மதியவேளை, மூன்றுமணி நேரப் பேருந்து பயணம். ஈரோட்டில் கிளம்பியபோது சன்னலோர இருக்கை கிடைத்த மகிழ்ச்சியில் அமர்ந்தாயிற்று. சன்னல் வழியே காற்றோடு வெயிலும் பட்டையைக் கிளப்ப, இருக்கை மாற்றி அமர்ந்தேன். இரண்டுபேர் அமரும் இருக்கையில் சன்னலோரம் அமர்ந்திருந்த பெண் அழகாக மல்லிகைப்பூ தொடுத்து வந்தார். கருத்த கைகளில் வெண்மை அழகாய் இருந்தது. பயண சினேகத்தில் பேசிக்கொண்டே வந்தவர் தொடுத்த மல்லியோடு கொண்டு வந்திருந்த ரோஜா பூக்களை என்னிடம் கொடுத்து வைக்கச் சொன்னார். தன் தோழிக்கு வாங்கி செல்வதாகக் கூறியிருந்தமையால், அவர்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்றேன். பரவாயில்லை நீங்களும் கொஞ்சம் வையுங்கள் என மூன்று ரோஜாவையும் கொடுத்ததோடு, தலையில் வைக்க ஊக்கு இருக்கா கண்ணு என்று கேட்டுக் கொடுத்தார். கையில் ஊக்கு கொடுத்தால் மனச்சங்கடம் வருமெனச் சொல்லி, என் புத்தகத்தின் மேல் வைத்தார். நிறைவான மனதோடும் முகம் மலர்ந்த சிரிப்போடும் பெற்றுக்கொண்டேன். பூ வைக்க வலிக்குமா என்ன?
அருகிலிருந்த மூன்றுபேர் அமரும் இருக்கையில் கைக்குழந்தையோடு இளம் தம்பதியினர் அமர்ந்தனர். வெயில் இன்னும் குறைந்தபாடு இல்லை. ஆரன் சப்தம் குழந்தையை விருக்கென பயம் கொள்ளச் செய்தது. வேறொரு பின் இருக்கையைக் காட்டி, அங்கே செல்லச் சொன்னேன். அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் வெயில் படாத கடைசிப் பகுதிக்கு மாறினேன். பூ கட்டும் அக்காவும் ஆசுவாசமாக அமர்ந்தார். மூடியிருந்த புத்தகத்தை வாச்சிகளானேன். ஒரு அழைப்புக்காக அலைபேசியை எடுத்துப் பார்த்தாலும், புத்தகம் விடாமல் பிடித்துக்கொண்டது. நான்கு அத்தியாயம் முடித்த வேளையில் அடுத்த நகரம் வந்திட, கூட்டம் அலைமோதியது. சூரியனும் சற்றே தணிந்திருந்தார்.
இளம் பெண் ஒருவர் நான் அமர்ந்திருந்த இருக்கையில் சன்னலோரம் வந்தமர்ந்தார். பள்ளி விடுதியில் தங்கி இருந்த மகனை நான்கைந்து பையோடு விடுமுறைக்கு (10 அல்லது +2) வீட்டுக்கு அழைத்துச்செல்லும் ஒரு அம்மா மற்றும் விடுமுறைக்கு மகனை (5ம் வகுப்பு) தன் அம்மா வீட்டிற்கு அழைத்துச் செல்லும் இன்னொரு நடுத்தர வயதுப் பெண்... இருவருமே மீதம் இருக்கும் ஒரு இருக்கைக்கு வர, நான் நடுவில் நகர்ந்து, என் அருகில் இரண்டு மகன்களையும் அமரச் செய்தேன். பூ கட்டும் பெண்ணருகில் பெரிய பையனின் அம்மா உட்கார்ந்துகொண்டார். சிறுவனின் தாய் நின்றபடி வந்தார். ஓட்டுநர் அவரை எஞ்சின் மேல் உட்காரச் சொன்னார். சூரியனுக்கும் எஞ்சினுக்கும் போட்டி வைத்தால், இப்போது எஞ்சினே வெல்லும் (இரண்டுமே அன்று அளவில்லாமல் கொதித்தது தனிக்கதை). இருக்கையில் அமர்ந்திருந்த அம்மா, மகனை அழைத்து, விடுதியிலிருந்து எடுத்து வந்த பையிலிருந்து போர்வையை எடுத்து அவருக்குக் கொடுக்க சொன்னார். ஊசி நுழையா கூட்ட நெரிசலில் சற்றே சிரமப்பட்டு எடுத்துக் கொடுத்தான். முகமும் அகமும் மகிழச் சிறுவனின் தாய் அதைப் பெற்றுக்கொண்டு அமைந்தார்.
இப்போது எங்கள் சன்னலோர இளம் பெண்ணின் மீது உங்கள் பார்வை வரட்டும். பார்த்த நொடியில் கல்லூரி படிக்கிறாள் என்பது புரிந்தது. கிராமப்புறப் பெண். இங்கே போர்வை பரிமாற்ற கவனத்திலிருந்ததால், நோட்டு ஒன்றை எடுத்துப் படித்துவந்தவரைக் கவனிக்க மறந்துவிட்டேன். மொட்டு மொட்டாக அழகாகத் தொடுக்கப்பட்ட எழுத்துகள். நோட்டுப் புத்தகத்திலிருந்த அழகிய ஆங்கில வரிகளைப் படிக்கத் தொடங்கினேன். உடல் சார்ந்த ஒரு படிப்பு என்று மட்டும் தெரிந்தது. எங்கள் இருவர் கைகளிலும் வாசிப்புக்கு ஒன்று இருந்தது மகிழ்வைத் தந்தது. என்ன படிக்கறம்மா என்று கேட்க முற்படும் போது, கூடுதலாக இரு கண்கள் என்னோடு பயணிப்பதாக உணர்ந்தேன். அருகில் அமர்ந்திருந்தானே குட்டி சுட்டி பயல்... அவன் கண்கள் தான் அது. வேகமாக எழுத்துக்கூட்டி என் புத்தகத்தைப் படித்து வந்தான். அசைவேதும் இல்லாமல் என் தலையை மட்டும் உயர்த்தி பார்த்தேன். உழைத்த கருத்த மெல்லிய உடலோடு, கழுத்தில் மங்கள மஞ்சள் கயிறு மட்டுமே இருந்த அவனது அம்மாவின் கண்கள் மகனின் உதட்டசைவைக் கூர்ந்து கவனித்து வந்தது. என் பார்வையை அவர் உணர்ந்திருப்பார் போல, பார்த்து புன்முறுவல் பூத்தார். சிரித்தேன். எங்கள் பார்வை பரிமாற்றத்தை உணர்ந்த அவன் எங்கள் இருவரையும் பார்த்தான்.
அவன் அம்மா கண் ஜாடையில் வாசிப்பைத் தொடரச் சொன்னார். அவனோ கண் சாடையில் அலைபேசி கேட்கிறான். இந்த மெளன யுத்தத்தில் வென்றது அம்மாவே. நான் சற்றே புத்தகத்தை அவன் பக்கம் திருப்ப, என்னைப் பார்க்க பொறுமையா படி... கை வைத்துப் படி என்றேன். ஆர்வமாய் மீண்டும் தொடங்கினான். சிறுபிள்ளை, சில வார்த்தைகளை கடினமாக இருக்க, நான் எழுத்துக்கூட்டிப் படிக்க, அவனும் செய்தான்.
மீண்டும் இந்தப்பக்கம் கல்லூரி பெண். மௌனமாய் வாய்விட்டுச் சொல்லிப் படித்து வந்தார். என்ன படிக்கறம்மா என்று கேட்டே விட்டேன். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், வார இறுதி விடுமுறைக்கு வீட்டுக்குச் செல்வதாகவும் கூறினார். இதற்கிடையே அலைபேசி அடிக்க பேசினார். வீட்டுக்கு தானே வந்துவிடுவதாகவும், பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டாம் எனவும் மறுமுனையில் இருப்பவரிடம் கூறினார். பரஸ்பர விசாரிப்புகள் நடந்தன. எங்களைச் சிறுவனும் கவனித்தான். சிறு கிராமத்தைச் சார்ந்த அந்தப் பெண் அரசுப் பள்ளியில் பயின்று இரண்டாம் கலந்தாய்வில் இங்கே இடம் கிடைத்துச் சேர்ந்ததாகக் கூறினார். தாமதமாகச் சேர்ந்ததால் நிறையப் படிக்க வேண்டி இருப்பதாகவும், விடுமுறை முடிந்து வருகையில் தேர்வு இருப்பதால் படிப்பதாகவும் கூறினார். பொறுப்பாகப் பேசினாள். என் உதட்டில் புன்முறுவல், கண்சாடையில் தொடர்ந்து படிக்கச் சொன்னேன். இப்போது நானும் சிறுவனும் எங்கள் புத்தகத்தைத் தொடர்ந்தோம்.
சற்றுநேரத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் இயங்க, இருபக்க மலைக்கு நடுவே காற்று பலத்த வேகத்தில் அடிக்கத் தொடங்கியது. கைகளிலிருந்த புத்தகமும் நோட்டும் சப்தமாய் அலறத் தொடங்கின. அவற்றைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் புத்தகத்தையும் நோட்டையும் மூடினோம். நால்வரின் கண்களும் இப்போது மலையை நோக்கி. இருப்பதிலேயே பெரிய புத்தகமான இயற்கையைப் படித்தோம். அம்மாவின் முகத்தை மீண்டும் பார்த்த சிறுவன் கிடைக்காத அலைபேசியை ஏக்கமாய் பார்த்தான். மெல்லப் பேச்சு கொடுத்தேன். படிப்பு, புத்தகம், ஆசிரியர், பள்ளி, வீடு, அம்மாயி வீடு என எல்லாவற்றைப் பற்றியும் பேசினான். காத்திருந்த அழைப்பு வர பேசி முடித்தேன். அரசுப் பேருந்து மோட்டலில் நின்றது. தனக்கு இதெல்லாம் வேண்டுமென கேட்ட மகனிடம், அக்காவிடமும் கேள் என்றார் அவர் அம்மா. உங்களுக்கு ஏதும் வேணுமா என்றான். சற்றுநேரத்தில் இறங்கும் இடம் வருவதால் வேண்டாமென்றேன். வேகமாய் இறங்கி தனக்குத் தேவையானதை வாங்கிட ஓடினான். இறங்கும் இடம் வந்தது. சிறுவனுக்கு புத்தகம் கொடுத்தேன். வேண்டாமென மறுத்தான். நன்றாகப் படி எனச் சொல்லி அவனிடமும், மருத்துவ மகளிடமும் சொன்னேன். பூ கொடுத்த அக்கா, போர்வை கொடுத்த அம்மா, நோட்டுப் புத்தகத்தோடு கனவைச் சுமந்த மகள், விளையாட்டாய் வாசிக்க முற்பட்ட சிறுவன், வீட்டிற்குச் செல்லும் ஆவலோடு பெரியவன், வாசிக்கும் மகனை ரசித்த அம்மா என அனைவரிடமிருந்தும் சிரிப்போடு விடைபெற்றேன். நேர்கோட்டில் நாங்களும் பயணமும்.
சிலநாட்களாக சிறுவட்டத்துள் சிக்கித்தவித்த என் மனம் சற்றே ஆசுவாசமடைந்தது. பயணத்தில் பாட்டு பிடித்த ஒன்றேயாயினும், பாட்டில்லா இப்பயணம் மிகப்பிடித்த ஒன்றாய் மாறிப்போனது. அன்பு சூழ் உலகு.

Magi this is Ln. Noorulla Shariff I do write on my blog do visit & Comment.My Blog page.
ReplyDeleteUthangarai Rj Shariff
Rj Noorulla Shariff 's desk.