Friday, December 1, 2023

ஈர்க்கும் சிதறல்கள் - T. நந்தகுமார்


இந்தியா முழுவதும் மத, மொழி பேதமின்றி அனைத்து மாநிலங்களிலும் தீபாவளி பண்டிகையை நமக்கு கிடைத்த ஊக்கத்தொகையுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோம். ஏறக்குறைய 5 லட்சம் கோடி வர்த்தகம் நிறைவடைந்திருக்கும். இது நமது உள்நாட்டு உற்பத்தியில் 1.6 % ஆகும்.

நிதி திட்டமிடல், பொருளாதார சுதந்திரம் போன்ற அடிப்படை நிதி சார்ந்த விஷயங்கள் நாம் அறிந்திருந்தாலும் நிச்சயம் நமது கவனம் சரியான முதலீட்டில் இல்லாமல் அனாவசிய செலவுகளை நோக்கி சிதறியிருக்கும்..

காரணம் இது போன்ற பண்டிகை நாட்களில் Big Billion Days போன்ற சிறப்பு விற்பனைகள், விழாவாகவே நடந்தேறுகிறது.. நமக்கு தேவையே இல்லாத பல பொருட்கள், நமது வீட்டில் தஞ்சமடையும்... 

நாம் செலவழிக்கும் சிறு சிறு தொகையைக் கூட சரியான முறையில் சேமிக்க முயன்றால் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்..

இந்த இதழில் மிக சாதாரணமான, ஆனால் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணியாக கருதப்படும் (Power of Compounding) கூட்டு வட்டியின் சக்தியைப் பற்றி பார்ப்போம்.

Power of Compounding (கூட்டு வட்டியின் சக்தி): 

நம் மூலதனம், குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சதவிகித வளர்ச்சியின் மூலம் அது ஈட்டி தரும் வட்டி மற்றும் வருமானங்களை சேர்த்து கணக்கிடுவது கூட்டு வட்டி ஆகும்.

இது ஆரம்பத்தில் மிகச் சிறிதாக சாதாரணமாக தெரிந்தாலும், பின்னாட்களில் இது மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்து இருக்கும்.

இதை Domino Effect / Snowball Effect என்றும் கூறலாம்

ஒரு பனி மலை மேலிருந்து சிறு பந்து கீழே உருண்டு வரும்போது மிகப்பெரிய பனி உருளாக உருவெடுத்திருக்கும். அதுபோல நாம் செய்த சிறு முதலீடு அதன் வளர்ச்சி மற்றும் வட்டியும் சிறுகச் சிறுக சேர்ந்து, நாம் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு ஒரு மிகப் பெரிய தொகையாக வளர்ந்து நிற்கும். இது அடிப்படைக் கணக்கு தான் என்றாலும் நம் அன்றாட வாழ்வில் இதைப் பயன்படுத்த தவறுகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்:

பணக்காரர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் - சாதாரண மக்கள் பணத்திற்காக வேலை செய்வார்கள். ஆனால் பணக்காரர்களுக்கு பணம் வேலை செய்யும். அவர்கள் தூங்கும் போதும் அவர்களின் சொத்து பெருகிக் கொண்டே இருக்கும். 

ஆம், நம் பணத்தை நமக்காக வேலை செய்ய வைக்க முடியும். (Compounding Effect) கூட்டு சக்தியின் மூலம் நாம் அதை சாதிக்க முடியும். அதன் பயனையும், வீரியத்தையும் புரிந்து கொண்டால், மிக சுலபமாக நம் வளத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

அதில் நாம் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய காரணிகள்.
1. மூலதனம் (Investment)
2. வளர்ச்சி விகிதம் (Growth %) 
3. காலம் (Time)

1. மூலதனம் (Investment)

நாம் குறிப்பிட்ட தொகையை மூலதனமாக முதலீடு செய்யவேண்டும். நமது அனாவசிய செலவுகளை குறைத்து முதலீட்டை தொடர்வதும், நமது வருமானம் அதிகமாகும் போது சேமிப்புத் தொகையையும் அதிகப்படுத்தி கொள்வதும் சிறப்பாக அமையும்.

2. வளர்ச்சி விகிதம் (Growth %) 

நம் முதலீடு எந்த வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து வருகிறது என்பது முக்கியம். அஞ்சலகச் சேமிப்பு, ஆயுள் காப்பீடு மற்றும் வங்கி முதலீடுகளில் உங்களது அதிகபட்ச விகிதம் 6 - 8 % மட்டுமே கிடைக்க வாய்ப்பு. நீண்ட கால அடிப்படையில், பங்குச்சந்தை முதலீடு குறைந்தபட்சம் 15% வளர்ச்சியை வழங்கி வருகிறது. (Source: Nifty 50). ஆக, நம் வளர்ச்சி விகிதம், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.

3. காலம் (Time)

முதலீட்டுக் காலம் என்பது மிக முக்கியமான காரணி. இதன் மதிப்பை எதனுடனும் நாம் ஒப்பிட முடியாது. பெரும்பாலான மக்கள் தாங்கள் தொடங்கும் முதலீடு அல்லது சேமிப்பை நீண்ட காலம் தொடர்வதில்லை. நாம் அனைவரும் அறிந்த, எளிமையான ஆனால் கடைபிடிக்க மிகவும் கடினமான பழக்கம், நீண்ட காலம் முதலீட்டை தொடர்வது.. இதன் தாக்கம் மிக அதிகம். இதுவே கூட்டு சக்தியின் அச்சாணியாக விளங்குகிறது..

கீழே இருக்கும் அட்டவணையில் 5 வருட வித்தியாசம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பலனை கொடுக்கிறது.. இதில் நீண்டகால முதலீட்டின் அருமை புரியும்.

அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதை உலகின் எட்டாவது அதிசயம் என்கிறார்..

தனது 17வது வயதில் சேமிப்பை துவங்கிய, பங்குச் சந்தையின் சக்கரவர்த்தியாக விளங்கும் வாரன் பஃபட், தனது 50வது வயதில் 100 கோடி மதிப்பிலான சொத்தை உருவாக்குகிறார். அடுத்த 40 வருடங்களில் அதுவே 10,000 கோடியாக வளர்ந்து நிற்கிறது. 

"An idiot with plan can beat a Genius without plan" - Waren Buffet.

படிக்க, கேட்க பிரமிப்பாக இருந்தாலும், வாரன் பஃபட் செய்தது புத்திசாலித்தனமான முதலீடு மட்டுமே. 

சரியான திட்டமிடல், சேமிப்பு ஒழுக்கம் மற்றும் நிர்வாகத் திறமையின் மூலம் சிறந்ததொரு சொத்தை உருவாக்க முடியும்..

விதி: 15-15-15 
இந்த விதியின் மூலம் மாதம் ₹15,000, 15% சதவிகித வளர்ச்சியில், 15 வருடம் நீங்கள் சேமிக்கும் பட்சத்தில், உங்கள் கையில் ஒரு கோடி இருக்கும்.

விதி: 15-15-30 
இதேபோல், மாதம் ₹15,000, 15% சதவிகித வளர்ச்சியில் 30 வருடம் தொடர்ந்தால் உங்களிடம் ₹10 கோடி இருக்கும்..

மேலே பார்த்த வழிமுறைகள் சாத்தியமானது என்பதை நம் சேமிப்பு ஒழுக்கத்தால் மட்டுமே நிரூபிக்க முடியும்.

இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது, நமது சேமிப்பை இளம் வயதிலேயே தொடங்கிவிட வேண்டும். அது தவறும் பட்சத்தில் சேமிக்கும் தொகையை அதிகப்படுத்தினால் மட்டுமே சாத்தியம். இது நமக்கு கூடுதல் சுமையாகவும் இருக்கலாம். நாம் தொடங்குவது மட்டுமல்லாது நமது குழந்தைகளுக்கும் சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்..


1 comment:

  1. கூட்டு வட்டி பற்றி, அனைவருக்கும் புரியும் வகையில் அருமையான கட்டுரை.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...