பழனி முருகனுக்கான நடை பயணம், திருப்பதி ஏழுமலையானுக்கான நடை பயணம், வெள்ளியங்கிரி ஈசனுக்கான மலை ஏற்றம், சபரிமலை ஐயப்பனுக்கான மலை ஏறுதல் எனும் ஆன்மீக பயணங்கள் ஆகட்டும், இமயமலையின் சிகரத்தை நோக்கிய மலை ஏற்றம், அமைதிக்கான நடை பயணம், ஆல்ப்ஸ் முதல் அமேசான் வரை வெளிநாடுகளிலும் மலையை நோக்கிய எத்தனையோ நடை பயணங்கள், மலை ஏற்றம்ங்கள் கேள்விப்பட்டு உள்ளோம். இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்யும் மக்களும் உள்ளார்கள். உலகம் முழுக்க கார் அல்லது பைக்கில் வலம் வருவோரும் உண்டு. கோவையில் இருந்து லண்டன் வரை பல நாடுகளின் வழியே தரை வழியே காரில் அடைந்த பெண்களையும் நாம் அறிவோம்.
இதுபோல நடை பயணம் தொடங்கி விமானம் வரை பயணங்களை எப்போதும் மனிதர்கள் விரும்பிக்கொண்டே தான் உள்ளார்கள். அவரவர்க்கு கிடைத்த வாகனங்களில் அவர்வர் உலகை பயணம் செய்யும் மக்கள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் உள்ளார்கள்.
இது காலிங்கராயன் கால்வாயில் செய்த பயணம் பற்றியது. பைக்கில் வேறு யாரேனும் கால்வாயில் பயணித்து உள்ளார்களா என என்னளவில் தெரியவில்லை. இருக்கலாம். இதே கால்வாயில் முன்னோர்கள் அந்த அந்த காலகட்டத்தில் இருந்தவாகனங்களை வைத்து பயணித்து இருக்கலாம். ஆங்கிலேயர்கள் இதே கால்வாயில் பயணித்து இந்த வாய்க்காலின் நிறை குறைகளை அலசி உள்ளார்கள். அவர்கள் குதிரைகளில் பயணித்து இருக்கலாம்.
காலிங்கராயன், எத்தனையோ இடங்களில் குறுக்கும், நெடுக்குமாக சாலைகளின் வழி பாலத்தின் மீதேறி காலிங்கராயன் கடந்து வந்துள்ளேன். சாவடிப்பாளையம் அருகே பஞ்சலிங்கபுரத்தில் அதில் குதித்து விளையாடியதாகட்டும், அதன் கரை வழியே மிதிவண்டிகளில், இரு சக்கர வாகனத்தில் சென்றதாகட்டும், அதில் விளைந்த மஞ்சள், நெல், வாழை என காளிங்கராயன் எனது ஊர் வாழ்க்கை முழுவதும் விரவிக் கிடக்கிறார். ஆனால் அதன் வரலாறைப் பற்றி இதுவரை அறிந்து கொண்டது இல்லை. அது எங்கு ஆரம்பிக்கும் எங்கு முடியும் என யோசித்தது இல்லை.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பவானி நகரை அடைய, லட்சுமி நகர் பைபாஸில் இருந்து காலிங்கராயன் பாளையம் வழியாக பவானி வரும் வழி. பவானி ஆற்றை கடக்கும் முன் 50 அடி இடைவெளியில் காலிங்கராயன் கால்வாய் கடந்து செல்லும். வேறு எதையோ யோசித்துக் கொண்டு பல முறை கடந்து இருப்போம். காலிங்கராயன் ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டரில் ஈரோடு-பவானி சாலை. அந்த இடத்தில் இருந்து பார்வையில் படும் கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயத்தை பார்த்துக்கொண்டே காலிங்கராயன் வாய்க்காலை கடந்திருப்போம். ஆனால் அங்கு ததும்பத் ததும்ப ஓடுகின்ற காலிங்கராயன் வாய்க்கால் எந்த இடத்தில் நொய்யல் ஆற்றோடு சென்று சேர்க்கிறது என யோசித்தது உண்டா?
காலிங்கராயன் கால்வாய் பற்றி ஒரு சிறு குறிப்பு. கிட்டத்தட்ட 740 வருடங்கள் ஒரு பேரதிசயமாக, ஆச்சர்யமூட்டும் ஒன்றாக அப்போதைய கொங்கு மண்டலத்தில் தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் ஓடிக்கொண்டு உள்ளது. காளிங்கராயன் தொடங்கி, முடியும் இடம் நேர் வழியாக சென்றால் 36 மைல்கள் மட்டுமே. அதனை வளைத்து நெளித்து 58.2(90.5 கிமீ) மைல், காவிரிக்கு இணையாக கொண்டு சென்று உள்ளார்.
காலிங்கராயன் கால்வாய் என்பது மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று. காலிங்கராயன் அவர்கள் கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் படையில் தளபதியாக, அமைச்சரவையில் முதன்மை அமைச்சராக இருந்தது வரலாறு.
காலிங்கராயர் - Time Line
- 1240 - காலிங்கராயர் பிறந்த வருடம்
- 1260 - கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், இரண்டாம் சடையவர்மன்
- வீரபாண்டியன் படையில் சேர்ந்தார்
- 1271 - காலிங்கராயன் தடுப்பணை பணிகள் ஆரம்பம்
- 1283 - தை மாதம் 5-ந் தேதி காலிங்கராயன் தடுப்பணை திறப்பு
பயணத்துக்கு வருவோம். இதற்கான விதை எங்கு எப்படி போடப்பட்டது எனதெரியவில்லை. அண்ணன் ஈரோடு கதிர் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுதில் தான் இது பற்றி யோசனை முளைத்திருக்க வேண்டும். அவர் எப்பொழுதும் காலிங்கராயனைப் பற்றி வியந்து கொண்டே இருப்பார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காலிங்கராயன் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை, கரையில் சென்று பார்க்க வேண்டும் என்று இருவருக்குமே ஆவல். ஆனால் ஒரு சில முறைகள் திட்டமிட்டும் பயணப்பட முடியவில்லை.
அந்த சுபயோக சுப தினம் 11 செப்டம்பர் 2021 சனிக்கிழமை வாய்த்தது. கோவிட் இரண்டாம் அலை வெகுவாக குறைந்து, கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்திக்கொண்டு இருந்த நேரம். அந்த வாரத்தின் ஆரம்பத்தில், அந்த சனிக்கிழமை போகலாமா என சும்மா பேசியிருந்தோம். முந்தைய நாள் வெள்ளி இரவு வரை நிச்சயமாகத் தெரியவில்லை. அதைப்பற்றி பேசவும் இல்லை. எதுவும் திட்டமிடவும் இல்லை. வெள்ளி இரவு 9.30 க்கு மணிக்கு அடுத்த நாள் காலை நிச்சயமாக கிளம்பலாம் என முடிவெடுத்தோம். வெயில் காரணமாக சற்று சீக்கிரமாக கிளம்ப முடிவு செய்திருந்தோம். ஆறு மணிக்கு கிளம்பலாம் என முடிவெடுக்கிறோம். ஆனால் ...
..........தொடரும்............

ஆர்வந்தை தூண்டுகிறது.
ReplyDelete