காலஞ்சென்ற நம் முன்னாள் முதல் துணைக்குடியரசுத் தலைவரும், தத்துவயியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், 17 சர்வதேசப் பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவருமான மாண்புமிகு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளே அவர்தம் விருப்பப்படி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. நகைமுரணான விடயம் என்னவென்றால் எவரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றனவோ, அவர் ஒரு காலத்திலும் பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்ததில்லை. பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்தான் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அப்படியிருக்க இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த அல்லது செய்து வரும் எந்த அரசும் இந்த விடயத்தை நினைவில் கொள்ளவில்லை. மத்திய அரசின் பாணியை ஏறக்குறைய கடைபிடிக்கும் மாநில அரசுகளும் இதுகாறும் இதனைக் கூர்ந்து நோக்கியதில்லை என்பது மேலும் வருத்தத்திற்குரிய விடயம்.
ஆசிரியர் பணி என்பது ஒரு சாதாரண விடயமல்ல. ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் பதினொன்றாம் வகுப்புக்கு செல்ல தயார்படுத்திக் கொள்கிறான் ; ஒரு 12-ம் வகுப்பு மாணவன் தன்னை கல்லூரிக்குள் நுழைவதற்கு ஆயத்தப்படுத்திக் கொள்கிறார். இது இப்படியாக இருக்க உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக்கல்வி பள்ளிகளில் பணிபுரியக் கூடிய ஆசிரியர்கள் அவர்களுக்கு அந்தந்த பாடங்களை அர்ப்பணிப்பு உணர்வோடு போதித்து, அடிப்படை ஞானத்தையும், ஒழுங்கையும் கடைபிடிக்கக் கற்றுக் கொடுக்கின்றனர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
ஆனால் ஒரு மாணவன் கல்லூரிக்குள் நுழைந்தவுடன் அது தொழில்நுட்பக் கல்லூரியாகவோ, பொறியியல் கல்லூரியாகவோ, மருத்துவக் கல்லூரியாகவோ அல்லது கலை அறிவியல் கல்லூரியாகவோ இருக்கலாம். இங்கிருந்துதான் அந்த மாணவனின் வாழ்க்கைக்கான பயணம் ஆரம்பமாகிறது. அவனை வெளி உலக வாழ்க்கைக்கு தயார்படுத்துவது உயர் கல்வியின் நோக்கம். இதற்குப் பிறகு மேற்படிப்புக்காக, வேலைக்காக அல்லது தொழிலுக்காக என வெளியுலகை நோக்கிய அவனது பயணம் தொடங்குகிறது. இதுவரை ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மொத்தம் 12 வருடங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு ஆகிய இரு வருடங்களில் மட்டுமே பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவன் கல்லூரியில் வருடந்தோறும் இருமுறை பொதுத்தேர்வு எழுத வேண்டி வரும். அடுத்ததாக பள்ளிக்கூடங்களில் குழந்தைக்கு உணவை ஊட்டுவது போல சொல்லிக்கொடுத்த கட்டமைப்பிலிருந்து அவனை மீட்டெடுத்து தானாக கற்கக்கூடிய ஒரு கட்டமைப்பிற்குள் அவனை தகவமைக்க வேண்டிய பணியுடன் தொடங்குகிறது கல்லூரிப் பேராசிரியரின் பணி.
பள்ளிக்காலம் முழுவதும் பெற்றோர், ஆசிரியர்களின் வலியுறுத்தலின் பெயரில் ஒரு கட்டாயத்திற்கு உட்பட்டு கல்வியைக் கற்காமல், மனப்பாடம் செய்து எழுதி, அறிவைப் பெருக்காமல் மதிப்பெண்களை மட்டும் எடுத்து வந்துள்ள மாணாக்கர்களுக்கு, முதலில் கல்வி என்றால் அறிவைப் பெறுவது என்ற புரிதலை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. இதன் நடுவே பள்ளிப்படிப்பு வரை கல்வி நிலையம் குறித்த ஒரு இறுக்கத்திற்கும், கட்டாயத்திற்கும் ஆளான மாணவன் கல்லூரியில் சிறகடித்துப் பறக்க விரும்புகிறான். எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்க விரும்புவதில்லை. கல்லூரி காலகட்டத்தில் பெற்றோர்களும் அவ்வளவு கண்டிப்பாக இருப்பதில்லை. உடை, உணவு, நண்பர்கள் என பல விடயங்களிலும் அவன் புதிய சூழல்களை எதிர்கொள்கிறான். நல்லது, கெட்டது பிரித்துப் பார்க்கக்கூடிய இடத்தில் இருப்பதில்லை. பதின்ம வயதின் இறுதிக்கட்டத்தில் தன்னை ஒரு கதாநாயகன் அல்லது கதாநாயகியாக நினைத்துக்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றனர்.
10- 20 சதவிகிதம் பேர், மெல்ல மெல்ல சிற்சில தீய பழக்கங்களுக்கும் ஆளாகிறார்கள். ஒரு தாயின் அன்போடும் கனிவோடும், தந்தையின் கண்டிப்போடும் அரவணைப்போடும், நண்பனைப் போன்ற சினேகத்தோடும் ஒரு பேராசிரியர் அவனை அணுக வேண்டியுள்ளது. அவனது ஆழ்மனப் பிரச்சினைகளை, சிக்கல்களை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு அவனுக்குத் தேவையான ஆலோசனைகளை சொல்லி அவனை நெறிப்படுத்தி தேவைப்பட்டால் மனநல ஆலோசனைக்கும் வழி வகுக்கிறார். மேலும், அவனுக்குள் இருக்கக்கூடிய திறமைகளை மீட்டெடுத்து, அவனை சுய தேடலுக்கு உட்படுத்தி, அவனை ஒரு நல்ல குடிமகனாக நாட்டுக்கு தர வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு பேராசிரியர்களிடம் உள்ளது.
கல்லூரிப் பாடங்கள் மட்டும் நடத்துவதோடு அல்லாமல் மாணவர்தம் பண்புநலன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விதமான போட்டிகளில் பங்குபெற அவர்களை ஊக்குவிப்பது, ஆயத்தப்படுத்துவது அதற்குத் தேவையான உதவிகளை வழங்குவது, தோல்வியுறும் போது தட்டிக் கொடுப்பது, வெற்றி பெறும்போது அடுத்த நிலைக்கு தயார்படுத்துவது என அவனை உலக வாழ்க்கைக்கு, புற வாழ்க்கைக்கு தயார்படுத்தும் முதன்மையான பணியை செய்து வருபவர்கள் பேராசிரியர்கள்.
ஒவ்வொரு வருடமும் 10 - 14 பாடங்கள் வரை ஒரு மாணவன் தேர்வு எழுத வேண்டி வருகிறது. அதற்குமுன் சிறிய அளவில் அவனுக்கான தேர்வுகள் நடத்தப்படும். அதற்கான தயார்படுத்துவதிலிருந்து, ஒரு பேராசிரியரின் விரிவுரையில் இருந்து எவ்வாறு குறிப்பு எடுக்க வேண்டும், அந்தக் குறிப்புகளை எவ்வாறு விரிவாக எழுத வேண்டும், இது தவிர பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட விடயங்களை மற்ற பார்வை நூல்களிலிருந்து எவ்விதம் அவன் படிக்க வேண்டும், எந்த அளவுக்கு நூலகத்தை அவன் பயன்படுத்த வேண்டும், அதற்கு அவனுக்கு மொழி எந்தளவு உறுதுணையாக உள்ளது, நேர மேலாண்மை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என இன்ன பிற பல விஷயங்களை அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் மாபெரும் கடமை பேராசிரியருக்குள்ளது.
கற்றுக் கொடுத்ததோடு நிற்காமல் தான் கற்றவற்றை அடுத்தவர் முன் பகிர கருத்தரங்கு, கலந்துரையாடல் போன்றவை வகுப்பறையில் வடிவமைக்கப்படுகின்றன. ஒரு மாணவன் 40 - 60 பேர் உள்ள தனது வகுப்பறையில் அனைவர் முன்னிலும் தனது கருத்தைப் பகிரத் தொடங்கிவிட்டால் பிறகு என்றும் அவனுக்கு எந்த மேடையிலும் பயம் என்பது இருக்காது. அதற்கான முன்னெடுப்பு தான் இவை அனைத்தும். அதைப்போல் அனுதினமும் கல்லூரியின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளிலிருந்து வரும் சுற்றறிக்கைகள், பிற கல்லூரிகளிலிருந்து வரும் போட்டி மற்றும் கருத்தரங்கு சார்ந்த அழைப்பிதழ்களை அறிந்து கொண்டு அவற்றில் பங்கேற்பதன் மூலம் அவன் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள, வார்த்தெடுத்துக்கொள்ள, வளர்த்துக் கொள்ள அவை ஒரு வாய்ப்பாக அமையும். எனவே அவற்றைத் தொடர்ந்து உற்றுநோக்கி தனக்கேற்ற ஒரு வாய்ப்பு வரும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் அவனை வலியுறுத்துகிறார்கள். அதன்மூலம் அவனது திறமையை அறிவை வெளிக்கொண்டுவர விசாலப்படுத்திக் கொள்ள அவனுக்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது.
இவ்விதமாய், சிற்பி ஒரு சிலையை செதுக்குவது போல, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் காலெடுத்து வைக்கும் மாணவனை மெதுமெதுவாக மாற்றி, நெறிப்படுத்தி, இறுதியாண்டு முடிப்பதற்குள் அவனை ஒரு சிறந்த குடிமகனாக நாட்டுக்குக் கொடுப்பதில் பேராசிரியர்களின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அப்படிப்பட்ட பேராசிரியர்கள், நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.
கலைத்துறையில் கலைஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். நாட்டின் உயர்ந்த விருதுகள் பத்மஸ்ரீ , பத்மபூஷண், பத்மவிபூஷண் மூலம் பலதுறைப் பெருமக்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். அறிவியல் துறை மூலம் விஞ்ஞானிகள் கௌரவிக்கப்படுகிறார்கள். விளையாட்டுத் துறையில் கூட துரோணாச்சாரியார் விருது வழங்கப்படுகிறது. ஆனால் இவர்கள் அனைவரையும் உருவாக்கக்கூடிய ஏணிகளாக இருக்கக்கூடிய கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எப்படி இதுபோன்ற விருதுகளில் இருந்து முழுமையாக புறம் தள்ளப்படுகிறார்கள் என்பது புரியவில்லை.
ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயமும், கல்வியும், மருத்துவமும். அப்படியிருக்க மூன்றில் ஒன்றான கல்வித்துறையில், உயர்கல்வியை கற்றுத்தரும் பேராசிரியர்களை ஒதுக்குவது சரியான அணுகுமுறை அல்ல. வரும் ஆண்டுகளில் ஆசிரியர் தினத்தில், அரசின் பார்வை மாறி, உயர்கல்வித் துறைக்கென நல்லாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நிச்சயம் சிந்திக்க வேண்டிய கேள்வி.
ReplyDeleteஉங்கள் ஆதங்கம் புரிகிறது . வரும் காலங்களில் அரசுகள் இதை முன்னெடுக்க வேண்டும் .
ReplyDelete