ஒரு சாமானியனின் வாழ்வில் இலக்கியம் ஏற்படுத்தும் மாற்றம் மிகவும் உன்னதமானது. இலக்கியம் என்பது தங்கள் வாழ்வு அனுபவங்களுக்கு மேல் அதிகமாக விரிவான புரிதலை ஒருவருக்குத் தருகிறது. ஒரு சாமானியனின் வாழ்வனுபவங்கள் எல்லைக்குட்பட்டது. ஆனால் இலக்கியம் பல்வேறு மனிதர்களின் அனுபவங்களை நமக்கு அளிக்கவல்லது. இலக்கியம் அறம் சார்ந்து வாழ நமக்கு கற்றுக் கொடுக்கிறது. இலக்கியம் நமக்கு கடந்த கால வாழ்வையும்,எதிர்கால வாழ்வு குறித்த பல தெளிவுகளையும், நம்பிக்கையையும் தருகிறது.வாழ்க்கையை கொஞ்சமேனும் விலகி நின்று பார்க்கவும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மறந்து மனிதர்களை மதிக்கவும் கற்றுக் கொடுக்கிறது.
என் சிறுவயதில் ராணி, ராஜேஷ்குமார் கதைகள் படித்துக் கொண்டிருந்தேன். பிறகு துக்ளக், தினமணி பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்தேன்.சோ அவர்களின் சில புத்தகங்களும் படித்தேன். ஜெயகாந்தனின் புத்தகம் படித்த பின் தான் இலக்கிய உலகம் எனக்குத் தெரிந்தது.
நான் தறிக்கு உதிரி பாகங்கள் வாங்க ஒரு கடைக்குச் சென்றேன். அந்தக் கடையில் இருந்தவர் நான் போகும் போதெல்லாம் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பார். நான் அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் ஜெயகாந்தனின் பக்தன் என்பது தெரிந்தது. நான் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் படித்துள்ளேன் என்றதும் மிகவும் மகிழ்வடைந்து நீங்கள் என் கடையில் வாங்கும் எந்த சாமானுக்கும் சிறப்புத் தள்ளுபடி தருகிறேன் என்று தந்தார். இன்று வரை எங்கள் நட்பு நிறைவாக உள்ளது. இலக்கியம் (புத்தக வாசிப்பு) எந்தளவுக்கு அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட நெருக்கத்தை, பிரியத்தை உண்டுபண்ணுகிறது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
ஈரோடு வாசல் என்கிற குழுமமும் எனக்கு வாசிப்பின் மூலம் அறிமுகமானதே. ஈரோடு கதிர் அவர்களின் ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு அந்தப் புத்தகத்தில் ஒரு கட்டுரை என்னை அழச்செய்து விட்டது என்று சொல்லி அவரிடம் அறிமுகமானேன். கிளையிலிருந்து வேர் வரை புத்தகம் தான் நான் ஈரோடு வாசலில் இணையக் காரணம், இப்போது இந்தக் கட்டுரை எழுதக் காரணம். இலக்கியம் என்னளவில் மனிதர்களை மேலும் மேலும் மேம்படுத்தும் என்று முழுமையாக நம்புகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒரு வாசகரின் அனுபவமாக சிறப்பு
ReplyDelete