பனி மலைகளுக்கிடையே ஒரு பயணம். பயணத்தின் இடையே கையில் பாரதிதாசனின் கவிதைகள் புத்தகம். இப்படியாய் வாசிப்பு ....
"முல்லை விலை என்ன என்று கேட்டேன்.
முல்லை இல்லை என்றாள்.
பல்லை இதோ என்று காட்டி
பத்து முத்தம் பதித்தான்".
கவிதை நினைவூட்டியது காதலியை மட்டுமல்ல இன்று காதலர் தினம் என்பதையும் தான்.
அலைபேசியில் அழைத்தான் சிறு புன்முறுவலுடன். காதில் கேட்டது காலர் டியூன் மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி... பாடல் மிகப் பொருத்தமாய்....
மறுமுனையில் அவனின் அன்புக்குண்டான அந்தக் குரல் "சொல்லுங்கள்".
"என்ன சொல்ல உன் நினைவாகவே இருக்கிறேன்", இந்தப் புறமிருந்து இவனின் பதில்.
"பொய் பேசாதீர்கள். காலையிலிருந்து அழைக்கவில்லை. இப்பொழுதுதான் என் நினைவு வந்ததா", என காதலர்கள் இடையேயான உரையாடல்.
"நான் காலையிலிருந்து பல முறை உங்களை தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் தவித்தேன்".
"இல்லை அன்பே. காலையிலிருந்து பணி நிமித்தமாக பனி அதிகமான ஒரு இடத்தில் முகாம் அமைத்து அங்கு இருக்க வேண்டியிருந்தது. அதோடு அலைபேசியில் சமிக்கை இல்லாத இடத்தில் இருந்தேன். பயணத்தினிடையே சமிக்கை வந்தவுடன் அழைத்திருக்கிறேன். நீ என் உயிர் அல்லவா? உன் நினைவின்றி நான் எப்படி இருக்க முடியும்?"
இப்படி உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கையில் அவன் கேட்டான்... "இன்று காதலர் தினம் அல்லவா எனக்கு இன்று அலைபேசி வழியாக ஒரு முத்தம் கொடு" என்று...
"மூன்று மாதங்கள் கழித்து நேரில் வருவீர்கள் அல்லவா? அப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்", என்பது அவளின் பதில்.
"அப்பொழுது நம் திருமணமும் நடந்தேறி இருக்கும். முத்தமென்ன மொத்தமும் உங்களுக்குத்தானே", என்று கூறி அலைபேசி வழியாக தனது வெட்கத்தையும் பதிவு செய்தாள்.
"அத்துடன் ஒரு நிபந்தனையும். நீங்கள் ஏற்கனவே சொன்னது போல திருமணத்திற்குப் பின்னரும் கூட நீங்கள் உங்கள் தேசம் போலவே என்னை நேசிக்க வேண்டும்".
"நான் மரிக்கும் வரை நீயும்,தேசமும் எனக்கு ஒன்றே தானடி", என்றுரைத்தான்.
"சரி, நான் கேட்ட முத்தத்தை இப்பொழுது தா", என்று மீண்டுமொரு முறை கேட்டான்.
அவளும், "சரி தருகிறேன்", என்றாள்.
முத்தம் இந்தப் பக்கம் அலைபேசி அவள் இதழ்களில் இருந்து பெற்றது. சிறிய ஓசையாக அந்தப் பக்கம் அவனைச் சென்றடைய சில ஆயிரம் மைல்களைக் கடக்க வேண்டி இருந்தது. இருப்பினும் தொலைத்தொடர்பு சாதனங்கள் அதை வினாடிகளில் சுருக்கி இருந்தது. அந்த சிறிய ஓசை சென்றடையும் முன் காதைப் பிழக்கும் ஒரு சத்தம் அவன் காதுகளில். கரும்புகை சூழ உடல் முழுவதும் எங்கோ தூக்கி வீசப்பட்டது போல ஒரு உணர்வு. அவனுக்கு புரிந்தது வழிப்பயணத்தில் எங்கோ ஏதோவொரு விபத்து நிகழ்ந்திருக்க வேண்டும்.
உடலில் ஏதும் வலிகள் இல்லை. காயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை. கண்முன்னே அலைபேசி தொடு திரை அவளின் முத்த ஓசையினை உடைந்த நிலையிலும் பரிமாற பதிலுக்குத்தானும் முத்தமிட நினைத்து அலைபேசியைத் தொட முயற்சிக்கும் போதுதான் அவன் உணர்ந்தான்..தன் தலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. கண்களை இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இது வெறும் விபத்தல்ல. ஏதோ தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல் என்று.
இறுதியாக கண்களை மூடும் முன் நான் என் உதடுகள் அருகில் இருக்கும் இந்த மண்ணை முத்தமிடுகிறேன். இது என் தேசம் அல்லவா...நான் என் தேசம் போல உன்னை நேசிக்கும் இந்திய ராணுவ வீரன் அல்லவா..
இந்த முத்தம் உன்னை வந்து நிச்சயம் சேரும்....
இது மாலை 3.15 மணி
பிப்ரவரி 14ஆம் நாள்
2019 ஆம் ஆண்டு.
இது எதிரிகளின் கோழைத்தனமான தாக்குதல்.
இந்த இடம் புல்வாமா மாவட்டம்.
நான் ஒரு இந்திய ராணுவ வீரன் .
இப்போது பாரதியாரின் வரிகளுக்கு மாறினான்.
இப்படியாக...
நான் இங்கு சரித்திரத் தேர்ச்சி கொள்கிறேன்.
சாவதற்கு அஞ்சவில்லை.
சிதையா நெஞ்சு கொண்டிருக்கிறேன்.
இது என் தேசம். சீறுவோர் சீறட்டும்.
ஜெய்ஹிந்த்.
- Dr.K.தமிழ்செல்வன்,
ஹேப்பி ஹோமியோபதி கிளினிக், திண்டல்

மனதை கனக்க வைத்தது..
ReplyDeleteபுல்வாமா தாக்குதல் மனதுள் வந்து சென்றது
ReplyDelete