பெரும்பான்மை இடங்களுக்கு இன்று பயணிக்கும் பொழுது, பதின் பருவ வயதில் உள்ள பெற்றோர்களின் உரையாடல்களை மிக உன்னிப்பாக கவனிக்கிறேன். அதிலும் பத்தாவது மற்றும் 12வது படிக்கும் பெற்றோர்களின் உரையாடல்கள் கவனிக்கத்தக்கதாய் இருக்கிறது.
இந்த வருடம் பையன் பத்தாவது படிக்கிறான். அதனால் வீட்டில் கேபிள் டிவி கட் செய்து விட்டோம்.
பத்தாவதுல நல்ல மார்க் எடுக்கணும்ல .அதனால அவன விளையாடறதுக்கு கூட நான் வெளிய அனுப்புறதே இல்ல.
ஐயோ ..பத்தாவது புடிக்கிறான்.. கல்யாணம் காட்சி அப்படின்னு வெளிய வந்தா அவன் படிப்பு என்னாவது?
என் பையன் பள்ளிக்கூடம் முடிச்சு வீட்டுக்கு வந்ததும் ,அறிவியலுக்கு ஒரு டியூஷன், கணக்குக்கு ஒரு டியூஷன் ..இதெல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து டைம் டேபிள் போட்டு படிக்க வைத்து விடுவேன். காலையில் எந்திரிச்சு நேரமா படிச்சா நல்ல ஞாபகத்தில் இருக்குன்னு நாலு மணிக்கே எழுப்பி விட்டுடுவேன்.
எங்கு பார்த்தாலும் பத்தாவது, 12 வது என்ற இந்த குரல்கள் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது. போருக்கு ஒப்பானது போல பிள்ளைகளை பத்தாவது பொதுத் தேர்வுக்கும், 12 வது பொதுத்தேர்வுக்கும் பெற்றோர்கள் தயார்படுத்தும் காட்சி இருக்கிறது.
பள்ளிகளோ, பத்தாவது படிக்கும் பிள்ளைகளை விளையாட அனுமதிப்பதில்லை. இயந்திரங்களுக்கே ஓய்வு தேவைப்படும் பொழுது, உயிரும் உணர்வும் நிரம்பியுள்ள குழந்தைகளுக்கு ஓய்வு தேவை படாதா? விளையாட்டு என்பதும் ஒருவகை கற்றல் தானே.. ஓடியாடி விளையாடும் பொழுது தான் அவனுடைய சிந்தனை திறன் ஒருமுகப்படுத்தப்பட்டு குழந்தைகள் உற்சாகமாக கற்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் பெரும்பான்மை பள்ளிகளில் விளையாட்டு பாட வேலைகள், ஏதாவது ஒரு ஆசிரியரால் அவருடைய பாடத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் குழந்தைகளுக்கு பள்ளியில் நடைபெறும் எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுவதில்லை. படிப்பில் கவனம் போய்விடுமாம்.. எல்லா நேரமும் படி, படி, படி... தேர்வு எழுது ..என்று கடிவாளம் இட்ட குதிரைகளாக மட்டுமே அவர்களை நடத்துகிறார்கள்.
இன்னும் தனியார் பள்ளிகளிலோ, ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாவது பாடத்தை நடத்துகிறார்கள். இரண்டு வருட காலம் ஒரு பொதுத் தேர்வுக்கு தயாராகி அனைவரையுமே 450 மதிப்பெண்களுக்கு மேல பெறவைத்து எங்கள் பள்ளி 100% தேர்ச்சி. பெரும்பான்மை மாணவர்கள் 450 மதி பெண்களுக்கு மேலே பெற்று இருக்கிறார்கள் என்று அவர்கள் பள்ளிக்கான விளம்பரங்களைத் தேடிக் கொள்கிறார்கள்.
ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்பு பாடத்தை படிப்பது என்றால் ஒன்பதாம் வகுப்பு பாடத்தை அந்த குழந்தைகள் எப்போது படிப்பார்கள்? இதைப் பெற்றோராக நாம் பள்ளிகளில் எதிர்த்து கேட்டிருக்கிறோமா?
தனியார் பள்ளிகளில் கேட்டால் பெற்றோர்கள் தான் , அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாவது பாடத்தை எடுக்கிறார்கள்.. நீங்கள் ஏன் எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்.
பத்தாவது, பன்னிரண்டாவது படிக்கும் குழந்தைகளின் முகத்தை பார்த்தால் அத்தனை சந்தோஷத்தையும் பறி கொடுத்துவிட்டு நடைபிணம் போல் பெரும்பாலான குழந்தைகள் இருப்பதை பார்க்கிறோம். அந்தக் குழந்தைகளை பார்க்கும் பொழுது மிக வருத்தமாகவே இருக்கிறது. குழந்தைகளின் இயல்பே மகிழ்வு தானே அது மறுக்கப்பட்ட குழந்தைகள் இவர்கள். இது எத்துணை கொடுமை.
இதே காட்சி நாம் பத்தாவது பொதுத் தேர்வு எழுதும் போது இருந்ததா? என்று யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும் இல்லை என்ற பதில் தான் நம்மிடம் இருந்து வரும்.
ஏன் நம் பிள்ளைகளுக்கு மட்டும் படிப்பு விஷயத்தில் இத்தனைக் கெடுபிடி?
இந்தச் சமுதாயத்தில் கல்வி என்பது எவ்வாறு பார்க்கப்படுகிறது?
எதற்காகப் படிக்க வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையைத் தேடினால் கிடைக்கும் பதில்.. கல்வி இன்று வெறும் முதலீடாக மட்டுமே பார்க்கப்படுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதனால் தான் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் சக்திக்கு மீறி கடன் வாங்கியாவது, மிகப்பெரிய பள்ளிகளில் படிக்க வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நான் கஷ்டப்பட்டேன். எம் பிள்ளை நல்ல படிச்சு, நல்ல வேலைக்கு போயி அவன் சுகமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று சில பெற்றோர்கள் கேட்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. பொருளாதாரத்திலோ , சமூக அந்தஸ்திலோ கீழாக உள்ளவர்களை உயர்த்தும் சக்தி என்றால் அது கல்வி மட்டும் தான் என்பது நிதர்சனமான ஒன்று.
ஆனால் உண்மையிலேயே கல்வி என்பது எதற்காக? ஒரு மனிதனை மாண்புடையவனாக மாற்றுவதற்கு தானே கல்வி. ஆனால் உண்மையிலேயே இன்று இருக்கக்கூடிய கல்வி மாணாக்கனை மாண்புடையவனாக மாற்றுகிறதா? வெறும் மனனம் செய்யும் இயந்திரங்களாக, பணத்தை சம்பாதிக்க கூடிய இயந்திரங்களாக மாற்றிக்கொண்டு இருக்கிறது.
அதிகமான நுகர்வோர் கலாச்சாரத்தில் ஒன்றர கலந்துவிட்ட நமக்கும் அதிக பொருளாதாரம் என்பது மிகத் தேவையாகவே இருக்கிறது. அதன் பயனாகத்தான் இன்று கல்வி என்பது ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. கல்வியின் மீதான அத்தனை அழுத்தங்களும் குழந்தைகளின் மீது சுமத்தப்படுகிறது. அதனால் இள வயதிலேயே குழந்தைகள் நிறைய மன அழுத்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதை களைந்து நம் குழந்தைகளை மகிழ்வானவர்களாக மாற்ற வேண்டியது நம் கடமை அல்லவா?..
வீடு பள்ளிக்கூடம் சமூகம் இந்த மூன்றுமே குழந்தைகளை பொருள் ஈட்ட மட்டுமே கற்பிக்கிறோம். அதற்கான நிர்ப்பந்தங்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறோம். கல்வியைத் தாண்டி அவர்கள் கவனம் திசை திரும்பி விடாத படி கடிவாளங்கள் அவர்களுக்கு போடப்படுகிறது. வெறும் ஏட்டு கல்வியை மட்டும் வாழ்க்கையின் ஒரு பகுதி அவர்களை கற்க செய்து விட்டு, பின் பகுதி வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்சனையை கூட சமாளிக்க முடியாத படி மாற்றுவதில் நமக்கும் பெரும் பங்கு இருக்கிறது.
'பள்ளியில் படிப்பதெல்லாம் மறந்து போன பின்னர் எது உங்களிடம் மிஞ்சி இருக்கிறதோ அதுதான் கல்வி' என்கிறார்விஞ்ஞானி ஐன்ஸ்டீன். எனவே பாட புத்தகங்களை தாண்டி வாழ்க்கையில் நிறைய நிறைய அனுபவங்களை நம் குழந்தைகளுக்கு உரித்தாகுவோம்.
கல்வி என்பது குழந்தைகளுக்கு சுகமானதாகவும் , அவர்கள் வாழ்க்கையில் நடத்தையில் மேன்மையடைய உதவுவதாகவும் இருக்க வேண்டும். ஆனால் கல்வியில் தரும் அழுத்தங்கள் மாணவர்களை மன அழுத்தத்தில் தள்ளி தற்கொலை வரை இழுத்துச் சென்று விடுகிறது.
அதைத் தவிர்க்க...
- நம்முடைய அந்தஸ்தை காட்டுவதற்கான பள்ளியை தேர்ந்தெடுப்பதை விட , எந்த பள்ளியில் நம் குழந்தை மகிழ்வாக இருப்பான் என்பதை பகுத்தாய்ந்து குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்.
- மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்களே. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு. நம் குழந்தையின் திறமையை கண்டு பிடித்து அதை ஊக்கப்படுத்துங்கள் கண்டிப்பாக அவர்கள் விரும்பிய துறையில் அவர்கள் உச்சம் அடைவார்கள்.
- காலை எழுந்தவுடன் படிப்பு : பின்பு மாலை முழுவதும் விளையாட்டு என்ற பாரதியின் கூற்றை போல, பள்ளி விட்டு வந்ததும் குழந்தைகளை சற்றே விளையாட அனுமதியுங்கள்.
- நம் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்.
இப்படி இருந்தாலே கல்வியில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் குறைந்து அவர்கள் கல்வியை வெகு மகிழ்வாக எதிர்கொள்வார்கள்.
கல்வி சார்ந்த நிறைய உரையாடல்கள் இன்னும் இன்னும் நிகழ்த்தப்பட வேண்டும். கல்வியிலும் கல்வி சார்ந்த நமக்கு இருக்கக்கூடிய புரிதல்களும் மாறாதவரை சமூக மாற்றம் ஏற்படாது.
தொடர்ந்து பேசுவோம்...

சிறப்பு பூ
ReplyDeleteமிகச் சிறப்பு. பெற்றோர்கள் மாறினால் குழந்தைகள் உலகம் மாறும்
ReplyDeleteஅற்புதமான பார்வை . பெற்றோர்கள் அறிந்து செயல்படவேண்டிய விஷயத்தை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDelete