Saturday, July 1, 2023

பிறப்பென்ற பெருவரம் ------ யசோதா பழனிச்சாமி






இரத்தத்  துளியை  மருத்துவப் பரிசோதனைக்காக கொடுத்துவிட்டு வந்த  கல்யாணி,  மருத்துவமனை   வரவேற்பறையில்  வந்து அமர்ந்து கொண்டாள்இந்த முறையாவது டாக்டர் நல்ல செய்தியை சொல்ல       வேண்டும் என்று   வேண்டிக் கொண்டேயிருந்தாள்.

“ டாக்டரைப் பார்த்தாச்சா?” என்று கேட்டவாறே உள்ளே வந்த அவளின் கணவனிடம், "இல்லைங்க, டெஸ்ட்க்கு கொடுத்த ரிப்போர்ட் இன்னும் வரல, வந்த பின்னாடி தான் டாக்டரை  பார்க்கணும்." என்றதும் அவனும் அவளருகில் அமர்ந்து கொண்டான்.

மருத்துவமனையின் வரவேற்பறையில்  நோயாளிகள் எண்ணிக்கை விட, கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.  அவர்களின்  முகத்தில் தெரிந்த தாய்மையின் பூரிப்பையும்
பெருமிதத்தையும்   பார்த்த கல்யாணி‌யின் மனம்  ஏங்கியது. திருமண முடிந்த இந்த மூன்று  வருஷத்தில்,
எத்தனை ஏச்சு பேச்சுக்கள், அவமதிப்புகல்யாணம் ஆகிவிட்டால் உடனே குழந்தை வந்திடணும் நினைக்கறாங்க இதென்ன மந்திரத்தில் செய்யற மாய மாங்காயா என்ன? கல்யாணி தன் நிலையை அசை போட ஆரம்பித்தாள்.

'கல்யாணமாகி இதோ அதோனு மூணு வருஷமாச்சு எங்கே ஒத்தப் புள்ளைக்கு வழியைக் காணோமே'!என்  வீட்டுக்கு வரும் உறவுகளிடம் புலம்பித் தீர்க்கும் மாமியார், ஒரு நாள் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல பட்டுப் புடவையைக்  கட்டிக் கொண்ட கல்யாணி அறையை விட்டு   வெளியே வரும் போது, வீட்டின் வரவேற்பறையில் தொலைக்காட்சி சீரியல் பார்த்துக் கொண்டு இருந்தார். இவளுக்கெல்லாம் குழந்தை இல்லையேனு ஒரு துளி கவலை இருக்கா? இப்படி மினிக்கிட்டுத் 
திரியுறாளுக'  என தொலைக்காட்சியைப் பார்த்து பேசுவது போல்  சாடை பேசினார். அடுத்தவரின் 
மனதை காயப்படுத்துகிறோம்  என்ற எண்ணம் துளியும்  இல்லாமல் முகத்துக்கு நேரே,  மாமியார் பேசுவதைக் கேட்டதும் கல்யாணிக்கு அடிவயிற்றில் பெரும் பிரளயம் ஏற்பட்ட அந்த நொடியில்  
கண்களிலிருந்து வரும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியாமல், அழுகையையும் அடக்க முடியாமல் அவர் முன் அழுதுவிடக் கூடாது என,  குளியலறைக்கு ஓடிச்சென்று  குழாயில்  தண்ணீரை வேகமாக  
திறந்து விட்டு 'ஓ' வென வாய்விட்டுக் கதறி அழுதாள். அழுததில் முகம் பாலூன் போல் உப்பிப் போனது. திருமண நிகழ்ச்சிக்கு செல்லாமல் கட்டிய பட்டுப் புடவையோடு படுக்கையில்  படுத்து முடங்கிப் போனாள்.  "கல்யாணி அம்மா எப்பவும் இப்படித்தானே! உனக்கு இதொன்றும் புதுசில்லையே"! எனக் கணவன் சொன்னதைக் கேட்டதும், 'அதேம்மா உங்களைப் பார்த்து பேசலாமே?' என வாய்வரை வந்த வார்த்தையை அடக்கிக் கொண்டாள். அவன் எவ்வளவோ சமாதனப்படுத்தியும் சமாதானமாக முடியாமல் பல நாட்கள் மருகிக் கிடந்தாள். 

கடந்த இரண்டு வருடங்களாக எங்கெல்லாம் குழந்தைப் பேறுக்கு  வைத்தியம் பார்க்கலானு 
சொல்கிறார்களோ   அங்கெல்லாம் போய்  கொண்டு தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும்
சரியா இருபத்தியெட்டு நாளில்  மாத விலக்கு வந்து விடும்.  இரண்டு  நாட்கள்  தள்ளிப் போனால்மனதை நிறைக்கும் அளவில்   கற்பனை சிறகு விரிந்து குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பாலூட்டுவதாக கற்பனை செய்து பறக்க ஆரம்பித்து விடுவாள். ஒவ்வொரு முறையும்  பாத்ரூம் போகும் போதெல்லாம்,  யூரினோடு கலந்து உதிரம் வந்து  விடுமோ என்ற பயமே அவளை நிறைத்து இருக்கும். நாட்காட்டியில்  கிழிக்கப்படும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக நகர்ந்து, ஒரு வழியாக நாற்பது நாட்களை  கடந்து,  கரு உருவாகி இருக்கும் என்ற நம்பிக்கையில்  மனம்   மிதக்க  ஆரம்பிக்கும். மருந்துக்கடைகளில்  கிடைக்கும்  ப்ரகென்சி கார்டை கணவனிடம் வாங்கி வரச் சொல்லும்போதே,   அவள் மனசுக்குள் குழந்தையின் வாசம் வீசத்  தொடங்க ஆரம்பித்து விடும்

அதிகாலையில் எழுந்ததும்  வரும் முதல் யூரினைப் பிடித்து,  இரண்டு சொட்டு ப்ரகென்சி   கார்டில் விட்டு விட்டு  பயத்துடன் ஊரிலிருக்கும்  எல்லாச் சாமிக்கும் வேண்டுதல் வைத்துக் காத்திருக்கும் 
அந்த நொடியில் அவளுக்கு  பிபி ஏறி இருக்கும்கண்களை இறுக்க மூடிக் கொண்டு கார்டை  பார்க்கத்   திறனில்லாமல்ரிசல்ட்டை கணவனைப் பார்க்கச் சொல்லுவாள்.   அவனுக்கும் வேர்த்துப்  போகும்.   பார்த்து விட்டு எதுவும்  பேசாமல், குழந்தையைப் போல்  அவளை வாரி அணைத்து, 'இன்னும்  கடவுள் 
நமக்கு  கருணை காட்டல மனச  தளர விடாதே கல்யாணி சிவப்பு காட்டுது' என   கமறலாக வரும்  அவன்  குரலைக்   கேட்கும்போது, மழை வரும் என்று  மயில் தன்   தோகையை விரித்தாட நினைக்கும் போது, மயிலின் தோகைகள் முழுவதும் ஒடிந்து விழுந்து விட்டால்,  தன் குதுகலத்தை கொண்டாட முடியாமல்  தவிக்குமே அந்த  மயிலின் மனநிலையில் அவளின் மனச் சிறகு ஒடிந்து விழவலி 
தாங்கயிலாது வாய்விட்டுக்  கதறுவதை தவிர அந்த  நேரத்துல அவளால்  வேறு எதுவும் செய்ய இயலாது.
ஒவ்வொரு மாதமும் இப்படி வேதனையை அனுபவித்துஅனுபவித்து அவர்கள் முகத்தில் புன்னகை என்பதே மறந்து போக ஆரம்பித்தது..

 “ஏங்கண்ணுஉனக்குபொறவு கல்யாணம் ஆனதுக்கெல்லாம்  குழந்தை பொறந்துடுச்சுநீங்க எங்காவது டாக்டர்கிட்ட பார்க்கறீங்களா.?" முகத்துக்கு நேரே இங்கிதம் இல்லாமல் பேசிநம்மீது  அதிக அக்கறை       உள்ளவர்கள் போல், அவர்களைக் காட்டிக் கொள்ள அப்படி என்ன தான் ப்ரியம் இருக்குமோ தெரியாது
கல்யாணி, ஒரு நாள் தன் தோழி  சிந்துவை  சந்தித்த போது,  அவள், " உனக்கு கிடைச்ச புருஷனாட்டம் 
எனக்கு வாய்க்கலடிஒரு  வருக்ஷம் குழந்தை இல்லாமல்  போனதுக்கே அவரும்அவரு அம்மாவும்  சேர்ந்துஎன்னை படுத்தி எடுத்துட்டாங்க தெரியுமாஆஸ்பத்திரிக்கு  போனாலும்  என்னைத் தான்  டெஸ்ட்         எடுக்கச் சொல்லுவாங்கஇவரு டெஸ்ட் எடுக்க மாட்டார்.  காரணம்  அவருகிட்ட  ஏதாவது குறை                        இருந்துட்டா  என்ன செய்யறதுனு அவருக்குள்ளே  இருக்கிற பயம்.  டாக்டர் கொடுக்கற மெடிசன் எடுத்துட்டு,  இந்த  நாளில் இரண்டு பேரும் சேர்ந்து இருங்கனு டாக்டர்  சொல்லற அன்னைக்குத்தான்  
எங்களுக்குள் சண்டை வந்திருக்கும். டாக்டர் சொல்லியிருக்காரே, என மன இறுக்கத்தோடு 
இயந்திரத்தனமாக இணைந்த  நாட்கள் தான் அதிகம்.. கணவன் மனைவி உறவு என்பது உடல்பசிக்கும்,     பிள்ளை  பெறுவதுக்கும் தான் என்ற எண்ணம் தான்  அவருக்குள்ளே  இருந்ததுஎனக்குள்ளும் ஒரு மனசு இருக்கு அதில  பல  கனவு இருக்கும் என்பதை எல்லாம்   புரிந்து கொள்ள அவர்  முயற்சிக்கவேயில்லைடி.
அன்பாக பேசவோஅவருடைய விஷயங்களை எங்கிட்ட பகிர்ந்து கொள்ளவோ கூடத் தோணாதுஎனக்கு என்ன நல்ல நேரமோதெரியலடி எப்படியோ கரு உருவாகி வளர்ந்து புள்ளையும் பெத்தாச்சுஎன் சுயத்தை  மறந்து  வாழ்க்கையை அவன் போக்கில்  வாழப்பழகிட்டேன்.இப்ப  பிரச்சினை இல்லாம  போவுது.         உன்னுடைய புருஷன்  இந்த தாங்கு  தாங்கும்  போது  வேற  யாரைப்பற்றியும்  நினைக்காதேஅதெல்லாம் நேரம்  வரும்   போது  தானாகவே  இருக்கும் . ஹாஸ்பிட்டல் போய் அந்த ஊசி இந்த ஊசியைப் போட்டு    உடம்பை  கெடுத்துக்காதேஇன்னைக்கு  இருக்கும் மாறுபட்டசமூக சூழல்உணவு சூழலில் கரு உண்டாவது எல்லாம்  இயற்கையாகவே  தாமதமாத்தான்  இருக்குஅதனால மனசப் போட்டு குழப்பிக்காதே"  என்று ஆறுதலாக பேசிய அவளுடைய பேச்சு கல்யாணி  மனதில் இருக்கும் காயத்திற்கு  மயிலிறகால்   
வருடுவது  போல் இதமாக இருந்தது

“ கண்ணான கண்ணே” என அலைபேசி பாட ஆரம்பித்தது. தன் நினைவிலிருந்து திடுக்கிட்டு   விழித்தாள். அவள்  கணவனின்  அலைபேசி தான் பாடியது. அவன் அலைபேசியை காதில் வைத்தபடியே   நகர, கல்யாணி மருத்துவமனையில் தன்னருகில்  இருந்த  பெண்களை வாஞ்சையுடன்  கவனிக்க  
ஆரம்பித்தாள்.

 அவளுக்கு  இரண்டு  நாற்காலி  தள்ளி  இருந்த  அந்தப் பெண் தன் வயிற்றை கைகளால் தழுவிக்                         கொண்டும்வயிற்றை வருடியபடி அமர்ந்து இருந்தாள்அவளின்  முகத்தில்  தாய்மைக்கான எந்த          பூரிப்பும்மகிழ்வு இல்லாமல் ஏதோ ஒன்றை  இழந்தது  போன்ற  வெறுமையை அவள் முகம்  காட்டியது.
அங்கே இருந்த  மற்ற கர்ப்பிணிப் பெண்கள் எல்லோருடைய முகத்திலும் பெருமிதத்தோடுதாய்மையின்  பூரிப்பு  படர்ந்து  மருத்துவமனையின்  வரவேற்பறை முழுவதும்  அழகியல் பரவி நிறைந்து இருந்தது. கல்யாணி  அருகில்  அமர்ந்திருந்த அந்த பெண்ணின்  முகவாட்டத்தை கவனித்தாள். கல்யாணியின்
மனதில்  என்ன எண்ணம்  ஓடிக்கொண்டு  இருக்கும். ஏன் இவள் மட்டும் இப்படி  இருக்கிறாள்?  என  அவள் யோசித்து கொண்டு  இருக்கும் போதேஅவளின் அம்மாவாக இருக்க வேண்டும் அந்தப்            பெண்ணின் அருகில்  வந்து  அமர்ந்தார்

ஏங்கண்ணு  அவரு  எங்கே?”

 “வெளியே  போயிருக்கிறார்”.

சரி  உன்னட  மாமியார்  ஏதாவது  சொல்லுச்சா?”

அது தான்  கீறல் விழுந்த பழங்காலத்து  ரிக்கார்டர்  ஆச்சேம்மாபையன்  தான்  பொறக்கும்,  மாறிப்           பொறந்தா அந்தப் பொட்டச்சிய  நான் கையாள  கூடத்  தொடமாட்டேனு தினத்திக்கும்  யாராவது  ஒருத்தருக்கிட்டே பேசிட்டே  தான் இருக்குஎனக்கு  இதுவே டென்சனா  இருக்குமா"என தன்  அம்மாவிடம்  பேசியது  கல்யாணியின் காதில்  விழுந்ததும் முகம் தெரியாத அந்த பெண்ணின்  மாமியார்  மீது  கல்யாணிக்கு கோபம்  கொப்பளித்ததுஇந்த காலத்திலும் இப்படிபட்டவர்கள் இருக்கிறது அவளுக்கு   ஆச்சரியமாக இருந்தது

'எத்தனை பேரு குழந்தை இல்லாமல் தவம்  கிடக்கறாங்கம்மா.  எங்க மாமியாருக்கு மட்டும் எப்படி  
இப்படி  புத்தி போகுதோ  தெரியலஇத்தனைக்கும் அவங்களுக்கும் பொட்டப்புள்ள  இருக்கேம்மா.  அவங்க புள்ளைக்கும் இரண்டு  பொண்ணு  இருக்கு . என்னை மட்டும்  ஏன்  தான்  இப்படி வார்த்தையால கொல்லாறாங்கனே தெரியலை".

உங்கூட்டுக்காரர் சரியா இருந்தா அவங்க  எப்படி  உன்னப் பேச  முடியும்.?”

“ எந்தக் குழந்தை பொறந்தா உனக்கென்னனு,  அவங்க  அம்மாகிட்ட சண்டை  போடறாரு  தான், ஆனாலும் மாமியார்  பேசுது! என்ன செய்யறதுனே  புரியலமா..”!

சரி விடு கண்ணு  அந்தம்மா கிடக்குது.  இந்த நேரத்தில போட்டு மனசு   குழப்பிட்டு இருக்காதே 
வவுத்து பிள்ளைக்கு ஆகாது.” எனஆறுதல் சொல்லித் தேற்றிக் கொண்டு இருந்தார்.

கல்யாணியை  இன்னும்  டாக்டர்  அழைக்கவில்லை.

 யூரின்  பரிசோதனையை இந்த  முறை  வீட்டில்  பார்க்கத்  தெம்பில்லைநாற்பதைந்து  நாட்கள்  கடந்து  விட்டிருந்ததுமருத்துவரையே பார்த்து பாஸ்ட்டிவா, நெகட்டிவானு தெரிஞ்சுட்டு அதுக்கு ஏத்த  மாதிரி  வைத்தியம் செய்ய முடிவெடுத்து வந்திருந்தார்கள்.

அவளுக்கு முன்  வரிசையில்  உட்கார்ந்து  இருந்த  தம்பதியர்  இருவரும் பேசுவது கல்யாணியின் காதில் 
தானாகவே வந்து விழுந்தது.   

ஏங்கபேசாம இந்த கருவை கலைக்காம இப்படியே  விட்டுடலாங்க.”

ஏண்டி உனக்கு  இப்படி புத்தி  மாறி மாறிப்   போவுது . நேத்து வரைக்கும் ஒரு குழந்தையை 
வளர்க்கிறதே  இந்த  காலத்தில பெருசா இருக்கு! இன்னோன்னு வேண்டாம்னு  நீ தானே பேசினே..” 

அப்ப அப்படி தான் இருந்ததுஇப்ப ஐம்பது  நாள்  கருவை  அழிக்கறமோனு உறுத்தலா இருக்கு..”

அதெல்லாம்  ஒன்னுமில்லை.இந்த  உறுத்தல பார்த்தா காலம் பூராவும்  அதுவும்   நம்ப  வயித்தில  பொறந்துட்டு கஷ்டப்படும்பணக்காரங்களே ஒன்னப் பெத்துக்கராங்கநடுத்தட்டுல இருக்கிற  நமக்கு  ஒரு
பொண்ணு  போதும்நாம கவனக்குறைவா இருந்துட்டோம் என்ன  செய்யறது?” அவனுடைய 
மனைவியை சமாதானம் செய்து கொண்டு  இருந்தான்.

குழந்தை வேண்டும்  என ஏங்கி  தவம் இருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதாக குழந்தை வரம் கிடைப்பதில்லை. குழந்தை வேண்டாம் என நினைக்கிறவர்களுக்கு கருவைக்  கொடுத்து  அழிக்கிறான் இது என்ன கர்மவினையோ என கல்யாணி பெருமூச்சு  விட்டு  நிமிர்ந்த போது மருத்துவமனை  
திடீரென பரபரப்பாக மாறியது.  ஆபரேஷன்  தியேட்டருக்குள் இருந்து வெளியே  வருவதும் , போவதுமாக  செவிலியர்கள் ஓடிக்கொண்டு இருந்தார்கள்.மருத்துவமனையில்  பிரசவத்திற்கு சேர்த்திருந்த  உறவினர்கள்   முகத்தில்  பெரும் பீதி  படர்ந்து முகம் இருண்டு  இருந்தது.

"என்னாச்சு?என்னாச்சுஎன   பதட்டத்துடன் வினா  எழுப்பியபடியே நின்றிருந்த  அவர்களின்  
மனதுக்குள் ஏராளமான மனம் போராட்டங்கள்  நடப்பதை அவர்களின் முகம்  காட்டிக் கொண்டு              இருந்தது. கல்யாணி மட்டுமில்லை அங்கே இருப்பவர்கள் அனைவருக்குமே ஒரு  பரபரப்பு தொற்றிக் கொண்டதுசெவிலியர்கள் எதுவும்  சொல்லவில்லை. வரும் நோயாளிகளின் பதிவை எழுதிக் கொண்டு இருந்தார்கள்.  

முகத்தில் மிகப் பெரும் சோர்வும், குழப்பமும் நிறைந்த அந்தப் பெரியவர் "எம் புள்ளைக்கு என்னாச்சு?  
ஏன் எதுவும்  சொல்ல மாட்டேங்கறீங்க?" என்று  சத்தம் போட ஆரம்பித்து விட்டார்மருத்துவமனையே   களோபரமாகி விடும் என்ற  நிலை வந்து கொண்டிருந்தது.

மருத்துவமனை  மேலும் பரபரப்பாக மாறிப்போனதுஇன்னைக்கு டாக்டரைப் பார்க்க காத்திருந்தவர்கள்  எல்லோருடைய முகத்திலும்,   இங்கே  இவ்வளவு நேரம் காத்திருந்தது  வீணாகப்  போச்சு என்ற  மனச் 
சலிப்பைத்  தாண்டிஆபரேஷன் அறையில்   இருக்கும் தாயும்சேயும் நல்லபடியா பெத்து  பொழைச்சு 
வரணும்  என  வாய்விட்டுச் சொல்லிக் கொண்டு  இருந்தார்கள்

கல்யாணியின் கணவர் போன்  பேசிவிட்டு உள்ளே வந்தான். " ஏங்க, நாம கிளம்பலாங்ககரு உருவாகி        அதை ஒவ்வொரு நாளும்  கனவோடு  வளர்த்து, குழந்தையைப் பெத்தத்தெடுக்கறதெல்லாம் 
மறு பிறப்புங்க.  பிரசவ அறைக்குள் அனுப்பி விட்டு வெளியே காத்திருப்பவர்கள்  குழந்தையையும்,  தாயையும்  உசரோடு பார்க்கற  வரைக்கும் எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தாலும் அவர்களுக்குள் ஒரு நிம்மதி இருப்பதில்லை" என மனம் கனத்து அவள் வயிற்றை தடவிப் பார்க்கிறாள். எனக்கு என்ன 
விதிச்சு இருக்கோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்ற மனநிலையுடன் மருத்துவமனையை 
விட்டு அவர்கள் வெளியே வரும் போது, “அய்யோ’ கடவுளே என்னைக் கை விட்டுட்டியே
அடப்பாவிகளே!  என் தலையில கல்லப்போட்டுட்டீங்களே என வந்த கதறல், மருத்துவமனை தாண்டி வெளியே  சாலை வரை எதிரொலித்தது. அவசர அவசரமாக இருக்கும் நோயாளிகளை வெளியேற்றிக் கொண்டு இருந்தார்கள் மருத்துவமனை ஊழியர்கள். அங்கே ஒரு களோபரம் உருவாகும் சூழல் உருவாகிட்டு இருப்பதை உணர்ந்து எல்லோரும் வேகமாக வெளியே சென்று கொண்டிருந்தனர்.சிலர் அங்கே நடக்கப் போவதை குறுஞ்செய்தியில் வெளியிட படம் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். 

கல்யாணியின் காதில்  அந்த தந்தையின் கதறல் சத்தம் வந்து  விழுந்ததும், அவள்  அடிவயிறு   கனக்க 
ஆரம்பித்தது. கீழே விழாமல் இருக்க அவள் கணவரின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

 


No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...