Saturday, July 1, 2023

வண்டி ரிப்பேர் - மூர்த்தி





ஒருநாள் இரவு சீனாபுரம் அருகே வந்து கொண்டு இருக்கும்போது மூன்று பேர் பஜாஜ் டிஸ்கவர் ஒன்றை தள்ளிக்கொண்டு வந்தார்கள். தள்ளிக்கொண்டு என்பதை விட இழுத்துக்கொண்டு வந்தார்கள் எனலாம். ஒருவர் பைக்'கை பிடித்துக்கொள்ள, முன்னால் ஒருவர் இழுத்துக்கொண்டு வர, பின்னால் ஒருவர் தள்ளிக்கொண்டு வந்தார். அவர்களை கடக்கும்போது தான் இந்த காட்சியை கவனித்தேன். அப்படியே எதாவது ஒர்க்ஸாப் உள்ளதா என பார்க்க போனேன். மணி 9.30 ஆகி இருந்ததால் எந்த ஒர்க்ஸாப்பும் இல்லை. வண்டியை திருப்பிக்கொண்டு அவர்களிடம் சென்றேன்.

நான் அவர்களை நெருங்கும்போது மூவரும் வண்டியை நிறுத்தி சக்கரங்களை தட்டி பார்த்து எதுவும் முடியாததால் மீண்டும் இழுக்க தயாராகினர். அருகில் சென்று கேட்டேன்.

"என்ன ஆச்சுங்ண்ணா?"

"வண்டி ஆக்சிஸடன்ட் ஆகி பிரேக் பிடிச்சுடுச்சு சார். ஸ்பேனர் இல்லாதனால தள்ளிட்டு போறோம். இங்க ஹாலோஃபிளாக் கம்பெனில தான் இருக்கோம். காலைல கடைல விட்டு பார்த்துக்கறோம்"

"பிரேக் அட்ஜஸ்ட் பண்ணி பார்த்திங்களா"

"ஸ்பேனர் எதுவும் இல்ல சார்"

"சரி இருங்க எங்கிட்ட ஸ்பேனர் இருக்கு. பார்க்கலாம்"

வண்டி விழுந்ததில் பிரேக் ராடு வளைந்து பின் சக்கரத்தை நன்றாக இழுத்து பிடித்திருந்தது. மூவரும் போதையில் சென்று விழுந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டு அதிகமாக அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை. என்னுடைய பைக்கில் இருந்த டூல் கிட் ஸ்பானரை வைத்து இரண்டு சக்கரங்களின் பிரேக் நட்டுகளையும் தளர்த்திய பின் சக்கரங்கள் சுற்றியது.

அவர்கள் வண்டியை தள்ளிக்கொண்டு செல்ல நான் டூல் கிட்'டை வண்டியில் வைத்துக்கொண்டு பைக் ஸ்டார்ட் பண்ணும்போது தான் அந்த கேள்வியை கேட்க தோன்றியது. முன்னால் சென்று கொண்டு இருந்தவர்களின் அருகில் சென்று 'எங்க இருந்து தள்ளிட்டு வர்றீங்க' என்றேன். 'முன்னாடி அந்த இடம் தான்' என சற்று அருகில் கை காட்டினார்கள். அவர்கள் காட்டிய இடத்தில் அந்த வண்டி கிடந்ததை மாலையில் வரும்போது பார்த்தது இப்போது தான் நினைவுக்கு வந்தது.
'அது உண்மையிலயே அவங்க வண்டி தானா அல்லது ஆக்ஸிடென்ட் ஆன வண்டியை  தள்ளிட்டு போறாங்களோ தெரியலை.  நாம பாட்டுக்கு ரெடி பண்ணி குடுத்துட்டு வந்துட்டோம்..எந்த வில்லங்கமும் வராம இருந்தா சரி' என நினைத்துக்கொண்டே வந்தேன்.

இப்படி யாராவது வண்டியை தள்ளிக்கொண்டு சென்றால் அவர்களுக்கு உதவுவது ஒரு பழக்கமாக மாறிவிட்டது. இந்த பழக்கம் வர காரணம் நானும் வண்டியை தள்ளிக்கொண்டு சென்ற சூழலை எதிர்கொண்டது தான். சில சமயங்களில் யாரும் உதவி செய்ய மாட்டார்கள். சில சமயங்களில் தானாகவே வழிய வந்து உதவி செய்தவர்களும் இருந்தார்கள். உங்களுக்கு சிரமம் வேண்டாம் என மறுத்தும் உதவி செய்தவர்கள் தான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தூண்டுதலை உருவாக்கினார்கள். அதிலும் முக்கிய காரணம் பக்கத்து ஊர் முருகேஷ் அண்ணா தான்.

2017'ம் வருடத்தில் ஒருநாள் காலை 6 ஆறுமணிக்கு பெட்ரோல் தீர்ந்து போய் தள்ளிக்கொண்டு வந்தேன். எதிரே மார்க்கெட்டுக்கு போக காய்கறிகள் வண்டியில் கட்டிக்கொண்டு முருகேஷ் அண்ணா வந்தார். என்னை பார்த்ததும் வண்டியை நிறுத்தி பெட்ரோல் பிடிக்க பாட்டில் தேடினார். எங்கள் வீடு இரண்டு கி.மீ தொலைவு தான் என்பதால் அவரை சிரம படுத்தாமல் தள்ளிக்கொண்டே சென்று விடலாம் என்ற எண்ணத்தில் வேண்டாம் என மறுத்தேன். ஆனாலும் அவர் வண்டியிலிந்து பெட்ரோல் பிடித்துக்கொடுத்து என்னுடைய வண்டி ஸ்டார்ட் ஆன பிறகே கிளம்பி சென்றார்‌.
அந்த சம்பவம் தான் அது போல உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்தது.

ஆனாலும் சில சமயங்களில் வண்டியை தள்ளிக்கொண்டு சென்றவர்களை பார்த்தாலும் உடனே நிற்க மாட்டேன். 'பெட்ரோல் தீர்ந்திருக்கும். நம்ம வண்டியே ரிசர்வ்ல ஓடிட்டு இருக்கு. இதுல எங்க போய் அவங்களுக்கு பெட்ரோல் குடுக்கறது?; நாமே அவசரமா போயிட்டு இருக்கோம். அவங்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு இப்போ நேரம் இருக்கா?' என எனக்கு நானே காரணத்தை சொல்லிக்கொண்டு கடந்து விடுவேன். ஆனாலும் 'பெட்ரோல் இல்லாம தான் தள்ளிட்டு போறாங்கனு உனக்கு தெரியுமா? முதல்ல என்ன பிரச்சினைனு கேளு. உதவ முடியுமா முடியாதான்னு அப்புறம் பார்க்கலாம்' என மனசாட்சி உறுத்தும். உடனடியாக திரும்பிச் சென்று அவர்களிடம் என்னவென்று விசாரிப்பேன்.

ஒரு முறை குண்டடத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டு மனைவியுடன் பைக்கில் வந்துகொண்டிருந்தேன். குண்டடத்திற்கும் தாராபுரத்திற்கும் இடையில் ஒரு பெரியவர் டி.வி.எஸ் 50ஐ தள்ளிக்கொண்டு வந்தார். அவரைக் கடந்து வந்துவிட்டோம். ஆனாலும் மனசில்லாமல் திரும்ப சென்று என்னவென்று கேட்ட போது  'க்ளட்ச் வேலை செய்யலை' என்றார். க்ளட்ச் கவரை கழட்டிவிட்டு க்ளட்ச் ப்ளேட்டை அழுத்தி பிடித்துக்கொள்ள பெரியவர் ஸஸ்டார்ட் செய்தார். இப்போதும் க்ளட்ச் பிடிக்கவில்லை. வண்டியை நன்றாக ஆராய்ந்த போது சைன் ஒன்று கழண்டு இருந்தது தெரியவந்தது. மனைவியின் உதவியோடு சைனை மாட்டி பெரியவரை அனுப்பி வைத்தோம். இது போன்று அப்பாவின் வயதை ஒட்டியுள்ளவர்களையோ அதற்கு மேற்பட்டவர்களையோ பார்க்கும்போது 'நம் அப்பாவின் வண்டியும் இது போன்று பழுது ஏற்பட்டால் இப்படித்தானே தள்ளிக் கொண்டு வர வேண்டும்?' எனத் தோன்றும். அந்த எண்ணம் கூட அவர்களுக்கு உதவ வைக்கும் எனலாம்.

மற்றொரு நாள் இரவு ஒன்பது மணிக்கு நல்லாம்பட்டியில் இருந்த அந்த பெரிய மளிகை கடைக்கு முன் வண்டியை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றேன். கடை முன்னாள் 100CC Excel super ஒன்று நின்று கொண்டு இருந்தது. வண்டியின் உரிமையாளர் கடைகளுக்கு பலசரக்கு சப்ளை செய்பவர் என்பதை வண்டியில் பின்னால் துணியால் மூடப்பட்டிருந்த மூங்கில் கூடை அடையாளப்படுத்தியது. அழிந்து போன எழுத்துக்களுடன் கூடிய நிஜாம் பாக்கு பைகள் அருகில் கிடந்தன.

தலையில் கை வைத்தது போன்ற தோரணையில் உரிமையாளர் அமர்ந்திருந்ததை பார்க்கும்போது வண்டி பழுதாகி நிற்கிறது என புரிந்தது. கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டே வண்டியை கவனித்தேன். மளிகை கடைக்காக்கார் வியாபாரியிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

"ஆட்டோ வருதுங்களா?"

"இப்போ தான் பெருந்துறைல கிளம்புதாம்"

இதற்கிடையில் என் அருகில் நின்றிருந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் கடையில் இருந்த மளிகைக்கடைக்காரரின் மகளிடம் பேசிகொண்டிருந்தார். அந்த பெண்ணுக்கு 40 - 50 வயதுக்குள் இருக்கலாம். "நான் சின்ன வயசுல இருந்தே பாய பார்த்துட்டு இருக்கேன் (பாய் என மொத்த வியாபாரியை சொல்கிறார்). இன்னைக்கு அவர் இப்படி உட்கார்ந்துட்டு இருக்கற பார்க்கறக்கே கஷ்டமா இருக்கு"

அந்த வார்த்தைகள் வியாபாரி எவ்வளவு அந்த பகுதியில் பரிட்சையமானவர் என்பதை உணர்த்தியது.

பொருட்களை வாங்கி பைக்கில் வைத்து விட்டு எக்ஸல் சூப்பர் அருகில் சென்றேன். நான் சென்றபோது கடைக்காரர் மகன் யாரிடமோ ஸ்பேனர் வாங்கிக்கொண்டு வந்தார். அந்த ஸ்பேனரை வைத்து என்ஜின் ப்ளக்கை கழட்ட முயன்றார்கள். ஆனால் ஸ்பேனர் செட் ஆகவில்லை. என்னுடைய டூல் பாக்ஸில் இருந்த ப்ளக் ஸ்பேனர் சரியாக இருந்தது‌. "பெரும்பாலும் ப்ளக் பிரச்சனையால் தான் வண்டி ஸ்டார்ட் ஆகாது. க்ளீன் பண்ணி மாட்டினா ஸ்டார்ட் ஆகிடும்" என நம்பிக்கையாக கூறிக்கொண்டே ப்ளக்கை கழட்டினேன். ப்ளக் கழண்டு வருவதை பார்த்த கடைக்காரர் "ஆட்டோவை வேணாம்னு சொல்லிடலாமா?" என்றார்.

"இருங்க ஸ்டார்ட் பண்ணி பார்த்துட்டு சொல்லிக்கலாம்" என்றேன்.

ப்ளக் சுத்தம் செய்து போட்டு ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகவில்லை. பல முறை கிக்கர் உதைத்தும் வியர்வையால் சட்டை முழுவதும் நனைந்ததே தவிர வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. தோல்வி முகத்தோடு அங்கிருந்து கிளம்பினேன்.

மழை தூறல் மெதுவாக ஆரம்பிக்க கடையில் அந்த பெண் கூறிய வார்த்தைகள் மட்டும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. 


2 comments:

  1. அருமை... இதுபோல எனக்கும் பெட்ரோல் தீர்ந்துபோய் தள்ளிக்கொண்டு போகும்போது டோப் செய்திருக்காங்க... ஆனா என்னால முடியலைன்னு நா வருத்தப்பட்டிருக்கிறேன்... - Maheswaran Chellamuthu

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...