எண்பதுகளில் பள்ளிப்பருவத்தை கடந்த நான் என்றோ எங்கோ நூலகத்தில் படித்த சில கட்டுரைகள் வழியாகவோ, முத்தாரம், கல்கண்டு மற்றும் சில சஞ்சிகைகளின் வாசிப்பின் ஊடாகவோ அமெரிக்கா என்று ஒரு பிரமாண்ட பிம்பம் என்னுள் கடமைக்கப்பட்டு அங்கே சென்றடைய கல்வி பேருதவியாக இருக்கும் என்று சிறுவயதில் நம்பியவன் நான்.
தொன்னூற்றி எட்டில் சென்னையில் இயந்திரவியல் பொறியியல் பட்ட படிப்பும் முடித்தாகி விட்டது. தமிழக அரசின் குடும்பத்தின் முதல் பட்டதாரி நிதியுதவியுடன் படித்தாலும் அமெரிக்கா சென்று மேல் படிப்பு படிக்கும் அளவுக்கு வீட்டில் பொருளாதாரம் சிறப்பாக இல்லாத காரணத்தால் அதை தள்ளிப்போட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். பின்னர் பலப்பலவேலைகள் செய்து பணம் சேமிக்கும் வழிகளில் என்னை ஈடுபட்டு கொண்டேன்.
GRE , TOEFL எல்லாம் எழுதி அமெரிக்க கல்லூரி ஒன்றில் இடமும் கிடைத்து F1 விசாவுக்கு சென்ற பொழுது 9/11 என்று அழைக்கபடும் இரட்டை கோபுர தாக்குதல் நடந்து முடிந்திருந்த தருணம். விசா லேது என்று சொல்லி இருமுறை சென்னை ஜெமினி பாலத்தின் கீழ் இருக்கும் அமெரிக்க எம்பஸி அலுவலகம் கைவிரித்து விட்டது. அத்துடன் என் அமெரிக்க கனவும் கலைந்துபோனது என்றே சொல்லலாம். சரி அமெரிக்கா தான் போக முடியவில்லை அமெரிக்க நிறுவனமான IBMல் பெங்களூரிலாவது சேர்ந்து மனதை தேற்றலாம் என IBMல் பணியில் சேர்ந்துகொண்டேன் .
பின்னர் கணணி லவ்தீக வாழ்வு யூகேவில் குடியமர்த்தி சுமார் 20 ஆண்டுகள் வரைக்கும் அமெரிக்கா போக வேண்டும் என்ற எண்ணம் பெரிதாக தலைதூக்கவே இல்லை என சொல்லலாம். போன மாதம் அக்டோபரில் அலுவலகம் வழியாக அவசரமாக உங்கள் அணியிலிருந்து செல்ல இருந்தவர் வேறு காரணங்களால் செல்ல இயலவில்லை நீங்கள் போக இயலுமா என்றோரு கோரிக்கை வந்தபொழுது கரும்பு தின்ன கூலியா என எண்ணிக்கொண்டே உடனே சரி சொல்லிவிட்டேன். பின்பு தேதியை குறித்துக்கொண்டு மீண்டும் பழைய அமெரிக்க பற்றிய ஆர்வம் தொற்றிக்கொண்டது போல ஒரு வாரம் ஓடிற்று. Virgin Atlantic விமான நிறுவனத்தின் விமான எண் VS-19 ல் ஏறி அக்டோபர் 19ம் தேதி லண்டனில் இருந்து சான்பிரான்ஸிஸ்கோ நோக்கி பயணம். ஏற்கனவே விமானம் பயணப்படும் தகவல்களை இணையத்தில் தேடி ஜன்னல் சீட்டையும் செக்-இன் செய்து பிடித்துக்கொண்டேன்.
யூகே பாஸ்போர்ட்டில் போவோருக்கு ஓன்லைன் விசாவே (அது விசா அல்ல பயணம் செய்வதற்கான entry clearance மட்டுமே என்பது பின்னர் தான் தெரிய வந்தது வேறு கதை) போதும் என்பதால் ஒருவாரம் முன்னரே ESTA என்றழைக்கப்படும் அமெரிக்கா இணையம் மூலம் பதிவும் செய்து பயண முன்அனுமதியும் பெற்றாகி விட்டது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்கள் பூமிப்பந்தின் வடதுருவ கூரை வழியாக மேலேறி கிரீன்லாந்து நோக்கி பயணித்து பின்னர் கீழிறங்கி கனடா வழியாக தென்மேற்கு நோக்கி பயணப்பட்டு அமெரிக்க மேற்குக்கரை நகரங்களை சென்றடைவதுதான் வழித்தடம் என்பதை இணையத்தில் தேடி அறிந்துகொண்டேன்.
Virgin Atlantic VS -19 விமான பயண வழித்தட வரைபடம்
விமானத்தில் எனது இருக்கை ஜன்னல் வடக்கு பக்கமாக இருந்தபடியால் வழித்தடம் முழுவதுமாக கிரீன்லாந்தை ரசித்தபடி பயணப்பட்டேன். சரியாக மதியம் 12 45 மணிக்கு லண்டனில் இருந்து விமானம் பறக்க தொடங்கியது. பயண நேரம் முழுவதும் பகல் என்பதால் சுமார் 40 ஆயிரம் அடியில் இருந்து கீழிருக்கும் பகுதிகளை படமெடுத்தும் ஆர்வமிகு விழிகளின் வழியாக மனதிற்குள் உள்வாங்கியும் 10 மணிநேர பயணத்தையும் பேரார்வத்துடன் கடத்துவது ஒரு அற்புத அனுபவம் என்றே சொல்லலாம்.
36 ஆறாயிம் உயரத்தில் இருந்து கிரீன்லாந்து பனிச்சிகரங்கள்
மனித சுவடுகளே அற்ற கீரீன்லாந்தை கடந்து கனடாவின் கியூபெக், ஒண்டாரியோ மாகாணங்கள் மேலாக விமானம் பயணித்து அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாகாணம் வழியாக அமெரிக்காவினுள் நுழைந்தபொழுது ஒரு பால்யவயது சிறுவனின் கண்கள் வழியாக அமெரிக்காவை எட்டி பார்த்த தருணம் இன்னும் மனதில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இரு பத்தாண்டுகள் முன்பே மாணவனாக அங்கே கால்பதித்து இருந்தால் என்ன செய்திருப்போம் என்பதை எண்ணி ஒருவித மனத்தவிப்பும் கூட சேர்ந்துகொண்டது தான் உண்மை. அமெரிக்க மாகாணங்கள் வழியாக 40 ஆயிரம் ஆடி உயரத்தில் எங்கோ காற்றில் பறந்துகொண்டே மனமும் உடலும் பயணப்பட்டது . விமானம் ஒரேகன் மாகாணத்தின் சால்ட் லேக் சிட்டி(Salt lake city) மீது பறக்கும் பொழுது தென்மேற்கு திசையில் இருந்து திரும்பி நேர் மேற்காக சான்பிரான்ஸிஸ்கோ நோக்கி பயணப்பட்டது.
கடைசி இரண்டு மணித்தியால பயணத்தில் காலிஃபோர்னியா மாகாணத்தின் ஊடாக பயணப்பட்டு சான் பிரான்ஸிஸ்கோவை சென்றடையும் பொழுது உள்ளூர் நேரம் மதியம் மூன்றுமணி . இறங்கிய பின்னர் அமெரிக்க குடியுரிமை பரிசோதனை ஊழியர் முன்பு நின்ற பொழுது தான் தெரியவந்தது என் கைபேசி பாட்டரியின்மையால் உயிரற்று கிடந்த உண்மை . எனது எந்த பயண திட்ட அலுவல் தகவலையும் காட்டமுடியாத ஒரு சூழல். மற்றபடி மனதால் எந்த தடுமாற்றமும் ஆகவில்லை என்பதை போல உள்ளூர ஒருவித பயத்துடன் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தேன்.
ஏனென்றால் குடியுரிமை அலுவலருக்கு என்னை திருப்பி அனுப்ப அனைத்து உரிமையும் உள்ளது என்ற நிதர்சனம் முன்னரே நான் அறிந்து கொண்ட தகவல் தான். அதுவும் முதல் முறை அமெரிக்க பயணம் என்பதால் அவர்களுக்கு கேள்விக்கணைகள் தொடுக்க சந்தர்பங்களை நானே உருவாக்கி விட்டதுபோல இருந்தது. எங்கே தங்குகிறோம் எந்த தேதி திரும்பி செல்கிறேன் போன்ற விபரங்களை வாய்வழி உரையாடலாக சொல்ல அவர் அதை நம்பவில்லை என்பதை என்னால் ஓரளவு யூகிக்கிக்க முடிந்தது.
அதுவும் முதல் முறையாக அமெரிக்காவில் நுழையும் பயணத்தின் பொழுது பயண தகவல் டாக்குமெண்டகளை பேப்பர் காப்பி பிரிண்ட் இல்லாமல் சென்றதால் எவ்வளவு பெரிய சிக்கலில் தேவையே இல்லாமல் மாட்டிகொண்டேன் என்பது அப்பொழுது தான் மண்டைக்குள் உரைத்தது. மாப்பிள்ளை நீங்க வரிசையில் இருந்து வெளியில் வாங்க உங்களுக்கு தனியா மரியாதை செய்யவேண்டும் என்று அழைத்து சென்று ஒரு அறையில் தங்கவைத்தார் ஒரு கருப்பு உடை அணிந்த குடியுரிமை அலுவலர்.
பின்னர் தான் புரிந்தது அமெரிக்கக் குடியுரிமை அலுவலக ஏழரை கும்பல்கள் விசாரணை என்ற பெயரில் அங்கு வருவோரை என்ன பாடெல்லாம் படுத்துவார்கள் என்பது .......
...அமெரிக்கப் பயணம் தொடரும்...
சுவாரஸ்யமான அனுபவங்களை திடுக்கிடலுடன் தொடரும் என்று முடித்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் அடுத்த தொடருக்கு ஆவலுடன்
ReplyDeleteசெம்ம ...
ReplyDeleteவாய்விட்டுச் சிரித்தேன். மாப்பிள்ளை மரியாதை ஏழரை என்று சரவெடி
ஆஹா..என்ன ஒரு எழுத்து. அனுபவத்தைப் படிக்கும் வாசகருக்கும் அருமையாகக் கடத்தி இருக்கிறீர்கள்
ReplyDeleteVery nice wordings, surprise ooda nalla irukku
ReplyDelete