Tuesday, August 1, 2023

உடைபடட்டும் கலாச்சார மௌனங்கள் - 2 - பூங்கொடி பாலமுருகன்





வளரிளம் பருவம் சூறாவளி மற்றும் அழுத்தம் நிறைந்த பருவம் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுவார்கள்.. ஏனென்றால் இந்த வயதில் அவர்களின் உடல்  மட்டுமல்ல மனமும் மிக வேகமாக வளர்ச்சி அடைகிறது.. தாங்கள் யார்?  என்று ஒரு சுய அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள  மனம் முயலும்.. அப்படி முயலும் போது ஆழமான கேள்விகளும், மன உளைச்சல்களும், குழப்பங்களும்  கண்டிப்பாக ஏற்படும்.. அதனை அடையாளச் சிக்கல்  என்று உளவியலாளர் எரிக்சன் குறிப்பிடுகிறார்.. அந்த அடையாளச் சிக்கலை தீர்த்து வைக்க ஒரு பெற்றோராக, ஒரு ஆசிரியராக இல்லாமல் அவர்களைப் புரிந்து கொண்ட ஒரு தோழமை மிகுந்த நபராய் நாம் நம்மை உருமாற்றிக் கொள்ள வேண்டும்..

நம் குழந்தைகளும் இந்த வயதில் சின்னஞ்சிறு மனிதர்களாக நம்மை போல உருவெடுக்க ஆரம்பிக்கிறார்கள் என்பதை மட்டும் ஏனோ நம் மனது ஒத்துக் கொள்வதே இல்லை...

இந்த வயதில்  கெட்டுப் போய்விடுவார்கள் என்ற பயத்தில் அதீத கண்டிப்பு, அதீத கண்காணிப்பு , அதீத அறிவுரைகள் என்று வீட்டிலும், அடுத்த வீடு என்று சொல்லக் கூடிய  பள்ளிக்கூடத்தில், இந்த வயதில் பொதுத்தேர்வுகள் என்ற அழுத்தம், இந்த வயதை சந்தேக கண்ணோடு குறுகுறு என்று பார்க்கும் சமூகம்... இத்தனையும் தாண்டி தப்பித்துக் கொள்ள, என்னிடம் வா, வா .. உனக்கான இளைப்பாறுதலை நான் தருகிறேன் என்று இரு கை நீட்டி வரவேற்கும் இணைய உலகம்.. புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்றலாம் வா என்று அழைக்கும் நண்பன்... கடைக்கண் பார்வைகளால் கவர்ந்திழுக்கும் எதிர்ப்பாலினம்...

அப்பப்பா... இத்தனை சிக்கல்களை அந்த வயதில் கடக்கும் குழந்தைகளுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோமா?

இதெல்லாம் ஒன்றுமே கிடையாது;  இது நான் கடந்து வந்த பாதை தான். நான் உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று தோளில் கை போட்டு அரவணைத்து பேசியிருக்கிறோமா? 

இதுவரை இல்லாவிட்டாலும் கூட , இனிமேல் கண்டிப்பாக நாம் முயற்சிக்க வேண்டும்.. இந்தப் பருவப் பிள்ளைகளுக்கு ஆறுதலும், அரவணைப்பும், மனம் திறந்த உரையாடல்கள் மட்டுமே, அவர்களின் அந்த அடையாளச் சிக்கலை தீர்ப்பதற்கு உதவும். அதோடு மட்டுமல்லாமல் இந்த பருவத்தில் தான் அவர்கள் என்னவாக வேண்டும் என்பதை கட்டமைக்க போகிறார்கள். எனவே இந்த முக்கியமான பருவத்தில் நம் துணை அவர்களுக்கு வேண்டும்.


குளிரூட்டப்பட்ட ஒரு பெரிய அறை.. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள். அனைவருமே  இனிமையான, சிக்கல்கள் நிறைந்த   வளரிளம் வயதில் இருக்கக்கூடியவர்கள்.. இவர்கள் ஐந்து நாட்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற ஆர்வம் மிகுந்த பார்வைகள், அலட்சியம் மிகுந்த பார்வைகள், அதைப்பற்றி சிந்தனையே இல்லாத பார்வைகள்.. இப்படி பலவிதமான பார்வைகளை அவர்களை உற்று நோக்கியதில் அறிய முடிந்தது. 

ஒரு கலைக்கல்லூரியின் அரங்கத்தில் தான் நான் சொன்ன இந்த காட்சி. அந்த கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து நாட்கள் மதிப்பூட்டும் கல்வி பற்றிய  பயிலரங்கம்.. அந்தப் பயிலரங்கத்தில் நானும் ஒரு பயிற்சியாளராகச் சென்றிருந்தேன்..

பயிலரங்கத்தின் முதல் நாள் சிறிது விளையாட்டும், குதூகலமுமாய் தான் சென்றது.. பொதுவாக அந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு சினிமாவையும், விளையாட்டையும் இணைத்துப் பேசும் பொழுது தான், அவர்களின் கவனம் நம்மேல் குவிகிறது. அதைத்தான் நாங்களும் கையாண்டோம்..

சக பயிற்சியாளரான எனது நண்பன் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, நான் அந்த அரங்கத்தில் நடந்து கொண்டே ஒவ்வொரு மாணவர்களையும் கவனித்துக் கொண்டே நகர்ந்தேன்.. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கைகளில் அலைபேசி..

அலைபேசிகளில் கேம்ஸ் விளையாடிக் கொண்டோ, இணைய நண்பர்களுடன் உரையாடிக் கொண்டோ, ரீல்ஸ் பார்த்துக்கொண்டோ இருந்தார்கள்.. நான் அவர்களை நெருங்கும் போதெல்லாம் டக்கென்று அலைபேசியை அணைத்துவிட்டு கவனிப்பது போல பாசாங்கு செய்தார்கள்.. சிலர் கீழே குனிந்து கொண்டு அலைபேசியில் தங்கள் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். 

மெல்ல ஒரு மாணவனின் அருகே சென்று, அவன் தோளில்  பரிவோடு கை வைத்தேன்.. அவன் அந்த தொடுகையை எதிர்பார்க்கவில்லை போலும். சட்டென்று  நிமிர்ந்து  என் கண்களை பார்க்க, " கண்ணா இப்படி குனிந்து கொண்டு அலைபேசியை பார்த்தால், உன் கண்ணும் கெட்டுவிடும்; கழுத்துப் பகுதியில் வலி வரும்.. நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து அலை பேசி உன்னிடம் இருந்து சற்று தொலைவில் வைத்துக் கொண்டு விளையாடு.. உன் நல்லதுக்கு தான்  சொல்றேன்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்..
        
அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு என்னை பார்த்து ஒரு சிறிய புன்முறுவல் செய்தான். என் சொற்கள் அவன் மனதை சிறிது  அசைத்திருக்கிறது.. அவன் அருகில் இருந்த மற்ற மாணவர்களையும் , விளையாடுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை அணைத்து வைக்கக் கோரினான்.

ஐந்து நாள் பயிற்சியின்போது  நன்கு நிகழ்வை கவனித்துக் கொண்டிருந்த மாணவர்களைத் தாண்டி அசட்டையாக அலைபேசியைப் பார்த்துக் கொண்டோ, நண்பர்களுடன் உரையாடிக் கொண்டோ இருந்த மாணவர்களிடம் தான் அதிக கவனம் குவித்தேன்..
      
அந்தக் கல்லூரியில் பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் மலையாளத்தைத் தாய்மொழியாக கொண்டவர்கள்.. எனக்குத் தெரிந்த அரைகுறை மலையாளத்தில்  அவர்களுடன் உரையாடும் பொழுதும்,  மோனே ( மகனே) என்று  அழைத்து உரையாடிய பொழுதும், மெல்லிய நெகிழ்ச்சியை அவர்களின் முகத்தில் என்னால் உணர முடிந்தது.. அது தாய்மொழியின் வலிமை அல்லவா?..

மூன்று நாட்கள் வரை மேடம் என்று அழைத்துக் கொண்டிருந்த அந்த மாணவர்கள் நான்காவது நாள் காலையில்  நான் உள்ளே சென்றதும் அக்கா...என்று    அன்போடு அழைக்க துவங்கியிருந்தார்கள்..

நான்காம் நாள் இறுதியில் அவர்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை சிக்கல்களையும் எழுதித் தரும்படி வேண்டுகோள் வைத்த பொழுது, கிட்டத்தட்ட 95% மாணவ மாணவியர்கள் வெளிப்படையாகத் தங்களுடைய அத்தனை சிக்கல்களையும் எழுதி இருந்தார்கள். மிக வியப்பாகவும் பெருமையாகவும் உணர்ந்த தருணம் அது.

வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே பழகிய எங்களுடன் அவர்களின் மனவெழுச்சியைப் பகிர்ந்து கொள்ள  முடிந்த அவர்களால், தினமும் சந்திக்கும் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் ஏன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை? எது தடையாக இருந்திருக்கிறது? 

அவர்கள் எழுதிக் கொடுத்த சீட்டுகளின் வாயிலாகவும், அனுபவத்தின் வாயிலாகவும் கண்ட உண்மை.. பெரும்பாலான வீடுகளிலோ, வகுப்பறையிலோ மனம் திறந்த உரையாடல்கள் நடத்தப்படவில்லை. அவனுடைய சொல்லுக்கு செவிமடுக்க பெரிய காதுகள்  பெரும்பான்மையானவர்களுக்கு  இல்லை .. குடும்பமும் சரி.. பள்ளிக்கூடமும் சரி... சமூகமும் சரி.. குழந்தைகளை இலக்கை நோக்கி ஓடும் இயந்திரங்களாக மாற்றத்தான் துடிக்கிறார்கள்..

அந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு அனுசரணையான பார்வையோ, ஆறுதலான அரவணைப்போ அதிகம் கிடைக்கவே இல்லை என்பதுதான் உண்மை..
        
காலையில்   விழிக்கும் போதே நேரமாச்சு... எந்திரி.. பள்ளிக்கு கிளம்பனும் ...கல்லூரிக்கு கிளம்பனும்.. என்ற சொற்களைத் தாண்டி, வேறு அன்பான சொற்களை அவர்களின் காதுகள் கேட்டிருக்குமா?...

மெல்ல உறங்கும் பிள்ளையின் அருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டு, கட்டி அரவணைத்து, நம் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறோமா? முத்தமும் அரவணைப்பும் வளர்ந்த பிறகு அவர்களுக்கு தேவையில்லை என்று நினைக்கிறோம்.. ஆனால் மனிதனுக்கு பிறந்தது முதல், அவன் வாழ்வு முழுவதுமே, அன்பான தொடுதல் தேவையாக இருக்கிறது..

வாய் பேசாமலேயே பல விஷயங்களை, நம் அன்பை தொடுதல் மூலமாக பேசிவிட முடியும். அந்தத் தொடுதலும் அணைப்பும் ஒரு நொடியில் நம் அன்பை குழந்தைகளுக்குக் கடத்தி விடும்.. மெல்ல மெல்ல அந்த அன்பும் அரவணைப்பும், மனம் திறந்த உரையாடல்களை வீட்டில் வளர்க்கும்..

இனி தினமும் அதிகாலையிலும் இரவு உறங்கப்போகும் போதும், நம் பிள்ளைகளுக்கு கட்டி அணைத்து ஒரு முத்தமும், மெல்லிய அரவணைப்பும் தந்து, நம் பிள்ளைகளின் மனங்களை மலர வைத்து, மௌனங்களை உடைத்து நம்முடன் உரையாட வைப்போமா?...

...தொடரும்.....

2 comments:

  1. சிறப்பான பதிவு மா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகவும் தேவையான பதிவு அக்கா.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...