கார் கண்ணாடியில் எச்சமிட்டிருக்கும் புறாக்களை சபிக்கும்முன், காயப்போட்டிருக்கும். தானியங்களை சிதறடிக்கும் சிட்டுக்குருவிகளின்மேல் கோபப்படும்முன் இதைப்படித்து விடுங்கள்.. காலையில் தூங்கிஎழும்போது உங்கள் வீடு காணாமல்போன அனுபவம் உண்டெனில் இனிவருபவை ஒருவேளை உங்களுக்குப் புரியுக்கூடும்..
அடேயப்பா?! ஒரே வீட்டில் நான்கு குடும்பங்கள் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்கின்றன..இப்படியெல்லாம் வியந்து கற்பனை செய்ய வேண்டியுள்ளது.. ஏனெனில் இதற்கான வாய்ப்பு இப்போதைக்கு மிக அரிது..
அந்த அடுக்ககத்தின் மூன்றாவது மாடியில் கதவுக்கு வெளியே ஒரு மரத்தால் ஆன சிறுகூட்டில் வசித்து வரும் சிட்டுக்குருவி குடும்பம் ஒன்று, அந்த பால்கனியில் ஓரமாக மேலே பொருத்தப்பட்டுள்ள செயற்கையான இன்னொரு மரக்கூட்டில் ஒரு தேன் சிட்டு குடும்பம், சமையலறையின் பின்புறம் தெற்கு பார்த்த மாதிரி அமைக்கப்பட்டிருக்கும் மூங்கில் தட்டி வளைவில் குடியிருக்கும் ஒரு சிட்டுக்குருவி குடும்பம், இவை தவிர மிக சாதாரண ஆசாபாசங்களுடன் குடியிருக்கும் ஒரு மனித குடும்பம். இப்படி நான்கு குடும்பங்கள். இதில் மூன்று குடும்பங்கள் மட்டும் எப்போதும் இயற்கையோடு இயைந்து, கொஞ்சி குலாவி, மகிழ்ந்து இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
இந்த குருவிகளின் நடவடிக்கைகள் இன்னும் விநோதம்..எங்கெல்லாம் சிறு இடைவெளிகள் உள்ளதோ அங்கெல்லாம் இப்போது குருவிகளின் கூடாரமாக ஆக்கிரமிப்பு..தேன்சிட்டு இருக்கும் கூட்டை பெரிய குருவி வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தல், காலையில் காக்கைக்கு சோறு வைக்கும் பழக்கத்தில் பல குருவிகள் சோற்றுக்கு அடிமையாகிப் போனது, அதில் ஒரு பச்சைக்கிளி பற்றி சொல்லியே ஆகவேண்டும். எப்போதும் அங்கேயே இருக்கும். இரைதேட அதன் தாய்க்குருவி அழைத்தும் போகவில்லையா?! அல்லது நம் வீட்டு குழந்தைகள் போல பெற்றோரை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறதா?!, அல்லது "கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து ஆத்தா பேச்சை கேட்க மாட்டேங்குது.." என்று புதுக்கவிதை படிக்கிறதா?!
இன்னொன்று புறா பற்றியது. இருப்பதை வைத்து சந்தோசமாக வாழ இவர்களைத் தான் பார்க்க வேண்டும். குளிரூட்டி பொருத்தி இருக்கும் அந்த சந்துக்குள் எப்படித்தான் அது முட்டையிட்டு குஞ்சு பொரித்து குடும்பம் நடத்துகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது..இணையைக் கொஞ்சிக் கொண்டே இருப்பது லேசான பொறாமையைத் தூண்டுகிறது..
காலையில் மொட்டைமாடி நடைப் பயிற்சியின்போது கவனித்தால், ஐந்து முதல் ஆறுவகையான பறவை இனங்கள், அந்த அடுக்ககத்தைச் சுற்றியே குடியிருந்து வருவது கொஞ்சம் கவலையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது.. இதுபற்றி அந்த அடுக்ககம் கட்டிமுடித்து விற்பனை செய்த நபரை கேட்ட போது, இதற்கு முன் இந்த இடத்தில் அடர்ந்த மரங்கள்இருந்தது பற்றி தெரிய வந்தது. அனைத்து மரங்களையும் அழித்து, மரத்துப்போன ஒரு கட்டிடத்தை கட்டிய பெருமை அவரைச் சாரும். அது அவரது வியாபாரம் என்ற வகையில் அங்கு நியாயப்படுத்தப்படுகிறது.. நினைத்துப் பார்த்தால் எத்தனை பறவையினங்கள் அதிர்ச்சியுடன் ஒரு மிக கனத்த காலைப்பொழுதை கடந்திருக்கவேண்டும்.?!!.
போராடவில்லை, தீக்குளிக்கவில்லை. மீடியாவின் அதிகப்பிரசங்கித்தனமும் இல்லை. ஆனாலும் பேரழிவு நடந்திருகிறது..மீண்டும் இது எங்கு வேண்டுமானாலும் நடக்கும்..
அந்த அகதிகளுக்கு உடனடியாக தஞ்சம்புக பக்கத்தில் வேறு வனங்களா இருக்கிறது? பக்கத்தில் ஒரே ஒரு அரச மரம் மட்டுமே. அது எல்லா பறவையினங்களுக்கும் குடும்பம் நடத்த ஏதுவாகாது. வேறு வழியில்லாமல் மீதமிருப்பது, ஒருவழியாக மீண்டும் இதே இடத்தில் முளைத்த பல வண்ணங்களில் தன்னை அலங்கரித்துக்கொண்ட கட்டடத்தின் சந்து பொந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக அவைகளுக்கு பழக்கப்பட்டு, வசதி கூடக்குறைய கிடைத்த வீடுகளாக அவைகளுக்கு வாழ்க்கைப்பட்டன. மனிதர்கள் மட்டும்தான் குடிசைகளில் இருந்து மாடிவீடு கட்டி குடி போக முடியுமா என்ன?, இதைத்தாண்டி தன் குருவியினத்தின் தூரத்து சொந்தம் ஒரு நாள் இங்கு வரும்போது இவைகளைப் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டு, பொறாமைப்பட அவை என்ன மாமனிதர்களா?!
ஒருநாள் காலையில் கதவைத்திறக்கையில் வீட்டுக்குள் சிறகடித்தது ஒரு சிறுகுருவி..அட என ஆனந்தப்பட்ட அதேவேளை சுழன்று கொண்டிருந்த மின்விசிறி கண்ணில்பட, அய்யோ என பாய்ந்து நிறுத்த எத்தனிக்கையில் பிடிக்க வருவதாய் நினைத்த அது பறக்கத்தெரியாமல் விசிறியின் இறக்கையில் சிறகிழந்து உயிரிழந்தது..பார்ப்பதில் மிகக் கொடுமையானது சிசுக்கள் மற்றும் சிறு குழந்தைகளின் இறப்பு..அது போன்றுதான் இதுவும்.... தாங்கவியலா பாரத்தை மனதினுள் ஏற்றியதை அன்றுணர்ந்தேன்..
அதை அப்புறப்படுத்திவிட்டு கனத்த இதயத்துடன் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு பெரிய இயந்திரம் டீசலை விழுங்கிக்கொண்டு, கரும்புகையை வெளியே தள்ளி அச்சுறுத்தும் வகையில் உறுமிக்கொண்டு தெற்கு புறமாக இருந்த காட்டுக்குள் ஒரு மரத்தை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. பார்க்க பகீரென்றது. அப்புறம்தான் தெரிந்தது அந்த நிலமும் பகிரப்பட்டு விற்பனைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது.. இதை தடுக்க முடியாது ஏனென்றால், முதலில் அது அவர்கள் இடம், பிறகு அவர்கள் சொல்லும் காரணம் உங்களை தடுக்க விடாது.. நீங்கள் இயற்கை விரும்பியாக இருக்கலாம். அவர்களுக்கு அதுவா முக்கியம்.. இதற்கு முன்னர் பலமுறை கவனித்ததில் சோளம் அல்லது நிலக்கடலை பயிரிடுவதை மட்டுமே பார்த்ததுண்டு.. அது கூட சில சமயங்களில் திட்டுத்திட்டாக வளர்ந்தும் காய்ந்தும் மனதை நெருடியதும் உண்டு..அதற்கேற்ப பாசனவசதி அங்கு இல்லை என்பதும் ஒரு காரணம்.. மழை இந்த மனிதர்களின் பாவங்களையும் தாண்டி அப்போது பெய்வதால் தப்பிப் பிழைத்த பயிர்கள் பச்சையாக இருந்தது உண்டு.. இப்படி இந்த விவசாயத்தில் கிடைத்த வருமானம் அந்த நிலத்தின் உரிமையாளரை யோசிக்க வைத்து இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. அவர்களும் நிகழ்கால சுபயோகி மனிதர்கள்தானே. பக்கத்து அண்டை அயலார் போல அவர்களும் கொஞ்சம் வசதியாக வாழ்வது பற்றி நினைப்பதில் தவறு என்ன இருக்கப் போகிறது. இதை விற்று வரும் பணத்தில் அவர்களது வாழ்க்கை நிலை முற்றிலும் மாறுவது பற்றி அவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷம்.. வாழ்வில் ஒரு படி மேலே போன நிலை..அந்தஸ்து கூடுகிறது..
பெருகிக்கொண்டே இருக்கும் மக்கள்தொகைக்கு எத்தனை வசதிகள் இருந்தாலும் போதவில்லைதான்..அதற்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது..ஒரு மரத்தின் ஆயுளை அழிக்கும்போது ஒரு வனத்தை, ஒரு இனத்தை சேர்த்தே அழிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..கேபிள்டிவி, எரிவாயு, குடிநீர் போல ஆக்ஸிஜனை விலை கொடுத்து வாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை நண்பர்களே..
குளிரூட்டியின் மெல்லிய உறுமலை மீறி காலையில் கேட்கும் கீச்சு கீச்சென்ற சங்கீதம் இனிமைதான்..எனினும் என் வீடழித்துவிட்டு மனிதா நீ எப்படி நிம்மதியாக உறங்குகிறாய் என்னும் பறவைகளின் போர்க்குரலாகவே மனதில் விழுகிறது..செய்து கூட்டிய பாவக்கணக்கிற்கு ப்ராயச்சித்தமாகவெனினும் மரம் நடவேண்டும்.. இல்லையில்லை மரங்கள் நடவேண்டும்.. எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் மரங்கள் நடவேண்டும்..மரங்கள் வனமாகும்வரை பராமரிக்கவும் வேண்டும்..அப்போதாவது குருவிக்கூடழித்து கான்க்ரீட் காடுகள் செய்த நம்மை பறவைகள் மன்னிக்கக்கூடுமா என்பது சந்தேகமே..

No comments:
Post a Comment