ஆடி மாசம் பொறந்தாச்சு...
ஆடிப் பட்டம் தேடி விதைக்கணும்கற பழமொழியை எல்லாம் தூக்கித் தூரப் போட்டு விட்டு, பண்டிகை நாளுக்கு தயாராகியது சாலையோரத்து நிலங்கள்.
எப்ப பார்த்தாலும் சோளம் அல்லது கடலை போடுவார்களா? நெல்லு நடவு செய்வர்களா?மாடு கொண்டு உழவு ஓட்டுவார்களா? ட்ராக்டர் கொண்டு உழவு ஓட்டுவார்களா?
இயற்கை முறையில் பூச்சி மருந்தை அடித்து என்னை மூச்சு விட வைப்பார்களா? செயற்கை உரத்தைப் போட்டு வெள்ளாமையை அதிகரிச்சு நோயைத் தேடி என்னையும் மலடாக்கி விடுவார்களா?" உஷ் அப்பாடா, இந்த தொல்லை எல்லாம் இல்லாம பதினைந்து நாளைக்கு நிலங்களை வாடகைக்கு விடப் போவதால் வெள்ளாமையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு மக்களின் மகிழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டாட ஆயத்தமாகி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.
வருடம் தோறும் ஆடி மாதத்தில் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையை முன்னிட்டு
நிலங்களின் உரிமையாளர்கள் கடைகள் நடத்துவதற்கு நிலத்துக்கு வாடகை பேசி விடும் போதே கடை போட வருபவர்களின் முகத்தில் தெரியும் நம்பிக்கையை கண்டு நிலம் ஆச்சரியப்பட்டது.
குருநாதசாமி கோவில் திருவிழா தேர் கடைகளில் சமான் வாங்க வேண்டியே நிறைய பேர் கோவிலுக்கு வருவார்கள். அப்போது எல்லாம் ஊருக்குள் அதிகமாக கடைகள் கிடையாது. இப்ப வீதிக்கு ஒரு பேன்சி ஸ்டோர். முக்குக்கு ஒரு பாத்திரக்கடை. அதுக்கு மேல வீட்டை விட்டு எதுக்குப் போறீங்க! இந்தாங்க மொபைல் போனில ஆர்டர் போடுங்க. வீட்டு வாசலுக்கே உங்களுக்கு தேவையான பொருள்கள் வீடு தேடி வந்திடும் என ஆன்லைன் வியாபாரம் களை கட்டுகிறது.
ஆனாலும், குருநாதசாமி கோவில் தேரில் எப்போதும் போலவே வந்து கடை போடுகிறார்கள்.என்ன லாபம் கிடைக்குமோ?.. வருஷம் பூரா என்னைப் புரட்டிப் போட்டு விவசாய செய்யறவனுக்கே சில நேரத்தில என்னாள படியளக்க முடியல..
வந்து பத்து நாளு கடை போடற இவர்களுக்கு என்னத்த கொடுக்கப் போறேன். அப்போது ஒரு கடையில் இருந்து "கொள்ளேகால் பர்பி" வாசனை நிலத்தின் மூக்கைச் சுரண்டியது.
'அட ,இங்க பார்டா எப்படி விதம்விதமா அடுக்கி வச்சு இருக்கிறாங்க? வெள்ளைக் கலர்ல இருப்பது அஸ்கா சர்க்கரை பர்பியாம்! பழுப்புக் கலர்ல நாட்டுச் சர்க்கரை பர்பியாம். இந்த பக்கத்தில் இத தேங்காப்பர்பினு சொல்லுவாங்க! எங்கிட்ட இருக்கிற தென்னை மரத்தில தேங்காய் விற்பனை இல்லாம வீணாகிப் போயிடுங்கிற நேரத்தில என்னுடைய எசமான் ஊட்டுல படக்குனு உடைச்சு, தேங்காயத் துருவி, தேங்காய் பர்பி போட்டு புள்ளைகளுக்கு கொடுப்பாங்க. அப்புறம் சிவப்பு, மஞ்சள், பச்சைனு கலர் கலரா அல்வா எல்லாம் அடுக்கி வச்சு இருப்பதை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். நமக்கே எச்சில் ஊறும் போது குழந்தைகளுக்கு ஊறாத என்ன?
அந்த பர்பி கடையயைப் பார்த்து, கையைக் காட்டி நல்ல சொக்காய் அணிந்த புள்ளை ஒன்னு, "அம்மா அல்வா வேணும்" என கையை காட்டுது.
"டேய் கண்ணா! இதெல்லாம் மூடி வைக்காம திறந்தே வச்சு விக்றாங்க. டஸ்ட் படிந்து இருக்கு இதெல்லாம் திங்க கூடாது. வேறு நல்ல கடையில வாங்கிக்கலாம்" எனச் சொல்லி கையைப் பிடித்து இழுக்க, அந்த புள்ளை ஏக்கத்தோடு பார்த்துட்டு போவதை பார்க்க பாவமாக இருந்தது.
என்னை உழுது சோளக்கருது விதை பயிரிடுவாங்க வெள்ளாமை எடுப்பாங்க. ஆனா எனக்கு ஒரு நாள் கூட உப்பு போட்டு வேகவச்ச கருது தரமாட்டாங்க. இந்த நிலத்தை வாடகைக்கு எடுத்தவங்களுக்கும் எனக்கும் என்ன பந்தம்..உப்பு போட்டு கருத வேகவச்சு,வேகவச்சு தார்பாயை விரிச்சு நிலத்தில் கொட்டுவாங்க பாருங்க. அட,! அட அந்த மணமும் சுவையும் என்னை மயங்க வைக்கும். நிறைய பேர் வாங்கி தின்னுட்டு சோளக்கருது தொலியை உரித்து உரித்து கீழே போட்டுட்டு போவாங்க. அப்ப நடக்கிற பாதை பூராவும் தொலியாக் கிடக்கும் .
இந்த வருஷம் திருவிழாவில ஒரு நல்லதுநடந்துச்சு. அதிகமா மழைக்காகிதப் பைகளைப் போட்டு என் குரல் வளையை நெறிக்காமல் விட்டது என்னை சந்தோஷப்பட வச்சுது. என்ன குடிக்கிற தண்ணீர் பாட்டில்களைக் கீழே போட்டுப் போட்டு நிலம் முழுக்க புண்ணு புடித்து போனது போலக் கிடந்தது. திருவிழானா இது கூட இல்லாமல் இருக்குமா என்ன?
இந்த ராட்டினத்தூரி போடறவங்க பாடு தான் திண்டாட்டம். காட்டுக்காரங்க இடம் கொடுக்கறதால தூரி ஆட அவங்களுக்கு இலவச பாஸ் கொடுக்கணும்னு வாங்கிறாங்க! அப்புறம் பெரிய வி.ஐ.பி.இவங்களுக்கும் இலவச பாஸ். இலவசமா நிறைய டிக்கெட் தர வேண்டி இருப்பதால் அவங்க வருமானம் ரொம்பக் குறைஞ்சு போவுது. திரும்பின பக்கம் எல்லாம் மக்கள் தலை அதுக்குத் தகுந்தளவு நிறைய தூரிகள்.
அங்கங்கு சும்மா உயர உயரமா கலர் கலர் லைட்டுகள் போட்டுட்டு கரண்ட்ல சுத்தற தூரி,வாத்து மாதிரி தூரி, அது மேல கீழே போவுது..பிரேக் டான்ஸாம்,பாட்டப் போட்டு டக்டக்னு டான்ஸ் மாதிரியே அங்கே இங்கே சந்துக்குள் மற்றும் பொந்துக்குள்ள போற மாதிரி பாக்கிறவாங்களே நடுங்குவது தெரியுது! விளையாடறவங்க முகத்தில் அட! அட அப்படி ஒரு பயம் கலந்த மகிழ்ச்சி..
விவசாயம் செய்யறவங்க கூட இந்த திருவிழா நாள்ல மழை வரக்கூடாதுனு வேண்டுவாங்க. இந்த மழை வந்துடுச்சுனா நிலத்தில தண்ணி நிக்க ஆரம்பிச்சிடும் சேறும்,சகதியுமா போயிடும். என்னை மிதிக்கிறது மட்டும் இல்லை மேலு ,காலு என எல்லாம் சேத்தைப் பூசிக்குவாங்க. சிலர் வழுக்கி கீழே கூட விழுந்துட்டு என்னை கண்டபடி பேசிட்டு போவாங்க!
என்ன செய்யறது? எந்த ஊருல இருந்தோ இங்கு வந்து பொழைப்பு நடத்த வர எல்லா மக்களுடைய வாழ்க்கையிலும் மழை வந்தால் வருமானம் இல்லாமல் போயிடும். அதனால், மழையை திருவிழா நாட்களில் யாரும் விரும்பறதே இல்லை.
எந்த ஊருலையும் இல்லாத குதிரைகள்,தினுசு தினுசா காளைகள், நாட்டு மாடுகள், ஆடு, நாய் என எல்லாம் வந்து கூடுவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். "வெளி மாநிலத்தில இருந்தெல்லாம் வரும் வகை வகையான குதிரை,மாடுகளை எல்லாம் பார்த்து வாங்கிட்டு போக, வேறு மாவட்டத்திலிருந்தும் மக்கள் வந்து குவிவாங்க...
சாட்டைக் கடையில் விதவிதமான சாட்டைகள். மாடு,குதிரைக்கு கட்டும் அழகு மணிகள் விக்கும். எங்க தான் மக்கள் இருக்காங்களோ? எறும்பு மாதிரி சாரை சாரையா ஊர்ந்துட்டே போவாங்க. அதிலும் அடி தடி,தள்ளு முள்ளு நடக்கும் .போலீஸ்காரங்களே ஓஞ்சு போயிடுவாங்க.
கோவிலுக்குப் போகும் கூட்டத்தை விட வேடிக்கை பார்க்க வரும் கூட்டமே அதிகமா இருக்கும்...
தினுதினுசா மக்கள் வந்தாலும், இப்போது கடைகளில் வாங்கும் கூட்டம் குறைஞ்சு போச்சுனு புலம்பற மக்களப் பார்த்தா பாவமாத் தான் இருக்கு. ஆனாலும் அவங்க இப்படி திருவிழா, திருவிழாவா கொண்டு போய் கடை போடுவதையே விரும்புறாங்க."அதோ ஒரு அம்மாவிடம் கடைக்கார பொண்ணு பேசுவது எனக்கு கேட்குது..".
"இந்த பொம்மை என்ன விலை?"
"அக்கா,காலையில் நூறு ரூபாய்க்கு கொடுத்தேன். நாளைக்கு வேறு ஊருக்கு கடையை போடப் போறோம் என்பது ரூபாய் கொடுங்கக்கா".
"ஏம்மா இப்படி ஒரேடியா விலை சொன்ன எப்படி?குறைச்சு சொல்லும்மா."
"அக்கா கட்டாதுங்க! நாப்பதாயிரம் வாடகை கொடுத்து இருக்கோம்.அதுக்கே போதாது. எப்படிங்க வயித்து பொழைப்பு நடத்தறது."
இரண்டு பேரும் பேரம் பேச பேச எனக்கு பாவமா தான் இருக்கு...
"வெள்ளாமைல லாபம் வருதோ இல்லையோ நிலத்தை உழுவாம அப்படியே போட முடியுமா? ஆண்டவன் என்ன படியளக்கிறானோ அளக்கட்டும் என என் உரிமையாளர் யாரிடமோ பேசியது நினைவுக்கு வந்தது . திருவிழாவிற்குத் தான் எத்தனை முகங்கள்!!
மனித வாழ்க்கையும் போராட்டங்கள் நிரம்பியது தான். இந்த மாதிரியான திருவிழாக்கள் தான் என்னைப் போலவே அவர்களையும் உற்சாகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது என்று நினைத்தவாறு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது நிலம்!

மண்மணம் (மனம்)கமழும் தேர்த்திருவிழா!
ReplyDelete