“நான் தனியாப் போயிடலாம்னு இருக்கேன் அருண்..”
தன் அம்மாவின் இந்த வார்த்தையைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்த அருண் “ என்னம்மா என்னம்மா சொல்றீங்க, என்றவன் சற்று சுதாரித்தவனாய் “ம்மா , சும்மா சும்மனாச்சுக்கும் தானே சொல்றீங்க ..” என்றுபதறியவனையே, அவன் மனைவி ரஞ்சனாவும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளுக்குள் ஒரு திடுக்கிடல் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் இருந்தாள்.
“ இல்லடா அருண், நா சும்மாவெல்லாம் சொல்லலை. நிஜமா தான், சீரியஸ்சா தான் பேசறேன்..” என்ற தன் தாயின் முகத்தைப் பார்த்ததும் ஏதோ புரிந்து கொண்டவனாய் எழுந்து தன் தாயின் அருகில் வந்தவன் “ ஏம்மா, என்னம்மா பிரச்சனை. திடீர்னு இப்படியெல்லாம் பேசற, நா ஏதாச்சும் தப்பா பேசிட்டனா..!? இல்ல ரஞ்சனா ஏதாச்சும் சொல்லிட்டாளாம்மா.!?இல்ல அக்கா ஏதாச்சும் சொல்லி கேக்கறியாம்மா...” என்றவனின் உள்ளக்கரைசலை பதட்டத்தைப் புரிந்து கொண்ட. பூரணி “ அதெல்லாம் ஒன்னுமில்லடா, உன்னோட அக்கா எல்லாம் ஒன்னும் சொல்லலை. இதப்பத்திக் கூட இனிமே தான் அவள்ட்ட சொல்லனும்டா. அதோட உங்கரெண்டு பேருமேலயும் கூட கோபமோ வருத்தமோ எதுவுமில்லடா.
“ அப்புறம் எதுக்குமா தனிக்குடித்தனம் போறேன்ற...”
“ எனக்கு தோணுதுடா. கொஞ்ச நாளைக்காச்சும் தனியா இருக்கலாம்னு, இருந்து பாக்கலாம்னு.”
“ நீ என்னம்மா பேசறே, புரிஞ்சு தா பேசறியா, நீ தனியா போனா ஊரு உலகம் சொந்தக்காரங்க எல்லாம் என்னை பத்தி, ரஞ்சனிய பத்தி என்ன பேசுவாங்கன்னு தெரியுமாமா, இவ்ளோ வருஷத்திக்கு அப்புறமா,அதுவும் இந்த வயசான காலத்துல தனியா ஒதுக்கி வெச்சுட்டாங்கன்னுல்ல சொல்லும்...என்று படபடத்தவனைக் குறுக்கிட்ட பூரணி, “ நீ இப்ப எதுக்கு இவ்ளோ படபடப்பாகறே, ஊரு உலகத்தைப் பத்தி எதுக்காக இவ்ளோ பயப்படறே. அது வாழ்ந்தாலும் பேசும். தாழ்ந்தாலும் பேசும்.அதைப் பத்தி நமக்கென்னடா அருண். உண்மை என்னன்னு நமக்கு, நம்ம குடும்பம் சம்மந்தப்பட்டவங்களுக்கு தெரியும்ல. புரியுதுல. அது போதும். அதோட எனக்கு வயசாயிடுச்சுன்னு எல்லாம் சொல்லாதே. ஜஸ்ட் அம்பத்தி அஞ்சு வயசு தான். சரியா...” என்று சொல்லிச் சிரித்தவளை பார்த்த அருண்
“ சிரிக்கறியாமா நீ, அப்படியே உன்னை ரெண்டு அப்பு அப்புனா என்னன்னு தோணுது”.
“அதெல்லாம் உங்கப்பன்ட்ட நெறையா வாங்கியாச்சு.போதும்டா..” என்றவளின் குரல் உடைவதைக் கண்டதும் ஓடி வந்து தன் தாயின் கரம் பற்றி இருக்கிக் கொண்டான்.
உடனே அருணின் நினைவும் பின்னோக்கி ஓடியது. தனக்கு ஞாபகம் தெரிந்த நாளிலிருந்து தன் ஆத்தாவிடமும், கணவர் வீட்டில் வாழ இயலாமல் தன் தாய் வீட்டிற்கே வந்துவிட்ட தன் மூத்த நாத்தனாரின் அதிகாரத்தோடும்,எதுக்கெடுத்தாலு ம் சிடுசிடுக்கும் தன் அப்பாவிடமும் அம்மா பட்ட கஷ்டங்களும் அவஸ்தைகளும் கொஞ்சநஞ்சமில்லை. இதையெல்லாம் அருணால் வயது வரவர புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட பூரணி “ ப்ஃளாஷ் பேக்கெல்லாம் வேண்டாம்டா அருண். அதச் சும்மா கூட நா நெனச்சுப் பாக்க விரும்பலடா. அதோட இனிமேலாச்சும், நான் நா நெனக்கற மாதிரி என்னோட வாழ்க்கைய வாழணும்னு ஆசைப்படறேன்டா “.
“ வாழும்மா. யாரு வேண்டானாங்க. அத நீ இங்கே எங்களோட இருந்திட்டே வாழம்மா. .”
“ அதெல்லாம்எனக்கு இங்கிருந்தா சாத்தியப்படாதுடா. ஒரு நாள் போல இன்னொரு நாள் இருக்காதுடா.அதான் நா தனியா இருந்துக்கறேன்னு சொல்றேன். உங்க அக்காவும் யு.எஸ்ல இருக்கா. உனக்கும் நல்ல தொழில் இருக்கு. எனக்கும் தனியா வாடகை, வட்டின்னு வருது. அத வெச்சு நா சமாளிச்சுப்பேன். எனக்கு ஒருத்திக்கு இதுவே அதிகம்டா....
“ இதாம்மா பிரச்சனை. நீ ஒருத்தியா இருக்கறது தான் பிரச்சனையேம்மா. இப்ப அப்பா உயிரோட இருந்து இந்த. வார்த்தையச் சொல்லிருந்தாக் கூட ஒத்திருப்பேன்....
என்று அருண் சொன்னதைக் கேட்டதும் உடனே பூரணிக்கு ஒரு பெருஞ்சிரிப்பொன்று எங்கிருந்து தான் வந்து வெடித்ததோ, எதற்கு தான் வந்ததோ தெரியலை. அப்படிச் சிரித்தாள்.
இது வரைக்கும் தன் அம்மா இப்படியொரு சிரிப்புச் சிரிச்சு பாத்ததே இல்லை . இதுக்கு அர்த்தம் சந்தோஷமா.. ஆசுவாசமா..விடுதலையான்னு.. புரியாமலயே ரஞ்சனி கொண்டுவந்து கொடுத்த டீயை வாங்கி யோசனையோடு உறிஞ்சினான் அருண்.டீயை குடித்து முடித்த பூரணியின் முகத்தில் புது உற்சாகம் வந்திருப்பதைப் பார்த்தான் அருண்.
“ எனக்கு நா இஷ்டப்பட்ட நேரத்துல எழுந்திரிக்கனும். நெனச்சாப் படுத்துக்கனும்டா அருண். அது ஒரு தனி சுகம். என் இருபத்தி அஞ்சு வயசுல இருந்து இதோ இப்ப வரைக்கும் அது முடிலடா. இதோ இப்ப வந்துரும் அப்ப வந்துரும்னு நெனச்சுட்டே இருந்தாக்க, நாளுக்கு நாள் பொறுப்பு கூடுது. ஒரு கட்டத்துல அது சுமையாத் தெரியுதுடா. வெளியே சொல்லலேனாலும் உள்ளுக்குள்ளே அழுத்துதடா. இது வரைக்கும் நா செஞ்சது, செஞ்சு முடுச்சது எல்லாம் என்னோட கடமை. அதெல்லாத்தையும் நா சரியாச் செஞ்சுட்டேன்னு நெனைக்கறேன். உன்னோட பொண்ணும் வளர்ந்து,ஸ்கூல்க்கு போக ஆரம்பிச்சுட்டா. இனி அவள நீங்க பாத்துக்குங்க. அது இனி உங்க பொறுப்பு. எதாச்சும் முடியலேன்னாச் சொல்லுங்க. ஓடி வந்து நிக்கறேன் முடுஞ்ச உதவி செய்யறேன். என்னால இனி இதான் முடியும்...என்ற தன் தாயின் பேச்சில் ஏதோ ஒரு குறியீ டு இருப்பதை உணர்ந்தவனாய் தொடர்ந்து அமைதியாகவே தன் அம்மாவின் பேச்சை கேக்கலானான். ரஞ்சனா தான் உள்ளும் வெளியுமாய் நடந்து கொண்டிருந்தாள்.
“ அதோட எனக்கு நெறையா புத்தகம் படிக்கனும். நெறையா இடங்களுக்கு டூர் போகணும். புடுச்சா சமைக்கனும். இல்லேனா புடுச்சத வாங்கிச் சாப்பிடனும். செவ்வாக்கெழமன்னா பச்சமலை முருகன் கோவிலுக்குபோயி எத்தனை நேரம் உக்காந்திருக்கந் தோணுதோ அவ்வளவு நேரம் உக்காந்திருக்கனும். வீட்ல விட்டேந்தியா யாரோட தொந்தரவும் இல்லாம அப்படியே படுத்துக் கெடக்கனும். சத்தமாப் புடுச்ச பாட்டப் போட்டுட்டே, கூட பாடிட்டே சின்னதாச் சமைக்கனும். யூ ட்யூப்ல சுகி சிவம், பவா, பர்வீனுன்னு...இப்படி பிடுச்சவங்களோட பேச்சையெல்லாம் ஆசப்பட்ட நேரத்துலெல்லாம் போட்டுக் கேக்கனும். அதப்பத்தி ஒத்த ஆளுங்கிட்ட பேசி மகிழனும். மணிக்கணக்கா புடுச்சவங்களோட பேசிட்டே இருக்கனும்.
அப்படியே சின்ன அளவுல காய்கறிகள் கீரைன்னு தோட்டத்துல போட்டு வளர்க்கனும். முடுஞ்சா கிராமத்து சிறுசுகளுக்கு டியூசன் எடுக்கனும்னு...இப்படி இன்னும் நிறைய நிறைய ஆசைகள் எனக்குள்ளே இருக்குடா...அதோட இதெல்லாம் இப்ப திடீர்னு வந்து முளைச்ச ஆசையில்லடா அருண். அன்னிக்கு , நா ஆசப்பட்ட எதுவுமே நடக்கலேனாலும், நடத்த முடியாம போனாலும்கூட, எல்லாத்தையும் பத்திரமா மனசுலே கோர்த்து கோர்த்து வெச்சதுல, இன்னிக்கு அது ஒருபெரிய மாலையாயி கெடக்குது அருண்.அதான் சொல்றேன்.” என்ற தன் தாயின் தீர்மானத்தை புரிந்தவனாய், மனதளவில் ஒத்துக்கொண்டஅருண் “
“சரிம்மா, இப்ப நீ ஆசைப்பட்ட மாதிரியே தனியா இரு. ஆனா அந்த தனி வாழ்க்கை கொஞ்சநாள்லயே உனக்கு ஒத்துவரலீன்னாவோ, பிடிக்கலீன்னாவோ என்ன பண்ணுவே சொல்லு. ஏன்னா எல்லாமே ஒரு கட்டத்துலஅலுப்பைத் தரும் தானே....”.
“ அப்படியொரு அலுப்பு வந்தா உங்க கிட்ட வந்து சொல்றேன்.உங்களோடவே வந்து இருந்துக்கறேன். அவ்ளோ தான்”.
“ இதுல நீ தெளிவா தானே இருக்கீங்க”
“ அதெல்லாம் தெளிவாவே இருக்கேன்..” என்ற தாயின் பேச்சில் நிம்மதியடைந்த அருண் ரஞ்சனியிடம்” இதுக்கு நீயென்ன சொல்ற ரஞ்சு” என்றான்.
மாமியாருக்கும் இவளுக்கும் தனிப்பட்ட எந்தவொரு மோதலும் கிடையாது.இதுவரைக்கும் வீட்டு பொறுப்பு, சமையல்னு எல்லாத்தையும் மாமியாரையே பார்க்கச் சொல்லி விட்டு இவள் நிம்மதியாகவே இருந்தாள். மேலும் அருண் தன் மாமியாரை எப்படியும் தனியாக விடமாட்டான் என்ற நம்பிக்கையுடனே இருந்த ரஞ்சனிக்கு, இந்த முடிவு பிடிக்காவிட்டாலும் கூட “ “ . அம்மா நம்மோடயே இருக்கனுன்றது தான் என் ஆசை. ஊம்..., என்னமோ போங்க, உங்களுக்கு எது சரின்னு படுதோ அதச் செய்யுங்க” என்றாள்.
அப்போது பூரணியின் செல் ஒலிக்க அதை எடுத்த பூரணி “ சரிப்பா, நா கொஞ்ச நேரம் போயி படுக்கறேன். இதை பத்தி அப்புறமா பேசலாம்... என்றவள் போனை ஆன் பண்ணிக் கொண்டே தன் அறைக்கு வந்தாள்.போனில் ரஞ்சனியின் அம்மா காந்திமதி. “ என்ன சம்மந்திம்மா இப்படி பண்றீங்க. இது உங்களுக்கே நல்லாருக்கா. ஊரு உலகத்துல எம்மகளை பத்தி என்ன நினைப்பாங்க. அவ தான் தன் மாமியாரை வீட்டவிட்டு வெரட்டிட்டான்னும், அம்மாவையும் பையனையும் பிரிச்சு வெச்சுட்டாங்கன்னு எல்லாம் பேசுமே. அதுக்கு என்ன பதில் சொல்றதாம். வயசான காலத்துல உங்களுக்கு புத்தி ஏன் இப்படி வேல செய்யுது. படிக்கனும்., பாட்டுக் கேக்கனும், டூர் போகனும்னு ......எல்லாம்.இதயெல்லாம் செஞ்சு இனியென்னாகப் போகுது.இல்ல இனியெத்தக் கிழிக்கறீங்ளாம். பைத்தியம் கீது புடுச்சுப் போச்சா சம்மந்தி....” என்ற தன் சம்மந்தியைக் கோபமாகாக் குறுக்கிட்ட பூரணி “ “
ஓ...அதுக்குள்ளே எல்லாத்தையும் உங்ககிட்ட ஒன்னுவிடாம போட்டுக் கொடுத்துட்டாளா, எப்படி ..ரொம்ப நல்லா புள்ளைய வளர்த்திருக்கீங்க.”
“ஆமாம். அதான் எம்பொண்ணு...என்று சொல்லி கலகலவென்று சிரிந்த காந்திமதியோடு இணைந்து பூரணியும் சிரித்தாள்.
“ நீங்க செய்யறது தான் சரி சம்மந்தி. உங்க ஆசையும் நிறைவேறும். ரஞ்சனிக்கும் குடும்பப் பொறுப்பு வரும். கூடவே மாப்பிள்ளைக்கும் ரஞ்சுக்கும் இடையே கூடுதல் இணக்கமும் வரும். அவங்களுக்கு முடியாதப்ப போயி நின்னு உதவி செய்வோம். அவ்ளோ தான்.ஒரு அம்மாவா இதச் சொல்லக் கூடாது தான். ஆனாலும் உண்மையச் சொல்றது தானே நியாயம். எம் பொண்ணு நாலு நாளைக்கு என் வீட்ல இருந்தாவே என்னைய. படுத்தி எடுத்திடறாள். எப்படா கெளம்புவான்னு நெனைப்பேன். அப்பெல்லாம் உங்கள தா நெனச்சுப்பேன். நீங்க எப்படி தான் இவளச் சமாளிக்கறீங்ளோன்னு. இதுக அன்புன்ற பேருல நம்மள யூஸ் பண்ணிக்கறாங்கப்பா.....என்றவளின் பேச்சைச் சிரித்தபடியே ஆமோதித்தாள் பூரணி.
.jpeg)
அட!பல வீடுகள்ல நடக்கறத அப்பிடியே சொல்லிட்டீங்க.
ReplyDelete