மும்பை - எனக்கு எப்போதும் செல்ல பிடிக்காத ஊர்.
நாம் சில சமயம் ஒரு ஊருக்கு ஒருமுறை தான் சென்று இருப்போம். அதுவும் சில மணி நேரம் தான் அங்கே இருந்திருப்போம், சில மனிதர்களை அங்கே பிடித்திருக்கும், காலநிலை நன்றாக இருந்திருக்கும், காரணம் தெரியாது ஆனால் அந்த ஊர் நமக்கு பிடிக்கும் .
ஆனால் மும்பை எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்று பல முறை யோசித்து கண்டுபிடிக்கமுடியாமல் , சரி விடு என்று பிடிக்காத ஊர் பட்டியலில் இதை சேர்த்துவிட்டேன் .
மும்பை ஏர்போர்ட், மும்பை டு கோவை பயணம் அன்று, 8 மணி விமானத்துக்கு 5 மணிக்கு ஏர்போர்ட் வந்து 2 மணிநேரம் ஏர்போர்ட்டில் உள்ள டிராபிக்கை கடந்து வந்து சீட்டில் வந்து உட்கார்ந்தேன்.
நமக்கு நடு சீட் , இடது பக்கம் ஒரு 23 -25 வயது உள்ள பெண், வலது பக்கம் அதே வயது ஒரு புள்ளிங்கோ பையன். இருவரும் தமிழ் தான்.
அந்தப் பெண் முகத்தில் மிகப் பெரிய ஒரு சோகம் இருப்பது தெரிந்தது. கண்ணீர் வரக்கூடிய தருணம் . சில மணித் துளிகளுக்கு ஒரு முறை பல தடவை மொபைல் செக் செய்து கொண்டு மிகவும் பதட்டத்துடன் இருந்தார்.
அடுத்து நம் புள்ளிங்கோ, வடிவேல் வின்னர் படக் காமெடியை மொபைலில் போட்டு பல டெசிபல் சத்தமாக வைத்துக் கேட்டு சிரித்துக்கொண்டு என் உலகம் தனி என்பதுபோல் இருந்தான்.
சிறிது நேரத்தில் ஏர்ஹோஸ்டஸ் வந்து ஆங்கிலத்தில். "Sir, Reduce your volume or use headphones. It is disturbance to other passengers" என்றார். புள்ளிங்கோ முகத்தில் நான் என்ன குற்றம் செய்தேன் என்பது போல் முகம் சுளிப்பு.
விமானம் டேக்ஆப் ஆக ரெடி. அப்போது விமானப் பைலட் ஒரு அறிவிப்பு செய்தார். நம் விமானத்தின் Take off லேனில் டிராபிக் உள்ளதால் இன்னும் 35 நிமிடம் ஆகும் என்றார். இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் அந்தப் பெண் கண்ணீர் வரக்கூடிய தருணத்தை உடைத்து அழுக ஆரம்பித்து விட்டார்., அந்த அழுகை சிறிய சத்தத்துடன் சில நிமிடங்கள் தொடர்ந்தது .
என் மனம் அந்த அழுகை எதற்காக .. என்று கேட்கலாமா என்று தோன்றியது , ஆனாலும் அமைதியாக இருந்தேன்.
இன்னும் விமானம் Take off ஆகவில்லை .
அடுத்து நம் புள்ளிங்கோ சில நிமிட அமைதிக்குப் பிறகு ஜில்லா படத்தைப் போட்டு பார்த்துக்கொண்டு இருந்தார். அதே டெசிபல் அதே சத்தமாக.. அப்போது அந்த படத்தில் ஒருவர் இறந்து வீட்டில் சாவு மணி அடித்துக் கொண்டிருந்த சீன் வந்தது. சட்டென்று அந்த பெண் மீண்டும் பெரிய அழுகையுடன் அந்தப் புள்ளிங்கோவைப் பார்த்து, "ப்ரோ, மொபைல் ஆப் பண்ணுங்க, ப்ளீஸ்.. என்னால இத கேட்க முடியலே", என்று அவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார்.
அந்த பெரிய அழுகை என்னை சிறிதுநேரம் ஸ்தம்பிக்க வைத்தது . ஆனால் நம் புள்ளிங்கோ total அப்செட் ..நாட்ல ஒரு மொபைலில் படம் கூட பார்க்க முடியலே என்று புலம்பிகொண்டிருந்தான்.
அழுகை தொடர்ந்தது அந்தப் பெண்ணிடம் .
சிறிது நேரம் கழித்து மெதுவாக நான் அந்தப் பெண்ணிடம், "தண்ணீர் வேண்டுமா ?", என்று கேட்டேன்.
ஆம் என்று தலை அசைத்தார்.
ஏர்ஹோஸ்டஸ்சை அழைத்து தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பெண்ணின் உடல்மொழிக்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய சோகம் உள்ளது என்று எனக்கு புரிந்தது .
"எதாவுது சாப்பிட வேணுமா?", என்று கேட்டேன்.
"இல்ல அங்கிள். எதுவும் சாப்பிடற நிலைமையில் நா இல்ல ..வேண்டாம்", என்றார் .
"மும்பையில் படிக்கிறாயா ?"
"இல்லை அங்கிள் நான் போலந்தில் ஒர்க் செய்கிறேன்"
ஒரு பெரிய மௌனம் .. மீண்டும் சில கண்ணீர் துளிகள் ..
"அப்பாவுக்கு Accident.. சேலத்தில் உள்ள ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி ஐசியூவில் உள்ளார்... நான் சீக்கிரம் போகணும்" .
நான் எப்படி அந்த Accident என்ற கேள்வியை கேட்கவில்லை .
"எப்ப போலந்தில் இருந்து கிளம்பனீங்க ?"
"2 டேஸ் ஆகுது அங்கிள்".
"எதாவுது சாப்புட்டீங்களா ?"
"இல்லை".
"காபி ஆர்டர் பண்ணட்டுமா ?"
"சரிங்க அங்கிள்".
ஏர்ஹோஸ்டஸ்சை அழைத்து காபி ஆர்டர் செய்து கொடுத்தேன் .
காபி குடித்தபிறகு அந்தப் பெண் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார் என்று என் உள்ளுணர்வு சொன்னது .
நான் தொடர்ந்து .."கோவையில் இருந்து எங்கே போகணும் ?"
"சேலம் அங்கிள் ".
"எப்படி போறிங்க ?"
"பெரியம்மா மற்றும் தம்பியும் ஏர்போட்டுக்கு வராங்க .."
"அப்பா என்ன பண்றாங்க ?"
"விவசாயம்"
"நீங்க போலந்து எப்படி ?"
"இன்ஜினியரிங் படித்து விட்டு போலந்தில் ஒர்க் செய்யுறேன்"
அவர்கள் பேச்சு தொடர்ந்தது..
"அப்பா ரோட்டுல நடந்து போறப்ப ஒரு காரும் பைக்கும் மோதி அந்தப் பைக்கில வந்த பையன் தூக்கி எறியப்பட்டு இவர் மேல வந்து விழுந்துட்டான்
அப்பாவுக்கு கொஞ்சம் சீரியசுன்னு சொல்றாங்க .."
மீண்டும் ஒரு அழுகை . அந்த பெண்ணுடைய நிலைமை புரிந்தது .
"அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. தைரியமாக இருங்க."
விமானம் கோவை வந்தது ...மணி 11 PM. luggage எடுக்க பெல்ட் 1 என்று அறிவித்தார்கள். விமானத்தில் கீழே இறங்கி பெல்ட் 1க்கு வந்தேன்.அதற்குள் அந்தப் பெண் மொபைல் பேசிக்கொண்டு பதட்டத்துடன் என்னை நோக்கி வந்துகொண்டு இருந்தார்.
என்னுள் எதாவுது தவறான தகவல் வந்துவிட்டதா என்று அந்த சில நொடிகளில் பதட்டம் கூடியது.
அருகில் வந்து. "அங்கிள், எங்க பெரியம்மா வந்த கார் பெருந்துறை அருகே ரிப்பேர் ஆகி விட்டது. இப்ப அவர்களும் வரமுடியல. நான் இப்ப என்ன பண்ணுவது ?" என்பது போல் என்னைப் பார்த்தார்.
நான், "சரி. உங்க பெரியம்மாவுக்கு கால் பண்ணுங்க. நான் பேசறேன்".
அந்த அம்மாகிட்ட பேசி அவர்கள் லொகேஷன் அறிந்துகொண்டு அருகில் இருக்கும் ஒரு பேக்கரியில் இருக்குமாறு சொல்லிவிட்டு நான் ஈரோடு தான் செல்கிறேன். என்னுடைய காரில் நீங்க வாங்க. பெரியம்மாவைப் பெருந்துறையில் பிக்கப் செய்து சேலம் போய்டுங்க. நான் பஸ்சில் பெருந்துறையில் இறங்கி ஈரோடு போய்க்கிறேன் ."
"ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.."
அந்த பெண்ணிடம் மீண்டும், "அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. தைரியமாகப் போங்க ..Be postive", என்றேன்.
பிறகு நான் பெருந்துறையில் இறங்கி ஈரோடு வந்துவிட்டேன் .
சில நேரத்துக்குப் பிறகு ஒரு மெசேஜ் அந்த பெண்ணிடம் இருந்து, "Reached Hospital. Thanks For your help ."
காலையில் எழுந்தவுடன் போன் செய்து அப்பாவுக்கு எப்படி உள்ளது என்று கேட்கலாமா என்று தோன்றியது. ஆனால் மனம் - வேண்டாம் அந்த அப்பா நலமாக இருப்பார் - நலமாகத் திரும்புவார். அது மட்டும் என்னுள் இருக்கட்டும் என எண்ணிக் கொண்டேன்.
இதுவரை அந்தப் பெண்ணிடம் இருந்து எனக்கு எந்த மெசேஜ்ம் வரவில்லை – வரவும் வேண்டாம்.
அப்பா நலமாக இருப்பார்.
கடவுள் இருப்பான் குமாரு !
Wow❣️
ReplyDeleteஅருமை!!! ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க... அன்பும் வாழ்த்தும்.
ReplyDeleteஅப்பா நலமாக இருப்பார். இருக்கமான சூழலில் நிதானமாக செய்த செயல்களும், எழுத்தின் நகர்வும் அருமை.👌
ReplyDeleteஇன்னும் எழுதுங்க♥️
மிகவும் அழகான, யதார்த்தமான எழுத்து..
ReplyDeleteவேனில், சொல்லவந்ததை கச்சிதமாக சொன்னதோடு இதற்குமுன் நீங்கள் நிறைய எழுதிய அனுபவம் உங்கள் எழுத்தும் நடையும் எங்களுக்கு உணர்த்துகிறது. அவையெல்லாம் எங்கே?
ReplyDeleteசெம வேனில்.. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteSuper Mams..touching
ReplyDeleteGood work, Venil! keep it coming... Thank you!
ReplyDelete