ஒருநாள் இரவு சீனாபுரம் அருகே வந்து கொண்டு இருக்கும்போது மூன்று பேர் பஜாஜ் டிஸ்கவர் ஒன்றை தள்ளிக்கொண்டு வந்தார்கள். தள்ளிக்கொண்டு என்பதை விட இழுத்துக்கொண்டு வந்தார்கள் எனலாம். ஒருவர் பைக்'கை பிடித்துக்கொள்ள, முன்னால் ஒருவர் இழுத்துக்கொண்டு வர, பின்னால் ஒருவர் தள்ளிக்கொண்டு வந்தார். அவர்களை கடக்கும்போது தான் இந்த காட்சியை கவனித்தேன். அப்படியே எதாவது ஒர்க்ஸாப் உள்ளதா என பார்க்க போனேன். மணி 9.30 ஆகி இருந்ததால் எந்த ஒர்க்ஸாப்பும் இல்லை. வண்டியை திருப்பிக்கொண்டு அவர்களிடம் சென்றேன்.
நான் அவர்களை நெருங்கும்போது மூவரும் வண்டியை நிறுத்தி சக்கரங்களை தட்டி பார்த்து எதுவும் முடியாததால் மீண்டும் இழுக்க தயாராகினர். அருகில் சென்று கேட்டேன்.
"என்ன ஆச்சுங்ண்ணா?"
"வண்டி ஆக்சிஸடன்ட் ஆகி பிரேக் பிடிச்சுடுச்சு சார். ஸ்பேனர் இல்லாதனால தள்ளிட்டு போறோம். இங்க ஹாலோஃபிளாக் கம்பெனில தான் இருக்கோம். காலைல கடைல விட்டு பார்த்துக்கறோம்"
"பிரேக் அட்ஜஸ்ட் பண்ணி பார்த்திங்களா"
"ஸ்பேனர் எதுவும் இல்ல சார்"
"சரி இருங்க எங்கிட்ட ஸ்பேனர் இருக்கு. பார்க்கலாம்"
இப்படி யாராவது வண்டியை தள்ளிக்கொண்டு சென்றால் அவர்களுக்கு உதவுவது ஒரு பழக்கமாக மாறிவிட்டது. இந்த பழக்கம் வர காரணம் நானும் வண்டியை தள்ளிக்கொண்டு சென்ற சூழலை எதிர்கொண்டது தான். சில சமயங்களில் யாரும் உதவி செய்ய மாட்டார்கள். சில சமயங்களில் தானாகவே வழிய வந்து உதவி செய்தவர்களும் இருந்தார்கள். உங்களுக்கு சிரமம் வேண்டாம் என மறுத்தும் உதவி செய்தவர்கள் தான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தூண்டுதலை உருவாக்கினார்கள். அதிலும் முக்கிய காரணம் பக்கத்து ஊர் முருகேஷ் அண்ணா தான்.
ஆனாலும் சில சமயங்களில் வண்டியை தள்ளிக்கொண்டு சென்றவர்களை பார்த்தாலும் உடனே நிற்க மாட்டேன். 'பெட்ரோல் தீர்ந்திருக்கும். நம்ம வண்டியே ரிசர்வ்ல ஓடிட்டு இருக்கு. இதுல எங்க போய் அவங்களுக்கு பெட்ரோல் குடுக்கறது?; நாமே அவசரமா போயிட்டு இருக்கோம். அவங்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு இப்போ நேரம் இருக்கா?' என எனக்கு நானே காரணத்தை சொல்லிக்கொண்டு கடந்து விடுவேன். ஆனாலும் 'பெட்ரோல் இல்லாம தான் தள்ளிட்டு போறாங்கனு உனக்கு தெரியுமா? முதல்ல என்ன பிரச்சினைனு கேளு. உதவ முடியுமா முடியாதான்னு அப்புறம் பார்க்கலாம்' என மனசாட்சி உறுத்தும். உடனடியாக திரும்பிச் சென்று அவர்களிடம் என்னவென்று விசாரிப்பேன்.
ஒரு முறை குண்டடத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டு மனைவியுடன் பைக்கில் வந்துகொண்டிருந்தேன். குண்டடத்திற்கும் தாராபுரத்திற்கும் இடையில் ஒரு பெரியவர் டி.வி.எஸ் 50ஐ தள்ளிக்கொண்டு வந்தார். அவரைக் கடந்து வந்துவிட்டோம். ஆனாலும் மனசில்லாமல் திரும்ப சென்று என்னவென்று கேட்ட போது 'க்ளட்ச் வேலை செய்யலை' என்றார். க்ளட்ச் கவரை கழட்டிவிட்டு க்ளட்ச் ப்ளேட்டை அழுத்தி பிடித்துக்கொள்ள பெரியவர் ஸஸ்டார்ட் செய்தார். இப்போதும் க்ளட்ச் பிடிக்கவில்லை. வண்டியை நன்றாக ஆராய்ந்த போது சைன் ஒன்று கழண்டு இருந்தது தெரியவந்தது. மனைவியின் உதவியோடு சைனை மாட்டி பெரியவரை அனுப்பி வைத்தோம். இது போன்று அப்பாவின் வயதை ஒட்டியுள்ளவர்களையோ அதற்கு மேற்பட்டவர்களையோ பார்க்கும்போது 'நம் அப்பாவின் வண்டியும் இது போன்று பழுது ஏற்பட்டால் இப்படித்தானே தள்ளிக் கொண்டு வர வேண்டும்?' எனத் தோன்றும். அந்த எண்ணம் கூட அவர்களுக்கு உதவ வைக்கும் எனலாம்.
மற்றொரு நாள் இரவு ஒன்பது மணிக்கு நல்லாம்பட்டியில் இருந்த அந்த பெரிய மளிகை கடைக்கு முன் வண்டியை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றேன். கடை முன்னாள் 100CC Excel super ஒன்று நின்று கொண்டு இருந்தது. வண்டியின் உரிமையாளர் கடைகளுக்கு பலசரக்கு சப்ளை செய்பவர் என்பதை வண்டியில் பின்னால் துணியால் மூடப்பட்டிருந்த மூங்கில் கூடை அடையாளப்படுத்தியது. அழிந்து போன எழுத்துக்களுடன் கூடிய நிஜாம் பாக்கு பைகள் அருகில் கிடந்தன.
தலையில் கை வைத்தது போன்ற தோரணையில் உரிமையாளர் அமர்ந்திருந்ததை பார்க்கும்போது வண்டி பழுதாகி நிற்கிறது என புரிந்தது. கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டே வண்டியை கவனித்தேன். மளிகை கடைக்காக்கார் வியாபாரியிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
"ஆட்டோ வருதுங்களா?"
"இப்போ தான் பெருந்துறைல கிளம்புதாம்"

Good writing..
ReplyDeleteஅருமை... இதுபோல எனக்கும் பெட்ரோல் தீர்ந்துபோய் தள்ளிக்கொண்டு போகும்போது டோப் செய்திருக்காங்க... ஆனா என்னால முடியலைன்னு நா வருத்தப்பட்டிருக்கிறேன்... - Maheswaran Chellamuthu
ReplyDelete