Sunday, November 12, 2023

உடைபடட்டும் கலாச்சார மௌனங்கள் - 5 - பூங்கொடி பாலமுருகன்

    



' ஒன்னாவதிலிருந்து அஞ்சாவது வரைக்கும் ஒரு பொண்ண ரொம்ப சின்சியரா லவ் பண்ணினேன் மிஸ்.. ஆறாவது படிக்கும் போது தான் தெரிஞ்சது அது எனக்கு பெரியப்பா பொண்ணு முறைன்னு.. அதுக்குப் பிறகு வெறுத்துப் போய் இப்பெல்லாம்  லவ்வே பண்றது இல்லைங்க' இப்படின்னு சொன்னது 13 வயசுல இருக்குற ஒரு பையன்...

நாலாவது படிக்கிற ஒரு பொண்ணுக்கு அஞ்சாவது படிக்கிற பையன் தன்னுடைய காதலை போய் சொல்றான். 

எட்டாம் வகுப்பு படிக்கிற பையனுக்கு , ஆறாம் வகுப்பு படிக்கிற பிள்ளை மேல காதல்..

இப்படியான செய்திகளை கேட்டால் உங்களுக்கு என்ன தோணும்...

மொளச்சு மூணு இலை விடல அதுக்குள்ள காதலா? 

ரொம்ப ரொம்ப சேட்டை. இப்பவே இப்படின்னா... இவங்க எல்லாம் பெரியவங்க ஆகி    என்ன பண்ண போறாங்களோ?...

இப்படித்தான் நம்மில் பெரும்பாலான பேர் அந்த குழந்தைகளை திட்டுவோம். முன்பெல்லாம் 17 அல்லது வயதில் வந்த காதல்.. தற்போது எல்லாம் 10 வயதில் ஆரம்பித்து விடுகிறது.  இதற்குக் காரணம் குழந்தைகள் மட்டும் தானா? நம் மனதை தொட்டு இதற்கு பதில் சொல்வோம். 

பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற பையனும் பெண்ணும் காதல் செய்து வீட்டை விட்டு ஓடிப் போகின்ற திரைப்பட காட்சிகளும், இந்த வயதில் பாய் பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட் இருந்தால் தான் கெத்து என்று சொல்லுகின்ற சோசியல் மீடியாக்களும் தானே , வியாபார நோக்கத்திற்காக  குழந்தைகளின் உணர்ச்சிகளை வெகுவாக தூண்டி விடுகிறார்கள். அதுபோன்ற சினிமாக்களை நாமும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் , சினிமா தானே என்று மௌனமாய் கடந்து விடுகிறோம். ஆனால் பிள்ளைகள் காதலிக்கிறார்கள் என்று தெரியும்போது அவர்களை அடித்து அல்லது திட்டி துன்புறுத்துகிறோம். இது சரியான அணுகுமுறையா?  என்று சிறிது யோசிப்போம்..

பள்ளி பருவத்தில் வரும் காதல், எதனால் வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக அந்த வயதில் உள்ள பல்வேறு குழந்தைகளிடம் பேசிய போது...

*  தனக்கென்று ஒரு காதலி இருப்பது  நண்பர்கள் மத்தியில் ஒரு கெத்து...

**தான் காதலிக்கும் பெண்  தங்கள் நட்பு வட்டத்தை கடந்து செல்லும் பொழுது தன்னுடைய பெயரை நண்பர்கள் உச்சரிப்பது ஒரு வித மகிழ்ச்சியை தருகிறது.

** தன்னிடம் பேசாவிட்டாலும் ஒரு சின்ன புன்முறுவல் போதும்..

** தான்  வளர்ந்து விட்டேன் என்பதை  உணர முடிகிறது.

** சின்ன சின்ன பொருட்கள் பரிசாக தரும் போது ஒரு வித மகிழ்ச்சி மனதில் பரவுகிறது.

** பேச முடியாவிட்டாலும் தூரத்திலிருந்து பார்ப்பது ஒரு மகிழ்வை தருகிறது..

இந்த கருத்துகளை தான் பெரும்பாலும் அந்தக் குழந்தைகள் சொன்னார்கள். 

மொத்தத்தில் இந்த வயதில் வருவதை காதல் என்று சொல்வதை விட இனக் கவர்ச்சி என்று சொல்லலாம். பெரும்பாலும் எந்த தொலைநோக்கு சிந்தனையும் இல்லாத ஒரு கள்ளம் கபடம் இல்லாத அன்பு மட்டும் தான் பெரும்பாலும் இருக்கும். இந்தப் பெண்ணை அல்லது பையனைத் தான்  திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற எதிர்காலச் சிந்தனைகள் ஏதுமின்றி, அப்போதைய தினத்தில் சிறு சிறு மகிழ்ச்சியை காணும் ஒரு வயது. பெரும்பாலும் அவர்களுக்கு இந்த வயதில் காதல் என்ற உணர்வில் காமம் கலந்திருப்பது இல்லை. எனவே இந்த காதலைப் பற்றி அதிகம் பயப்படத் தேவையில்லை.

அப்படி என்றால் அவர்கள் காதலிக்கட்டும் என்று கண்டுகொள்ளாமல் விட்டு விடலாமா என்ற கேள்வி நமக்கு வரும். 

கண்டிப்பாக இந்த உணர்வுகள் அவர்களின் படிப்பை பாதித்து விடக்கூடாது. மேலும் அவர்களுக்குள் ஒரு கோஷ்டி மோதலையும் உருவாக்கி விடக்கூடாது. 

திட்டியோ அடித்தோ அவர்களை நாம் மாற்றுவது கடினம்..பிறகு என்ன என்ன செய்வது ? 

குழந்தைகளுடனான நம் மனம் திறந்த உரையாடல்கள் மட்டும் தான். நம் மனதை தொட்டுச் சொன்னால் நம்மிடம் பெரும்பாலான பேர் இந்த சிறுவயது இன கவர்ச்சியை கடந்து இருப்போம். அதில் மாட்டிக்கொண்டு நம் வாழ்வை தொலைத்திருக்கிறோமா என்ன? இல்லை தானே...

நம் கடந்த கால அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து, கடந்த கால அனுபவங்களில் இருந்து, நம் பிள்ளைகளின் புதிய அனுபவத்தை அன்புடன்  வழிநடத்தலாம். நம்முடைய வெளிப்படையான உரையாடல்கள் இந்த புதிய உணர்வுகளை சமாளிக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும்.

பதின்பருவ வயதில் உள்ள ஒரு பெண் குழந்தை தன் தாயிடம், தன் வகுப்பில் படிக்கும் தன் நண்பன் ஒருவனை நான்  காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன் என்று பகிர்ந்து கொண்டாள்.. அந்தத் தாய்க்கு முதலில் சிறிது அதிர்ச்சி வந்தாலும், மெல்ல தன் குழந்தையுடன் உரையாடி, அவளுக்கு வந்திருப்பது காதல் அல்ல. அந்த நண்பனின் மீது அதீத அன்பு. அதிகப்படியாக சினிமாக்களை பார்ப்பதன் விளைவாக அதை காதல் என்று நீ நினைத்துக் கொள்கிறாய். எதனால் அந்தப் பையனை உனக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்டார். குழந்தை காரணங்களைச் சொன்னவுடன் ,   மற்றவர்களை காட்டிலும் அவனின் மேல் சிறிது அன்பு அதிகம். உனக்கு மட்டுமே நண்பனாக இருக்க வேண்டும் என்ற பற்று அதிகமாக உனக்குள் இருக்கிறது. அதை  காதல் என்று எடுத்துக் கொண்டாய்..இந்த காதல் என்பதை மறந்து விட்டு மிக இயல்பாக அவனுடன்  நட்பில் இரு. இந்த எண்ணம் ஒரு முதிர்ச்சி வரும்பொழுது உன்னிடம் இருந்து விலகி விடும். அதையும் மீறி இந்த அன்பு உனக்கு தொடர்ந்தால், உரிய வயது வரும்போது இதை பற்றி பேசலாம் என்று அந்த குழந்தையிடம் அன்பான வார்த்தைகளில் சொன்னார். மகளும் தாயின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, படிப்பில் எந்தவித கவனிச்சிதறலும் இன்றி, இயல்பாய் அந்த உணர்வை கடந்தாள். 

இந்த நிகழ்வில் நாம் கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கிறது. 

ஒளிவு மறைவின்றி தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கையை அந்த தாய் அந்த குழந்தையிடம் பெற்றிருக்கிறார்.

இந்த நம்பிக்கையை ஒரே நாளில் அவரால் கட்டமைத்து விட முடிந்திருக்குமா?.. இல்லை.. தன் மகளிடம் சிறு வயதிலிருந்தே நட்பை போல, அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும், சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருப்பார். 

அந்தக் குழந்தை தவறு செய்திருந்தால் கூட தண்டிக்காமல், கோபப்படாமல்,  அவளுக்கு புரியக்கூடிய வகையில் பேசி மீண்டும் அந்தத் தவறு நிகழாத வண்ணம் அந்த குழந்தையின் மனதை மாற்றி இருப்பார். அதுபோன்ற நிகழ்வுகள் தான் குழந்தைக்கும் தாயிக்குமான  நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மிக அழகாக அந்த குழந்தையை அவளுக்கு பிடித்த விஷயத்தில் மடைமாற்றம் செய்தார். 

நாம் நம் குழந்தைகளிடம், ஒளிவு மறைவின்றி அனைத்தையும் நம்மிடம்  பகிர்ந்து கொள்ளும் சூழல் ஏற்படுத்தி  தந்திருக்கிறோமா? நம் வாழ்வில் நடந்த அனுபவங்களைச் சொல்லி,  அவர்களை வழிநடத்துகிறோமா? என்பதை நமக்குள் கேட்டுக் கொள்வோம்.

நாங்கள் உன்னுடைய பெற்றோர்கள்.. நாங்கள் சொல்வதைத்தான் நீ செய்ய வேண்டும் என்ற அதிகார தோரணையில் இருந்து, இறங்கி வந்து, இது உன்னுடைய வாழ்க்கை அதை எப்படி வாழ வேண்டும் என்ற முழு சுதந்திரமும் உனக்கு உண்டு. ஆனால் நீ தவறும் வேளையில் , அதை பெற்றோராக சரி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இதற்கெல்லாம் வீடுகளில் மௌனங்கள் உடைக்கப்பட்டு மனம் திறந்த உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.

மௌனங்களை உடைப்போம்; உரையாடல்களை தொடங்குவோம்.

தொடர்ந்து உரையாடுவோம்...


1 comment:

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...