Friday, December 1, 2023

ப்ளீஸ் வந்திடுப்பா - யசோதா பழனிச்சாமி, ஈரோடு.

'காவேரி காவேரி “ எழுந்திரிம்மா விடிஞ்சுடுச்சு’

'ம்ம்..ம்ம்..கண்களைத் திறக்க முடியாமல் அந்த விடியற்காலையில் இழுத்துப் போர்த்தி படுத்தாள். போர்வைக்குள் இருந்தபடியே இன்னும் கொஞ்ச நேரம்ப்பா என்றாள். அப்பாவின் குரல் மீண்டும் "எழுந்திரிம்மா‌‌ காவேரி" எனக் காதோரம் கேட்க விருட்டென்று எழுந்து உட்கார்ந்த காவேரி அவள் அப்பாவைத் தேடினாள். அவரின் குரல் மட்டும் அவள் காதோரம் கேட்க, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து தலையணியை நனைக்கும் நொடியில் நீண்ட குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள்‌. 'அப்பா! அப்பா! என்னை விட்டுட்டு நீ எப்படிப்பா போனே?’ என உளற ஆரம்பித்தாள். 

அருகே படுத்திருந்த காவேரியின் மகள் நதிகா 'அம்மா..ம்மா' என்னாச்சுமா? என அவளை உலுப்பினாள். திடுக்கிட்ட காவேரி எழுந்து உட்கார்ந்தாள். “எதுக்கும்மா அழுத? ஏதாவது பயங்கர கனவு கண்டியா?” என்றாள். “நான் எப்ப அழுதேன்?”

“அம்மா நீ இப்பெல்லாம் அடிக்கடி தூக்கத்தில் அப்பா அப்பானே உளறி வைக்கிற என்னாச்சுமா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைமா. எங்கப்பானா எனக்கு அத்தனை உசுரு. சின்னப்புள்ளையில எங்களுக்கு காசு பணம் அதிகமா இல்லைனாலும் அவரோடு அன்புக்கு குறையில்லாம இருந்தது. எங்கப்பா, ஊருல பண்ணைக்காரங்க தோட்டத்துக்கு வேலை செய்யப் போவார்..

நாங்க பள்ளிக்கூடத்தில இருந்து வரும்போது யாராவது தோட்டத்தில் இருந்து மாங்கா, கொய்யாக்கா, பனங்கானு கொண்டு வந்து வச்சிருப்பார். மாசத்தில் ஒருக்கா தான் கறி ஆக்குவோம். கறியானதுக்கு பிறகு நாங்க எல்லோரும் ஒன்னா உட்கார்ந்து ஊர் கதை எல்லாம் பேசிட்டே சாப்பிடுவோம் சோறு பத்தலைனாலும் கூட வயிறு நிரம்பிடும். 

அப்புறம் எப்பவாவது டெண்டு கொட்டகைக்கு சினிமா பார்க்கக் கூட்டிட்டுப் போவார். . நல்லது கெட்டதுனு அவரப் பாத்து நாங்க நிறைய கத்துக்கிட்டோம்.
என்னவோ தெரியல அவரு செத்து மூணு வருஷம் ஆச்சு. சின்னதுல நான் அசந்து தூங்கிட்டு இருக்கறப்ப எழுப்பினா விசுக்குனு எந்திரிச்சிடக் கூடாதுன்னு காதுகிட்ட வந்து 'காவேரிக் கண்ணு, காவேரிக் கண்ணு எந்திரிம்மா விடிஞ்சு போச்சுனு' சொல்லுவார். அவரு கூப்பிடற அந்தக் குரல் மட்டும் அடிக்கடி காதோரம் வந்து கூப்பிட்டாப்பில கேக்குது. அந்தக் குரலை கேட்டதும் தூக்கத்திலே எனக்கு அழுகை வந்துடுது என்றவாறே எழுந்து சென்றாள்.

அம்மா பேசியதைக் கேட்டதும் பதினைந்து வயது நதிகாவிற்கு தன் அப்பாவின் நினைவு ஏக்கமாக வடிந்தது.. அப்பாவைப் பார்த்து இப்போது ஒரு வருஷம் இருக்கும்.போன முறை தீபாவளிக்கு வந்திட்டுப் போனார். இனி வரும் தீபாவளிக்கோ அல்லது அடுத்த இரண்டு வருஷம் கழிச்சோ தான் வருவார்.

தன்னுடன் படிக்கும் தோழிகளை அவரவர் அப்பா பள்ளியில் கொண்டு வந்து விட்டுட்டு டாடா காட்டிவிட்டு போவதைப் பார்க்கும் போதெல்லாம் அவள் கண்களில் ஏக்கம் கொப்பளிக்கும். பேரண்ட்ஸ் மீட்டிங்கில் கையெழுத்துப் போடப் போகும்போது அம்மாவின் ஒரு விரலையும், அப்பாவின் ஒரு கையையும் பிடித்துத் தொங்கிக் கொண்டு செல்லும் தன் வயதொத்த பிள்ளைகளை அவள் ஆசையோடு பார்ப்பாள். அப்போது உடன் வரும் அவளின் அம்மாவின் கையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்வாள்.

"யேய் நதிகா, நேத்து எங்கப்பா கூட சினிமாவுக்குப் போயிட்டு வந்தோம்டி , எங்கப்பா எனக்கு எழுதிக் கொடுத்ததைத் தான் பேச்சுப் போட்டியில் பேசினேன். அதனால் தான் எனக்கு ப்ரைஸ் கிடைச்சது என தோழி கவிதா பெருமை பொங்க சொல்வதைக் கேட்கும் போது, நம்ம அப்பா இருந்திருந்தா நமக்கும் எழுதிக் கொடுத்திருப்பாரோ? அம்மாவுக்கு இதெல்லாம் எழுதத் தெரியாது.அதனால் அவள் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை.

ஒரு நாள் அவள் அம்மாவிடம் கேட்டே விட்டாள். "ஏம்மா, என் ஃப்ரெண்ட்ஸோட அப்பா எல்லாம் அவங்க கூடவே இருக்காங்க. ஏன் எங்கப்பா மட்டும் கூட இல்லை"?

"நதிகா, அவங்களோடு அப்பாக்களுக்கு இங்கேயே வேல கிடைச்சிருக்கும். நம்ம அப்பாவுக்கு வெளி நாட்டுல வேலை கிடச்சிருக்கு. அதனால அங்கே இருக்கிறார் என்றதும், "நம்ம அப்பாவுக்கும் இங்கேயே வேலை வாங்கிக்கலாம்மா” என்றாள்.

"அதெல்லாம் இப்போது முடியாதுமா! நீ வளர்ந்து கல்யாணம் பண்ணற வைக்கும் அப்பா இங்கே வந்து வேல பாக்க முடியாது. இங்கே எல்லாரும் வாங்கிற சம்பளத்தை விட அங்கே அதிகமா சம்பளம் வாங்கறாரு.. நீ நல்ல பள்ளிக்கூடத்தில படிக்கணும். உனக்கு துணிமணிகள் வாங்கணும். அதுக்கெல்லாம் இங்கே கொடுக்கற சம்பளம் பத்தலைமா. 

அப்புறம் அப்பாவுடைய தங்கச்சி, தம்பிகளுக்கெல்லாம் அப்பா தான் பாத்து கல்யாணம் செஞ்சு வச்சாரு. அதுக்கு நிறைய பணம் செலவாயிடுச்சு. அதுக்கெல்லாம் நிறைய பேருகிட்ட கடன் கேட்டு வாங்கி வச்சிருக்குமா அதெல்லாம் கட்டணுமில்ல. உன் தம்பி வளர்ந்து பெரியவனாகும் போது அவனைப் பெரிய படிப்பு படிக்க வைக்கணும் அதுக்குத்தான் அப்பா வெளிநாட்டு வேலைக்குப் போயிருக்கார்.

பத்து வயதிலிருந்து அம்மா இதையே சொல்வதால் அவளுக்கு மறுபடியும் எதுவும் அம்மாவிடம் கேட்கத் தோணலை..இப்போது அவளுக்கு பதினைந்து வயதாகிறது. அப்பாவின் அருகாமை இல்லாமலே வளர்ந்துவிட்டாள். அப்பாவின் கைப்பிடித்து தொலை தூரம் நடக்க வேண்டும். அப்பாவின் மடியில் தலை வைத்து உறங்க வேண்டும். அவரிடம் நிறைய பேசணும். அதுவும் விசுவாசம் படம் பார்த்த பிறகு அவளுக்குள் அப்பாவின் மீதான ஏக்கம் அவளைத் தவிக்க வைத்தது.

அப்பாவுக்கு என் மீது பாசம் இருந்திருந்தா இங்கேயே தானே இருந்திருப்பார். என்கூட விளையாடலானு அவருக்கு மட்டும் ஏன் தோணல?அப்பாவுக்கு எப்போதும் பணம் சம்பாதிக்கிறது மட்டும் தான் பிடிச்சிருக்கோ? என அவள் வயதுக்கு மீறி யோசித்தாள்.

வருஷத்துக்கு ஒரு தடவை அப்பா வீட்டுக்கு வருகிறார் எனத் தகவல் தெரிந்ததுமே அத்தை, சித்தப்பா எல்லோரும் இரண்டு மூன்று நாளைக்கு அப்பாவை வந்து பார்த்துட்டு, இங்கேதான் தங்கி இருப்பார்கள். சமையல், விருந்து என வீட்டுக்குள் தடபுடலாக இருக்கும். அம்மாவுக்கோ, எனக்கோ, தம்பிக்கோ அப்பாவைத் தனியாக சந்திக்கக் கூட முடியாது. அவர்கள் கிளம்பிய இரண்டு நாளைக்குப் பிறகு, விட்டுப் போன சொந்த பந்தங்கள் என அவர்கள் வீட்டுக்கு அப்பா செல்வதில் நாட்கள் நகரும். 

அப்பா ஒவ்வொரு முறை வரும்போதெல்லாம் குல தெய்வக் கோவில் பயணம் இருக்கும். அப்பாவைப் பார்க்க வரும் நண்பர்களும் அதிகமாக இருப்பார்கள். பகலில் ஸ்கூலுக்குச் சென்று விடுவதால் இரவு மட்டும் தான் அவருடன் பேச இயலும். அந்த நேரத்திலும் யாராவது இரண்டு பேரைச் சந்திக்கச் செல்வதாக கிளம்புவார். 

எனக்கு  அப்பாவின் கையை விடாமல் பிடித்துக் கொண்டே  இருக்கணும் என்று தோன்றும். ஆனால், அப்பாவுக்கு என்னிடம் கொஞ்சிப் பேசவே நேரமிருக்காது. நிறைய சாமானெல்லாம் வாங்கிட்டு வந்து தந்தாலும் அதை வைத்து எப்படி விளையாடுவது என சொல்லித் தர அப்பா இருக்க மாட்டார். அதற்குள் ஒரு மாத விடுமுறை முடிந்து போகும். அவர் கிளம்பும் போது என்னையும் தம்பியையும் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுத்தமாக முத்தம் கொடுத்து விட்டு கண்கலங்க டாட்டா சொல்லி விட்டு கிளம்பிய பிறகு வீட்டில் இருந்த அத்தனை கலகலப்பும் ஓய்ந்து போகும். வீடே மயான அமைதியில் இருக்கும். அதற்குப் பிறகு உறவுகள் கூட்டமும் இருக்காது. வழக்கம் போல் அம்மா, தம்பியுடன் வாழ்க்கை நகரும்.

அம்மாவிற்கு இவ்வளவு வருஷங்கள் கடந்தும் இறந்து போன அவர் அப்பா வந்து காதுக்குள் பேசுகிறார். இங்கே உயிரோடு அப்பா இருந்தும், அவர் பேசுவதைக் கேட்க எனக்கு காதுகள் இருந்தும், அவர் பேச்சு என் காதுக்குள் கேக்கலை.

அவள் ஒரு முடிவோடு போனை எடுத்து அவள் அப்பாவின் எண்ணை அழுத்தினாள். மறுமுனையில் அவள் குரல் கேட்டதும் அப்பா வீடியோ காலில் வந்தார்.

"அப்பா!.. அப்பா! கண்களில் அவளுக்கு கண்ணீர் திரையிட்டது. அப்பா! நான் உடனே உன்னை நேரில் பார்க்கணும் போல இருக்குப்பா. உன் கையைப் பிடிச்சுக்கணும் போல இருக்குப்பா. அங்கிருந்து கிளம்பி வாங்க. ப்ளீஸ்ப்பா.. வந்திடுங்க. இங்கேயே வேலைக்குப் போங்கப்பா. சம்பளம் பத்தலைனா ஒரு வேலை சாப்பாட்டைக் கூட நான் நிறுத்திக்கிறேன்ப்பா. பீஸ் கட்டப் பணம் போதாதுனா என்னை அரசாங்கப் பள்ளியில் சேர்த்து விடுப்பா. உன்னை ரொம்ப மிஸ் பண்றேனப்பா ப்ளீஸ்ப்பா…"

அவள் மெழுகாய் உருகி கரைந்து, கதறவது அவள் அப்பாவின் செவிகளில் அறைந்து கொண்டிருக்க, தான் வருவதை யாரிடமும் சொல்லாமல், சர்ப்ரைஸ் கொடுக்க வந்தவர் கண்களில் கண்ணீரோடு தன் வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினார்.




1 comment:

  1. உண்மைதான். அருகில் இருந்து செய்வது போல் எதுவும் இராது..தந்தை மகள் பாசமோ வளரும் போதுதான் வளரும். நல்ல உணர்வுப்பூர்வமான கதை.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...