Friday, December 1, 2023

தீபாவளி - கௌசல்யா பாஸ்கர், சீனாபுரம்

ஒவ்வொரு வீட்டிலும் நெருங்கியது தீபாவளி..

அவரவர் வசதிக்கு தகுந்தாற் போல், புதுப் பொருட்கள் வாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டி அதனை செயல் படுத்தி கொண்டு இருந்தார்கள்..

தன் தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுத்து விட்டு, தனக்கு தேவையானதையும் தீபாவளிக்குள் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தான் யுவராஜ்...

தன் இடுப்பில் இருந்த வெள்ளி அரணா அறுந்து ஒரு வார காலம் ஆகி விட்டது..
தீபாவளி ஷாப்பிங்குடன் சேர்த்து இதையும் மாற்றி விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்..

அதற்காகத் தன் மனைவி மாலினியுடன் சேர்ந்து தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்னராக கடை வீதிக்குச் சென்றிருந்தான்..இருவரும் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் விலை உயர்ந்த துணிமணிகளை எடுத்துக் கொண்டு, ஒரு பெரிய நகைக்கடையில் வெள்ளி அரணாவையும் வாங்கினார்கள்..

யுவராஜ்க்கு மிகப் பெரிய மகிழ்ச்சி..

மாலினியிடம், 'ஒரு வாரமாக இந்த அரணா இல்லாமல் என்னவோ போல் இருந்தது' என்று கூறினான்..

அதற்கு மாலினி, 'ஆமாங்க, அரணாவோ, மோதிரமோ எதுவாக இருந்தாலும் போட்டுக்கொண்டே இருந்து விட்டு, திடீரென்று இல்லையென்றால் அப்படித்தான் இருக்கும்' என்று கூறினாள்..

கூட்ட நெரிசலில் காரை பார்க் செய்ய முடியாததால், சற்று தொலைவில் ஒரு ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார்கள்..இருவரும், மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டு கார் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார்கள்...

அப்பொழுது, உயரமான உருவம், ஆனால் அதற்கு சம்பந்தம் இல்லாத உடற்கட்டு, நரைத்த தாடி மற்றும் தலை முடியுடன் துணிக்கடை வீதிக்கு கொஞ்சமும் பொருந்தாத பேண்ட் சட்டையுடன் ஒருவர் வேகமாக கடந்து சென்றார்.அவரைக் கண் இமைக்காமல் பார்த்தான் யுவராஜ்..

ஆம் ....அவர் ஒரு பெல்ட் வியாபாரி போலும்..அவருடைய இரண்டு கைகள் மற்றும் தன் இடுப்பில் இருந்த பெல்டையும் ஒரு ஸ்டேண்டாக உபயோக படுத்தி பெல்ட்களை சுற்றிலும் தொங்க விட்டிருந்தார்..

தீபாவளிக் கூட்டத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் வேகமாகவும் அதே சமயம் உற்சாகத்துடன் தன் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்...

விளம்பரங்களில் வரும் அழகுப் பெண்களின் புன்னகையும், நளினமான நடையும் இவரிடம் தோற்றுத்தான் போயிருந்தன...

அவரை வேகமாக நிறுத்தி தன் இடுப்புக்கு தகுந்தாற் போல் பெல்டையும் பேரம் பேசாமல் வாங்கிக் கொண்டான் யுவராஜ்...

அந்த வயதானவர் அதே உற்சாகத்துடன் அடுத்த வாடிக்கையாளரை சந்திக்க ஆயத்தமானார்..

யுவராஜ் மீண்டும் ஒருமுறை புன்னகையுடன் அவரைப் பார்த்து விட்டு தன் காரை நோக்கி விரைந்தான்..

திட்டம் போட்டு வாங்கிய மகிழ்ச்சியை விட (வெள்ளி அரணாவைவிட) தற்செயலாகக் கிடைத்த மகிழ்ச்சியில் மனநிறைவு அடைந்தான் யுவராஜ்...
      

2 comments:

  1. நல்ல கதை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மனிதத்தைப் பறை சாற்றும் கதை..சிறப்பு

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...