சுண்ணாம்பு ஓடை
எங்களின் அடுத்த நிறுத்தம், சுண்ணாம்பு ஓடை மற்றும் ஈரோடு-பவானி சாலை சந்திக்கும் இடம். அங்கிருந்து பார்த்தால் பெருமாள் மலை தெரியும். மைல் 5.45.47 என எழுதி இருந்தது. இந்த ஓடை, பவானியில் இருந்து வரும்பொழுது RN புதூர் தாண்டியதும், பாலக்காட்டூருக்கும், சுண்ணாம்பு ஓடை எனும் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் இருக்கும். சாலை வழியே சுண்ணாம்பு ஓடையை கடக்கும்போது பேருந்துகளில் இருந்து எட்டிப்பார்த்து இருப்போம். அந்த அழகான இடம் தான். அந்த ஓடையின் அடியில் மதகுகள் வைத்து காலிங்கராயன், சுண்ணாம்பு ஓடையைக் கடக்க வைத்திருக்கிறார்.
அதனை குமுளி மதகு அல்லது ஸ்பைன் என்று கூறுகின்றார்கள். 740 வருடங்களுக்கு முன்பு கட்டிய கல்லால் ஆன மதகு. இன்றும் பயன் அளித்துக்குக் கொண்டுதான் இருக்கின்றது. தண்ணீரைத் தேக்கி அதே கொள்ளளவு நீரை, மறுபக்கம் அனுப்பும், மேலே இருக்கும் சுண்ணாம்பு ஓடையைக் கடந்து, மறுபக்கம் கொப்பளித்து வருகின்றது.
நாங்கள் பார்த்த பொழுது நமது மக்கள் வாய்க்காலில் போட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும், விநாயகர் சதுர்த்தி கும்பிட்டுவிட்டு தூக்கிப்போட்ட பிளாஸ்டிக் பைகளில் உள்ள பூக்களும், அந்த குமுளி மதகில் மிதந்து கொண்டு இருந்தது. நாங்கள் கரையில் வரும்பொழுது அங்கங்கு நீரில் அவை குழந்தைகள் மழைநீரில் விடும் காகிதக்கப்பல் போல பயணித்துக்கொண்டு கூடவே வருத்தத்தை ஊட்டியது. மதகை ஒட்டி அந்த கழிவுகளை எடுத்துப் போட்டு போட்டு போட்டு அது ஒரு சிறு பெருமாள் மலை போல அந்த இடத்தில் குவிந்து கிடந்தது. இந்த குமுளி மதகு ஆச்சரியக் குறி என்றால் அதனை அடைக்கும் அளவு சம்பவம் செய்து கொண்டிருக்கும் நமது மக்கள் ஒரு கேள்விக்குறி.
குமுளி மதகினை வியந்து, நம் மக்களுக்காக வருந்தி சுண்ணாம்பு ஓடையை கடந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.
பேபி வாய்க்கால்
பிச்சைக்காரன் பள்ளம் ஓடை
இந்த ஓடை, பவானியில் இருந்து வரும்பொழுது அக்ரஹாரம் தாண்டி கிறிஸ்து ஜோதி பள்ளி அருகே ஈரோடு-பவானி சாலையை கடக்கும். ஈரோடு-சத்தி சாலையில் CNC கல்லூரி தாண்டி வருவதும் இந்த ஓடை தான். வைரபாளையம் டம்ப் யார்டு வரை செல்லும் இந்த ஓடை, அங்கு காவிரியில் கலக்கிறது. அப்படியே கலக்கிறதா அல்லது மறுசுழற்சி செய்யப்படுகிறதா அல்லது மறுசுழற்சி செய்வதுபோல காட்டப்படுகிறதா என தெரியவில்லை.
காவிரியின் நிலை என்ன என்பது வேறு ஆராச்சிக்கான தளம். ஆனால் சற்று தொலைவு நீர் பயணிக்கும் பொழுது கூழாங்கற்கள் மணலோடு சேர்ந்து அது சுத்திகரிப்பு அடைகிறது எனவும் கூறுகிறார்கள். பெங்களூரின் வர்த்தூர் ஏரியில் இருந்து வரும் மாசடைந்த நீர் சற்று தொலைவு வந்ததும் நல்ல நீராக மாறுவதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதற்கு தொடர்ந்து நீர் வரவேண்டுமே
ஈரோடு-பள்ளிபாளையம் சாலை
வாய்க்கால் தண்ணீர் அந்த கோயிலைப் பளிச்சென கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டே இருந்தது. கோயிலை ஒட்டி, அதன் கரையில் லுங்கி மற்றும் சட்டையில் இருவர் அமர்ந்து இருந்தார்கள். ஒரு கையில் நீண்ட தூண்டில். மறு கையில் பாதி கரைந்த பீடி. ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை பொறுமையாக காத்துக் கொண்டு இருந்தார்கள். இந்த காட்சியும் வாய்க்கால் முழுக்க காண முடியும்.
சேலம் செல்லும் பேருந்தும், பேருந்தில் பயணம் செல்வோர்களும் அமைதியாக காலிங்கராயன் கால்வாயின் அழகை ரசித்த வண்ணம் பயணம் செய்து கொண்டு இருந்தார்கள்.
சாலையில் ஒரு 200 மீட்டர் தொலைவு சென்றால், காவிரிக் கரையில் உள்ள ஆத்மா எனும் மின் தகன மேடைக்கு செல்லும் வழி பிரியும். ஈரோடு ஆத்மா ஒரு அமைதியான இடம். இறந்தோர்க்கு இறுதிச்சடங்கு செலுத்தும் இந்த இடம் எகிப்தின் பிரமிடு போல வடிவமைக்கப்பட்டு இருக்கும். "வீட்ல இருந்து ஆத்மாவுக்கு இத்தனை மணிக்கு போறாங்க.. அங்க வந்துடுங்க" என்பது நம்மூரின் இறுதி அஞ்சலியின் போது நடைபெறும் ஒரு உரையாடல். மின் தகனம் நடைபெறும் போது அனைவரையும் அமர வைத்து ஆன்மா சாந்தி அடைய இசையை ஓட விடுவார்கள். மனம் எங்கே எங்கேயோ சுற்றி என்ன என்னவோ செய்யும்.
ஆத்மாவில் இருந்து இன்னும் சற்று சேலம் சாலையில் சென்றால் காவல்துறை தடுப்புகள். 'ஈரோடு மாவட்ட எல்லை முடிவு நன்றி மீண்டும் வருக' எனும் பலகைகள் கண்ணில் தென்படும். காவிரி பாலத்தை தாண்டினால் நாமக்கல்
மாவட்டம் அன்போடு வரவேற்கும்.
அதே சாலையில் நேர் எதிரே சென்றால் ஈரோட்டின் நுழைவாயில் கருங்கல்பாளையம்.
பயணிப்போம்....

No comments:
Post a Comment