Thursday, June 1, 2023

ஜீபூம்பா ....மலர் செல்வம்

 


பெருந்தொற்று,  பல தொழில்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தது. பலவற்றை அடியோடு அழித்தது. பழையன கழிதல் இருந்தால் புதியன புகுதல் இருக்கத் தானே செய்யும்?

கொரோனா முடிந்த பிறகும் கூட்டம் கூட வாய்ப்புள்ள  பொது இடக்களுக்குப் போகத் தயங்கிய மனநிலையை ஆதாரமாக வைத்து பெருநகரங்களில்  பிறந்ததே  மளிகை காய்கறி பால் போன்ற அத்திவாசியப் பொருட்களை குறுகிய நேரத்தில்  தனது கடையிலிருந்து வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும்  ஹோம் டெலிவரி செயலிகள்.

இல்லத்தரசிகள் என்ன தான் முன்கூட்டித் திட்டமிட்டு பார்த்துப் பார்த்து சாமான்களை வாங்கி வைத்தாலும்  அடுப்பைப் பற்ற வைத்த பிறகு  எதாவது ஒன்று இல்லை எனத் தேடுவதும் கவலைப் படுவதும் அதையொட்டிய திட்ட மாறுதல்களும்  அதனால் உண்டாகும் மன அழுத்தங்களும் அன்றாட வாடிக்கை தான்.

டன்ஸோ,ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட், ப்ளிங்கிட், போன்ற செயலிகள் சென்னையில் பிரபலமானவை.பால், காய்கறி,பழங்கள் மளிகை என  அவசியத் தேவைகளில் ஆரம்பித்து இன்று பெரிய சூப்பர் மார்க்கெட்டே உள்ளே உள்ளது.

அவசரம் என்றால் நைட்டியை விட்டு  சல்வாருக்கு மாறி தலையை கையில் வாரி ஒரு ரப்பர் பேண்டுக்குள் அடக்கியபடி அரக்க பரக்க பக்கத்து மளிகைக் கடைக்கு ஓடுவதும் ரொம்ப அவசரம் என்றால் நைட்டிமேல் துப்பட்டாவை போட்டு ஒரு புதிய ஃபேஷனை உருவாக்குகிறோம் என்ற பிரக்ஞையின்றி  அள்ளி முடிந்த கொண்டையுடன் அண்ணாச்சி கடைக்கு ஓடுவதும் அல்லது  ஓட்டுவதும் பல வீடுகளில் காணக் கிடைக்கும் காட்சி தான்.

இன்று நிலைமை சற்று மாறிவருகிறது. காலை எழுந்ததும் பல்தேய்த்து விட்டு கையில் மொபைலுடன் அமர்ந்து  சமையலுக்கு வேண்டியதை  ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு சமையலறைக்குள் சென்று ஒரு  காஃபி போடுவதற்குள்  அழைப்பு மணி அடுத்து விடுகிறது. பொருட்களைச் சுமந்து கொண்டு  ஒரு ஆணோ பெண்ணோ புன்னகையுடன் குட்மானிங் சொல்வது அவ்வளவு ரிலாக்ஸ்டாக உணரமுடிகிறது.

அதுவும் என்னைப் போன்ற ஃபயர்எஞ்ஜின் நபர்களுக்கு  திடீர் விருந்தாளிகளின் வருகையின் போது இதன் மகத்துவம் நன்றாகவே புரியும்.

கிட்டத்தட்ட 24 மணி நேரமும் டெலிவரி. அழைப்பு மணி அழுத்த வேண்டாம் என்றால் வீட்டுக்கு வெளியே பையை விட்டுச் செல்லும் வசதியைத் தேர்வு செய்யலாம்.

ஒவ்வோர் நகர்வும் ஆன்லைனில் அப்டேட் ஆகி விடுகிறது. பணம் செலுத்துவதும் எளிதாக உள்ளது.

இப்படிப் பல வசதிகள். ஆனாலும் இருக்க இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்குவது போலத்தான் இதுவும் என்று அவ்வப்போது தோன்றுவதும் உண்டு.

இலவச டெலிவரி என்று ஆரம்பிக்கும். பிறகு 10₹ என்று மாறும். பிறகு மெல்ல 200ரூபாய்க்குக் குறைவாக ஆர்டர் போட்டால் 45₹ டெலிவரிக்கு என்று அச்சுறுத்தும். வெங்காயம் மட்டும் வாங்கலாம் என்று உள்ளே நுழைவோம். அட! சுண்டைக்காய் கால்பணம்.  சுமைகூலி முக்கால் பணம் தர மனம் வருமா?

உள்ளே தேடி   வேண்டுவது வேண்டாமை எவ்லாம்  கூடையில்போட்டு பில் தொகை 200ஐத் தாண்டி நானூறில் நிற்கும். சில  பொருட்கள் இரண்டு மூன்று என்று கொத்தாகத் தான் வாங்க முடியும்.அவசரத்திற்கு வேண்டுமே? நமது பலவீனம் அங்கு பகடைக்காய்.

அவ்வப்போது தரமற்ற பொருட்கள் தலைகாட்டுவதும் உண்டு.

செயலியில் அதற்கான பிரிவில் போய் கம்ப்ளெய்ண்ட் தந்தால்  ரோபாட் chatbot தான் நம்முடன் உரையாடும். புகைப்படம் எடுத்து அனுப்பினால் உடனடியாக தீர்வு கிடைக்கிறது. 

Replace/Refund- .ஏதேனும் ஒரு ரூபத்தில்.

யோசித்துப் பார்த்தால் விசித்திரமாகத் தோன்றும். காலமாற்றத்தில் எத்தனை அடிப்படை விஷயங்கள் உருமாற்றம் பெறுகின்றன என்று!!

ஊரில் உள்ள மளிகைக்கடைக்காரர் நமக்கு உறவினர் போல மாறியிருப்பார். நம் குடும்ப  நல்லது கெட்டதில் அவரும் பங்கெடுப்பார். கிராமம் நகரம் வித்தியாசம் இல்லை. சென்னை ராயப்பேட்டையில் நாங்கள் குடியிருந்த போது  எங்கள் தெருவிலிருந்த மல்லிகா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அவ்வளவு உரிமையாக பழகுவார்.

சற்றே மாறி சூப்பர் மார்க்கெட் வந்தது. பிராண்ட் முக்கியமாக மாறியது . உரிமையாளர் பற்றித் தெரியாமலும் இருக்கும் நிலை வந்தது.

ஆனால் காய்கறியைத் தொட்டு புரட்டி எடுத்து பூதக்கண்ணாடி வைத்து அதன் முன்ஜென்மம் வரை ஆராய்ச்சி செய்து வாங்கும் பழக்கம் மறைந்து வருவது தான் மாயம்!!

இன்று  வாடிக்கையாளர் சேவை எண் கூட வைக்காத ஒரு ஆன்லைன் கடையில் "படம் பார் .கூடையில் சேர். ஜிபே செய்" என்று உட்கார்ந்த இடத்தில் வாங்கிக் குவிக்கிறோம்!!  விந்தையாகத் தான் இருக்கிறது,! 

ஆன்லைனில் ஸ்விக்கியின் உணவு வசதியை பயன்படுத்தாதவர்கள் கூட  இந்த மளிகை ஷாப்பிங் வசதியைப் பயன்படுத்துகிறார்கள்.

இதன் நீட்சியாக இன்னொரு உபயோகமான சேவைத் தொழிலும் அமோகமாக வளர்ந்து வருகிறது.

ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு பொருட்களைக் கொண்டு சேர்க்கும் இனஸ்டண்ட் கூரியர் தொழில் தான் அது.

டாக்குமெண்ட்ஸ் அனுப்புவது  எளிது என்று விளம்பரப்படுத்தப் பட்ட தொழில்.
ஆனால்  இன்று அதன் பரிமாணமே வேறு!டெய்லர் கடையில் துணி பிக்அப் செய்ய வேண்டுமா?ஜூனி/டன்சோ தான் ஞாபகம் வருகிறது.

சாவியை கொடுத்தனுப்ப வேண்டுமா? அம்மா என் வீட்டுக்கு விருந்தாளி என்று மகள் போன் போன்செய்தால் அம்மாக்கள் சமைத்து முடித்து புக் செய்தால் பத்து நிமிடத்தில் எடுத்துச் சென்று உடனடி டெலிவரி. கிலோ மீட்டருக்கு 15-20 ரூபாய் ஒரு பிரச்னையாக இருப்பதில்லை .

வாட்ஸப்பில் பார்த்து  ஜி பேயில்  வாங்கி ஜூனியில் உடனடியாக பொருள் வீடு வந்து சேர்வது தான் இன்றைய ஷாப்பிங். போக்குவரத்து நெரிசலுக்கும் சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இது போன்ற செயலிகள் பெரிய வரம்.பெட்ரோலையோ ஓலாவையோ கணக்கிட்டால் இதற்கான செலவு குறைவுதான் என்பதால் இன்று வீடுதோறும் டன்சோ விளக்கம் தான். கொரானாவால் விளைந்த ஒரு மாற்றம்என்று சொல்லலாம்.

பெருநகரங்களைத் தாண்டி சிறுநகரங்களில் இச்சேவைகள் விரிவுபடுத்தப் படவேண்டும். இது மிகச் சிறந்த  வளர்ச்சி வாய்ப்புள்ள ஒரு தொழில்.

கார்ப்பரேட்கள் தான் முயற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. கண்ணம்மாக்களும் கார்த்திக்களும்  முயற்சி செய்யலாம்.

சமீபகாலங்களில் நான் சென்னையிலிருந்து ஊருக்கு வந்தால் அதிகம் மிஸ் செய்வது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்/ப்ளிங்கிட்/ ஜீனி/டன்சோ போன்ற சேவகர்களைத்தான்!

எல்லா நன்மையிலும் ஒரு தீமை உண்டு! எல்லாத் தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்பது இந்த அலாவுதீன் விளக்குகளுக்கு மிகப் பொருத்தம்!!

8 comments:

  1. அருமையான கட்டுரை👌🏻👌🏻👌🏻
    பல வருடம் முன்பு எங்கள் வீ்ட்டில் அவசரத்திற்கு மளிகை பொருள் வாங்க கடைசித் தம்பி தான் மிதிவண்டி எடுத்து கொண்டு ஓடுவான். இல்லையென்றால் பக்கத்து வீட்டு தம்பியோ அண்ணனோ உதவுவார்கள். இன்றைய காலகட்டத்தில் அதை ஸ்விக்கி, டன்சோ போன்றவர்கள் செய்வது வாடிக்கையாளருக்கு செளகரியமாகவும் உள்ளது, பல இளைஞர்களுக்கான நல்ல வேலைவாய்ப்பாகவும் அமைந்துள்ளது. நகரத்தைத் தாண்டி இச்சேவை விரிவடைந்தால் பலரும் பயனடைவர் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. கூறியுள்ளது போல் வரமும் அதுவே! சாபமும் அதுவே! எப்பொழுதும் எல்லா காலங்களிலும் ஏதாவது ஒரு முன்னேற்றம் நடக்கும்... அப்போது பழங்காலத்தில் இப்படி இருந்தது என்று கூறுவோம். ஆனால், நடைமுறைக்கு பழங்காலத்திற்கு செல்வது சாத்தியமாகவே ஆகாது. அனைத்திலும்... பழங்காலத்தில் இருந்த விஷயங்களிலுமம் , நிகழ்காலத்திலும் இருக்கும் விஷயங்களிலும், வருங்காலத்தில் வரப்போகின்ற விஷயங்களிலும், நல்லதும் இருக்கும், தீயதும் இருக்கும், தீயதை விலக்கி நல்லதை எடுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். சொன்னது போல் வேறு இடங்களுக்கு செல்லும்போது இந்த வசதியும் இருந்தால் கண்டிப்பாக நன்றாக தான் இருக்கும்!!!!

    ReplyDelete
  4. நிதர்சனமான உண்மை , நானும் இங்கிருக்கும் பொழுது இவற்றை அதிகமாக பயன் படுத்துகிறேன்😊

    ஆம். கூரியர் அனுப்ப வேண்டுமா கார குழம்பு சாப்பிட வேண்டுமா எல்லாம் சொடக்குப்போடும் நேரத்தில் செய்து விடும் smart phone 😊

    பழகி விட்டால் பிரிந்து வருவது கடினமே.

    இருப்பினும் எங்கள் ஊரில்( கிராமத்தில்) ஞாயிற்றுக் கிழமை மட்டுமே சந்தை. அன்று தான் எல்லா காய்கறிகளும் கிடைக்கும். வாரம் முழுவதும் காத்திருந்து ஞாயிற்றுக் கிழமை வந்ததும், விடிகாலையில் காபியை குடித்து விட்டு கையில் தக்காளிக்குத் துணிப் பையும் , காய்க்கு கூடையும், கரிக்கு தூக்குச் சட்டியும் எடுத்துக் கொண்டு புறப்படும் இன்பமே தனி💚

    இன்றும் மிக எளிமையான மனிதர்கள். கத்திரிக்காயை பிரட்டி , வெண்டைக்காயை உடைத்து, கீரையை அலசி ஒரு சுற்று நடந்து வருவதற்குள் ஊரில் பாதி பேரை பார்த்து விடலாம்😊. அக்கரையாய் *உனக்குப் பிடிக்குமேனு அரிக்காத பழைய கருணை கிழங்கு வாங்கி வச்சிருக்கேனு* சொல்லி ஒரு பையைக் கொடுக்கும் பாட்டி பேரழகு💚

    இவை எல்லாம் நமது ஜீம்பூம்பா ஃபோனில் நிச்சயம் இல்லை😊

    ReplyDelete
  5. உண்மை தான்.. எனக்கெல்லாம் ஜூனி ரொம்ப உதவியாக உள்ளது...ஆனாலும் ரொம்பவே சார்ந்து வாழ்வது புரிகிறது...ஆனால் வெளியே வர முடியாது...

    ReplyDelete
  6. இன்றைய அல்ட்ரா மாடர்ன் குடும்பத் தலைவிகளின் அன்றாட நிகழ்வில் மிக முக்கியமான ஒன்றை படம் பிடித்து காட்டியது போல இருந்தது இக்கட்டுரை👌🏻 மிக மிக யதார்த்தமான அழகான எழுத்து நடை அதற்கு ஒரு சிறப்பு பாராட்டு.💐
    எந்த ஒரு விஷயத்திலுமே நல்லது கெட்டது என நாணயம் போல் இரண்டுமே இருக்கத்தான் செய்யும். எது நமக்கு நன்மை பாயக்கிறதோ! நமக்கு மிகவும் உதவுகிறதோ அதையே பிரதானமாக முன் வைக்கும் ஒரு பழக்கம் நமக்கு உண்டு. அப்படி பார்க்கையில் இந்த மாடல் ஜீபூம்பா பல நன்மைகளை செய்கிறது என கூறலாம். நமது நேரத்தையும், ஆற்றலையும், ஒருவிதத்தில் பணத்தையும் சேமிக்க இது போன்ற பல அவசர டெலிவரி ஆப் மிகவும் பயனுள்ளதாகவே தோன்றுகிறது.

    சில எதார்த்த உணர்வுகளை அல்லது எதிர்பாரா உறவுகளை(அண்ணாச்சிகடை, சுந்தர் அண்ணங்கடை) இழந்து பல உதவிகளை பெற வேண்டும் என்பது இக்கால கட்டத்தின் கோலமாக கருதி இந்த நவீன ஜூபூம்பாவை வரவேற்கவே செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  7. என்னை இங்கு பார்ப்பது போல் உள்ளது. என் கணவருக்கு ஆசையாய் செய்த மீன் குழம்பை சுட சுட ஆபீஸுக்கு swiggy geine யில் கொடுத்து அனுப்பி சரியாக 1 நிமிடம் ஆகிறது. 😃😁

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...