உடல்நிலை சரி இல்லாதவர்களைப் பார்க்கப் போகிறோம் எனும் சடங்கு - இந்தத் தலைப்பில் எழுத நினைத்துப் பல மாதங்கள் ஆகிறது. எழுதுவதில் ஏனோ ஒரு தயக்கம், அன்றும் இன்றும். இருந்தும் தொடர்கிறேன்.
உடல்நிலை சரி இல்லாத / மருத்துவமனை வாசம் பார்த்துச் சரியாகி வந்த ஒருவரைச் சந்திக்கச் செல்வது என்பது அன்பின் அக்கறையின் பாசத்தின் அகவுந்துதலின் நிமித்தமாக இருந்தால் நலம். “கேள்விப்பட்டுவிட்டோம்”, “போகவில்லை எனில் என்ன நினைப்பார்கள்”, “என்ன சொல்வார்கள்”, “தவறாக நினைப்பார்களோ”, “நாளை எப்படி அவர்களை சந்திப்பது”, “நமக்கு யார் தான் வருவார்கள்” என்ற புறக்காரணிகளுக்காக வருகை புரிவது ஒருவித சடங்காக மாறி சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
சமீபகாலமாக நான் சந்தித்த / பேசிய சிலர் உறவினர்கள், காண வருவோரின் வருகையால் ஆறுதல் கொண்டாலும், மகிழ்ச்சிகொள்ள முடியாமல் இருந்தார்கள். நெருக்கமான சிலரோடு உரையாடிய போது கிடைத்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.
வீட்டில் உடல்நலம் குன்றியவர்கள் / மருத்துவமனை சென்று பின்னர் உடல்நலம் தேறியவர்கள் இவர்களைச் சந்திக்க வருபவர்களிடம், ஒரே விஷயத்தை, என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் பேசவேண்டி உள்ளதாகக் கூறினர். வீட்டில் இருவர் மட்டுமே இருக்கின்ற இக்கால கட்டத்தில், அதனை விரைவாகக் கடந்து மறந்து முன்னோக்கிச் செல்ல முடியாமல் நிற்பதாக உணர்கிறார்கள். கேட்பவர்கள் இதை அரைகுறையாகக் கேட்டு அந்த அறைகுறையானவற்றை அடுத்தவருக்கு அறிகுறிகளாகச் சொல்லிப் பரப்புவது தனிக்கதை. தங்களின் ஒரு பகுதியை இழந்தவர்கள் அல்லது இழக்கும் நிலையில் உள்ளவர்களைச் சந்திக்க நேர்ந்தால், நம்பிக்கையான விசயங்களை மட்டும் சொல்லலாம். அனுபவத்தப்பகிர்கிறேன் என்கிற பெயரில் பீதியடையச் செய்யவேண்டாம்.
மருத்துவர்கள் கொடுக்கும் அட்டவணை உணவுகளால் கட்டுப்பாடு நிலவும் வீடுகளில், பார்க்கச் செல்லும் போது எதையாவது வாங்கிக்கொண்டு தான் செல்லவேண்டும் என்று சம்பிரதாயம். அது நம்முள் ஊறிவிட்டது ஏற்றுக்கொள்வோம். இதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அவரவர் கேட்டுத் தெரிந்துகொண்ட கை வைத்தியம், வீட்டு வைத்தியம், WhatsApp வைத்தியம், YouTube வைத்தியம் எனப் பலவற்றை சொல்லிச்செல்வார்கள். அதை கடைப்பிடித்தால் சர்வ நிச்சயமாகச் சரியாகும் எனச் சத்தியம் செய்துவிட்டுப் போவார்கள். ஜாதகம் பார்க்கச் சொல்வார்கள். மந்திரித்து கட்ட சொல்வார்கள், கண்திஷ்டி கழிக்கச் சொல்வார்கள். இவையாவும் அக்கறை நிமித்தமாகச் சொல்லப்படுவது என்றாலும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் குழப்பம் தொடங்கும். அரைகுறை ஜோசியர்களாலும், அரைகுறை மருத்துவ உறவினர்களாலும் குழம்பிய குடும்பங்கள் பல. இழந்ததும் பல. சிலரோ செலவு, போக்குவரத்து, உணவு என அனைத்தையும் விலாவரியாக பட்டியலிட்டுக் கேட்பார்கள். காப்பீடு அலப்பறைகள், அதிலிருக்கும் நுட்பங்கள் எனக் கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
யாரெல்லாம் வந்தார்கள், தங்களுக்குத் தகவல் வந்ததெப்படி என எல்லாம் பேசவேண்டி இருக்கும். அவர்களும் கேட்கவேண்டி இருக்கும். உடல்நிலை சரி இல்லாதவர்கள் / குணமாகி வந்தவர்கள் இவற்றைத் தாண்டி வந்தவர்களைக் கவனிக்க வேண்டி இருக்கும். நோயின் தீவிரத்தைப் பொருத்து அவர்களின் நிலையை கவனத்தில்கொள்ளவேண்டும். நோயுற்றவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியமோ, அவர்களைப் பார்த்துக் கொள்பவர்களும் முக்கியம்.
நாங்கள் இவர்களோடு தானே பேசுகிறோம் என்று அசட்டுத்தனம் செய்யக்கூடாது. மருத்துவமனை வாசம் விட்ட பிறகும் கூட ஓய்வு தடைபட்டு ஒருவித அழுத்தம் தொடங்கும். மருத்துவமனையிலாவது செவிலியர்கள் இருப்பார்கள் என்ற தைரியம் இருக்கும். இங்கே அயர்ந்து தூங்கிவிட்டால் என்னாவது என்று காக்காய் தூக்கம் போடுவார்கள், விருக்கென முழிப்பார்கள், தூக்கம் குறைவாக இருக்கும். அடுத்தநாள் வேலைகளை எல்லாம் முடித்த பிறகு தூங்க நினைக்கும் வாய்ப்பு குறைந்து போகிறது. இதனால் நோயுற்றவர்களுக்கும் அவர்களை கவனித்துக் கொள்வோருக்கும் அல்லல்படும் நிலை உருவாகிறது. மீண்டு வர உடனிருப்பவர்களின் மனநிலை மிகவும் முக்கியம் என்பதை மனதில் நிறுத்தவேண்டும்.
சந்திக்கச் செல்பவர்கள் முன்பின் சில இடங்களுக்கு செல்லவேண்டி இருக்கலாம். நாமெல்லாம் நான்கு வேலைகளை ஒன்றாக சேர்த்துத் தானே வாகனமே எடுப்போம். நம்மால் அவர்களுக்கு சிறு தொற்று பரவிவிடக்கூடாதென்ற கவனமே இருப்பதில்லை. அப்படியானால் நாம் சந்திக்கவே கூடாதா, விசாரிக்கச் செல்லவே கூடாதா என்றால், செய்யலாம்... செய்யவேண்டும்.
ஒருசிலரை நான் சந்திக்கச் சென்ற நேரத்தில், என்ன பேசுவதென்றே தெரியாமல் புன்னகைத்து அமைதி காத்தது உண்டு. நாம் பேசுவது அவர்களுக்கு நம்பிக்கை உற்சாகத்தைத் தர வேண்டுமே தவிர, குழப்பமோ பயமோ வந்துவிடக்கூடாதென நினைப்பேன். அவர்களாகப் பேசுகிறார்களா என்று காத்திருப்பேன். நோயின் தன்மை, வலி, தூங்கும் நேரம் இவற்றை கவனத்தில்கொள்வேன். சீக்கிரம் நல்லா நடமாடலாம் என்று கூறுவேன். எல்லாம் சீக்கிரம் சரியாகுமெனச் சொல்லுவேன்.
அவர்கள் ஓய்வு நேரத்தை எக்காரணம் கொண்டும் நாம் குறைத்துவிடக்கூடாதென நினைப்பேன். நிறைவான வாழ்வு வாழ்கிறோம் என்று சொல்லுவேன். ஊர் உலக பேச்சுகள் எல்லாம் தேவையெனில் பேசுவோம், அவர்களின் சிந்தனையைத் திசைதிருப்ப உதவுமெனில், தேவையெனில். மருத்துவத்துறையின் நகர்வுகள், உயர்தர சிகிச்சைகள், விரைவான தீர்வு இவை குறித்தும் மருத்துவர்கள் குறித்தும் சமயங்களில் பேசியதுண்டு.
உடலாலும், மனதாலும், சில சமயங்களில் பொருளாதாரத்திலும் சற்றே தொய்வைச் சந்தித்த அவர்கள் தைரியமும் நம்பிக்கையும் உற்சாகமும் கிட்டும் பேச்சுகள் மட்டுமே இருக்க வேண்டும். சிலருக்குப் பேச்சே மருந்து. அங்கே பேசலாம். அதுவுமே கவனத்தோடு இருக்க வேண்டும். நாம் உரையாடும் களம் அல்ல அது. உடனிருக்கிறோம் என்பதைப் பகிரும் களம். வார்த்தைகளிலோ, செயல்களிலோ, நம்பிக்கையிலோ அது வெளிப்படட்டும். வெறும் கடனாக, கடமையாக, சடங்காக இதை மாற்ற வேண்டாம்.
உடல் நலக் குறைவு உள்ளவர்களை பார்க்கச் செல்லும் போது வெளிப்படுத்தும் சொற்களை கூட கவனமாக கையாள வேண்டும் என்று சொல்லி இருக்கும் விதம் சிறப்பு.. வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன் மனதில் இருந்ததை அப்படியே உங்கள் எழுத்தில் படித்தது போல இருந்தது. வாழ்த்துக்கள்.
ReplyDelete