ஒவ்வொரு விஷயமாக தேடத் தொடங்கிய பொழுது அரசு மீதான, அரசுப் பணி மீதானஆ ர்வமும், மரியாதையும் கூட தொடங்கியது. அரசுப் பணியாளர்கள்தான் நிர்வாகத்தின் மைய அச்சு என்பதால் நாடும், நாட்டின் நிர்வாகமும் அரசுப் பணியாளர்களையே முழுவதும் சார்ந்துஇ ருக்கிறது. மாற்றம் கோரும் இடத்திலிருந்து, மாற்றத்தினை செயல்படுத்தும் ஒரு இடத்திற்குச் செல்ல கிடைக்கும் சிறந்த வாய்ப்பாகவே இந்த அரசுப்பணி எனக்குத் தோன்றியது. ஏற்கனவே அரசுப் பணித் தேர்வில் வென்றவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள், அது மக்களிடத்தில் ஏற்படுத்துகிற தாக்கம், மக்களிடத்தில் இருந்து அதற்குக் கிடைக்கும் பாராட்டு போன்றவை தொடர்ந்து என்னை அரசுப் பணி நோக்கி ஈர்க்க ஆரம்பித்தது.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நேரம் கிடைக்கும்போது அரசு அலுவலகங்களுக்குச் செல்வது அங்கு நடக்கும் பணிகளைப் பார்ப்பது என எனக்குள் அந்த ஆர்வம் விதையாக விழுந்தது. இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு இவற்றை முடித்த பின்னர் ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்து, பணிபுரிந்து கொண்டே அரசுப் பணித் தேர்வுகளுக்கும் தீவிரமாக தயாராகத் தொடங்கினேன்.
அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்த சூழலில் காலை நேரத்தில் எல்லோருக்கும் முன்னதாக முதல் ஆளாக எழுவதும், இரவு நேரத்தில் கடைசியாக உறங்கச் செல்வதுமாக என்னுடைய படிப்பும் பணியும் நேர்கோட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு மிக்க ஆசிரியப் பணி, அதன் பின் மாலை முழுவதும் படிப்பு என நாளும், பொழுதும் மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாக ஆண்டுக்கணக்கில் நகர்ந்தது.
எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்தது. அரசுப் பணிக்கான தேர்வில் முதல் முயற்சியிலேயே சிறப்பான மதிப்பெண்களுடன், மாநில அளவில் முதல் நூறு இடங்களுக்குள்தே ர்வு பெற்று என்னுடைய நீண்ட கால இலக்கை அடைந்தேன். அரசுப் பணியாளராக நான் தேர்வு பெற்றதில் நான் பெற்ற மகிழ்ச்சியை விட என் தாயும், தந்தையும் பெற்ற மகிழ்ச்சி பல நூறு மடங்கு அதிகம். என் மகன் இனி ஒரு அரசுப் பணியாளன் என்கிற பெருமிதமும், அதற்காக அவர்கள் அடைந்த மகிழ்ச்சியையும் பார்த்தபொழுது அரசுப் பணி குறித்த கனவு அவர்கள் மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்து இருந்தது என்பதை என்னால் உணர முடிந்தது.
அரசுப் பணிக்கு சென்ற முதல் நாளிலிருந்து நாம் பணிபுரியும் அலுவலகத்தை இப்படி மாற்றிவிட வேண்டும், அப்படி மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணற்ற கனவுகளுடன் அரசுப் பணியாளர் உலகத்தில் நுழைந்தேன். அங்கு மேசைத்துணி விரிப்பது முதல், ஒரு கோப்பினை ஊசியால் தைப்பது வரை எல்லாமே ஒரு சிஸ்டத்தின் கீழ் நடைபெறுகிறது என்பதையும்,கோப்பை தைப்பதற்கான ஊசி, நூலை மாற்றுவதற்கு கூட உரிய வழிமுறைகளை பின்பற்றித்தான் செய்ய வேண்டும் என்ற உண்மை உரைத்த பொழுது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.
பிரிட்டிஷ் காலத்திய அதிகாரிகள் உருவாக்கிய நிர்வாக முறைகளும், அதன் நீட்சியுமே தற்போதைய விதிகள் என்பதை அறிந்து கொண்டபோது, நாட்டிற்குத்தான் வெள்ளைக்காரர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்திருக்கிறது, அவர்கள் உருவாக்கிய அரசு அலுவலகங்களின் விதிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்கிற கசப்பான உண்மை புரிய ஆரம்பித்தது. என்னதான் நமக்கு அறச்சீற்றம் இருந்தாலும், அலுவலகத்தில் விதிகளுக்கு உட்பட்டுதான் நம் வீரத்தைக் காட்ட முடியும் என்பதுதான் நடைமுறை சாத்தியம்.
மெதுவாக ஓரிரு வாரங்களுக்குள் அலுவலகத்தின் விதிமுறைகளையும், பணிமுறைகளையும் புரிந்து கொண்ட பிறகுதான் என் தந்தை போன்றவர்களும், பொதுவாக வெளியில் இருப்பவர்களும் நினைக்கும் அளவுக்கு, இங்கு எதுவும் எளிதில் சாத்தியம் இல்லை என்ற உண்மை புரிபட ஆரம்பித்தது.
படித்த முதுநிலைப் படிப்பு தொழில்நுட்பம் சார்ந்தது, பார்க்கும் அரசுப்பணி மக்களின் மனநுட்பம் அறிந்து செய்ய வேண்டியது என்பதால் ஆரம்ப காலத்தில் படிப்புக்கும், பணிக்கும் இடையிலான மன மோதல் இருந்து கொண்டே இருந்தது. இனி புலம்பிப் பயனில்லை விதிமுறைகளின் சட்டகத்திற்கு உட்பட்டு பலரின் விதி மாற உதவி செய்வோம் என்று முடிவு செய்து பணிகளைத் தொடங்கினேன்.
நான் பார்க்கும் துறை தொடர்பாக மக்களிடமிருந்து மனுக்களை பெறுவது, அதை ஆராய்வது, அவர்களை நேரில் வரவழைத்து விசாரிப்பது, அதற்கு உரிய தீர்வினை உரிய வழியில் வரைவாக்கி உயர் அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவரின் ஒப்புதலை பெறுவது, அதன் பின்னர் தகவலை பயனாளிக்கு தெரிவித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என்று ஒவ்வொரு மனுவிற்கும் செய்யக்கூடிய செய்முறைகள் மிகவும் விரிவாகவே இருந்தன.
செய்யும் பணியை ஆத்மார்த்தமாக செய்ததால் அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைத்தன. பொறுப்புகள் அதிகரித்த அதே சமயத்தில், அதன் நேர் விகிதத்தில் பணிச்சுமையையும் அதிகரித்தது. அரசுப் பணிக்கு வந்த ஓராண்டு காலத்தில் திருமணம், அதன் பின்னர் குழந்தை என்று வாழ்க்கைச் சூழல் முழுவதுமாக மாறி இருந்த நிலையில், கூடுதல் இணைப்பாக பணிச் சுமையும் சேர்ந்து கொண்டது. குடும்பத்திற்கான கடமைகள்,குழந்தைகளுக்கான நேரம், அதனுடன் அரசுப்பணி என்ற இந்த முக்கோண சூழலை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப செயலாற்றுவது என்பது மிகவும் கடினமாகவே இருந்தது.
அரசுப் பணிக்கு முன்னால் விடுமுறைகள் விடுமுறைகளாகவே இருந்தன, திருவிழாக்கள் கொண்டாட்டத்திற்கு உரியவையாக இருந்தன, உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நேரம் ஒன்று இருந்தது. அரசுப் பணிக்கு பின்னர் விடுமுறை தினங்களுக்கு விடுமுறை கொடுத்தால்தான் நாம் ஆற்ற நினைக்கிற பணியை செயலாற்ற முடியும், நம்பி வரும் மக்களின் வலியை மாற்ற முடியும் என்ற நிதர்சனமும் புரிந்தது.
ஏதோ ஒரு கோரிக்கைக்காக, குக்கிராமத்தில் இருந்து மனுவோடு அலைந்து திரியும் ஒரு ஏழையின்/ஒரு இயலாதவரின் கோரிக்கையை கண்டறிந்து, அதற்கு உரிய வழியில் உரிய தீர்வினைக் கொடுக்கும் பொழுது அவர்கள் முகத்தில் தென்படுகிற அந்த மலர்ச்சியும்,மகிழ்ச்சியும் தான் இன்றைக்கு எனக்கு திருவிழாக்களாகவும், திருப்தியாகவும் தெரிகிறது. யாருக்கேனும், எந்த வகையிலாவது உதவிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இயல்பாக கொண்டவர்களுக்கு அரசுப் பணி என்பது பெரும் வரமே.
நம்முடைய ஒரு சொல்லோ, ஒரு செயலோ ஒருவரின் வாழ்க்கையில் வளர்ச்சியையும்,மலர்ச்சியையும், மாற்றத்தையும் சிறிதளவேனும் கொடுக்கும் என்றால், அதற்கான வாய்ப்பினை கொடுக்கும் பணி ஒரு தெய்வீக பணி. அந்த வகையில் இன்னும் பல கனவுகளை கைக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஓட்டம் ஏதோ ஒரு நாளில் மிகுந்த அர்த்தமுள்ளதாய் பூர்த்தியடையும். அந்த நாள் வரை இந்த ஓட்டத்திற்கு காரணமாக இருக்கும் அரசுப் பணியைப் பற்றி படர்வதில் பெருமகிழ்ச்சியே.

அரசு பணியை ஆத்மார்த்தமாக செய்யும் உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteமிக்க நன்றி
Deleteமறுபக்கம் அறிய முடிந்தது.
ReplyDeleteஅருமையான நடை.
வாழ்த்துகள்.
அருமையான பதிவு sir! இதைப் படிக்கும் பொழுது, அரசுப் பணியில் சேரும் ஆர்வம் மிகுதி அடைகிறது! உங்கள் மாணவி என்று கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ☺️
ReplyDeleteThank you kavya..
ReplyDelete