Monday, January 1, 2024

உடைபடட்டும் கலாச்சார மௌனங்கள் - 7 - பூங்கொடி பாலமுருகன்



காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு,  வேலையை  ஆரம்பிச்சு பொண்ணுக்கு ஒரு டிபன்; பையனுக்கு ஒரு டிபன் ;மதியம் அதே போல விதவிதமா செஞ்சு கொடுத்து அவங்க தான் உலகம் அப்படின்னு  வாழ்கிறேன்.  ஒரு வார்த்தை அம்மா எங்களுக்காக இவ்வளவு வேலை செய்கிறாயே... தேங்க்யூ அம்மா.. லவ் யூ அம்மா.. என்ற வார்த்தை ஒரு நாளாவது வருதா? ஏதாவது ஒரு நாள் சமையல் சரியாக இல்லாவிட்டால் எத்தனை கத்து கத்திட்டு போறாங்க? இப்படி அம்மாக்களின் புலம்பல்..

ஏதாச்சு வேணும்னா மட்டும் பக்கத்துல வந்து நைசா உட்கார்ந்து, பேசி அவங்க காரியம் சாதிச்சுக்கிறாங்க... மத்த நேரத்துல ஒரு வார்த்தை அப்பா எங்களுக்காக தானே இவ்வளவு கஷ்டப்படுறீங்க தேங்க்ஸ் பா.. அப்படின்னு  ஒரு நாள் சொல்லி இருக்காங்களா? என்று அப்பாக்களின் புலம்பல்..

நம்முடைய உழைப்பிற்கான, நம்முடைய செயல்களுக்கான அங்கீகாரம் அதாவது குழந்தைகளின் செயல்களில் இருந்து, சொற்களில் இருந்து  நன்றியை எதிர்பார்க்கிறோம்.. அதுதானே உண்மை. 

ஒரே ஒரு கேள்வி மட்டும் நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டும் நம் குழந்தைகளுக்கு நாம் நன்றி உணர்வைக் கற்றுக் கொடுத்திருக்கிறோமா?


நான் பட்ட கஷ்டம் என் பிள்ளை படக்கூடாது என்று தங்கத்தட்டில் தாங்குகின்ற பெற்றோர்களும் சரி, தங்களுக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் கூட குழந்தைகளுக்கு மாங்கு மாங்கு என்று வேலை செய்யும் பெற்றோர்களும் சரி... தங்களுடைய கஷ்டங்களைப் பற்றி அவர்களிடம்  பகிர்ந்து இருக்கிறோமா?. எதற்காக நான் கஷ்டப்படுவதை என் பிள்ளையிடம் சொல்ல வேண்டும் இது என்னுடைய கடமை தானே என்று பெரும்பாலும் நினைக்கிறோம். இப்படி நாமே நினைக்கின்ற பட்சத்தில் அவர்களும் இது பெற்றோர்களுடைய கடமைதானே என்று சுலபமாக பெற்றோர்களின் செயல்களைக் கடந்து விடுவார்கள். அதன் வீரியம் அவர்களுக்குப் புரியாது.

குழந்தை பிறந்ததும் நாம் தான் நடக்க பழக்குகிறோம். சாப்பிட ,நீர் அருந்த, படிக்க எழுத என்று எல்லாம் கற்றுத் தருகின்ற நாம்... பொன்னான வார்த்தைகளை வாழ்க்கையில் பயன்படுத்த அதாவது நன்றி, மன்னிப்பு போன்ற வார்த்தைகளை நம் வீடுகளில் உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கிறோமா? 

என் வீட்டில் நான் வெளியே செல்லும்பொழுது குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம். அப்படி அழைத்துச் செல்லும் பொழுது காய்கறி கடைக்காரர்களிடம் , துணிக்கடைகள், மருந்து கடைகள் இப்படி எல்லா இடங்களிலும்,  தேங்க்யூ என்ற வார்த்தையை பயன்படுத்துவேன். அதை என் பிள்ளைகள் கவனித்திருக்கிறார்கள். ஒருமுறை அவசர வேலையாக இருக்கும் பொழுது என் மகனிடம் ஒரு உதவி கேட்டேன். அவனும் உடனே வந்து எனக்கு உதவி செய்தான். ஆனால் அவனுக்கு நான் நன்றி சொல்ல மறந்து விட்டேன்.

உடனே அவன் என்னிடம் " உதவி செய்தால் தேங்க்யூ அப்படின்னு சொல்லனும்னு  நீங்க தானே சொல்லி இருக்கீங்க. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கேன் தானே..எனக்கு ஏன் தேங்க்யூ சொல்லல? " என்று கேட்டான்..உடனே என் தவறை உணர்ந்து, ," சாரி கண்ணா..அம்மா அவசரமா வேலை செய்து கொண்டு இருந்ததால், சொல்ல மறந்து விட்டேன்.. இருந்தாலும் அது தவறு தான்.. தேங்க்யூ கண்ணா.." என்று சொன்னவுடன் அவனது முகத்தில் ஒரு மகிழ்ச்சி..

பெரும்பாலும் நாம் நம் வீடுகளில் நம் குழந்தை தானே, நம் கணவர் தானே ,நம் மனைவி தானே என்று பெரும்பாலும் அவர்களிடம் நன்றி, மன்னிப்பு போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. அதைப் பார்த்து வளரும் குழந்தை வீடுகளில்  மட்டுமல்லாது, சமூகத்திலும் பெரும்பாலும் இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. 

குழந்தை நமக்கு ஏதாவது உதவி செய்யும்பொழுது  அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்., நாம் தவறு செய்து விட்டால் அவர்களிடம் மன்னிப்பும் கேடக வேண்டும். அது அவர்களது மனதில் ஆழப் பதிந்து விடும்.  உதவி செய்தால் நன்றியும், தவறு செய்தால் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழப்  பதிந்து விடும்.ஏனென்றால் குழந்தைகளுக்கு முதல் ஆசான்கள் நாம் தான். நம்மிடமிருந்து கற்றுக் கொள்கின்ற பாடங்கள் தான் ,நாம் வாழ்ந்து காட்டும் வழிமுறைகள் தான் வாழ்க்கை முழுவதுமே அவர்களை வழிநடத்தும்.   நாம் சொல்லிக் கொடுக்காமல் செயல்கள் மூலம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் வாழ்க்கை முழுவதுமே அவர்களுக்கு நிலைத்து நிற்கும்.

அதிலும் குறிப்பாக பதின் பருவத்தில் உள்ள குழந்தைகளிடம், இந்த வீரியமிக்க நன்றி, மன்னிப்பு  போன்ற சொற்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பா அவர்கள் வாழ்வியல் முறையில் மாற்றத்தை கொண்டு வரும் பொன்னான சொற்கள் இவை. 

*  நம் வாழ்வில் நடந்த அனைத்து நல்ல விஷயங்களையும் அவர்களிடம்  சொல்லி இயற்கைக்கும், பெற்றோர்களுக்கு,ம் நம்மை சார்ந்தவர்களுக்கும் நன்றி சொல்வதை நாம் அவர்கள் முன்பு அடிக்கடி செய்து வர வேண்டும். அதைப் பார்க்க பார்க்க இயல்பாகவே அவர்களுக்குள் நன்றி உணர்வு பதிய தொடங்கும்.

* மேலும் குழந்தைகளிடம் இருக்கும் நல்ல விஷயங்கள், நல்ல செயல்கள் ,மற்றவர்களுக்கு அவர்கள் செய்யும் உதவிகள் இவற்றையெல்லாம் கவனித்து பாராட்டுங்கள். அவ்வப்போது சிறு பரிசுகளும் கொடுங்கள். 

* ஒன்றாக உணவு உண்பது, உறங்கச் செல்லும்போது அவர்களுடன் நடத்தும் உரையாடல்களில், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு எப்படி நன்றி உணர்வை செலுத்துவது, இந்த சமூகத்தில் நாம் அமைதியாக வாழ்வதற்கு இந்த இயற்கையின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது. அதற்கு நாம் எந்த விதத்தில் நன்றி கடன் பட்டிருக்கிறோம் என்பதையெல்லாம் இலகுவான உரையாடல்கள் மூலம் அவர்களுக்கு உணர்த்தலாம். 

* நம்முடைய வாழ்வில் நமக்கு ஒவ்வொரு கணத்திலும் உதவி செய்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு எவ்வாறெல்லாம் நாம் நன்றி உணர்வை செலுத்தினோம் என்பதை குழந்தைகளிடம்  வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளலாம். 

* முடிந்தால் மாதத்திற்கு ஒரு முறை ஒருவருக்கொருவர் அன்பான ஒரு கடிதம் எழுதிக் கொள்ளலாம். 

இவற்றையெல்லாம் வீடுகளில் தொடர்ந்து பெற்றோர்களும் குழந்தைகளும் பயிற்சி செய்தால், குழந்தைகள் இயல்பாகவே தன் பெற்றோர்கள் , தன்னைச் சுற்றியுள்ளோர் , இந்த இயற்கை அனைவருக்கும் இயல்பாகவே நன்றி உணர்வு மிக்கவராக வளர்வார்கள்..

எனவே நன்றி அறிதல் என்ற வீரியமிக்க செயலை நாம் வீடுகளில் இருந்து ஆரம்பிப்போம்.

தொடர்ந்து உரையாடுவோம்....


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நல்ல கருத்துப் பகிர்வு. தேங்க் யு பூ 😍

    ReplyDelete

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...