மாலதி ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. நல்ல துறுதுறுன்னு எப்பவும் ஓடி ஆடி விளையாடும் ஒரு குழந்தை. சிறிது நாளாக அவளுடைய உடம்பில் மாற்றங்கள் வர ஆரம்பிக்கிறது. அவளுடைய அக்குள் மற்றும் பிறப்புறுப்பில் முடி வளர்கிறது. மார்பக வளர்ச்சி அதிகரிக்கிறது; இடுப்பு எலும்பு நன்கு வளர்ந்து, அங்கு ஒரு நளினம் தென்படுகிறது. குரல் கூட வெகு இனிமையாய் மாறி இருக்கிறது.
என்ன ஆயிற்று எனக்கு ? எதற்காக தன்னுள் இத்தனை மாற்றங்கள் வருகிறது என்று குழந்தைக்கு புரியவில்லை. இதை அம்மாவிடம் கேட்கலாமா வேண்டாமா என்ற ஒரு மனத்தடையும் ஏற்படுகிறது. மெல்ல மெல்ல இந்த குழப்பங்களால், அவளுடைய துருதுறுப்பு குறைந்து, ஒரு மௌனம் குடி கொள்கிறது.
இந்த அறிகுறிகளைப் பற்றிப் படிக்கும் போதே , இதன் காரணம் என்னவாக இருக்க முடியும் என்பதை நம்மில் பலரால் யூகிக்க முடியும். ஆம்.. அந்தப் பெண் இன்னும் சிறிது காலத்திற்குள் தன் வாழ்வின் முக்கியமான ஒரு காலகட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கப் போகிறாள். ஒரு பெண் பருவம் அடைவதற்கு முன்பாக ,உடலில் தோன்றும் மாற்றங்கள் தான் இவையெல்லாம்.
இந்த மாற்றங்களைப் பற்றி வெளிப்படையாக அந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு தெரிவிக்கக் கூடிய, அணுகுமுறைகள் கலந்துரையாடல்கள் வீடுகளிலோ அல்லது பள்ளிகளிலோ நடத்தப்படுகிறதா? என்று பார்த்தால் , பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
மாதவிடாயை, ஆரோக்கிய வாழ்வின் அங்கமாக பார்க்காமல், அதை ஒரு தீட்டாக, பெண்ணை ஒதுக்கி வைக்கும் நிகழ்வாகப் பார்க்கும் நம் கலாச்சாரத்தால் ஏற்பட்ட மௌனமே காரணம்.
மாதவிடாய் சமயத்தில் பெண் தீண்ட தகாதவள்; கோவிலுக்குள் செல்லக்கூடாது; வீட்டில் எதையும் தொடக்கூடாது; அவள் தனியாகத்தான் இருக்க வேண்டும்; தனிப் படுக்கை, தட்டு என்று ஓர் இடத்தில் ஒதுக்கி வைக்கப்படுவது போன்ற நிகழ்வுகள்தான், மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேசாமல், இருக்கக்கூடிய ஒரு மௌன கலாச்சாரத்தைத் தோற்றுவித்திருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் ஓரளவு குறைந்திருந்தாலும், மாதாந்திர நாட்களில் பெண்கள் தனி இடத்தில் (முட்டு வீடு) இருப்பதும், சாவ் பாடி கலாச்சாரத்தை பின்பற்றும் நேபாளம் போன்ற நாடுகளும், இன்னும் இந்த மௌனம் முழுமையாக உடைபடவில்லை என்பதைத்தான் பறைசாற்றுகிறது.
என் நட்பு வட்டத்தில் உள்ள தோழிகளிடம் மாதவிடாயைப் பற்றியும், அவர்களின் பெண் குழந்தை, பருவம் அடைவதற்கு முன்பு இதைப் பற்றி அந்தக் குழந்தைகளிடம் மனம் திறந்து பேசி இருக்கிறீர்களா? என்ற கேள்வியை வைத்து உரையாடினேன். முப்பது சதவீதத்தினர் மட்டுமே, தங்கள் பெண் குழந்தைகளிடம் இந்த மாற்றங்கள் தென்பட ஆரம்பித்ததுமே, பருவமடைதல் பற்றிய தகவல்களை குழந்தைகளிடம் பேசி , அவர்களைத் தயார் செய்து இருக்கிறார்கள்.
சிலர் இதை தங்கள் பெண்களிடம் பேசுவதற்குச் கூச்சமாக இருந்ததாகவும், தங்கள் அருகில் வசிக்கும் தோழிகளின் வாயிலாக குழந்தைகளுக்கு இதைப் பற்றிய தகவல்களைச் சொல்லியதாகவும் கூறினர்.
ஒரு சில குழந்தைகள், தங்கள் வகுப்பு தோழிகளுடன் உரையாடி, ஓரளவு பருவமடைதல் பற்றிய செய்திகளை அறிந்திருக்கிறார்கள்.
வாழையடி வாழையாய், மனித சமூகம் தொடர்ந்து மண்ணில் நிலைபெற , ஆதாரமான இந்த மாதவிடாய் என்ற இயற்கை நிகழ்வை அறுவெறுப்பாக பார்க்க வைத்து இருக்கும் இந்த சமூக மதிப்பீடுகள் தான் வெளிப்படையாகப் பேசுவதற்கு, தடை விதிக்கிறது என்பதை அறியலாம்.
ஒரு குறும்படம் ஒன்று சமீபத்தில் பார்த்தேன். அதில் ஒரு ஆண் நண்பன் தன்னுடைய தோழியை, திரைப்படம் பார்க்கச் செல்லலாம் என்று அலைபேசியில் அழைக்கிறான். அந்தப் பெண், எனக்கு பீரியட்ஸ். கொஞ்சம் சோர்வாக உணர்கிறேன் என்னால் வர இயலாது என்கிறாள்.
உடனே அந்த ஆண் நண்பனுக்கு ஒரு குறுகுறுப்பு வருகிறது. அத்துணை அந்தரங்கமான செய்தியை என்னுடன் பகிர்கிறாள் என்றால், என் மீது அவளுக்கு ஒரு பிரத்யேக அன்பு அல்லது காதல் இருக்க வேண்டும். இப்போதே என் காதலை வெளிப்படுத்துகிறேன் என்று மீண்டும் அவளை அழைத்து ஐ லவ் யூ என்று சொல்கிறான்.
அந்தப் பெண் அதிர்ந்து போய், அந்த நண்பனைத் திட்டி விட்டு அலைபேசியை வைத்து விடுகிறாள்.
இப்படித்தான் நம் சமூக மதிப்பீடுகள் இருக்கின்றன. இந்த மதிப்பீடுகளால் உருவான ஒரு அடர்ந்த மௌனத்தை உடைக்க வேண்டிய கட்டாயம் இன்றைய பெற்றோர்களாகிய நம் அனைவருக்கும் இருக்கிறது.
வெளிப்படையான உரையாடல்களை , நம் வீட்டில் , நம் பிள்ளைகளுடன் தொடங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
தங்கள் பெண் பிள்ளைகளிடம் இத்தகைய மாற்றங்கள் தென்பட ஆரம்பிக்கும்போதோ, அல்லது பத்து வயதைக் கடந்த பின்னரோ, அவரகளை அருகே அமர வைத்து, முடிந்தால் பெற்றோர்கள் இருவரும் இணைந்து உரையாட வேண்டும். இருவராக சேர்ந்து உரையாடும் பொழுது தான் இது அருவெறுப்பான விஷயம் இல்லை என்பதை அந்த பெண் குழந்தை முதலில் நம்பிக்கை பெறுவாள். சில குடும்பங்களில் ஆண்களுக்கு மிகப்பெரிய தயக்கம் இருந்தால், தாயாவது வெளிப்படையாக உரையாட வேண்டும்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் அவளை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நிகழ்வு என்பதை உணர வைக்க வேண்டும். மாதவிடாய், உதிரப்போக்கு இவை பற்றிய விவரங்களைச் சொல்ல வேண்டும்.
மலம் ,சிறுநீர் போன்று உடம்பு வெளியேற்றும் ஒருவகை கழிவு தான் பிறப்புறுப்பில் இருந்து வரும் இந்த உதிரம் என்பதை இயல்பாக அவர்கள் எடுத்துக் கொள்ள உறுதுணையாய் இந்த உரையாடல்கள் வழிவகை செய்யும். இல்லை என்றால் நம் சமூக ஊடகங்கள், விளம்பரங்களில் சானிட்டரி நாப்கின்களில் நீல நிற இங்கை ஊற்றி, இன்னும் கனத்த மவுனத்திற்குள் தள்ளி விடுவார்கள்.
எனக்கு 11 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒன்பது வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். அவர்களிடம் சில மாதங்களுக்கு முன்பு , என் மாதாந்திர நாட்களை வயிறு வலிக்கின்ற நாட்கள் என்று சொன்னேன். உடனே என் மகன் வயிற்றில் எண்ணெய் தடவி விடுமாறும் மகளிடம் கை கால்களை பிடித்து விடுமாறு வேண்டினேன். அவர்களும் உதவி செய்தார்கள்.
அடுத்த மாதமும் இதேபோன்று நிகழ்வு வர, குழந்தைகள் கவனித்துக் கொண்டிருந்து, "ஏன் இப்படி மாதாமாதம் உங்களுக்கு வயறு வலிக்கிற நாள் வருகிறது? " என்று கேட்டார்கள் .
இது சரியான தருணம் என்று உணர்ந்து, மாதவிடாயைப் பற்றி பிரமாண்டமான தகவல்களாகச் சொல்லாமல், அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில், எளிமையாக அடிப்படை தகவல்களை அவர்களுக்கு சொன்னேன்.
கருப்பை என்ற உறுப்பு ஒரு குழந்தையை பின்னாளில் தன்னுள் வைத்து வளர்ப்பதற்காக, இயற்கை செய்த முன் ஏற்பாடு தான் இந்த நாட்கள் என்றும், இந்த நாட்களில் பிறப்புறுப்பில் இருந்து உதிரப்போக்கு வரும் என்பதும் குழந்தைகளின் மொழியில் எளிமையாய் கதை போல சொன்னேன்.
இந்த நிகழ்வால்தான் அம்மா வயிற்றில் நாம் வளர்ந்து வந்து , பிறந்து இருக்கிறோம் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, அந்த நாட்களில் மிகவும் சமத்துப் பிள்ளைகளாக இருப்பார்கள். பெரிதாக என்னைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். நான் கேட்பதற்கு முன்பே ஓடி ஓடி அத்தனை உதவிகளையும் செய்வார்கள்.
தனக்கும் இக்ம், தன்னைச் சார்ந்த அம்மா, தங்கை, மனைவி, தோழி அனைவரையும் பரிவுடன் பார்க்கக் கூடிய பார்வை என் மகனுக்கும் வரும் என்பதை என்னால் உணர முடிகிறது.
அவர்களுடன் வெளிப்படையாக, அவர்கள் மொழியில் உரையாடியதன் விளைவுதான் இந்தப் புரிதல் என்பது நிதர்சனமான ஒன்று.
அடுத்து மாதவிடாய் நேரத்தில் தன் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுச் செய்திகளைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். ஏனென்றால் மாதவிடாய் சரியாக நிகழ்வது பெண்களின் ஆரோக்கியத்தின் அடையாளம் . மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சில சுகாதார பழக்கங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும்.
* அந்த காலகட்டத்தில் தினமும் இரு முறை நீராட வேண்டும்.
* உடலில் இருந்து வெளியேறும் ரத்தப் போக்கில் காற்று படும் பொழுது ,ஒருவித துர்நாற்றம் உண்டாகும். அதனால் எப்பொழுதும் பிறப்புறுப்பை சுத்தமாக கழுவ வேண்டும் .
* மாதவிடாய் காலங்களில் மலச்சிக்கல் இயல்பாக வரக்கூடிய ஒரு விஷயம். அதைத் தவிர்க்க நார்ச்சத்து அதிகம் உள்ள பச்சைக் காய்கறிகள், பழங்கள் , கீரைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
* மாதவிடாய் காலங்களில், பயன்படுத்தும் நாப்கின்களை குறைந்த பட்சம் ஐந்தாறு முறையாவது மாற்ற வேண்டும்.
* பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் உதிரம் தொடைகளில் பட்டு, நடக்கும் போது தொடைகள் உராய்ந்து அங்கே எரிச்சலையும், நோய்த்தொற்றுகளையும் உருவாக்கும். அதனால் எப்பொழுதும் தொடைப் பகுதியைச் சுத்தமான துணியால் ஈரம் போகத் துடைக்க வேண்டும்.
* இதோடு உபயோகித்த நாப்கின்களைத் தண்ணீரால் அலசி ஒரு பேப்பரில்ச் சுற்றி, பின்பு குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
* உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் கூட குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கின்களை மாற்றப் பழக்கப்படுத்த வேண்டும்.
இந்த அடிப்படைப் புரிதல்களை முதலில் குடும்பம் தான் குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு மாதவிடாயை பற்றி, எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களைப் பற்றி, ஆரோக்கியம் பற்றி பேசலாம். சரி.. ஆண் குழந்தைகளுக்கு இது தெரிய வேண்டுமா? இது பெண்ணின் பிரச்சனை. எதற்கு அவர்களுக்கு தெரிய வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்.
அதனால்தான் பெண்ணின் மாதவிடாய் காலத்தில், பெண் அனுபவிக்கின்ற வலிகள் உணர்வுகள், ஆரோக்கியப் பிரச்சினைகள் பற்றி பெரிதாய் அறியாதவர்களாக ஆண்கள் இருக்கின்றார்கள்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதனால் ஏற்படும் உணர்வு நிலை மாற்றங்கள், மனவெழுச்சிகள் போன்றவை பெரும்பாலும் அலட்சியமாய் கடந்து செல்லப் படுகிறது.
ஆனால் ஆண் குழந்தையிடம் வெளிப்படையாக மாதவிடாயை பற்றியும் அதன் சிரமங்களை பற்றியும் உரையாடும் பொழுது, சக உயிரான பெண்ணின் வலியை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அந்த நேரத்தில் பெண்களுக்கு, அவர்கள் உணர்வை வலியை புரிந்து கொள்ளும் சகோதரனாய், மகனாய், கணவனாய், நண்பனாய் ஆணை பரிணமிக்க வைக்கும்.
இந்தச் சமுதாயத்தில் ஆண் பெண் இருவரும் சக உயிர்கள், இருவரும் அன்பாய், ஆறுதலாய் அரவணைப்பாய் இணைந்து வாழுகின்ற வாழ்வியல் சூழல் வர வேண்டுமானால் இது போன்ற கலாச்சார மௌனங்கள் முதலில் உடைக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து உரையாடுவோம்; மௌனங்களை உடைப்போம்.
.....தொடரும்......
No comments:
Post a Comment