய ரயில் நிலையங்களில் ஒன்று கார்வார் எனவும், தனித்துவமிக்க கடற்கரை மரவந்தே (Maravante-Tresi Beach) எனும் செய்திகளையும் காணொளிகளையும் கண்ட பொழுது, தென்னிந்தியாவில் சுற்றுலா என்றால் கேரளா மட்டுமே நினைவுக்கு வந்தது மாறி கர்நாடக கடற்கரைகள் மனதில் நிழலாடத் துவங்கி இருந்தது.இந்நிலையில் அர்ஜுன் ரெட்டியில் படமாக்கப்பட்ட மங்களூரின் பசுமையும் கடற்கரையின் அழகியலும், மங்களூரில் துவங்கி கார்வாரில் முடியும் கர்நாடக கடற்கறைகளை பற்றிய பேரார்வத்தையும் ஆச்சர்யத்தையும் நீடித்துவிட்டிருந்தது. மங்களூரு முதல் கார்வாரை தொட்டு அடுத்து இருந்த கோவா வரையிலான முழுமையான கர்நாடக கடற்கரை பயணம் எத்தகையதாக இருக்கும் என்ற ஆசைக்கும் கற்பனைக்கும் இடையில், அதற்கான அற்ப சாத்தியங்களால், அது நிகழும் என்ற நம்பிக்கையோ நிகழ்வோ தேவை இன்றி, அந்த கற்பனையே போதுமானதாக இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜனவரியில் கோவா அரசு சமூக நல மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இந்தியாவில் முதன்முறையாக purple fest என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கோவா கடற்கரைகளையும், அங்குள்ள சாகச நிகழ்வுகளையும் மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. திடீரென வாய்த்த இந்த எதிர்பாராத சந்தர்ப்பத்தில் உள்ள அரிய வாய்ப்பு அந்த பயணத்திற்கான உந்துதலை அளித்தது. எனினும் யாருடன் பயணம் செய்வது என்ற கேள்வி அந்த வாய்ப்பை நீர்த்து போகச் செய்தது. நாளடைவில் அந்த ஆசையும் அது சார்ந்த உரையாடல்களும் மெதுவாக வடிவம் பெற்று சந்தர்ப்பமும் சூழலும் துணையும் வாய்க்கும் பட்சத்தில் தீபாவளி விடுமுறைக்கு செல்வது என்று மனதளவில் தீர்மானம் செய்திருந்தேன். ஆனால் சாதாரண ஒரு பயணமாக இன்றி, அந்த பயணத்தின் எந்தவொரு அனுபவத்தையும் இழந்து விடக்கூடாது என்பதன் பொருட்டும் ஆர்வத்தின் காரணமாகவும், அந்த பயணத்தில் காரை ஓட்டிச் செல்வதென்ற தீர்மானம் செய்து இருந்தேன். அதற்காக அவ்வப்போது வார இறுதி நாட்களில் நீண்ட பயணங்களை மேற் கொண்டு தயாராகி வந்தேன்.
இந்நிலையில், உடல்நிலையளவில் ஒரு பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது. முதுகுத்தண்டு விபத்தால் ஏற்படக்கூடிய உணர்விழப்பு (sensory loss) காரணமாகவும், காயம், வலி போன்றவற்றை உணர முடியாததன் விளைவாகவும், திடீரென ஏற்பட்ட உடல்நலப் பின்னடைவின் காரணம் appendicitis என்பதை கண்டுபிடிக்கவே இரு வாரங்கள் ஆகிவிட்டிருந்தது. இந்த சிக்கலின் காரணமாக அறுவை சிகிச்சை, ஓய்வு என மேலும் இரு வாரங்கள் 4 சுவர்களுக்குள்ளேயே கடந்து விட்டது. விபத்திற்கான 8 வருட காலத்தில் எதிர்கொண்ட உடல்நிலை சார்ந்த மிகப் பெரிய சவால் இது. இது மிகப்பெரிய மன அழுத்தமும், சோர்வும் ஏற்படுத்தி இருந்தது. இவற்றுடன் வேலைப்பளுவும் சேர, இதுவரை கொஞ்சம் கொஞ்சமாக சேகரம் செய்த உற்சாகமும் பிடிப்பும் ஈடுபாடும் களைந்து, நாட்கள் வெறுமையாக நகரத் துவங்கின.
இந்நிலையில் ஒரு வாரகால விடுமுறைக்கான சூழல் ஏற்பட்டது. ஒரு நீண்ட பயணத்திற்கான தேவையும், சூழலும் எதிர்பாராத விதமாக அமைந்ததை உணர்ந்தவுடன் மனம் விழித்துக் கொண்டது. வீடு திரும்பிய இரண்டாவது வாரத்தில் பயணம் என்பது ஓரத்தில் சிறு தயக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், சூழலையும் என் மனநிலையையும் உணர்ந்து, குடும்பத்தினர் ஊக்கமளித்தனர். அதனால் ஏற்பட்ட ஒரு அசட்டு தைரியத்தில் பயணம் மேற்கொள்வதென முடிவானது. ஈரோடு-மைசூரு-மங்களூரு- உடுப்பி-கோகர்னா-கார்வார்-கோவா- ஷிமோகா-பெங்களூரு-ஈரோடு வழித்தடத்தில் பலகட்டங்களாக பிரித்து மேற்கொள்வதென திட்டம். பயணத்தின் போது அன்றைய அஸ்தமனத்திற்கு முன் அடையும் நகரில் தங்குவதென முடிவு. அதன்படி முதல்நாள் மங்களூரு/உடுப்பியிலும், இரண்டாவது இரவு கோகர்னா/கார்வாரிலும், மூன்றாவது இரவில் கோவா அடைந்து, ஒரு நாள் ஓய்விற்கு பின், ஐந்தாவது இரவு சூழலை பொறுத்து ஷிமோகா/பெங்களூருவிலும் தங்குவதென உத்தேசித்திருந்தோம்.
பயணத்திற்கு முந்தைய நாள் இரவு காரின் ignition switch எச்சரிக்கை சமிக்ஞை வந்தது. உடன் வருவதாக இருந்தவர் கடைசி நேரத்தில் வர இயலவில்லை போன்ற எதிர்பாராத சூழல்கள். எதன் பொருட்டும், திட்டத்தில் சமரசமின்றி, வருவது வரட்டும் என பயணம் துவங்கியது. கடற்கரை சாலை பயணத்தை எதிர்பார்த்து மேற்கொண்ட பயணத்தில், எதிர்பாராத விதமாக மைசூருக்கும் மங்களூருக்கும் இடையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊடாக செல்லும் சாலையின் அழகியல் நீண்ட பயணத்தின் முதல் நாளுக்கு தேவையான உற்சாகத்தையும் அமைதியையும் மிக நிறைவாக அளித்தது. மலை, மழை, பசுமை, ஏகாந்தம் அனைத்தும் ஒரு முழுமையான பயணத்திற்கு தேவையான சரிவிகித அளவில் கலந்திருந்தது. குறிப்பாக வனப்பகுதியின் வாயிலில் தனித்து அந்த coffee shop அமைந்திருந்த சூழல் மிக ரம்மியமானது.
இந்த மகிழ்ச்சியின் முடிவில் வேறொரு சிக்கல் காத்திருந்தது. காலை 4:30 துவங்கி இரவு 7 வரை நீடித்த பயணத்தின் விளைவாகவும், உற்சாகத்தில் அவ்வப்போது இடையில் உடலுக்கு கொடுக்க வேண்டிய ஓய்வை கொடுக்க மறந்து, தொடர்ந்து ஓட்ட வந்ததாலும், pressure sore சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது. இதற்கு மேல் கார் ஓட்ட இயலாது. பயணத்தை படுத்த நிலையில் தான் தொடர முடியும். ஒரு சிக்கலில் இருந்து மீண்டு அடுத்த ஒன்றில் சிக்கி விட்ட உணர்வு தந்த தடுமாற்றம். பயணத்தை கைவிடலாமா தொடரலாமா என்ற போராட்டம். கோழிக்கோடு வழியாக திரும்பி விடலாம் என்று அரை மனதாக முடிவானது. கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. உடன் வந்தவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகிறேன் என்ற நினைவு எழ, மீண்டும் ஒரு அசட்டு தைரியத்துடன், திட்டமிட்டபடி இரண்டாவது நாளை தொடர்வது என்றும் முன்னேற்றம் இருந்தால் மேற்கொண்டு தொடரலாம்; இல்லையேல் கைவிடுவது என முடிவு செய்து தொடர்ந்தோம். படுத்த நிலையில் பயணம் தொடர்ந்தது. Tresi beach, Maravante beach, Murdeshwar சிவன் கோவில், Mirjan Fort வழியாக மாலை கோகர்னாவை (Gokarna) அடைந்தோம். பிரபலமான சுற்றுலாத் தளமாக இருந்த போதிலும் எதிர்பார்ப்பிற்கு மாறாக சிறிய ஊராக இருந்த கோகர்னாவில் wheelchair accessible தங்குமிடத்தை கணலடுபிடிப்பது மிகவும் சவாலாக இருந்தது.
மறுநாள் மதியம் கோவாவை அடைந்த போது வெள்ளிக்கிழமைக்கே உண்டான வார இறுதி உற்சாகம் சாலைகளில் வழிந்தோடியது. பயணத்திற்கு இடையூறும் ஏற்படுத்தக்கூடும் என்ற சந்தேகத்துடன் எதிர்பார்த்திருந்த தென்மேற்கு பருவமழை, அதுபோல் எந்த சிரமமும் கொடுக்காமல், அந்த கடற்கரை விடுதியில் நாங்கள் சேரும் சமயத்திற்கு காத்திருந்தாற்போல் பெய்து தீர்த்தது. இடர்களையும் சந்தேகங்களையும் கடந்து, சேர வேண்டிய இடத்தை அடைந்ததும் ஒரு முழுமையான நிறைவான உணர்வு ஏற்பட்டது. அடுத்த ஒரு முழுநாள் ஓய்வு pressure sore மற்றும் உடலுக்கு ஓய்வளித்து விட்டு, மறுநாள் பயணத்தை நிறைவு செய்வதென முடிவானது. அதன்படி ஞாயிறு காலை 9:15 மணி துவங்கியது பயணம். சுமார் 3 மணி நேரம் ஆள் அரவமற்ற அடர்வன மலைப்பகுதி வழியாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஊடருத்து சென்ற, சுமார் 60கிமீ மலைப் பாதை மிகவும் சவாலானது. இந்த பயணத்தில் கர்நாடக எல்லை சோதனைச்சாவடியை ஒட்டி மட்டும் கடைகளும் மனிதர்களும் தென்பட்டனர். அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வனப்பகுதி வழியாக பயணித்து சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலையை மதியம் எட்டி, இரவு 2 மணிக்கு, தொடர்ச்சியான 17 மணி நேரத்திற்கு பிறகு, 848கிமீ கடந்து பயணத்தை நிறைவு செய்தோம்.
இந்த பயணத்தின் துவக்கத்தில், ஏன் கேரளாவைப் போல் கர்நாடக கடற்கரை மற்றும் தொடர்ச்சிமலை சுற்றுலாவிற்காக அறியப்படவில்லை என்ற கேள்வி இருந்தது. அதற்கான பதிலை இந்த பயணம் அளித்தது. இது முற்றிலும் கர்நாடக சுற்றுலாத்துறையின் தோல்வி. பல இடங்களிலும் சுற்றுலாத்தளங்களுக்கான பெயர்பலகைகளும் திசைகாட்டிகளும் கூட கன்னடத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. உள்கட்டமைப்பு ரீதியாகவும், தளங்களை விளம்பரப்படுத்தவும் பெரிய முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதற்கு, அந்தந்த வழிகளில் கூட திசைகாட்டிகள் இல்லை என்பதே போதுமான சான்று. மங்களூரு போன்ற மிகப்பெரிய நகரத்தில் கூட wheelchair accessibility குறித்து சரியான புரிதல் விடுதிகளுக்கு இல்லை. Wheelchair accessible restroom என்பது குறித்தெல்லாம் எந்த புரிதலும் இன்றி, சாய்தளம் வைத்து விட்டாலே wheelchair accessible என்றளவிலேயே அவர்களது புரிதல் உள்ளது.
ஒரு பயணம் என்ன செய்யும் என்பதையும், பயணம் என்பதன் அனுபவத்தையும் உணர்த்திய 5 நாட்கள். பல தயக்கங்களை உடைத்து, நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்து, மீண்டும் என்னை மீட்டெடுத்த முக்கியமான திருப்புமுனையாக அமைந்த பயணம். இதுவரை பல விசாரிப்புகள், எச்சரிக்கைகள் என அனைத்தையும் திட்டமிட்டு முழுமையான தயாரிப்புடன் மட்டுமே பயணம் செய்து வந்த நிலையில், அந்த தயக்கங்களும் அதீத எச்சரிக்கையுணர்வும் தகர்ந்துள்ளது.
வாழ்வின் மிகச்சிறந்த இந்த அனுபவத்தை சாத்தியப்படுத்தியதற்காக உடன் பயணித்த மோகனுக்கும் கவிராஜிற்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்

No comments:
Post a Comment