Friday, December 1, 2023

மனிதம் - மலர் செல்வம்

 



ஒரு  நாளின்  பொழுதுகளில் நான்  அதிகமாக எதிர்பார்த்து ஏங்குவது  தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட அந்த மலர்ந்தும் மலராத தெளிந்தும் தெளியாத காலைப் பொழுதின் கலங்கல் நிமிடங்களைத்தான்.

மனம் விழித்துக் கொண்டாலும் கண்களை விழிக்க முடியாமல் அல்லது விழிக்கப் பிடிக்காமல்  நினைவின் வீதிகளில் ஒரு குட்டி உலா சென்று வருவதில் உள்ள சுகமே அலாதி.

நகரை விட்டுக் கொஞ்சம் தள்ளியிருக்கின்ற குடியிருப்பு என்பதால் கான்க்ரீட் காட்டிலும் சில மரங்கள் மிச்சமிருந்தன. காலையிலேயே பெயர் தெரியாத இரண்டு மூன்று பறவைகள் "இன்னுமா தூக்கம்" என்று ஓயாமல் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தன. 

செம்பூத்து,மைனா,கரிக்குருவி போன்ற பறவைகளின் இசைக் கச்சேரியிலும் "பளிச்சுனு வெடிஞ்சிருச்சு. . எந்திரி. எந்திரி"என்ற அம்மாயி ஆத்தாக்களின் செல்ல அதட்டலிலும் விடியும் கிராமத்துக் காலைநிமிடங்கள் நினைவில் மோதியது. இந்தப் பறவைகள் எதைத் தேடி எந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தனவோ?  திரும்பிச் செல்ல விரும்பியும்  இப்பெரு நகரத்தின்  மாயவலையிலிருந்து மீள முடியாமல்  தவிக்கிறதோ பல மனிதர்களைப் போல?!

வழக்கம் போல தலையணைக்கடியில் கையை விட்டால்...அய்யய்யோ!! காணோமே? என்ன ஆச்சு? எங்கே போச்சு? வழக்கமாக இரவில் தலையணைக்கடியில்  கழற்றி வைத்து விட்டு காலையில் அணிந்து கொள்ளும் கொடிச் சங்கிலியை அங்கே காணவில்லை...!!பரபரவென போர்வையைக் கலைத்துப் போட்டு படுக்கையை உதறி பக்கவாட்டு சின்ன மேசையை நகர்த்தி...ம்ஹும்... எங்குமே இல்லை. சங்கிலியைக் காணோம் என்பதை விட எதிர்கொள்ளப் போகும்  கேள்விகள் இன்னும் அதிகம் பயமுறுத்தின.

"கழட்டி வைக்கிறவங்களுக்கு இது எதுக்கு?"

"ஆனாலும் இவ்வளவு ஆகாது"

"எப்பவுமே இவ இப்படித்தான்" ரீதியில் வந்து விழப் போகும் சொல் அம்புகளை நினைத்தால் "திக்" கென்றிருந்தது.

ஒருவேளை இவர் தான் எடுத்து வைத்திருப்பாரோ??

அடிக்கடி நடப்பது  தான். ஏதாவது கேட்கலாமென்றால் பால்கனியில் ஐயா ஆழ்நிலைத் தியானத்திலிருந்தார்.விசுவாமித்திரர் தவமாவது மேனகை வந்தால் கலைந்து விடக் கூடும். இது அதையும் தாண்டி...!! தானாய் கலைந்தால் தான் உண்டு.

"ஏங்க  தலையணைக்கு அடியில இருந்து எடுத்து  என் சங்கிலியை எங்கே வச்சிருக்கீங்க?

வழக்கமான  பாணி கேள்வி தான்.பூமராங் மாதிரி டக்கென  திரும்பி வந்தது  பதில்.."நான் பாக்கல. லாக்கர்ல வச்சிர வேண்டியது தானே அவ்ளோ கனமா இருந்தா?"

யோகாவைத் தொடர்ந்தார். ஞானி.

'நல்ல ஐடியா தான். செஞ்சிருக்கலாம்' என்று நினைத்தபடி நடந்தேன் காலைக்கடமைகளை நோக்கி.

காபித்தூளை பெர்கோலேட்டரில் நிரப்ப ஆரம்பித்தேன். பெர்கொலேட்டரில் கீழே தண்ணீர். மேலே சேகரமாகும் டிகாக்க்ஷன். அதுவரை பயன்படுத்தி வந்த ஃபில்டருக்கு நேர்மாறான விஷயம்.

கேள்விகளோ எதிர்ப்புக்களோ இன்றி மாற்றம் எளிதாக வரவேற்புடன் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது 'புதுமை' என்ற பெயருடன். ஆனால் வாழ்க்கை நிகழ்வுகளில் மாற்றத்தை  ஏற்பதில்  மக்களுக்கு எத்தனை தயக்கம்? எத்தனை  மனத் தடைகள்...?!

ஸ்ட்ராங்கான சூடான சர்க்கரை குறைவான நுரை தளும்பும் காஃபியுடன் பால்கனியில் அமர்ந்தேன். காஃபி யின் உயிருக்குப் பெயர் நுரை.

கடவுளின் வடிவம் ஒருவேளை காஃபியைப் போல இருக்கலாமோ?

நறுமணம் நாசியையும் மனத்தையும் ஒரு சேர நிரப்பியது.

ரசித்து ருசித்து காபியுடன் ஐக்கியமானேன்.

அதுவே ஆகச் சிறந்த தினசரி தியானம் எனக்கு!எனது 'மீ டைம்'.

நேற்றைய நிகழ்வுகளை மீண்டும் மனத் திரையில் ஓட்டிப் பார்த்த போது சட்டென மின்னல் அடித்தது.

நேற்று மதியம் தூங்கும் போது சங்கிலியைக் கழற்றி வைத்ததும் அதற்குப் பின் ஒரு பெயிண்ட்டர் வந்து அரைமணி நேரம்  சீலிங்கில் ஒரு சிறிய பராமரிப்பு வேலையின் தொடர்ச்சியைச் செய்து சென்றதும் நினைவில் வந்தது.

இது போன்ற பணிகளில் இப்போதெல்லாம் அதிகம் தென்படும் வட இந்திய முகங்களுக்கிடையே  எப்போதாவது தென்படும் தமிழ் முகம்.

வேலை முடித்து போகும் போது "பெயர் என்னப்பா" என்றேன்."பாஸ்கர்" என்றான்.ஏழ்மையைச் சொல்லும் உடை. ஏனோ  அவனை சந்தேகப் படத் தோன்றவில்லை. ஆனால் நேற்று உள்ளே வந்த ஒரே வெளி நபர் அவன்  தான். அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றது சிந்தனை.

புதிய இடங்களுக்குப் போகப் பிடிக்கும். ஆனால் இது முற்றிலும் புதிய இடம். போக நினைக்காத இடம். வாழ்க்கையில் முதல் முறையாக வந்துள்ள  இடம் காவல் நிலையம். புகார் கொடுக்கத் தான் வந்திருக்கிறோம் என்றாலும் அந்த  செங்கல் கட்டிடத்திற்கு முன் மகிழ்வுந்தை நிறுத்தியதும் வயிற்றுக்குள் ஏதோ உருண்டது. காலங்காலமாக நம்பிக்கைகள்  மனித மனங்களுக்குள்  கட்டமைக்கப் படுவது  இது போல் அடிப்படையே இல்லாத  சில   அச்சங்களால் தான் எனத் தோன்றியது. 

பளிச்சென சுத்தமாக இருந்தது காவல் நிலையம். இளம்   உதவி  காவல் ஆய்வாளர் அனுசரணையுடன் அணுகியது ஆச்சரியமாக இருந்தது. அவருடைய அம்மாவின் நினைவு வந்திருக்கலாம்.வி பரம் கேட்டார்.

"ஏட்டையாவிடம் கம்ப்ளெய்ண்ட் எழுதிக் குடுங்க"

ஏட்டையா ஒரே பாட்டையா தான். இந்த வருடம் ஓய்வு பெறலாம் ஒருவேளை.

" மாங்கல்யச் சங்கிலியை எதுக்கும்மா கழட்டறீங்க. இதென்ன சினிமால வர்ற மாதிரி?!"

எங்கெங்கும் கலாச்சாரக் காவலர்கள்!!

சப் இன்ஸ்பெக்டர்  கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தார்."என்ன பண்றீங்க."

"வீட்ல எத்தனை பேர்"

"எப்ப வச்சீங்க"

" எங்க வச்சீங்க"

" வீடு முழுக்க தேடியாச்சா"

"எத்தனை பவுன்" வழக்கமான கேள்விகளுக்கப் புறம்  முக்கியமான கேள்விக்கு வந்தார்.

"யார் மேலயாச்சும் சந்தேகமிருக்கா?"

"இல்லை"

"யார் நேத்து புதுசா வீட்டுக்கு வந்த வெளியாள்?"

"பெயிண்ட்டர்'

"அவரோட ஃபோன் நம்பர் இருக்கா"

"இல்லை.அவரை அனுப்பிய மேலாளரைக் கேட்டுச் சொல்றேன்."

வேலை செய்பவர் என்பதாலேயே சந்தேகப் பட முடியுமா? இருபது வயது தான் இருக்கும். கருமமே கண்ணாயினான் போல இருந்தானே. அவனைப் பற்றிக் காவலரிடம்  குறிப்பிட்டிருக்கக் கூடாதோ என்று கூடத் தோன்றியது.

"அவன்தான் எடுத்திருப்பான்னு என்னால உறுதியா சொல்ல முடியல. கூட்டிட்டு வந்து ரொம்ப அடிச்சறாதீங்க  சார்".

"புகார் கொடுத்திருக்கீங்க. கண்டு பிடிக்கிறது எங்க வேலை.ஒத்துழைப்பு கொடுத்தீங்கன்னா போதும்.. இப்ப நீங்க கிளம்புங்க"

காவல் நிலையத்திலிருந்து வீட்டுக்கு வருவதற்கும் காவல்துறை வாகனம் பின்னாலேயே வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.  பத்து நிமிடத்தில் பாஸ்கர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டதாகத் தகவல். நெஞ்சு பதறியது.

"ரொம்ப அடிச்சிருவாங்களோ?

ஒருவேளை இவன் எடுத்திருக்கா விட்டால்??

சங்கிலியைத் தொலைத்ததற்குச் சமமான  கவலையாக இருந்தது எனக்கு.

இரவெல்லாம் மனதில் அந்த பாஸ்கரின் முகம் தான். அந்தக் காவல் ஆய்வாளர் அப்படி ஒன்றும் கரடுமுரடான தோன்றவில்லை என்று சமாதானம் செய்து கொண்டேன்.

வீட்டிலேயே எங்காவது இருந்து விட்டால்?

பாதி தூக்கத்தில் எழுந்து வீடு முழுக்க தேடு தேடென தேடியாச்சு. காணாமல் போனதாக நினைத்திருந்த ஒற்றைக் கம்மல், சங்கிலி அறுந்த வெளிநாட்டுக் கைக்கடிகாரம், வெள்ளி குங்குமச் சிமிழின் மூடி என்று நிறைய புதையல். வீடு சுத்தமாச்சு. மனசு பாரமாச்சு.

சிந்தனைகள் சுற்றிச் சுற்றி ஆக்டோபஸாகி மனதை அழுத்தியது. மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது .  வீட்டில் இன்னும் நன்றாகத் தேட வேண்டும் எனத் தோன்றியது.

காலை எழுந்ததும் தச்சு வேலை ஆசாரியை வரச் சொல்லி  கட்டிலை முழுதும் பிரித்துப் போட்டாயிற்று. சங்கிலியின் தரிசனம் கிடைக்கவில்லை. காலைக் காஃபியும் கசந்தது. படுக்கையும் நொந்தது. ஏனோதானோவென அலைந்து கொண்டிருந்தேன் வீட்டுக்குள்.

12 மணிக்கு அழைப்பு மணியின் இன்னிசை. கதவைத் திறந்தால் உதவி காவல் ஆய்வாளர் மஃப்டியில். வரவேற்று அமரவைத்து குடிக்க பானைத்  தணணீர் கொடுத்தேன். சென்னையில் தரமான குடிநீரென்பது  பெரும் லக்சுரி! 

"எனக்கு க்ரைம் ஸ்பாட்ட பாக்கணும்"

என்னது க்ரைம் ஸ்பாட்டா...

படுக்கை அறையைக் காட்டினோம்.  இண்டீரியர்ஸ்  கண்களை உறுத்தாமல் அழகா செய்திருக்கீங்க என்றார்.  பதில் பேசும் மனநிலையில் நானில்லை.

"மெத்தைக்கும் சுவருக்கும் உள்ள இடைவெளியில் சங்கிலி விழுந்திருக்கலாம். அங்கே தான்  பூச்சு வேலை செய்த இடம்" என்று  விரிவாக சொல்லிக் கொண்டிருந்தேன்.

மௌனமாகக் கேட்டார். சட்டென பாக்கெட்டில் கையை விட்டு எதையோ எடுத்தார். "இதுவா பாருங்க" என்றார் புன்சிரிப்புடன்.

"கண்டேன் சீதையை"னு அனுமன் பாடியது தான் நினைவுக்கு வந்தது.ஆச்சர்யத்தில் எனக்கு பேச்சே வரவில்லை. கண்கள் விரிந்தன.  இதயம் படபடத்தது.

அவரது கையில்   என் கொடிச் சங்கிலி.

"ஆமாங்க சார். என்னுடைய சங்கிலி தான்"

கையில் வாங்கியவுடன் என்னை அறியாமல் கண்ணில் நீர் துளிர்த்தது. ஏதேதோ கவிதை வரிகளெல்லாம் நினைவில் ஓடியது.

"ரொம்ப நன்றிங்க சார்" குரல் கம்மியது.

"எப்படி கெடச்சுது?"

"இப்ப கட்டில் சந்திலிருந்து நான் தான் எடுத்தேன்."

நீங்க பாக்கெட்டிலிருந்து எடுத்ததைத்தான் நான் பார்த்தேனே எனச் சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை.

"அப்படி நீங்க எழுதிக் கொடுத்திருங்க"

"முதல்ல எழுதிக்  கொடுங்க அப்புறம் சொல்றேன்.."

முடிந்தது.

"பாஸ்கர் தான் மேடம். அஞ்சாவது நிமிஷம் ஒத்துக்கிட்டான். நகையையும் கொடுத்திட்டான்.

அவனை நம்பி ஒரு பெரிய குடும்பம். வெளிய தெரிஞ்சா வேலை போயிரும். இது தான் முதல் முறை. "என்னை விட்ருங்க சார். வேலை போய்ட்டா தற்கொலை பண்ணிக்குவேன்'னு அழுகை. அதான் ஃபைல முடிச்சிரலாம்னு.

இதயத்தில் யாரோ ஓங்கி அறைந்தது போல் இருந்தது எனக்கு. சங்கிலி கிடைத்தது சந்தோஷம் என்றால் சக மனிதர்கள் மேல்  வைத்திருந்த நம்பிக்கை  தூள் தூளானது வருத்தம்.

"தாலிச் சங்கிலி காணோம்னு எவ்வளவு வருத்தப்பட்டிருப்பீங்க. பண மதிப்புடன் செண்டிமெண்ட்டான விஷயம் வேறு.

ஊறுகாயைப் பார்த்தால் எச்சில் ஊறுகிற மாதிரி தான். கண் முன்னாடியே நகை கிடந்தால்  சிலருக்கு கை பரபரக்கும். கவனமா இருங்க. ஆனா ஒரு விஷயம். நகை எப்படி கெடச்சுதுன்னு யார்கிட்டேயும் இப்ப சொல்லிக்க வேண்டாம்". வீட்டிலிருந்து அவர் கிளம்பினார். ஆனால் மனதுக்குள் நிரந்தரமாக கம்பீரமாக அமர்ந்து விட்டார்.

மனிதம் அழிவில்லாதது. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத இடத்திலிருந்து நம்முடன்  தொடர்ந்து கை குலுக்கிக் கொண்டே தான் இருக்கும். மனிதர்கள் மேலிருந்த நம்பிக்கையில் இன்று புதிதாக ஒரு துளிர்.

பாஸ்கரின் மேலாளரின்  எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நேற்று இது பற்றி அவரிடம் பேசியிருந்தேன்.

"மேடம் என்ன ஆச்சு".

ஒரு நிமிடம் நிதானித்தேன் வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கினேன்.

"வீட்டிலேயே கட்டிலுக்கடியில கெடச்சிருச்சு."

"சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க மேல தப்பை  வச்சிக்கிட்டு பாஸ்கரோட வாழ்க்கையை அழிக்கப் பாத்தீங்களே. வேலை செய்யறவங்கன்னாலே கேவலமா நெனக்கக் கூடாது. நீங்க போய் இப்படி செய்வீங்கன்னு நினைக்கவே இல்லை. வாழ்க்கையே போயிருக்கும் அவனுக்கு. இனிமேல் எதை சொல்றதுக்கு முன்னாடியும் இன்னொரு முறை  யோசிங்க மேடம். மனுசங்க மேல நம்பிக்கை வையுங்க"

"இன்னொரு முறை யோசித்ததால் தான்  இந்த பதில்" என்று சொல்லத் தோன்றியது.. சொல்லவில்லை.

சில நேரங்களில் பதில் சொல்லாமலிருப்பதைப் போல் பொருத்தமான பதில்  வேறு எதுவுமில்லை..!!

3 comments:

  1. காஃபி தயாரிப்பில் புதிய பொருள் அறிமுகம் காஃபி குடித்த சுவையை ஏற்படுத்தியது...காவலர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார்.நல்ல கதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாசிக்க வாசிக்க சிரிப்பை அடக்க முடியவில்லை. நல்ல ரசிக்கும்படி வர்ணனை மற்றும் எழுத்து நடை

    ReplyDelete
  3. அருமை, நான் ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்க நன்றாக இருந்தது, காரணம் சிக்கன எழுத்து நடை. பாராட்டுகள்.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...