இன்று வெள்ளிக்கிழமை! செவ்வாய் காலை பிளைட்டில் இந்தியா கிளம்புகிறாள் கவிதா. சொத்து ஒன்று விற்கவேண்டிய விஷயமாக அவளின் அப்பா உடனடியாகக் கிளம்பி வரசொல்லியிருந்தபடியால் திடீர்ப் பயணம். அடுத்த வாரம் தென்றலுக்கும் ஸ்கூல் லீவு என்பதால் அவளையும் கூட்டிச்செல்கிறாள்.
கவிதாவும் சிவாவும் மென்பொருள் துறையில் அமெரிக்காவில் பணிபுரிபவர்கள். இருவரின் பெற்றோரும் இந்தியாவில்; பாஸ்டன் நகரின் சீதோஷ்ண நிலையை தாங்கும் வலிமை அவர்களுக்கு இல்லாதபடியால் வருடா வருடம் குழந்தையோடு இந்தியா சென்று பெரியவர்களுடன் சில வாரங்கள் இருந்துவிட்டு வருவார்கள்.
ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்லும்போது ஒரு மாதம் முன்னதாகவே தேவையான விஷயங்களை வாங்க ஆரம்பித்து விடுவாள். ஊரில் இருக்கும் நட்புகளுக்கு ஏதாவது வாங்கித் தருவது அவளுக்கு ஒரு சந்தோஷம். அவளுக்கு சந்தோஷம் தரும் எதையும் சிவாவும் தடுப்பதே இல்லை. இந்தமுறை ஒரு வாரம் தான் பயணம் என்றாலும் கையை வீசிக்கொண்டா இந்தியாவுக்குப் போக முடியும்? கடைக்குப் போக நேரமில்லை என்று பத்து கிலோவுக்கு அமேசானில் சாக்லேட் ஆர்டர் போட்டிருக்கிறாள். வீட்டுக்கு வருபவர்கள், குட்டீஸ் என்று அனைவருக்கும் டக்கென்று எடுத்துக்கொடுக்கலாம், உனக்கு காஸ்ட்லி சாமானம், எனக்கு கம்மி என்ற சங்கடங்கள் வரவும் வாய்ப்பில்லை.
சிவாவின் அம்மாயி பாசக்காரர். சிவாவை வளர்த்தெடுத்தது, படிக்க வைத்தது என்று மட்டுமில்லாமல், கவிதா புகுந்த வீட்டுக்குப் போனதிலிருந்து அந்த அம்மாயிக்கு அவள் மீதும் கொள்ளை பாசம். ஒவ்வொரு முறையும் அம்மாயிக்கும் ஏதாவது வாங்குவதுண்டு. இந்த முறை சுடுதண்ணி வைத்துக் குடிப்பதற்காக உபயோகப்படட்டும் என்று கெட்டில் ஒன்றை அமேசானில் ஆர்டர் போட்டிருக்கிறாள்.
போன வாரம் எதேச்சையாய் கடைக்குப் போனபோது Thanks Giving டீல்.. உயர்ரக ஹேண்ட்பேக் மற்றும் சென்ட் பாட்டில் இரண்டும் சல்லிசான விலையில் இருந்ததைக்கண்டு இந்தியாவில் இருக்கும் தன் தோழிகளுக்காக ஏற்கனவே வாங்கி வைத்திருந்தது சௌகர்யமாகப் போய்விட்டது. இப்போவே மறக்காம பெட்டியில் வெச்சுடலாம் என்று நினைக்கும்போது தான் இன்னும் சூட்கேஸ் எடுக்கவே இல்லை என்று நினைவுக்கு வந்தது.
"போன வாரத்துல இருந்து எத்தனை வாட்டி பெட்டியை எடுத்துத்தாங்கன்னு சொல்லியிருப்பேன்"
கணவன் சிவாவை முறைத்துக்கொண்டே ஏணியை லாஃப்ட் அருகில் வைத்தாள் கவிதா.
"ஒரு மாசம் முன்னாடி பெட்டியை எடுத்துத் தந்தாலும் நீ இன்னைக்குத் தான் பேக்கிங் ஆரம்பிப்பேன்னு எனக்குத் தெரியும்டா டேய்", கவிதாவைக் கலாய்த்துக்கொண்டே கூரையின் மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸை கீழிறக்கினான் சிவா.
சிவாவுக்கு கண்ணை மட்டும் உருட்டி பொய்க் கோபம் காண்பித்து விட்டு அம்மாவிடமிருந்து வந்த அழைப்பை எடுத்தாள் கவிதா .. பேசி முடித்துவிட்டு சிலநிமிடங்கள் யோசித்தவள், இனிமேல் உபயோகப்படுத்தாத உடைகளைத் தனியே ஒரு பெட்டியில் எடுத்து அடுக்க ஆரம்பித்தாள். அவ்வப்போது புலம்பல்களையும் வரிசையாய் சிவாவிடம் அனுப்பத் தவறவில்லை.
"எங்கம்மா வேற அவங்க பங்குக்கு எனக்கு வேலை வெப்பாங்க.. ஒரு வாரம் தான வர்றேன்னு பாவமே பாக்க மாட்டாங்க"
"இந்த மூணு நாள்ல எப்டி நான் பேக் பண்ணி முடிப்பேனோ, ராமா"
"செடிகளுக்கு தண்ணி ஊத்த மறந்துடாதீங்க, நிறையவும் தண்ணி ஊத்திடாதீங்க"
"ஏர்போர்ட் பார்க்கிங் கொள்ளையடிக்கிறான், நாங்க பேசாம ட்ரெய்ன்லயே போயிடறோம், ரெண்டு பெட்டி தான"
"பிரிட்ஜ்ல காய்கறி வாங்கி வெச்சிடறேன், மாவு இருக்கு, ரெண்டு நாள் தாண்டி சமைக்க ஆரம்பிச்சுடுங்க"
"ஏங்க...அ அ ... நான் பாட்டுக்கு கத்திகிட்டே இருக்கேன்"
சிவா ஏற்கனவே காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு லேப்டாப்பில் மூழ்கியிருந்தான்.
பள்ளி சென்றிருக்கும் தென்றல் வீடு திரும்பும் முன் ஒரு சூட்கேஸ் துணிகளால் நிரப்பப்பட்டு ஓரம் கட்டி வைக்கப்பட்டது. இரவு மூவரும் படம் பார்த்துக் கொண்டே சாப்பிட, கவிதா இன்னும் என்னென்ன எடுத்து வைக்க வேண்டுமென்று யோசித்தாள்.
சனிக்கிழமையும், ஞாயிறுக்கிழமையும் ஆன்லைனில் டெலிவரியான பொருட்களையும், ஒருவாரத்திற்கான உடைகளையும் எடுத்து வைத்துவிட்டு, சிக்கன், காய்கறி வாங்குதல் என்று பிரிட்ஜையும் நிரப்பி விட்டு திங்கட்கிழமை காலையில் பயணத்திற்கான ஆன்லைன் செக்கின் செய்து முடித்தாயிற்று.
அயர்ச்சியாய் இருந்தது கவிதாவுக்கு!
"எப்போ ஊருக்குப் போனாலும் போறதுக்கு முன்னாடி ஒரு வாரம் செம ஸ்ட்ரெஸ் ஆகுது.. நாளைக்குக் காலைல பிளைட் ஏறினா தான் ரெஸ்ட்"
அன்றைய அலுவலக வேலைகளை முடித்துவிட்டு இரவு தூங்கச்செல்லும் முன் பாஸ்போர்ட், விசாவை எடுத்துக் கைப்பையில் வைத்து விட்டு இந்திய ரூபாய்கள் எவ்வளவு இருக்கிறதென்று எண்ணிக்கொண்டிருந்தபோதே தூக்கம் தள்ளியது.
"சீக்கிரம் தூங்கேன்"
தனக்குத்தானே சொல்லியபடி தூங்கச் சென்றாள் கவிதா.
செவ்வாய்க்கிழமை காலை. சிவாவுக்கு மதியம் வரையில் அலுவலக மீட்டிங் ஏதும் இல்லாதபடியால் ஏர்போர்ட் வருவதாகச் சொல்லியிருந்தான். "பாஸ்போர்ட், விசா மறக்காம எடுத்துட்டியாடா? எத்தனை செக்கின், எத்தனை ஹாண்ட் லக்கேஜ் எண்ணிக்கோ". வழக்கமான கேள்விகளோடு சிவா வண்டியை நகர்த்தினான். பலவருடங்களாக விமானப் பயணம் அனுபவமென்பதால் இரண்டரை மணி நேரம் முன்பு சென்றாலே போதுமானதாக இருந்தது.
இரண்டு பெட்டிகளையும் செக்கின் செய்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்ட கவிதாவுக்கு எப்போதும் இருக்கும் பேராசை, ஒரு வாட்டியாவது இப்படி லொங்கு லொங்கென்று பேக் பண்ணாம கைய்ய வீசிட்டு இந்தியா போகணும் என்பது. செக்யூரிட்டி ஏரியாவில் விடைபெற வேண்டிய நேரம் வந்ததும், " I'll miss you dad", என்றபடி தென்றல் அப்பாவை அணைத்து முத்தமிட்டுக் கையசைத்தாள்.
இந்தியாவில் ஒரு வாரம் எப்படிப் போனதென்றே தெரியவில்லை கவிதாவுக்கு. வந்த வேலை நல்லபடியாய் முடிந்தது மட்டுமில்லாமல், ஒரு உறவினர் வீட்டு கல்யாண சாப்பாடும் கிடைத்தது. ஷாப்பிங் சென்று சில உடைகள், இனிப்புகள், கொஞ்சம் மளிகைப் பொருட்கள் என்று இரண்டு பெட்டிகளோடு புதன் கிழமை காலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது சத்தியமா ஒரு வாரம் மட்டும் இந்தியா வரவே கூடாதுடா சாமி! என்று நினைத்துக்கொண்டாள்.
வியாழன் மதியம் பாஸ்டன் விமான நிலையம் வந்திறங்கியபோது தென்றல் தூங்கி வழிந்தாள். ஒருவழியாய் அவளை எழுப்பி நடக்க வைத்து கார் பார்க்கிங்கில் காத்திருந்த சிவாவோடு வீடு வந்து சேர்கையில் அப்பாடி என்றிருந்தது கவிதாவிற்கு. அடுத்து வந்த சில நாட்கள் நேர வித்தியாசத்தில் சரியாகத் தூங்க முடியாமல் நகர்ந்தன.
ஒருவழியாக எல்லாம் சரியாகி இயல்பு வாழ்க்கை திரும்பி 6 மாதங்கள் தாண்டிய ஒரு அதிகாலை இந்தியாவில் இருந்து வந்த ஒரு போன்கால் அந்த வீட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. ஒரு கொடுமைக்காரன் நகைக்கு ஆசைப்பட்டு அதைத் திருடும் முயற்சியில் அம்மாயினுடைய கழுத்தை அறுத்துக் கிணற்றில் தள்ளிவிட்டுக் கொன்றிருக்கிறான். இறப்பு என்பதைத் தாண்டி அகால மரணம் எனும் அதிர்ச்சியை ஜீரணிக்கமுடியாமல் சிவாவும் கவிதாவும் உடைந்து போனார்கள். "நாங்க உடனே கிளம்புறோம், நாளைக்கு மத்யானத்துக்குள்ள எப்படியாவது வந்துடுவோம்" அப்பாவிடம் மட்டும் போனில் சொல்லிவிட்டு உடனே கிளம்பினார்கள் மூவரும்- சிவாவின் கார் பாஸ்டன் ஏர்போர்ட்டை நோக்கி எந்த ஆர்பாட்டமும் இன்றிப் புறப்பட்டது, வெறும் பாஸ்போர்ட்டுகளுடன்!
Hearty congrats Pradeepa,keep writing more.good wishes team .
ReplyDeleteMurali.G
Thanks Murali🙏
DeleteReally so touching ❤️🙏வெளிநாட்டில் வாழ்வதன் அறியப்படாத வலியை யதார்த்தமா எழுதி இருக்கீங்க..
ReplyDeleteஅருமை👏👏👏👏
Thank you Prabha
Deleteஅருமை ப்ரதீபா..படிக்க ஆரம்பித்தபோது கலக்கறாளேனு இலகுவாய் இருந்த மனது இறுதியில் பாரமாகிப்போனது...எழுத்தாளர் சொல்லும் கதையின் உணர்வுகளை வாசகனும் அதே அலைவரிசையில் உணர்ந்தால் அது நல்ல எழுத்து.. நிறைய எழுது. வாழ்த்துகள் ❤️
ReplyDeleteSure, will continue to write more Kanni, thanks
Deleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteபடிக்க படிக்க சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கும் போது எதிர்பாராத கடைசி பத்தியில் வரும் போது கொஞ்சம் சங்கடமாய் இருந்தது. நாம் ஆசைப்பட்டது நமக்கே வினை விதைக்கும் என்று நினைத்தாலே பயமாய் இருக்கிறது.
உண்மை கலந்த கதை, நன்றிங்க 🙏
Deleteவெளிநாடு வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முறை பற்றிய புரிதலை கதை கொடுத்துள்ளது..உணர்வுப்பூர்வமான எழுத்து..வாழ்த்துகள்
ReplyDeleteThank you very much for your support🙏
DeleteNicely narrated. Keep it up.
ReplyDeleteThank you for your encouraging words🙏
Deleteமுடிவை ஏத்துக்க கஷ்ட்டமா இருந்தாலும் அழுத்தமான முடிவு. வாழ்த்துகள் தொடர்ந்து எழுதவும்
ReplyDelete