சென்ற வாரம் திருப்பூரில் பிரபலமான பள்ளிகளில் ஒன்றின் செயளாலரைச் சந்திக்கவும், அவருடன் பயணம் செய்யவும் நேர்ந்தது. பள்ளி நடத்துபவரும் நானும் சந்தித்ததால் இயல்பாகவே பேச்சு குழந்தைகளை மையப்படுத்தி இருந்தது. இன்றைய குழந்தைகளின் கலாச்சாரப் பார்வை பற்றியும் பேச்சு வந்தது. அவர் "How do we save our culture from this younger generation? They are causing cultural disaster " என்றார் அலுப்புடன்.
கலாச்சாரச் சீரழிவுக்குக் குழந்தைகள் காரணம் என்பதை எந்த விதத்திலும், எந்த இடத்திலும், எவ்வளவு உதாரணங்களை முன் வைத்துக் கூறினாலும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இரண்டு வாரங்களுக்கு முன் ஜவுளி நகரத்தில் நடந்த ஓரு "பெரிய குடும்பம்" ஒன்றின் பிறந்தநாள் விழா பற்றிப் பேசியே ஆக வேண்டும். அந்த மாதிரியான நிகழ்வுகளை பார்க்கும் பொழுதும் கேள்விப்படும் பொழுதும் அதிர்ச்சி அடைவதில்லை. ஆத்திரம் தான் வருகிறது. ஆனால் முடமாகிப் போகும் ஆத்திரம் அது.
ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாள் விழா 3 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆடம்பரமாக நடைபெற்றது. குழந்தைகளுக்குத் தனி விளையாட்டுகளும், பெண்களுக்கான பொழுதுபோக்கு ஏற்பாடுகளும், ஆண்களுக்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட ஏற்றுமதி, இறக்குமதி சரக்கு பாட்டில்களும் விமர்சையாக இருந்தன.
விழாவுக்கு வந்த குழந்தைகள் சுமார் இரண்டு வயது முதல் 16 வயது வரை.
விளையாட்டு ஏற்பாடுகளால் குறுகிய காலத்திற்கு மேல் குழந்தைகளை ஈர்க்க முடியவில்லை. அம்மா அப்பாவிடம் ஓடிப் போய் அவர்கள் உரச உடனே மொபைல் போன்கள் கை மாறின. பெரும்பாலான குழந்தைகள் தங்களுக்கென ஒதுக்குப் புறமாக இடம் தேடி அமர்ந்து அந்த கை அகல சிறைச் சாலைக்குள் கைதியாகிக் கொண்டிருந்தனர்.
பெரும்பாலான ஆண்கள் சோஷியல் ட்ரிங்கிங் எனப்படும் சமூகக் குடித்தலில் ஈடுபட்டிருக்க, பெண்களில் சிலர் நகைக்கடை துணிக்கடை மாடல்களாக உலா வர, சிலர் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கத்தி கும்மாளமிட்டு ஊர்க்கதை பேசிக் கொண்டிருக்க, சில பெண்கள் மட்டும் மிகவும் அழுத்தத்துடன் இறுக்கமாக இருக்க, நான் என் தோழியிடம் " என்னதான் social drinking ன்னு சொன்னாலும் தன் கணவர்,வளரும் குழந்தைகள் முன் குடிப்பதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை" என்று கூறினேன். அவர் கலகலவென சிரித்து விட்டு "so sad you are an 80's kid" என்று கூறி தங்களால் குடிக்க முடியவில்லையே என்பதுதான் ஆத்திரப்பட்ட பெண்களின் ஆதங்கம் என்றார்.
அதில் உள்ள மெய் ,பொய் பற்றிய ஆராய்ச்சியோ, social drinking சரியா? தவறா? என்ற வாதமோ... ஏன் ஆண் குடிக்கலாம்? பெண் குடிக்கக் கூடாதா? என்ற பெண்ணியமோ பற்றி இங்கு நான் பேசவில்லை.
எனது கேள்வி எல்லாம் குழந்தையை ஆசீர்வதிக்க அழைக்கப்படும் பர்த்டே பார்ட்டியில் பாட்டில் அவசியமா? அவசியமெனில் அதை பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு நாம் உணர்த்த விரும்பும் கலாச்சாரம் எது? கூட்டமாக சேர்ந்தாலும் குழந்தைகள் தனித்தனியாக விளையாட வேண்டும்... பெண்கள் குதூகலிக்க வேண்டும்.... ஆண்கள் குடிக்க வேண்டும் என்பதா?
இது போன்ற முன்மாதிரிகளைப் பார்க்கும் போது, குழந்தைப் பருவம் உடைந்து வாலிபப் பருவத்துக்குள் நுழையும் போது கூட்டமாக சேர்ந்தால் குடிக்க முற்படுவதோ, குடிப்பதற்காக கூட்டம் சேர முற்படுவதோ இயல்பாக நடக்கும் தானே?
உடனே இளைஞர்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதாக கதறுகிறோம் . நாம் சீரழிக்காத கலாச்சாரத்தையா நமது தலைமுறைகள் சீரழித்துக் கொண்டிருக்கிறது?
பிறந்தநாள் கொண்டாடிய குழந்தையின் தாய் எனக்கு நன்கு அறிமுகமானவர். ஒரு முறை அவருடன் டின்னர் சாப்பிடும் சூழ்நிலையில் அவருடைய நடவடிக்கைகள் என்னை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இவர் ஆர்டர் செய்த ஒரு டிஷ் இவர் எதிர்பார்த்த சுவையுடன் வரவில்லை என்று அங்கு பரிமாறியவர் முதல் முதலாளி வரை எகிறிக் குதித்து எக்கி எக்கி சண்டை போட்டு பில் தொகை ரூபாய் 800 கொடுக்க மறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் வீட்டில் உணவு சுவை சற்று மாறினால் தட்டை எடுத்து வீசலாம், கத்தி சண்டை போட்டு ரண களம் ஆக்கலாம், உண்ண மறுக்கலாம் என்ற கலாச்சார மாடல்கள் தலைமுறைக்கு எங்கிருந்து கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் தெரியாதது போல் பாசாங்கு செய்கிறோமா?
Every single action of a child is modeled by somebody for the child to imbibe.
எது சரி? எது தவறு? என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கும் இன்றைய குழந்தைகளை ஒற்றை விரல் நீட்டி குற்றம் சொல்வதற்கு முன் நம்மை பார்த்திருக்கும் நான்கு விரல்களும் என்ன சொல்கிறது என்று கேட்போம்.
என்ன மாதிரியான சமுதாயத்தில் அவர்களை நாம் நீந்த வைத்திருக்கிறோம்?
நாம் வளர்ந்த காலம் தோட்டத்தில் சென்று ரோஜா பறிப்பது போன்றது. ரோஜா செடியில் இருக்கக்கூடிய முட்கள் மட்டுமே விரல்களைக் குத்தும் ,ஆழமாக ஏறாது .குத்திய விரலை வாயில் வைத்து சூப்பினால் வலியை ஆற்றி விட முடியும். ஆனால் இன்றைய குழந்தைகள் அடர்ந்த ஆபத்து நிறைந்த முற்புதர் காடுகளுக்குள் சென்று ரோஜா பறிக்க வேண்டிய பரிதாபத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைவு கொள்வோம்.
கலாச்சார சீரழிவுகளில் ஒன்றாக porn videos addiction பேசப்படுகிறது.
வீடியோ எடுத்துப் போடுபவர்கள் குழந்தைகளா? அதை வியாபாரம் ஆக்கும் சோசியல் மீடியா வலைதளங்களின் உரிமையாளர்கள் குழந்தைகளா?
அவர்களின் பாழ்பட்ட சூழலைப் புரிந்து கொள்பவர்களாகவும் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் இருப்பதை விடுத்து சந்தனத்தை சாக்கடைக்குள் வீசிவிட்டு நாறுகிறது என்று கூப்பாடு போடுகிறோம்.
குழந்தைகளை மனசாட்சி இல்லாமல் குறை கூறும் எவரும் என்னைப் பொறுத்தவரை குற்றவாளியே.
மனித குலம் மழலையர் குலத்திற்கு ஏற்படுத்தும் கடலளவு கலாச்சார சீரழிவில் ஒரு துளி மட்டுமே இது. குழந்தைகளைக் கை காட்டும் குற்றவாளிகள் நின்று நிதானமாக யோசிக்கட்டும்.... இது நியாயமா என்று!

தாம்பூலப் பையில் மதுபாட்டில் என்பது இன்றைய செய்தி. யாரை உதாரணமாக எடுத்துக் கொள்வது என்பது இளசுகளுக்குக் குழப்பம் தான்.
ReplyDelete