Friday, December 1, 2023

எளிமையின் சுவடுகள்.....ராதா மனோகரன்

தோட்டத்தின் நடுவே நீண்ட பெரிய வாசல், அதே நீளத்திற்குத் திண்ணை, சௌகர்யமான ஆசாரம், சிறிய அறைகள், பெரிய சமையலறை, அதைச் சுற்றிலும் உயரமான கருங்கல் மதில் சுவர் கொண்ட ஓட்டுவீடு எங்கள் வீடு.

வீட்டு மதில் சுவரை சுற்றிலும் பத்து பதினைந்து தென்னை மரங்கள், கைக்கு எட்டும் தூரத்தில் பழுத்துத் தொங்கும் பப்பாளி மரம், பூத்துக்குலுங்கும் கனகாம்பரம்,மல்லிகை,பன்னீர்ரோஜா செடி கொடிகள் இருக்கும். மதில் சுவரைத் தாண்டினால் உயர்ந்து வளர்ந்த பனை மரங்கள், இலையை பூக்கள் மறைக்கும் வேப்ப மரங்கள், காயும்,பழமும் கொட்டிக் கிடக்கும் இழந்தை மரம், வேலியாய் வளர்ந்து கிடக்கும் கிளுவை, அதில் பற்றிப் படரும் ஊஞ்சன் கொடி என திசைக்கு ஒன்றாக நின்று கொண்டிருக்கும்...நடுநடுவில் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டைகள்.

தாத்தா,அம்மா,இரண்டு சித்திகள், இரண்டு சித்தப்பாக்கள், ஏழு சகோதரிகள், ஒரே சகோதரன் என பதினான்கு பேர் கொண்ட கூட்டுக் குடும்பம். அத்தையின் பையனும் எங்கள் வீட்டிலேயே வளர்ந்தார்கள். எனக்கு நினைவு தெரியும் முன்னரே அப்பா இறந்து விட்டார்.

பால் ஊற்றி நெகுநெகுவென பூசி மெழுகப்பட்ட சிமென்ட் தரை கொண்ட திண்ணை, ஆசாரம் மற்றும் அறைகள். ஆசாரத்தின் ஓரத்தில் சிவப்பு வண்ணத்தில் பார்டரும், நடுவில் ஒரு வட்டத்துக்குள் எட்டு இதழ்கள் கொண்ட பூவும் இருக்கும். இரண்டு கயிற்றுக் கட்டில்கள் தான் பர்னிச்சர். அதில் ஒன்று வேலைப்பாடுடன் கூடிய நான்கு கால்களைக் கொண்டிருக்கும் அது தாத்தாவிற்கும், உறவினர் வந்தால் அமர்வதற்கும். மற்றொன்று அப்பாக்களுக்கும் குழந்தைகள் ஏறிக்குதித்து விளையாடுவதற்கும். அம்மாக்கள் எப்போதும் சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டி குதிகாலைப் பின்னலிட்டுக் கொள்வார்கள். அப்பாக்களோ, தாத்தாவோ இல்லாத மதிய வேளையில் கட்டில் சுகம் காண்பார்கள்.

பத்துக்கு நாற்பது என்ற அளவில் சமையலறை. முன்னர் தறிக்குடோனாக இருந்து மேக்ஓவர் செய்யப்பட்டது.. நான்கு நீளமான, நடுவில் தடுக்கப்பட்ட ஸ்லாப் கற்கள். ஒரு அடுப்பு மேடை அதற்கு மேல் சதுரக் கொண்டை போன்ற புகைக்கூண்டு.

மனைப்பலகைகள் தான் டைனிங்டேபிள். மூன்று சைஸ்களில் பத்துப் பலகைகள் இருக்கும். நீளமான பலகையில் அமர்ந்து கால்களை குத்தவைத்துதான் சாப்பிடுவார்கள் அப்பாக்களும், தாத்தாவும்.. நாங்களெல்லாம் சிறு பலகையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். அம்மாக்கள், அனைவருக்கும் பரிமாறிவிட்டு எப்போதும் போல சுவருக்கு முட்டுக் கொடுத்து கால் நீட்டித்தான் சாப்பிடுவார்கள். 

வெவ்வேறு வட்ட வடிவங்களில் வட்டல் எனப்படும் எவர் சில்வர் தட்டுக்கள். பெரிய வட்ட(ல்)ம் எப்போதும் போல ஆண்களுக்கு. நடு வட்டம் பெண்களுக்கு. குட்டி வட்டம் எங்களுக்கு. ஒரு கோண வட்டல் அது தம்பிக்கு. ஒரே ஒரு மூன்று குழிகள் கொண்ட டிபன் பிளேட் அது சுழற்சி முறையில் எங்கள் ஏழு பேருக்கும். எனக்கு புதன்கிழமை கிடைக்கும். அனைவரும் சாப்பிட்டுவிட்டு சலதாரையில் சென்று தட்டைக் கழுவி வைக்க வேண்டும். தாத்தா,அப்பாக்கள் மட்டும் சிறப்பு சலுகையில் (பிங்கர் பௌல்) சொம்புத் தண்ணீரை வைத்து தட்டிலேயே கழுவிக் கொள்வார்கள். உறவினர் வந்தால் பந்திப்பாயும், வாழை இலையும்.

காய் வணக்கினால் குழம்பு கிடையாது, குழம்பு வைத்தால் பொரியல் கிடையாது. ரசமும் , கரந்த எருமைப் பாலில் புரையிடப்பட்ட கெட்டித் தயிரும் எப்போதும் அவைலபில். உறவினர்கள் வருவது முன்னமே தெரிந்தால் பொரியல்,குழம்பு, ஜவ்வரிசிப் பாயாசம் பருப்பு வடை என முழு உணவு தயாராகும். அறிவிப்பின்றி வந்துவிட்டால் என்ன இருக்கிறதோ அதுவே பரிமாறப்படும். ராகி பக்கோடா அல்லது கோதுமைப் போண்டா போனஸ்.
.
போக்குவரத்து என்பதே பெரும்பாலும் பேருந்துகளிலும் சிலர் டி.வி.எஸ். 5௦ யிலும் தான். மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது புது வண்டியையோ, செருப்பையோ பார்த்துவிட்டால் மனதுக்குள் ஒரே மழைதான். அதிலும் பொண்ணு மாப்பிள்ளை விருந்து என்றால் கேட்கவே வேண்டாம்.

குறைந்தது இரண்டு நாட்கள் தங்கி இருப்பார்கள். ஸ்டுடியோவிற்குச் சென்று கருப்பு வெள்ளை புகைப்படம் எடுக்கப்படும். அந்தப் புகைப்படத்தில் பௌடர் தவிர பெரிய அலங்காரம் எதுவும் இல்லாத முகத்தில் நடு நெற்றியில் வட்டப் போட்டு வைத்து , மல்லிகைப்பூவை சரமாக வைத்து அதில் பாதியை எடுத்து முன்புறம் விட்ட படி போஸ் கொடுத்த யாருமே இன்று வரை அழகில் குறைவாகத் தோன்றியதில்லை. ஆண்கள் திருத்தப்பட்ட அழகுடனும் பெண்கள் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற முக லட்சணத்துடனும் இருப்பார்கள்.

ஒரே மாதிரி உடை அணிந்து,இரட்டை சடை, கனகாம்பரப் பூ, எண்ணெய் வழியும் முகமுமாக நாங்கள் நின்று கொண்டிருப்போம். அரைக்கால் டிரௌசரும், பூப் போட்ட சட்டையுமாக தம்பி யாராவது கைகளில் ஏறிக்கொண்டு பாலைத்திருடிக் குடித்த பூனையின் பார்வை பார்த்துக் கொண்டிருப்பான். வீட்டின் மூத்த பெண்ணாக இருந்தால் கூடைச் சேரில் உட்கார்ந்த போட்டோவும், பையனாக இருந்தால் உச்சிக் குடுமி போட்டு கவுன் அணிந்த ஒரு போட்டோவும் கண்டிப்பாக இருக்கும்.

புகைப்படங்கள் ஆசாரத்தில் நீளமாக அடிக்கப் பட்ட ரீப்பர் எனப்படும் சட்டத்தில் வரிசையாக தொங்கிக் கொண்டிருக்கும். அதைப் பார்த்துப் பார்த்து சில சமயம் தாத்தாவும், பல சமயம் அம்மாக்களும் கதை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டுத்தரை. பண்டங்கள் அல்லது உருப்படிகள் என்று அழைக்கப்படும் மாடுகள், எருமைகள் , கன்றுகள், ஆட்டுக் குட்டிகள் என இருபத்தி ஐந்துக்கும் குறைவாக அங்கு மக்கள் தொகை இருந்ததே இல்லை. வருடம் முழுவதும் ஏதோ ஒன்று பிள்ளைத்தாச்சியாக இருந்துகொண்டே இருக்கும். எங்கள் சித்தப்பா அவ்வளவு கண்ணும் கருத்துமாக கட்டுதரையையும், ஆடு ,மாடுகளையும் கவனித்துக் கொள்வார். அதில் ஒரு பக்தி இருக்கும்.

கறவை போடுவது, கலசல் கூட்டுவது, வெள்ளாட்டுக் குட்டிகளுக்கு பாட்டிலில் பால் காட்டுவது, மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது, தீவனம் அறுத்து வந்து போடுவது, தவிடு காட்டுவது, சினை ஏற்றத்திற்குக் கூட்டி செல்வது என எல்லாமே அட்டவணைப்படிதான் நடக்கும். எந்த விசேசம், பண்டிகைகளுக்குச் சென்றாலும் அந்த நேரத்திற்கு ஓடி வந்து விடுவார்.

இடுப்பில் கோவணமும் தலையில் உருமாலையும் கட்டியே இருக்கும் தாத்தா அப்பாவெல்லாம் விசேசம் என்றால் அலமாரியில் மடித்து வைக்கப் பட்ட வெள்ளை வேட்டியும் பழுப்பு நிற சட்டையும் அணிவார்கள். வேட்டியின் உள் கொத்தை கொஞ்சம் மேலே ஏற்றி முனையைப் பல்லில் கடித்து இடுப்பை சுற்றி இறுகக் கட்டுவது ஒரு கலை. இறக்கி விட்டால் வேட்டிக்கு மேலேயும், மடித்துக் கட்டினால் வேட்டிக்குக் கீழேயும் நீளமும்,பச்சையும்,வெள்ளையும் என சன்னமான கோடு போட்ட அண்டர் வேர் தெரியும். ஆனாலும் அதிலொரு கம்பீரம் இருக்கும்.

அம்மாக்களின் அலமாரியில் அதிக பட்சம் ஆறு புடவைக்கு மேல் பார்த்ததில்லை.அவங்க பாணியில் இரண்டு புடவை ஒடைக்கு, இரண்டு புடவை எழவு எடஞ்சளுக்கு,இரண்டு புடவை கல்யாணம் காட்சிக்கு...உள்ளங்கைதான் அயன் பாக்ஸ் ...நீவி நீவி மடித்து ஜாக்கட்டை அதனுள் வைத்து மூன்று வரிசைகளில் இரண்டிரண்டாக அடுக்கி வைத்திருப்பார்கள்.அம்மா பின்கொசுவம் வைத்துக் கட்டுவார்கள். பல்லில் கடித்து சிறு மடிப்புகளாக எடுத்து உள்ளங்கை அளவு வைத்து பின்னால் நகர்த்தி உள்ளங்கையின் பின்புறத்தை வைத்து நீவிக் கட்டி முடிப்பார்கள். அதில் அவ்வளவு நேர்த்தி இருக்கும்.

தோற்றத்தில் விறைப்பும், உள்ளத்தில் அன்பும் நிறைந்தவர் தாத்தா. கொஞ்சமாகப் பேசுவார் ஆனால் ஒருநாளும் கொஞ்சிப் பேசியதில்லை.நகைச்சுவை உணர்வு கொண்ட தாத்தா அதைக்கூட கடுமையாகத்தான் வெளிப்படுத்துவார். அவரது கரடு முரடான வெளிப்பாட்டில் ஒளிந்து கிடக்கும் அக்கறை நாங்கள் அனைவரும் அறிந்ததே என்பதால் தாத்தாவை அப்படியே நேசிப்போம். தாத்தா வீட்டின்(டோல்கேட்) கருப்பசாமி. அவரைத் தாண்டி எதுவும்,யாரும் வீட்டுக்குள் நுழைந்து விட முடியாது. எவர் உரிமையிலும் தலையிடவே மாட்டார், எதற்குமே மறுப்பு சொல்ல மாட்டார். எனினும் அவரிடம் உத்தரவு வாங்காமல் அணுவும் அசையாது வீட்டில். 

மருமகள்களை மகளை விட அதிகமாக நேசிப்பார் தாத்தா. மருமகள்களும் அப்படியே அம்மாயி வீட்டில் மூன்று ஆண் பிள்ளைகளுக்குள் இளவரசியாக வளர்ந்த ஒரே பெண் அம்மா. அப்பா இறந்த உடன் அம்மா மூன்று பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீடு சென்று விடாமல் இங்கேயே இருந்ததற்கு காரணங்கள் உண்டு. அம்மா வீட்டின் மூத்த மருமகள். அம்மாவின் திருமணம் முடிந்து குறுகிய காலத்திலேயே ஆத்தா இறந்து விட்டார்கள். அண்ணியின் மீது அளவுகடந்த மரியாதையும் தனிப் பிரியமும் கொண்ட திருமணமாகாத கொழுந்தன்கள் ,அப்பாவின் ஒரே அக்கா(அத்தை) வீட்டின் அரசி. மாமியார் ,நாத்தனார் இரு ரோல்களையும் அடிஷனல் பர்பாமான்ஸ் பண்ணக் கூடியவர். பாதிநாள் இங்கேதான் இருப்பார்கள். அத்தையின் பையன் நிரந்தரமாகவே இங்குதான் இருப்பார்கள். கொஞ்சம் காடு தோட்டமும் கைத்தறியும் தொழிலாக இருந்ததால் காபிக்கும், சாப்பாட்டிற்கும் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அடுப்பில் உலை கொதித்துக் கொண்டே இருக்கும். இத்தனை பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அம்மா விரும்பவில்லை.

அதன் நன்றிப் பிரவாகமாக தாத்தாவும், சித்தப்பாக்களும், பின்னர் வந்த சித்திகளும் அம்மாவை ,அம்மாவின் முடிவுகளை பெரிதும் மதித்தார்கள் என்றே சொல்லலாம். இன்றும நாங்கள் வரை எல்லோருமே முக்கியமான முடிவுகளை சித்தப்பாக்களிடம் ஆலோசித்துதான் எடுப்போம்.

வேறு வேறு வீடுகளில் இருந்து வந்த மூன்று உடன் பிறவா சகோதரிகளுக்குள் இன்றைய நாள் வரை வாக்குவாதமோ, சண்டையோ வந்ததே இல்லை என்ற பெரும் ஆச்சர்யத்தை நம்பித்தான் ஆகவேண்டும்.

இரண்டுமாடிக் கட்டிடமோ, குளிரூட்டப்பட்ட அறைகளோ, படகு போன்ற கார்களோ, நிரம்பி வழியும் வார்ட்ரோப்போ கற்றுக் கொடுக்க முடியாத ஒற்றுமை,உழைப்பு,மரியாதை,விருந்தோம்பல் போன்ற வாழ்க்கைக் கல்வியையும், மகிழ்ச்சி பொருட்களில் இல்லை மனங்களில் ஒளிந்து கிடக்கிறது என்ற ரகசியத்தையும் எங்கள் ஓட்டு வீடும், கூட்டுக் குடும்பமும் தலைமுறைகளுக்குக் கடத்திச்சென்றது.

அதை மட்டுமா கடத்திச் சென்றது?....


..தொடரும்..

2 comments:

  1. கூட்டுக் குடும்பத்தைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்...அருமை

    ReplyDelete
  2. பால்ய வயதில் நாங்கள் அம்மாயி வீட்டுக்குப் போனால் ஒன்றாக இருந்தது எல்லாம் நினைவுக்குள் கொண்டு வந்தது. மறந்து போன சில சொற்களை வாசிக்கும் அட ஆமால்ல நாம இதெல்லாம் பேசறதே என்று இருந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...