உலக சுகாதார அமைப்பின் வரையறையின்படி, சுய-மருத்துவம் என்பது நுகர்வோர் தான் சுயமாக கண்டறியப்பட்ட கோளாறு அல்லது அறிகுறிகளுக்கு சிகிட்சை அளிப்பதற்கு, மருத்துவரை அணுகாமல், தானாக மருந்துப் பொருட்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது அல்லது தொடர்ச்சியான நோய்கள் அல்லது அறிகுறிகளுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துக்களை காலகெடுவிற்கு பிறகும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருப்பது.
ஒவ்வொரு நாளும், மருந்துகளை நமது ஆரோக்கியத்தின் சுய-கவனிப்பு வடிவத்தில் பயிற்சி செய்கிறோம். 1960 களில் மேற்கத்திய நாடுகளில் சுய-கவனிப்பு மற்றும் சுய-மருத்துவம் ஆகியவை தேவையற்றதாகவும், ஆரோக்கியமற்ற நடைமுறைகளாகவும் கருதப்பட்டன.
1980 களின் முற்பகுதியில் நவீன, பயனுள்ள மருந்துகளை எளிதில் அனுகுவதற்கான ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது. முன்பு மருந்துச் சீட்டில் மட்டுமே கிடைத்த மருந்துகள் மருந்துச் சீட்டு இல்லாத நிலைக்கு மாறத் தொடங்கின. இங்கிலாந்து (1983) மற்றும் அமெரிக்கா (1984) ஆகியவற்றில் வலி சிகிச்சைக்கான இப்யூபுரூஃபன்(Ibubrufen) மருந்து பரிந்துரைக்கப்படாத நிலைக்கு மாறிய முதல் தயாரிப்புகளில் ஒன்றாகும்.
1981-உலக மருத்துவ சங்கம் "நோயாளியின் உரிமைகள் பற்றிய பிரகடனத்தில்" மக்கள் தங்கள் சொந்த ஆரோக்கியத்திற்கான பொறுப்பை வலியுறுத்தியது.
ஓவர்-தி-கவுண்டர் (OTC) மருந்துகள் என்பது ஒவ்வொரு நாட்டினதும் சட்டங்களின்படி நேரடியாக வாடிக்கையாளருக்கு மருந்துச் சீட்டு இல்லாமல் விற்கப்படும் மருந்துகள். உடல்நலம், சுய-கவனிப்பு மற்றும் சுய-மருத்துவம் ஒரு குழுவால் முறையாக அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
பரிந்துரைக்கப்பட்ட ("Rx") மருந்துகளை பரிந்துரைக்கப்படாத அல்லது OTC நிலைக்கு மாற்றுவது "Rx-to-OTC சுவிட்ச்" என அழைக்கப்படுகிறது. பல புதிய மருந்துகள் முதலில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. பல நோயாளிகள் மருந்தைப் பயன்படுத்துவதற்குப் போதுமான கால அவகாசம் கடந்து, பெரிய அளவிலான அனுபவமும் அறிவியல் தகவல்களும் சேகரிக்கப்பட்ட பிறகு, மருந்துக்கு OTC அந்தஸ்து வழங்கப்படுவதற்கான விண்ணப்பத்தை பொருத்தமான அதிகாரியிடம் சமர்ப்பிக்க உற்பத்தியாளர் தேர்ந்தெடுத்து முயற்சி செய்யலாம்.
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி, மருந்துச் சீட்டு இல்லாமல், அனைத்தும் ஓவர்-தி-கவுண்டர் (OTC) மருந்துகளுக்கும் சுய மருந்தாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
சுகாதார சேவைகள் விலை உயர்ந்து வருகின்ற இந்த நேரத்தில் சுய-மருத்துவம், வெளிப்படையான தேர்வாகிறது. மேலும், வளர்ந்த நாடுகளில் மருந்துச் சீட்டு மூலம் மட்டுமே வாங்கக்கூடிய பல மருந்துகள் வளரும் நாடுகளில் OTC ஆகும்.
OTC மருந்துகள், நோயாளிக்கு முக்கியமான பாதுகாப்பு மற்றும் மருந்தளவு தொடர்பான தகவல்களை வழங்கும் முக்கியமான பணியை லேபிள் செய்கிறது. OTC மருந்துப் பொதிகளில் உள்ள லேபிள்கள் அவற்றின் வாழ்நாள் முழுவதும் முக்கியமான தகவல்களை வழங்குவதற்கு துணைபுரிய வேண்டும்.
மருந்து என்ன செய்ய வேண்டும், யார் அதை எடுக்க வேண்டும் அல்லது எடுக்கக்கூடாது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை லேபிள் உங்களுக்குக் கூறுகிறது.
இருமலுக்கு ஸ்ட்ரெப்சில்ஸ் வாங்கி பயன்படுத்தி இருப்போம். என்றாவது பாட்டிலின் லேபிளை கவனித்திருப்போமா? அந்த பாட்டிலில் எத்தனை வயதுக்கு மேற்பட்டோர் எடுத்துக் கொள்ள வேண்டும், ஒரு நாளைக்கு எத்தனை எடுத்துக்களாம், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற தகவல் இருக்கும்.
சுய மருத்துவம் என்பது இப்போது மிகவும் பரவலானது. இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. நல்ல சுயமருத்துவம் பின்வருபவை போன்ற பலன்களை அளிக்கலாம்.
அரிதான மருத்துவ வளங்களை சிறுசிறு நிபந்தனைகளுக்கு வீணாக்காமல் சேமித்து குவித்தல், சமூக நிதியுதவி சுகாதாரத் திட்டங்களின் செலவுகளைக் குறைத்தல், சிறிய அறிகுறிகளால் வேலைக்கு வராமல் இருப்பதைக் குறைத்தல், சுகாதாரப் பணியாளர்கள் போதுமான அளவு இல்லாத மருத்துவ சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கிராமப்புற அல்லது தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பதை அதிகரிக்கச் செய்கிறது.
செல்ஃப் மெடிக்கேஷன் லிஸ்டில் எந்த கட்டத்துக்குள்ளும் சிக்காமல் விசித்திரமான மற்றொரு தரப்பும் இருக்கிறது. சர்க்கரை அல்லது ரத்த கொதிப்பிற்கு மருத்துவரை அணுகி மருந்துச் சீட்டை வாங்கிக் கொள்வர். ஆனால் மருத்துவர் பரிந்துரைத்த அளவில் மருந்தை உட்கொள்ள மாட்டர். மாத்திரை 'பவராக' இருக்கு என்று சொல்லிக் கொண்டோ அல்லது மது அருந்தி விட்டேன் என்று காரணம் காட்டியோ, மருத்துவர் பரிந்துரைத்த அளவில் மருந்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் கேட்டால் நிறைய மாத்திரை சாப்பிட்டால் கிட்னி போய் விடும் என்பார்கள். சர்க்கரை அல்லது ரத்த கொதிப்பு கட்டுக்குள் இல்லை என்றால் கிட்னி போய் விடும் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பது கடினம்.
வரையறை செய்யப்படாத மற்றுமொரு செல்ஃப் மெடிக்கேஷன் இந்தியாவில் உண்டு. உதாரணத்திற்கு, குடிப்பழக்கத்தில் இருந்து தன் குடும்பம் சார்ந்தோரை விடுவிக்க நினைக்கும் குடும்ப அங்கத்தினர், உரிய நபருக்கு தெரியாமல், அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் குடிப்பழக்கத்திற்கு எதிராக செயல்படும் மருந்தை கலந்து கொடுப்பதும் நடப்பதுண்டு. அவர்களுக்கு புரியாத விஷயம் உரியவரின் ஒத்துழைப்பில்லாமல், மருத்துவரின் துணை இல்லாமல் அதை சாத்தியப் படுத்துவது முடியாது என்று.
நம் நாட்டில் ஒவ்வொரு 1700 இந்திய குடிமக்களுக்கும் ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவ பணியாளர்களின் பொறுப்பும் கூடுகிறது. உதாரணத்திற்கு ரத்த சோகை குழந்தைகளிடம் போக்க, அரசு பள்ளிகளில், மருத்துவ பணியாளர்கள் இரும்புச் சத்து மாத்திரைகளை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும் போது வயிறு வலி அல்லது வயிற்றுப் போக்கு ஏற்படும் பட்சத்தில், இரும்புச் சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ள கூடாது என்கிற முழு விவரத்தையும் கூறி குழந்தைகளிடம் விநியோகம் செய்வது அவசியம் ஆகிறது.
சில நேரங்களில் மருந்தின் முழு விவரத்தையும் கூறி கொடுக்கும் போது அதை தவறாக பயன்படுத்துவதும் நடப்பதுண்டு. ஒவ்வாமை மருந்து மற்றும் இருமல் மருந்துகள் தூக்கத்தை அதிகப் படுத்தும் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் தூக்கமின்மையை சரி செய்யவோ அல்லது மதுவுக்கு அடிமையானவர்கள் போதையை அதிகப் படுத்தவோ, பயன் படுத்தும் போது மூளையின் செயல்பாடு திரிந்து சரி செய்ய முடியாத நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
பல் வலி, சொத்தை பல் முதலியன மருத்துவரால் மட்டுமே சரி செய்யக் கூடியது. வலி நிவாரணியை மட்டும் எடுத்துக் கொண்டு காலத்தை கடத்துவது, பல நோய்களை உருவாக்கிவிடும்.
வெள்ளைத் தோலுக்கு ஆசைப்பட்டு, தோலுக்கு சேதம் விளைவிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பூஞ்சை காளான்களுடன் கார்டிகோஸ்டீராய்டுகளைக் கொண்ட கிரீம்களை பரவலாக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது . இதனால் தோலின் மேல் அடுக்கை இழக்க நேரிடும்.
மாத்திரை சாப்பிட தயங்குபவர்கள் கூட தோலுக்கு மேல் பூச்சாக களிம்பை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுவதில்லை.
ஸ்டெராய்டுகளின் காக்டெய்ல் கொண்ட கிரீம்களின் பரவலான பயன்பாடு காரணமாக எளிய தோல் வியாதிகள் இப்போது கிட்டத்தட்ட குணப்படுத்த முடியாதவை ஆகிவிட்டன என்று தோல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஸ்டீராய்டு பயன்பாட்டின் பக்க விளைவுகளைக் காட்டும் இந்திய நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், பல்வேறு விதமான தொழில்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொழிலிலும், அந்தத் தொழில்சார்ந்த பிரச்சனைகளால் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறது.
அவரவர் பார்க்கும் தொழில் காரணமாக ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மருந்து மாத்திரைகள் மட்டும் போதாது. அது தொடர்பான புரிதல் அவசியம். ரோடு போடும் தொழிலாளிக்கு நீர் சத்து குறையும் சாத்திய கூறுகள் அதிகம். தான் நீர்ச்சத்து அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களுக்கு தெரியாது. இந்த அறியாமை அவர்களுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தும். இதற்கு மருந்து மட்டும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமா?
அரசு பள்ளி ஆசிரியர்கள் சத்தமாக பேசி பாடம் எடுப்பதால், அடிக்கடி தொண்டை மங்கிப் போவது நடப்பதுண்டு. இதனை சரி செய்ய வேண்டுமெனில் அவர் ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டுமே தவிர, மாத்திரை எடுத்து சரி செய்து கொள்ளலாம் என்கிற மெத்தனம் கூடாது. அவர்களுக்கு ஏற்படும் மற்றொரு சவால் தொடர்ந்து நின்று கொண்டே இருப்பது. இதனால் கடுமையான கால் வலியால் பாதிக்கப் படுகிறார்கள். இதற்கு சரியான உடற்பயிற்சி கால் வலி வராமல் தடுக்கும். வலி வரவில்லை என்றால், வலி நிவாரணிக்கான அவசியமும் ஏற்படுத்தாது.
ரசாயன சம்பந்தப்பட்ட துறையில் வேலை செய்து வருபவருக்கு அடிக்கடி முகமும் உதடுகளும் தடித்து கொண்டன. மருத்துவர் ஒவ்வாமை குறைப்பு மருந்துகள் பரிந்துரைத்தார். மருந்து எடுத்துக் கொள்ளும் போது பிரச்சினை குறைந்தது. மருந்தை நிறுத்தும் போது பிரச்சினை தொடர்ந்தது. ரசாயன கம்பனியில் ஒருவரை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்கிற புரிதலை யார் தருவார்?
"சுய-மருத்துவம் என்பது சுய-கவனிப்பின் ஒரு முக்கிய அங்கமாகும், இது நாள்பட்ட நோய்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட சுய மருத்துவப் பயன்பாட்டாளார்கள் அதிகரித்து வரும் சகாப்தத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. பொறுப்பான சுய-மருத்துவத்தை மேற்கொள்வது இன்றியமையாததாகிறது.
சுய மருத்துவம் எப்போதும் தற்காலிகமானதாக இருக்க வேண்டும். சுய மருத்துவத்தை சரியாகப் பயன்படுத்தினால் பாதுகாப்பானது. இருப்பினும் அனைத்து மருந்துகளும் பாதகமான நிகழ்வுகளை ஏற்படுத்தலாம் அல்லது பிற மருந்துகளுடன் கலந்து எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம். . மருந்துப் பட்டியலில் புதிய மருந்துகள் சேர்க்கப்படும்போது, பயன்படுத்திய மருந்துகள் மற்றும் பிற சுய மருந்துப் பொருட்களைக் கருத்தில் கொள்வது அவசியம். மருந்துகளைப் பயன்படுத்தும் நபர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மருந்துகளின் செயல்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை. ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கும் உரிய சிக்கலைக் கூறி தீர்வு சொல்லி இருப்பது அருமை... மேலும் எழுதுங்கள்
ReplyDeleteஆனந்தி நல்ல விழிப்புணர்வு கட்டுரை.. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ReplyDelete