"அலோ யாரு? சக்கரகத்தி சந்திரனா பேசறது "?
"ஆமாங்க.."
" அட, நம்ம ஊரு தெக்கால வலவு, கண்ணப்ப கவுண்டரு ஊட்டு சின்ன கவுண்டுச்சி, இருக்குதுல்ல"…
" ஆமாங்க சாமி"
"அது அவங்க வூட்டுக் கிணத்துல வுழுந்து செத்துப் போயிடுச்சாம். அதுக்கு சீரு பண்ணாம சவத்தை எடுக்க கூடாதுனு எல்லோரும் சொல்லறாங்க. அதனால, நீ சீருக்கு வேணுங்கிற சாமானத்தெல்லாம் சரியா வங்கிட்டு சீக்கிரமே எலவூடு வந்து சேரு" என்று சொல்லிட்டு போனை வைத்தவரின் உடன் பங்காளி வகையில் தான் சாவு நடந்திருக்கிறது.
எழவு நடந்த வீட்டில் உறவுகள் எல்லோரும் கூடி, ஆளுக்கொரு பக்கமாக நின்று குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள். 'பணங்காசு எத்தனை கிடந்து என்ன பண்றது? கண்ணப்பனும், அவன் பொண்டாட்டியும் நிம்மதியா இல்லையே".
'ஆமா, நாப்பது வயசுக்கு மேலாச்சு, இன்னும் பொட்டப்புள்ளைக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க முடியாம வூட்டுலையே வச்சிருந்தா அவங்களால எப்படி நிம்மதியா இருக்க முடியும்?'.
இந்த காலத்தில பிஞ்சிலே பழுத்து வூட்டை வுட்டு ஓடற புள்ளைங்க, பசங்களுக்கு இருக்கிற துணிச்சல் இந்த ஜோதி புள்ளைக்கு இல்லையா, அல்லது இவ தலையெழுத்தே இப்படித்தானானு நினைச்சுட்டு போறதானே புரியல போங்க..'
இப்படியாக எழவுக்கு வந்தவர்களின் பேச்சு வலுத்துக் கொண்டிருந்தது. இதை விட அதிகமான சாடைமாடை பேச்சுகளை கேட்டு சலித்து இருந்தனர் கண்ணப்பன் தம்பதியினர்.
"ஏப்பா, கண்ணப்பா, இன்னுமா உம்புள்ளைக்கு ஒரு தேவை கூடல. புள்ளைய இப்படியே ஊட்டுல வச்சுட்டு இருக்கியே வயசாயிட்டே போவுதுல்ல, ஏதாவது சாதகம் கீது பாக்கறீங்களா? இல்லையா?
வயசுப் புள்ளைகள நாப்பது வயசாகியும் கல்யாணம் பண்ண முடியாம ஊட்டுல வச்சிருக்கிறதெல்லாம் எவ்வளவு மன வேதனைங்கிறது வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்குப் புரியாது. அந்த வேதனையை அனுபவிக்கும் போதுதான் அந்த துன்பத்தின் வலியும், அழுத்தமும் எவ்வளவு கொடூரமானது என்று புரியும்.
அவரும் வீட்டுக்கு, வரும் கல்யாணப் புரோக்கர்கள் எல்லோருக்கும் ஐநூறு, ஆயிரம், இரண்டாயிரம்னு கொடுக்கறார். 'இதோ பாருங்க மாப்பிள்ளைக சாதகம் நிறைய கைவசம் இருக்கு. மாப்பிள்ளை வீட்டுல பேசி இந்த சாதகத்தை முடிச்சுட்டு வந்தடறேன்'ங்க என பணத்தை வாங்கிட்டுப் போகிறவர்கள் திரும்ப வருவதேயில்லை. திருமண தகவல் மையங்களில் திரும்ப திரும்ப பணம் கட்டி பதிவை ரினீவல் செய்துட்டு தான் இருக்கிறார்.
இப்படி தான் ஒரு நாள் காலையில ஆறு மணி இருக்கும், கண்ணப்பன் முகம் கழுவி காபி குடிச்சிட்டுயிருந்தார். அந்த நேரத்தில் வந்த புரோக்கர் ஒருத்தர், "மாப்பிள்ளை வீட்டுல நம்ம பாப்பா சாதகம் பார்த்து நல்லாயிருக்குனு சொன்னாங்க. நீங்க எங்கூட வந்தீங்கன மாப்பிள்ளை வீட்டைப் பார்த்துட்டு, அப்படியே மாப்பிள்ளையும் பார்த்துட்டு அவங்க வீட்டுலயும் நேரில விசாரிச்சுட்டு வந்திடலாங்க" என விடாப்படியாக வற்புறுத்தினார். கண்ணப்பனும் யோசித்தார். 'சரி, ஒரு தடவை நேரில போயிட்டுதான் வரலாமே! இவனுக நிசத்த சொல்லறானுகளா? நம்மள நம்ப வச்சு பணத்தை கறக்கிறனுகளா'னு பார்க்க அவருடன் கிளம்பினார். வீட்டிலிருந்து ஆறு மணிக்கு காரில் கிளம்பியவர்கள் ஒரு பத்து,இருபது ஊர் தாண்டி நாப்பது கிலோமீட்டர் கடந்து காடு மேடெல்லாம் காருல போயிட்டேயிருந்தாங்க. "ஏப்பா எந்த ஊரு? இன்னுமா ஊரு வருது" என கண்ணப்பன் அலுத்துப் போயி கேட்டார். 'அதோ வந்திடுச்சு பாருங்க. கார நிறுத்துங்க, நிறுத்துங்க இங்கதான்'னு சொல்லி ஒரு ஊட்டு முக்குல நிக்க வச்சார். சுத்தியும், மா, சப்போட்டா, நெல்லி, தென்னை மரமா நின்னுட்டு இருந்தது பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாக மனசுக்கு நிறைவா இருந்தது கண்ணப்பனுக்கு .இத்தனை தூரம் இட்டாரித் தடம் தாண்டி வந்த சலிப்பு விலகிடுச்சு. இந்த தோட்டத்தில் கிணறோ, போர்வெல்லோ இருக்கணும் இல்லைனா கடலைச் செடி இவ்வளவு தளதளன்னு இருக்குமா?.. மாப்பிள்ளை வீடு மெத்த வீடு, காடு, தோட்டம் இருக்குதுனு புரோக்கர் நிசத்த தான் சொல்லியிருக்கான். இந்த எடத்த எப்படியும் பேசி கல்யாணத்தை முடிச்சிடணும் என மனக்கோட்டை கட்டினார்.
இவர்கள் வீட்டு காம்பவுண்ட் கேட்டைத் தொட்டதும், அங்கே கட்டியிருந்த நாய் ஒன்று "லொள்.. லொள் ..லொள் என சத்தமிட்டு வீட்டுக்கு புதிய நபர் வந்திருப்பதை தன் எஜமானருக்கு உணர்த்தியது.
நாய் சத்தம் கேட்டதும் ஐம்பது வயசுக்காரர் ஒருவர் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார்.
"யாருப்பா? நீங்க?"
"ஏனுங்க நான்தாங்க புரோக்கர் பொன்னுச்சாமிங்க" என்று புரோக்கர் அறிமுகப்படுத்திய போது, அவர் இருவரையும் ஏற இறங்க பார்த்தார். அவரது பார்வையே கண்ணப்பனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இவரே "இங்கே பெரியசாமிங்கிறது நீங்கதானே"? என்று கேட்டார்.
அவர் முகத்தில் ஒரு சிரிப்பு. "அட நம்ம பெரியசாமி மவுனுக்கு ஜாதகம் விசாரிக்க வந்தீங்களா?. அவங்க வீடு அங்கே இருக்குது பாருங்க. பையன் நல்ல பாட்டாளிங்க என்ன சொத்து பத்து இல்லைங்க நம்ம தோட்டத்தில சாலை போட்டு, தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யறாங்க வெள்ளாமை எல்லாம் பரவாயில்லைங்க" என்றார்.
"இல்லைங்க, உங்க வூட்டு பையன் சாதகம்னு சொன்னாங்களே" என்றார் கண்ணப்பன்.
"எங்க வூட்டுல, எங்களுக்கு ஒரு பையன் தாங்க. அதுக்கு போன மாசமே கல்யாணம் ஆகிப் போச்சுங்க. இப்படித் தாங்க கல்யாண முடிஞ்சு போன சாதகத்தை மறுக்காவும் கொடுக்கறாங்க" என வாயெல்லாம் பல்லாக சொன்னார்.
' பெரியசாமி பையனுக்கு வீடு, தோட்டமெல்லாம் சொந்தமாக கிடையாதுங்க' என்று அவர் முதலில் சொல்லும் போதே கண்ணப்பன் கட்டிய மனக்கோட்டை சுக்கு நூறாக உடைய ஆரம்பித்து விட்டது. அவருக்கு வந்த கோபத்தில் மூன்றாவது நெற்றிக் கண்ணைத் திறந்து புரோக்கரை பார்க்க, அந்த புரோக்கர் அவர் பக்கமே திரும்பி பாக்கம வேகமாக நடையை எட்டிப் போட்டு தூரமாக போயிட்டிருந்தார். அதுக்குப் பிறகு புரோக்கர்கள் வந்து மாப்பிள்ளை வீடு பார்க்க போலானு கூப்பிட்டாலே வீட்டுக் கதவைச் சாத்திட்டு உள்ளே போக ஆரம்பித்து விட்டார்.
அதோடவா போச்சு, சோசியர் எங்கே எந்த கோவிலில் பரிகாரம் செய்யணும் சொல்றாரோ அங்கெல்லாம் பல மைல் கடந்து குடும்பத்தோடு போயி,பரிகாரம் செஞ்சுட்டு வருவார்கள். கோவிலுக்குப் போயிட்டு வந்ததும் ஏதாவது ஒரு சாதகம் ஏதேச்சையாக வந்தால் கூட, கோவிலுக்குப்ீ போயி பரிகாரம் செஞ்சுட்டு வந்ததால் தான் இந்த சாதகமே வந்ததுனு நம்புவார். அப்படி வரும் சாதகத்தை ஆசையோடு எடுத்துட்டு போய், சோசியரிடம் கொடுத்து பார்ப்பார், இவர் பாக்கிற சோசியர் நல்லா இருக்குனு சொல்லுவார். சந்தோஷத்தோடு மாப்பிள்ளை வீட்டுக்கு கொடுத்தனுப்பி பார்க்கச் சொன்னா அவங்க சோசியர் வேண்டானு சொல்லிடுவார். மாப்பிள்ளை வீட்டுல பார்த்துட்டு சரினு சொன்னா, இவங்க சோசியர் வேண்டானு சொல்லுவார்.இது தான் அடிக்கடி நடந்துட்டு இருக்கும். ஏதோ ஒரு ஜாதகத்தை இரண்டு சோசியரும் ஜாதகம் சரியா இருக்கு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லறப்ப, சொத்து பத்தாது ஒரு அடிப்படை சொத்து இருக்க வேண்டுமே என்பதில் யோசிக்க ஆரம்பித்து கல்யாணப் பேச்சு நின்னு போகும். இப்படியாக வயசு நாற்பதை தாண்டியும் இன்னும் மாப்பிள்ளை தேடுகிறார்கள். கொடுப்பதற்கு மனமில்லையோ அல்லது அந்தப் பொண்ணுக்கு கல்யாண யோகமேயில்லையோ தெரியல.
கண்ணப்பன் பொண்ணு ஜோதியும், நல்ல மாநிறம் சராசரியான உயரம். எடுப்பான மூக்கு. திரும்பி பார்க்கும் அழகு தான். ஆனால், இப்போது நாற்பதைக் கடந்திருப்பதால் முகத்தில் லேசாக சுருக்கம் விழ ஆரம்பித்து விட்டது.
அவள் வயதொத்த பொண்ணுகளுக்கெல்லாம், வயசுக்கு வரப் போற வயசில பொட்டப்புள்ளைக வளர்ந்து பெரிசா இருக்கறாங்க. அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் தலையை குனிந்து கொள்வாள் ஜோதி. நெருங்கிய உறவுகளில் அவள் வயதை விடக் குறைவான பெண்களுக்கு திருமணம் நடக்கும் போது எந்த விதமான சலனத்தையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல், உள்ளுக்குள் குமைந்து போவாள். தனக்கு திருமணமாகவில்லையே என மற்றவர்கள் அவளைப் பார்க்கும் பரிதாபப் பார்வை, அந்த பார்வை அவளுக்கு தரும் மனவேதனையை யாரிடமும் சொல்லி அழத் தைரியமற்றவளாய் தனிமையில் முடங்கினாள் ஜோதி.
படிக்க வச்சு தொலைஞ்சிருந்தாக் கூட ஏதாவது வேலைக்குப் போயிருப்பாள். அங்கே யாரையாவது பிடித்துப் போய் காதலில் விழுந்து எழுந்து வந்திருக்கலாம். அல்லது ஓடியாவது போயிருக்கலாம். அந்த கிரகத்துக்கும் கொடுத்து வைக்கவில்லை. காரணம் அவளுக்கும் படிப்புக்கும் நூறு கிலோ மீட்டர் தொலைவு. எவ்வளவோ எட்டிப் பிடிக்க முயன்றும் வருஷசந்தான் நீண்டு கொண்டே போனது அதே ஏழாம் வகுப்பிலேயே நின்றிருந்தாள்.
சரி படிப்புத் தான் வரல, தையல் கிளாஸ் போயி துணி தைக்கவாது பழகியிருக்கலாம். துணியை அளவு எடுத்து தெக்கச் சொல்லிக் கொடுக்கற கணக்கு கூட அவளுக்கு வரல. எந்த பொழைப்பும் வேண்டாம்டா சாமினு வீட்டுக்குள்ளே இருந்தவளுக்கு நான்கு சுவத்துக்குள்ளே இருக்கும் டி.விப் பெட்டி அத்தனை சினேகிதமாயிடுச்சு.
திரையில் வரும் கதநாயகர்களுடன் டூயட் பாடினாள். அஜித், விஜி, சூர்யா என நாயகர்களுடன் குடும்பம் நடத்தற அளவு வெட்கப்பட்டு நிற்பாள். இதனாலோ என்னவோ நிஜ ஹீரோ அவள் கண்ணில் படவேயில்லை. படத்துடன் நிறுத்தி இருந்தாக் கூட பரவாயில்லை. சீரியலில் விழுந்த போது,அவளுக்கான உலகமே வேறானது.காலையில் பத்து மணிக்கு டி.வி சுவிட்சை ஆன் செய்தால், நேரம் கடந்து செல்வது தெரியாமல் அவள் அம்மா, "ஜோதி வந்து மத்தியானச் சோறு தின்னு" என பல முறை கூப்பிட்டால் தான் வருவாள். டி.வியோடு அப்படி ஐக்கியமாகி இருந்தாள்.
அவள் அப்பா புரோக்கரை கூட்டி வந்து ஜாதகம் பார்ப்பதில் எல்லாம் அவளுக்கு இப்போது எந்தவித பிடிப்பும் ஏற்படவேயில்லை. ஒன்றிரண்டு மாப்பிள்ளை வந்து பார்த்துட்டு போனார்கள். ஆனால், அவள் மனசு மழுங்கி சுணங்கிக் கிடந்தது.
சரி இவளுக்கு கல்யாணமே பண்ண முடியாது என கண்ணப்பன் முடிவுக்கு வந்த போது அவ தங்கச்சிக்கு முப்பத்தைந்து வயசாயிருந்தது. என்ன நேரமோ, அவ யோகமோ அவளுக்கு உடனே கல்யாணம் கூடிப் போச்சு.
'மூத்தவள் இருக்க இளையவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு காலம் மாறிப் போச்சு. சொத்துக் கிடந்து மயிரையா புடுங்கறது புள்ளைக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ண முடியல, இதெல்லாம் என்ன பொழப்பு பொழச்சு என்ன புண்ணியம்' என காதுபடவே வரும் பேச்சுக்களுக்கு பயந்து பல நேரங்களில் அந்த வீட்டில் இருந்து யாருமே வெளியே வருவதில்லை.
தொலைக்காட்சியில் கணவன் மனைவி கொஞ்சுவதை பார்த்த போது வராத உணர்வு, அவளுடைய தங்கச்சி கல்யாணம் செஞ்சுக்கிட்டு வீட்டுக்குள் வந்து, அவள் புருஷனோட சிரித்து பேசுவதையும், கொஞ்சுவதையும் நேரில் பார்த்தும் ஜோதிக்கு மனசுக்குள் ஆசை துளிர் விட ஆரம்பித்தது.
அதன் பிறகு அவள் அப்பாவிடம், "ஏப்பா தங்கச்சிக்கு கல்யாணத்தை பண்ணி வச்சுட்ட, எனக்கு ஏப்பா நீ இன்னும் கல்யாணம் பண்ணி வைக்கலை?"னு கேட்டதும், கண்ணப்பனுக்கு சப்தநாடியும் உள்ளுக்குள் இப்பவே அடங்கிடக் கூடாதா, இதைக் கேட்டு நான் இன்னும் உசரோடே இருக்கணுமானு கதறி அழுவார்.
அதற்கு பிறகு, அவர்கள் வீட்டுக்கு யார் வந்தாலும், 'எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு வந்தீங்களா'னு கேட்பதை வழக்கமாக்கி கொண்டவளை அவர்கள் வீட்டினரால் எதுவும் செய்ய இயலாது போனது. கல்யாணம் செய்யாம விட்டதால் மனசு பாதித்து பைத்தியம் பிடித்து போச்சு என உறவுகள் அவளை ஒதுக்கி வைத்தார்கள்.
அன்று அதிகாலையில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 'எனக்கு கல்யாணம் பண்ணி வை' எனக்கு மட்டும் மாப்பிள்ளை கிடைக்கலையா? ஊரில எல்லாரும் கல்யாணம் கட்டிகிட்டு புருஷனோடு போறாங்கனு.. கிணத்து மேட்டு மேல உட்கார்ந்துகிட்டு கத்தி, பேசிட்டு இருந்தவளின் சத்தம் வீட்டின் உள் அறை வரை கேட்டது. தூங்கிக் கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு வெளியே ஓடி வருவதற்குள் வேகமாக திரும்பியவள் தவறிப் போய் கிணற்றில் விழுந்தாள். கிணற்றுக்குள் இறங்குவதற்காக கட்டி வைத்திருக்கும் படிக்கல்லின் மீது தலை மோதி ஜோதியின் தலையில் பலத்த காயம். கிணற்றுத் தண்ணி சிவப்பாக மாறும் அளவு ரத்தம் கொட்டியது.
ரத்தம் வடிய அவளை தூக்கி வந்து கயிற்றுக் கட்டிலில் கொண்டு வந்து வைத்தார்கள். மண்டையைச் சுற்றி காயத்தில் வீட்டில் இருக்கும் அத்தனை மஞ்சளையும் வைத்து அழுத்திகட்டி தலையைச் சுற்றி கட்டுப் போட்டார்கள். ஆனால், அவள் மூச்சு நின்று போயிருந்தது. ஊருல யாராவது போலீஸுக்கு போயிடப் போறாங்க என்று அவளை எரிப்பதற்காக வேகமாக காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள். அத்தனை அவசரத்திலும் கல்யாணம் ஆகாத அவளுக்கு "கல்யாண சீர்" நடத்துவதற்கான சடங்குகளை செய்ய உறவுகள் கூடி இருந்தார்கள். அவர்கள் குல வழக்கப்படி அருமைக்காரர் வந்து இருந்தார். ஜோதியை, குளிப்பாட்ட முடியாத சூழலில் அவளுக்கு புதுப்புடவை சுற்றி, எட்டித் தழை மாலை போட்டார்கள். அந்த எட்டித்தழை கிடைக்காமல் எங்கோ அலைந்து திரிந்து பல மைல்கள் தள்ளிச் சென்று பறித்து வந்து மாலை கட்டி, மாலை போட்டு சீர் செய்து அவள் கைக்கு அருமைக்காரர் கங்கணம் கட்ட, அவள் அம்மாவும், அப்பாவும் 'உசரோடு இருந்து உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வைக்காத பாவி ஆனோமே எந்தங்கமே' என கதறி அழுதது கண்டு வானமும் தன் மழையை சாரலாக தூவ ஆரம்பித்தது.ஒரு நீளமான மூங்கில் குச்சியில் புடவையில் தொட்டில் கட்டி அதில் குழந்தையைப் போல் அவளை படுக்க வைத்து தூக்கிச் செல்ல மழையில் நனைந்து கொண்டே சென்றாள் ஜோதி. "உயிரோடு இருக்கும் போது நாங்க பண்ணி வைக்காத கல்யாணச் சீரை, அய்யோ செத்த பின்னாடி வாங்கிட்டு போறளே"னு அவள் அம்மா மீண்டும் குரலெடுத்து கத்த ஆரம்பிக்க, அவர்களை மனம் நோக பேசிய சுற்றமெல்லாம் கையறு நிலையில் இப்போது கரைந்து நின்றது.

No comments:
Post a Comment