Saturday, February 3, 2024

வாழ்வெனும் சாமிசடை... - ராதா மனோகரன்

 


 

ரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. மானிடனாகப் பிறவி எடுப்பதே பெரும் வரம். எனவே மானிடப் பிறவியில் அறம் தவறாமல் நடந்து கொண்டு வீடு பேற்றை அடைய வேண்டும். தவறான செயல்களைச் செய்து இழி நிலையை அடையக்கூடாது என்று ஔவைப் பாட்டி சொல்லி இருக்கிறார்கள். அதைப் பின்பற்றி நடப்பவர்களே மானிடப் பிறப்பின் பயனை அடைய முடியும் என அவ்வளவு பய பக்தியோடு அறத்தோடு வாழ்வது பற்றி பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் இன்றும் நினைவில் நிழலாடுகிறது..

பாடங்கள் வாழ்வியலை வடிவமைக்கத்தானே கற்றுக் கொடுக்கப்பட்டன. தலைவர்களையோ, மகான்களையோ,பெரியப்பாவையோ,அப்பாவையோ, சித்தியையோ பார்த்து அன்பையும், வாழ்வின் நெறிகளையும் கற்றுக் கொண்ட தலைமுறைதானே நம்முடையது?.

புத்தகங்களிலோ,அனுபவங்களிலோ கற்றுக் கொண்ட பாடங்கள் தான் ஆதி மனிதனை AI வடிவமைக்கும் ஆராய்ச்சியாளனாக, அறிவியல் விஞ்ஞானியாக மாற்றி இருக்கிறது. இந்தப் பெரும் மாற்றம் நிகழ்ந்த இடைப்பட்ட காலங்களிலும் எங்கோ மூளைக்கு ஒருவர் அறம் தவறி கொலை,கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுவர். அப்பொழுது அது தெய்வ குற்றமாகவே பேசப்படும். 

அன்றெல்லாம் கொலை என்பது மிகவும் அரிது. அதுவும் வாய்க்கால் வரப்பு சண்டைகளிலோ, அரசியல் சண்டைகளிலோ மட்டும் தான்  நடக்கும். பரபரப்பாக பெருமளவில் பேசப்படும். ஊருக்கொரு மைனரோ தம்பானோ இருப்பார்கள். வெளிப்படையாக அறிவிப்பார்கள் தாங்கள் அடிதடி அண்ணன்கள் என்று. அவர்களை அண்டிப் பிழைக்கும் கைத்தடிகள் அரிவாள் மீசையை முறுக்கிக் கொண்டு வேட்டியை மடித்துக் கட்டுவதிலேயே காண்பிப்பார்கள் நானும் ரௌடிதான் என்று. கொலை செய்தவர்கள் குடும்பத்தில் யாரைப் பார்த்தாலும் ஊரே ஓடி ஒதுங்கி காதுக்குள் கதை சொல்வதுண்டு. உயிர் இழப்பு உச்சகட்ட இழப்பாக துக்கம் அனுஷ்டிக்கப்படும்.  

கரி வித் சயனைடு கேரளாவில் சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை விளக்கும் ஒரு தொடர். வீட்டுக்குள்ளேயே மனைவி கணவனுக்கும், குடும்பத்தாருக்கும் சமையலில் சயனைடு கொடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் வீட்டில் யாருக்கும் தெரியாமல்  கொன்று விடுகிறார். அதைப் பற்றி அவனது மகன் கேட்க்கும் பொழுது ஆம் என்று மகனிடம் அந்தத் தாய் சொல்லும் தருணம் உண்மையில் நெஞ்சை அதிர வைத்தது. இது போன்று தாய்  பெற்ற குழந்தையைக் கொள்வது, கணவன், மனைவி பிள்ளைகளைக் கொள்வது போன்ற செய்திகள் தினம் ஒரு திருக்குறள் போன்று வெளிவந்துகொண்டேயிருக்கிறது. சமீபத்தில் என்னை அச்சுறுத்திய செய்தி காதலன் தன காதலியைக் கொன்று அந்தப் புகைப்படத்தை வாட்ஸ் அப் ஸ்டேடசில் வைத்திருந்தான் என்பது.

கொலை செய்யும் அளவிற்கு குடும்பத்தின் வேர்கள் அறுந்து போனதா?இல்லை உயிரின் விலை மலிந்து போனதா?

தக்க காரணங்கள் இருப்பின் பிரிந்து வாழ வேண்டியதுதானே. அதற்குத்தானே விவாகத்தை ரத்து செய்யும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

அதையும் தாண்டி கொலை செய்யும் அளவிற்கு எது மனித மாண்பினை சிதைத்தது? முன்னேற்றம் என்பது ஏற்கனவே இருந்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதாகத்தானே இருக்க வேண்டும். பிரித்துக் கட்டுவதும் ,தூக்கிக் கட்டுவதுமாக இருப்பது எந்தவகையில் முன்னேற்றமாக இருக்க முடியும்?

குடும்பம் என்ற கட்டமைப்பு காலம் காலமாக அன்பினால் கட்டுண்டு கிடப்பது. திருமணம் செய்வது, சந்ததியினை உருவாக்கி  குடும்பம் குட்டி என்று வாழ்வது ஆகியவையே பிறப்பின் நோக்கம் என வாழ்ந்த வாழ்வு தான் தேவை என்று வாதிடவில்லை. ஆனால் அவ்வாறு ஒரு அன்பெனும் புள்ளியில் மையப் பட்டிருந்த அணுக்கள் எப்பொழுது சிதறத் துவங்கின? ஏன் சிதறத் துவங்கின? அப்படித் துவங்கிய பொழுதுதான் உளவியல் சிக்கல்கள் வேர் விடத் துவங்கியனவா?

பெரிய கூட்டுக் குடும்பமாக, பெண்கள் இனப்பெருக்கம் செய்வதும், அடுப்பெரிப்பதும், குடும்பம் குட்டிகளைக் கவனித்துக் கொள்வதும், ஆண்மக்கள் பொருளீட்டுவதும், முக்கிய முடிவுகள் எடுப்பதும், குடும்ப விழாக்களை முன் நின்று நடத்துவதுமே பழக்கமாக இருந்த பொழுது இல்லாத மன அழுத்தம், பொருளாதார சுதந்திரம், தனித் தன்மை, அடையாளம் ஆகியவை மேலோங்கி நிற்கும் இன்றைய நிலையில் அவற்றுடன் இலவச இணைப்பாக வந்து ஒட்டிக் கொண்டதா?

நமது அம்மாவோ, பாட்டியோ, பூட்டியோ கணவனை முழுவதும் பிடித்துப்போய் குறைகளே இல்லாமல் சொகுசு வாழ்வில் இணைந்திருந்தார்கள் என்று யாரேனும் சொல்லி விட முடியுமா?. அப்பா, தாத்தாவுக்கும் அதே நிலை தான். பொருளாதார சுதந்திரம் இல்லாமல் ஆண்களைச் சார்ந்து பெண்களும், சமைக்கவும், வீட்டுவேலை செய்யவும் முடியாமல் (கூடாது என்ற வீராப்பிலும்) பெண்களைச் சார்ந்து ஆண்களும் இருந்ததினால் நிறைய இடங்களில் விட்டுக் கொடுத்தல் சாத்தியமானதாகவும்,நடைமுறையில் ஒன்றாகவும் இருந்தது. குழந்தைகள் பிறந்துவிட்டால் அந்தக் காந்தப் புள்ளியிலாவது குடும்பம் என்னும்  ஊஞ்சல் ஊசலாடிக் கொண்டிருக்கும். அப்பொழுதும் அரிதாக வாழாவெட்டிகள் என்ற பெயரில் சில பெண்கள் தாய் வீடுகளில் வந்து தங்கி மீதிக் காலத்தைக் கழிப்பார்கள்.

இன்று பெண்களும் சம்பாதிக்கின்றனர், ஆண்களும் சமைக்கின்றனர் எனவே  அடிப்படை சார்புத்தன்மை விலகிவிட்டது. அதனுடன் விட்டுக் கொடுத்தாலும் விலகி விட்டது. குழந்தை வளர்ப்பில் இருவருக்கும் பங்கு இருப்பது பாராட்டுதற்கு உரியது. ஆனால் ஒருவருக்கு பொறுப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் இன்னொருவர் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்ற நிலையிலும் நீ செய்யவில்லை நான் மட்டும் ஏன் செய்ய வேண்டும்? என்ற பொறுப்பற்ற விவாதங்களே மேலோங்கி இருக்கின்றன.

அன்று ஒரு ஆணும் பெண்ணும்  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே காதல் என்ற ஒற்றை அடையாளத்தைத் தவிர வேறு வார்த்தைகள் கிடையாது. ஆனால் இன்று infatuation, crush, casual partner, serious partner, open partner, date mate, live in partner   இத்தனை படிநிலைகளையும் கடந்து அந்த அன்பு நீடிக்குமேயானால் தான் காதல், திருமணம் என்ற பந்தமெல்லாம்.

அதற்குள்  எத்தனை சந்தேகங்கள்,நிரூபணங்கள்,உறவுகள்,முறிவுகள்?

உறவுகளையும், முறிவுகளையும் பார்த்துப் பார்த்துப் பழகி விடுவதால் திருமண பந்தம் முறிவதிலும் பெரும் போராட்டமோ,பாதிப்போ இருப்பதில்லை.

சில ஆண்களுக்கோ பெண்கள் தன்னைவிட திறமைசாளிகளாக இருந்து விட்டால் தன்னை மதிக்காமல் போய்விடுவார்கள் என்ற பயம். பல பெண்களுக்கோ வேலைக்கு செல்வதாலும் பொருள் ஈட்டுவதாலும்  சுதந்திரம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் எடுத்துக் கொண்டு வடிவம் கொடுப்பதென்ற குழப்பம். நினைத்தபடி ஆடைகள் அணிவதும், மது அருந்துவதும், நினைத்ததைப் பேசுவதும் மட்டுமே சுதந்திரம் என்ற தவறான புரிதல். இவர்களுக்கு இடையில் தள்ளாடுவது குழந்தைகள் தான்.

பெற்றோர்களின் வெறுப்பையும், தான் என்னும் அகங்காரத்தையும் பார்த்து வளரும் குழந்தைகள் இரண்டையும் இணைத்து ஹைப்ரிட்டான ஒரு கதாப் பாத்திரத்தில் வளர்கிறார்கள்.

வயது வித்தியாசம் இல்லாமல் 6 முதல் 100 வயது வரை அனைவரும் சகஜமாக உபயோக்கிக்கும் வார்த்தைகள் depression, stress, anxiety  and suicidal thoughts.  பெரும்பாலான குடும்பங்களில் யாராவது ஒருவர் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை, நான் தேவை இல்லை, நான் போனால் தான் என் அருமை புரியும், நான் போனால் இங்கு யாருக்கும் கவலை இல்லை போன்ற வார்த்தைகளை குட் மார்னிங், குட் நைட் போன்று உபயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆரம்பத்தில் பிறருக்குப் பதட்டத்தைத் தரும் இதுபோன்ற  வார்த்தைகள் பின்னர் பழகி விடுகிறது. அவர்கள் சகஜமாக எடுக்க ஆரம்பித்தவுடன் அந்த நபர் அழுகை, ஆர்ப்பாட்டம் போன்ற வேறு வேறு ஆயுதங்களை பிரயோகிக்க ஆரம்பிக்கிறார். அது தீவிரமான உளவியல் சிக்கல் மற்றும் சீழ் வடியும் காயமாக மாறி விடுகிறது. ஒரு எதிர்பாராத தருணத்தில் தற்கொலை என்ற அவசர முடிவுக்கு இழுத்துச் செல்கிறது.  

உடம்புப் பிரச்சினையை வெளியில் சொல்லும் அளவிற்கு உளவியல் பிரச்சினையை சொல்ல முடிவதில்லை. உடல் சிக்கலுக்கு உலகத்தின் எந்த மூலையிலும் சென்று எவ்வளவு செலவு செய்தும் வைத்தியம் பார்க்கத் தயாராக இருக்கும் நாம் உளவியல் பிரச்சினையை வெளியில் தெரியாமல் இருக்க பல வேடங்கள் அணிந்து நாடகம் ஆடுகிறோம். அதுவும் சுமை என்று தெரிந்தே.

வாழ்க்கைத் துணை  மீதான கோபமென்றால் அவன்/ அவள்  வழி வந்த உறவுகள், ஏன் பல சமயங்களில் அவர்களால் வந்த குழந்தை என்று பெற்ற பிள்ளைகளிடம் வெறுப்பை உமிழும் பெற்றோர்களும் உண்டு. பெற்ற குழந்தை மீது வெறுப்பு வந்தவுடன் பிறரை அவர்கள் கொண்டாட வேண்டுமென்றா எதிர் பார்க்க முடியும்?

வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கல்களும், முடிச்சுக்களும் கொண்ட சாமி சடை ஆகிவிட்டது. திண்ணை வீடும், கட்டுத்தறியும், காடு கழனியும், விவசாயமும் ஆக வாழ்ந்த பொழுது வாழ்க்கை எளிதாகத்தானே இருந்தது. வாழ்க்கையை எளிதாக்க வந்த அறிவியலும் விஞ்ஞானமும் நமது பண்பாட்டின் வேர்களையும், கலாச்சாரத்தின் விழுதுகளையும் விழுங்கி விட்டனவா?

எதை விற்று எதை வாங்கினோம் ?

  

 

1 comment:

  1. சாயமிசடை_நல்ல உதாரணம்.
    ஏன் வந்ததுன்னு தெரியாது. சிக்கெடுக்கவும் முடியாது.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...