செல்லுலார் சிறைச்சாலை - நரகத்தின் வாயில்
மதியம் 2 மணி அளவில் நாங்கள் சென்றது வரலாற்றில் என்றும் மறக்க இயலாத ரணங்களுடன் நினைவு கூறப்படும் செல்லுலார் ஜெயில். அங்கே எடுக்கப்பட்ட சிறைச்சாலை என்ற படத்தை அனைவரும் கண்டிருக்கலாம். ஆனால் அவை எதுவுமே கண்ணுறக் காண்பதற்கு இணை இல்லை. சிறைச்சாலைக்கு வெளியில் ஒரு பூங்கா இருந்தது. அந்தப் பூங்காவில் சில முக்கியமான சிறைக்கைதிகளின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அதனைப் பெரிதாக எண்ணாமல் புகைப்படம் எடுத்தபடி நின்று கொண்டிருந்தோம் (சிறைச்சாலைக்குள் போய் வந்த பிறகுதான் வெளியில் வைக்கப்பட்டிருந்த சிலைகளில் இருந்த நபர்கள் எங்களுக்கு தெய்வப் பிறவிகளாகக் காட்சி அளித்தார்கள்). சிறைக்கு வெளியே பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இராணுவ வீரர்கள் அங்கு ஒவ்வொரு விஷயத்திலும் மிக அழகாக ஒழுங்கைக் கடைபிடிக்கிறார்கள். மற்றவர்களையும் பின்பற்ற வைக்கிறார்கள். அதற்குள் சிறைச்சாலைக்குள் செல்வதற்கு எங்கள் அனைவருக்கும் நுழைவுச் சீட்டுகளை வாங்கி வந்தார் சம்சுதீன். பத்து நிமிடம் வரை வரிசையில் காத்திருந்து எங்கள் முறை வந்தவுடன் உள்ளே நுழைந்தோம்.
நுழைவாயிலுக்கு அருகில் இரு பக்கங்களிலும் உள்ள அறைகளில், அந்த சிறைச்சாலை சம்பந்தப்பட்ட படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. இரண்டு புறமும் இருந்த அந்த படக் கண்காட்சிகளை, அவற்றில் உள்ள விஷயங்களைப் படித்து உள்வாங்க மட்டுமே இரண்டு மணி நேரம் நமக்கு தேவைப்படும். கண்காட்சிகளில் கண்ட நிழற்படங்கள் நமக்கு சொன்ன கதைகள், கதைகளெனச் சொல்லக்கூடாது. அவை…வலிகள்….வேதனைகள்…அவமானங்கள்…இறப்புகள்.. நம் நாட்டின் தீவிர சுதந்திரப் போராட்ட வரலாற்றின் ஆரம்பம். ஆங்கில அரசை எதிர்த்து வாள் முனையை விடக் கூர்மையான பேனா முனையைப் பயன்படுத்திய அனைவரையும் நாடு கடத்தி இந்தத் தீவில் தனிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
அங்கிருந்த பல தியாகச் சுடர்கள் ஒருவருடைய பெயர் கூட எங்களுக்குத் தெரியவில்லை. நமக்கு வரலாற்று பாடத்தைச் சொல்லித் தந்த நமது கல்வி அல்லது பாடத்திட்டம் அதை மறைத்து விட்டதா அல்லது நாம் இன்னும் சரியாக வரலாற்றைப் புரிந்து கொள்ளவே இல்லையா அல்லது தெரிந்து கொள்ளவே இல்லையா என்கிற கேள்விதான் மனதை குடையத் தொடங்குகிறது. நரகத்தை யாரும் கண்டதில்லை அதாவது கண்டவர்கள் சொல்லி நாம் கேட்டதில்லை. ஆனால் பூலோகத்தில் நரகம் என்று ஒன்று இருந்தால், இருந்திருந்தால் அது செல்லுலார் சிறைச்சாலையாகத்தான் இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
செக்கிழுத்த செம்மல் வ. உ. சி. ஒருவரைப்பற்றி மட்டும் தான் நமக்குத் தெரியும். ஆனால் இங்கோ நாள்தோறும் 40 லிட்டர் எண்ணெய்க்காக செக்கிழுத்த செம்மல்கள், தியாகச் சுடர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். இங்கு வந்திருக்காவிட்டால் இவர்களைப்பற்றி, இவர்களின் தியாகத்தைப் பற்றி தெரியாமலேயே போயிருக்கும். அந்தமானைப் பற்றியும், இந்த சிறைச்சாலை பற்றியும், இதில் உள்ள கைதிகளைப் பற்றியும் விபரமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அது நம்மைப் போன்ற சாமானியர்கள் வரை வந்தடையவில்லை. என்னதான் அடிமை நாடுகளாக இருந்தாலும் இப்படியா மிருகத்தனமாக நடந்து கொள்வார்கள் ஆங்கிலேயர்கள் ?
அவர்களுக்குப் பின் வந்த ஜப்பானியர்கள் அதைவிட ஒரு படி மேல் சென்றுள்ளனர். மனம் நிறைய வலியோடும், கனத்தோடும் சிறைச்சாலையினுள் பார்வையிடச் சென்றோம். அனைத்தையும் தெளிவாக இனியாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு வழிகாட்டியை அமர்த்திக்கொண்டு சென்றோம். முதன் முதலில் அவர் எங்களை அழைத்துச் சென்றது கைதிகளை தூக்கிலிடக் கூடிய இடம். இங்கு தூக்குப் போடும் கயிறுகளைத் தவிர மற்ற அனைத்தும் அன்று இருந்தவாறு அப்படியே இருக்கின்றன. அனைத்துச் சிறைகளிலும் உள்ள கைதிகள் பார்க்கும் வகையில் நேரெதிராக இந்த தூக்கிலிடும் அறை அமைந்துள்ளது.
இங்கு ஒரே நேரத்தில் மூவரை தூக்கிலிட முடியும். அவர்களது உடல் அல்லது சடலம் கீழே விழும் வகையில் நிலவறை ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். இறந்தவருடைய சடலங்களை அப்புறப்படுத்துவது பற்றிய குறிப்புகள் கிடையாது. சுற்றிலும் இருக்கக்கூடிய கருப்பு கடலில்தான் போட்டிருக்க வேண்டும். அதனால்தான் இந்த சிறைக்கு காலாபானி என்றும் பெயர் உண்டு. அந்த காலத்தில் அந்தமானுக்குப் போய்விட்டால் மீண்டும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்கிற கூற்றை மெய்ப்பிக்கிறது இந்தக் கொலைக் களம்.
ஒரு முறை இங்கிருந்து 146 கைதிகள் தப்பித்துச் சென்றனராம். 4 நாட்களில் 86 பேர் மீண்டும் பிடிபட்டு ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டு இருக்கிறார்கள். இதெல்லாம் அங்குள்ள வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. ஆனால் நம் மனங்களில் பதிவாகவில்லை. நாம் படித்த வரலாறுகளில் எந்த அளவுக்கு காந்தி, நேரு, பகத்சிங், வாஞ்சிநாதன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் நம் மனதில் பதிவாகி உள்ளனரோ அந்த அளவிற்கு இவர்கள் அனைவரும் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும்.
செல்லுலார் ஜெயில் அல்லது சிற்றறைச் சிறை என அழைக்கப்படும் இந்த சிறைச்சாலை 1896 முதல் 1906 வரை இங்கு இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கைதிகளால் கட்டப்பட்டது. இதற்கான செங்கற்கள் பர்மாவில் இருந்து வரவழைக்கப்பட்டன. இந்த சிறைச்சாலையின் வடிவம் ஒரு சக்கரம் அல்லது ஸ்டார் ஃபிஷ் போன்ற வடிவில் நடுவில் கண்காணிப்பு கோபுரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து சுற்றிலும் உள்ள ஏழு பகுதிகளையும் நன்றாகக் கண்காணிக்க இயலும். ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. தற்போது இங்கு மூன்று பகுதிகள் மட்டுமே மிச்சம் உள்ளன.
1938க்குப் பிறகு செங்கற்கள் தேவைக்காக ஆங்கிலேயர்கள் இரண்டு பகுதிகளை உடைத்து எடுத்துக் கொண்டுவிட்டனர். பின் 1942-ல் ஜப்பானியர்களின் கட்டுப்பாட்டில் வந்த பொழுது இன்னும் இரண்டு பகுதி சுவர்கள் இடிக்கப்பட்டு விட்டன. பின்னாளில் 1969-ம் ஆண்டு இந்திய அரசு அதை தேசிய நினைவுச்சின்னமாக ஆக்கிய பிறகு நம்மிடம் மீதமிருப்பது இப்போதுள்ள 3 பகுதிகள் மட்டுமே. தங்களுக்கான சமாதியைத் தாங்களாகவே கட்டிக்கொண்டனர் இதன் கைதிகள். உலகில் உள்ள சிறைகளில் சிறந்த வடிவமைப்புள்ள சிறை இது என்றே கூறவேண்டும். ஏழு புறமும் நீட்டிக் கொண்டிருக்கக் கூடிய வகையில் உள்ள இந்த சிறைச்சாலை கீழ்த்தளம், முதல் தளம், இரண்டாவது தளம் என மூன்று தளங்களைக் கொண்டது. மொத்தம் 698 சிற்றறைச் சிறைகள் அதாவது செல்கள் இங்குள்ளன. ஒவ்வொரு செல்லும் 7 ½ அடிக்கு 13 அடி மற்றும் 10 அடி உயரம் என்ற விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள இயலாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அறையின் உயரத்தில் இரண்டுக்கு இரண்டு அடி அளவில் ஒரு ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேரங்கள் ஆடுமாடுகளை பட்டியில் அடைப்பது போல கைதிகள் அனைவரும் இந்த சிறிய அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். உள்ளே அவர்களுக்கு இரண்டு பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன - ஒன்று ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் பிடிக்கக் கூடிய அளவுக்கான பாத்திரம். அவருக்கு கொடுக்கப்படும் நீர் அளவும் ஒரு லிட்டர் மட்டுமே. இன்னொன்று கொஞ்சம் அகலமான இரும்பு பாத்திரம். அவ்வளவு தான் இந்த இரு பாத்திரங்களை வைத்துக்கொண்டுதான் அவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.
12 மணி நேரமும் அந்த அறையில் ஏதோ ஒரு மூலையில் மட்டுமே மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல். அதற்கு பயன்படுத்த மற்றும் குடிக்க இந்த ஒரு லிட்டர் நீர் மட்டுமே. நான் இதனை எழுதும்போதே கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாத ஒன்றை அவர்கள் தண்டனையாக அனுபவித்திருக்கிறார்கள்...அதுவும் ஒரு வருடம் அல்ல 10-12 வருடங்கள் அல்லது சாகும் வரை. அப்பப்பா... நினைத்துப் பார்க்கவே இயலவில்லை.
காலை ஆறு மணிக்கு எழுந்ததும் அவர்கள் அனைவரையும் கூட்டமாக குளிக்க வைத்து அதாவது அவர்கள் மேல் தண்ணீர் பாய்ச்சி அடித்துப் பின் ஏதோ ஒன்றை சாப்பிட்ட பின் வேலை செய்யக்கூடிய இடத்திற்கு அதாவது சித்திரவதை கூடத்திற்கு அவர்கள் செல்ல வேண்டும். அங்கு தினமும் 30 லிட்டர் தேங்காய் எண்ணையும், 10 லிட்டர் கடலை எண்ணெயும் அவர்கள் செக்கில் ஆட்டி எடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலாது போனால் சாக்கு போன்ற ஒரு உடையை அணிந்து தண்டனை கொடுக்கப்படும் இயந்திரத்தில் சென்று நிற்க வேண்டும். அந்த இயந்திரத்தின் வடிவமைப்பில் இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு, கீழே இரண்டு கால்களுக்கும் தனித்தனியான ஓட்டைக்குள் நுழைத்தவாறு நிற்க வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் கசையடி கொடுப்பார்கள். சாக்கு உடை அணிவதால் உடலில் தழும்புகள் அதிகம் ஏற்பட்டு வலி இன்னும் அதிகமாகும். அந்த இயந்திரம் இன்னும் அங்கு இருக்கிறது. அந்தக் காட்சியை எண்ணிப் பார்த்தாலே ரத்தக்கண்ணீர் பெருகுகிறது. இந்த ஊமை வலிகளை ஆண்டுகள் இத்தனை கழிந்தும் எங்களால் உணர முடிந்தது.
இதுவே அவர்களது அன்றாட வாழ்க்கையாகிப் போக உளவியல் சிக்கலுக்கு ஆளானவர்கள் பலர். அதில் சிலர் அவமானத்தை மென்று முழுங்கி காலத்தை வென்று இல்லையில்லை காலனை வென்று தாய்நாடு திரும்பினர். அதில் ஒருவர்தான் வீர சவார்க்கர். பாஜகவின் ஆட்சி நடப்பதால் வீரசவார்க்கர் இருந்த சிறை கவனம் செலுத்தப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கைதிகளில் ஒருவர் தாள முடியா அவமானம் காரணமாக சட்டையையே தூக்குக் கயிறாக மாற்றி இறந்து போனார். இன்னும் சிலர் ஆழ்ந்த மனச்சிக்கலுக்கும் மூளைச் சோர்வுக்கும் ஆளாகி மனநிலை பிறழ்ந்தவர்களாக மாறிப்போயினர்.
அங்கு செல்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக அங்குள்ள ஒளி-ஒலி காட்சியை பார்க்க வேண்டும். அந்தமானின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையில் தமிழ் மக்கள் இருக்கையில், முதலில் தமிழிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒளி - ஒலி காட்சி இப்பொழுது நிறுத்தப்பட்டிருக்கிறது. தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும்தான் ஒளிபரப்பாகிறது. ஆங்கில மொழியில் இரவுக்காட்சி 7 மணிக்கு என்பதால் மீண்டும் அடுத்த நாள் இரவு நாங்கள் அங்கு சென்றோம்.
சிறை வளாகத்தில் ஒரு மரம் இருக்கிறது. அது இந்த சிறைச்சாலை கட்டப்பட்ட காலத்திலிருந்து அங்கு இருக்கக்கூடியது. அந்தக் கைதிகளின் வலியை கண்ணுற்ற ஒரே சாட்சி அந்த மரம் தான். சுனாமியின் போது விழுந்து விட்ட அந்த மரத்தைத் திரும்பவும் எடுத்து நட்டு வைத்திருக்கிறார்கள். ஒளி-ஒலி காட்சியில் மரமும் பேசுகிறது. மனதின் அடி ஆழத்தைத் தொடக்கூடிய ஒளியும் ஒலியும் காட்சி அது.
சிறைச்சாலைக்குள் ஒரு அணையாத ஜோதி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கிறது. இனி அடுத்து வரும் சுதந்திர நாள் விழாக்களில் அந்தமான் செல்லுலார் சிறைச்சாலையின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எனத் தனியே இரு கை கூப்பி, கண்ணீர் பெருக எனது வணக்கங்களையும் நன்றியையும் கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்வேன். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் போன்றோர் மாத்திரமே உண்மையான சுதந்திரப் போராட்டத் தியாகிகள் என்று கருதுவேன் என்று சொன்னால் அது மிகையாகாது.
மேல் கண்காணிப்பு கோபுரத்தில் இந்த 698 சிறைகளில் இருந்த கைதிகளுடைய பெயர்கள் மற்றும் ஊர்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த இரண்டே இரண்டு பேர்தான் இருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரிய ஒன்று. வரலாறு மறைக்கப்பட்டு இருக்குமோ என ஐயம் தோன்றுகிறது.
இப்படியாகப் பயணத்தின் முதல் மற்றும் இரண்டாம் நாட்கள், என்றும் எங்கள் மனதில் வாழக்கூடிய செய்திகளையும், காட்சிகளையும் தாங்கியபடி மனம் நிறைய கனத்தோடு வெளியே வந்தபோது பூங்காவில் இருந்த குறிப்பாக மனநலம் பிறழ்ந்து இறந்து போன தியாகி இந்து பூஷண் ராயின் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அதுதான் எங்களால் அந்த கணத்தில் அவருக்கு செலுத்த முடிந்த ஒரு மரியாதை என்று தோன்றியது.
வெளியேறி வந்தவுடன் இருட்டு அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது சிறைச்சாலையின் வெளிச்சுவர்கள் வண்ணமயமாக மாறத் தொடங்கின. மூவர்ணக் கொடி மற்றும் காவி நிறத்துடன் ஒளிர்ந்து சிறைச்சாலையின் பின்னணியில் ஒளியும் ஒலியும் காட்சியில் ஒலித்த பாடல் வரிகள் ஒலித்தபோது இன்று நம் நாட்டில் நாம் பாதுகாப்பாகக் குடியிருப்பதற்குக் காரணமான அந்த சிறைச்சாலையில் வாழ்ந்து மடிந்த இதயங்கள், அவர்களின் பங்கு எப்படிப்பட்டது என்பதை எண்ணி நெஞ்சம் விம்மியது..மௌனமாய் குருதி கசிந்தது..
கனத்த மனதுடன் அங்கிருந்து நேரே கோர்பின்ஸ் கோவ் கடற்கரைக்கு வந்தோம். அது அப்போதைய தேவையும் கூட. மனதின் அடி ஆழம் வரை சென்று அனைவரையும் மீண்டும் சிறார்களாக மாற்றக்கூடிய ஆற்றல் அந்த கடலுக்குத்தானுண்டு; கடற்கரைக்குத் தான் உண்டு. என்றும் கடல் புதிதும் அல்ல என்றும் அது பழையதும் அல்ல. எங்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் கடல் இல்லாத பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதால் மிகுந்த உற்சாகத்துடன் கடற்கரையில் இறங்கினோம்.
ஒருபுறம் அங்கு கடற்கரையில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. காரணம் தெரியவில்லை, அறிந்து கொள்ளும் ஆவலும் எங்களுக்குள் எழவில்லை. கடல் மணலுக்குள் புதையப் புதைய நடந்து, இனம் தெரியாத ஒரு மகிழ்வோடு, விவரிக்க இயலாத ஒரு ஆனந்தத்தோடு கடல்நீரில், அலைகளில் ஆனந்தமாய் கால்களை நினைத்தோம் இல்லையில்லை, மனங்களை நனைத்தோம். அங்கிருந்து சற்று தூரத்தில் ஒரு இசைக் கச்சேரி நடந்துகொண்டிருந்தது.
வெகு தூரம் வரை ஆட்கள் பெரிதாக இல்லை. நாங்கள் நாங்களாய் இருந்தோம். இயல்பாக இருந்தோம். சந்தோஷமாக நடனமாடிக் கழித்தோம். அருகில் ஒரு மிதவை, கடல் அலைகளின் மேல் 100 அடி தூரத்திற்கு போடப்பட்டிருந்தது அது ஒரு மிதவைப் பாதை என்று சொல்லவேண்டும். அலைகள் வரும் பொழுது அந்த மிதவை பாதை மேலெழும்பி கீழே இறங்கும் ஒரு சாகசமான அழகான ஒரு அனுபவம் அதில் நடப்பது. நடுவில் போடப்பட்டிருந்த இரும்பு கம்பியைப் பிடித்துக்கொண்டு அதில் நடந்தது இரவு நேர இரயில் பயணத்தில் ரயிலின் அசைவு தாலாட்ட தூங்குவது போல் அந்த மிதவையில் நடந்து போய் வந்தது பேரனுபவமாய் இருந்தது.
அதற்குள் யார் அங்கே நடப்பது கரைக்கு வந்து விடவும் என அரசாங்க உத்தரவு வர, அதனை சிரமேற்கொண்டு நல்ல குடிமக்களாய் மீண்டும் கடற்கரைக்கு வந்தோம். இவ்வாறு ஒவ்வொரு இடத்திலேயும் அங்கு அரசாங்கம் கண்காணிப்பது மிகவும் அருமை. அங்குள்ள மாநில சுற்றுலாத்துறையினர் மிக அழகாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை. அங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டு நாங்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.
சுவையான இரவு உணவு சுடச்சுட தயாராக இருந்தது. உணவருந்திவிட்டு எங்கள் அறைக்கு திரும்பி சிறிது நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அடுத்தநாள் காலை 7 மணிக்கு கண்டிப்பாக தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டு சம்சுதீன் சென்றிருந்தார். எனவே காலை அனைவரும் சந்திப்போம் என்று சொல்லி உறங்கச் சென்றோம் இப்படியாக அந்தமானில் எங்களுடைய முதல்நாள் முடிவுற்றது.
..தொடரும்..
அந்தமான் சிறையில் நடந்த கொடுமைகளை நீங்கள் விவரித்து எழுதியதை வாசிக்கும் போதே கண்களில் நீர் சுரக்கிறது..ஒரு லிட்டர் தண்ணீரை 12 மணி நேரப்பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதென்பதெல்லாம்.....
ReplyDeleteநன்றிக்கா
Deleteகைதியாய் அந்தமானில் இந்தியர்களின் துயர் நிலை இன்றைக்கும் கண் கலங்க வைக்கிறது
ReplyDeleteஉண்மைதான்.
DeleteI served in Andaman from 1975 may to 1986 Oct. Was Andaman Tamilar Sangom secretary 78-79
ReplyDeleteமிகவும் சிறப்பு. தமிழ் சங்கம் தொடர்பு பற்றியும் எழுதுகிறேன்.
DeleteIntresting. இடங்களை கண் முன்னாடி கொண்டு வருது. நானும் போனதால relate பண்ண முடியுது
ReplyDeleteThank you. உண்மைதான். பார்த்த இடங்களை உடனடியாக உணர முடியும்.
ReplyDelete