1970 ஆம் ஆண்டு. நான்காவது ஐந்தாவது படிக்கும் வயது. அப்போதெல்லாம் நமது வாழ்க்கை முறையில் பண்டிகைக் காலங்கள் அதிலும் குறிப்பாக மாரியம்மன் பண்டிகை, மாட்டுப் பொங்கல், தேர்த்திருவிழா அதற்கடுத்து தீபாவளி மட்டுமே கல்யாணங் காட்சிகளுக்கு அடுத்து மகிழ்ச்சியான அனுபவங்களைத் தரும் நாட்கள்.
மாரியம்மன் பண்டிகைக்கு முதலிடம் என்பதற்கு காரணம், அது ஒரு ஒருவார மகிழ்ச்சியான நடப்பு.
எப்போது வரும் என்று ஒரு மாதத்திற்கு முன்பே ஏங்கவைக்கும் பிடிப்பு. மாட்டுப் பொங்கல் அதுபோல, காரணம் நாலு நாட்கள் விடுமுறை. அதோடு மாடுகளை சுத்தம் செய்வது, வண்டிகளை சுத்தம் செய்வது, அதற்கு சாயம் பூசுவது, பொங்கல் வைத்து ஆடு, மாடு, எருமைகளுடன் கழிப்பது என்பது மகிழ்ச்சியைத் தரும். மற்றொன்று தேர்த்திருவிழா, ஒரு வாரம் என்றாலும் கடைசி நான்கு நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சி, பாட்டுக் கச்சேரி, நாடகம், சினிமா என்று அன்றைக்கு அது பொழுதுபோக்குகளில் மேலோங்கி இருந்தது உண்மை. தீபாவளியும் மறக்கமுடியாது.
தேர்த்திருவிழாவில் கடைவீதி சென்று பல கடைகளை ஆச்சரியத்தோடும், ஏக்கத்தோடும் வேடிக்கையில் விழுங்கியது, அப்போது ஒரு சிலதை மட்டும் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனுடன் பெரிய ராட்டன தூரி, கொடத்தூரி, பலூனை துப்பாக்கி கொண்டு சுடுவது, மரணக்கிணறு என்று பைக் மற்றும் மாருதி கார் கொண்டு அவர்கள் செய்யும் சாகசத்தில் உறைவது, கடைசியில் கிளிமூக்கு மாங்காயுடன் வீடு திரும்புவது என்பது வாடிக்கை.
மாரியம்மன் பண்டிகை அந்த வயதில் உயிர்ப்போடு இருந்தது என்பதை இப்போது நினைக்கையில் மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பூப்போடும் நாளில் ஆரம்பித்து, கம்பம் நடும் நாளில் தொடங்கி தினமும் இரவு மற்றும் அதிகாலை நான்கு மணிக்கு மேல் ஆரம்பித்து ஏழு மணி வரை கோவிலில் தப்பட்டை அடித்து ஆட்டம் ஆடுவது என்பது ஒருவிதமான மகிழ்ச்சியான போக்கு. அது கம்பம் பிடுங்கும் விழா முடியும் வரை தொடரும். கிராமத்தில் பிறந்தவனுக்கு ஆட்டம் பாட்டம் என்பதற்கான வடிகால் அது. நான் மட்டும் எப்படி மாறி பிறக்க முடியும். பள்ளிக்குச் செல்வதில் ஒருபோதும் ஆர்வம் இருந்தது இல்லை, அதுவும் நான்கு அல்லது ஐந்து மணிக்கு எழுந்து படிப்பது என்பது அந்தவயதில் அல்சர் வரும்மளவு ஒரு மன அழுத்தம் தருபவை. ஆனால், நமக்கு பிரியமான விசயங்களில், அதாவது மாரியம்மன் பண்டிகையை எடுத்துக்கொள்ளுங்கள், எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் எழுந்து போய் அங்கே பறை இசைக்கு தகுந்தபடி நடனமாடும் ஆட்களுடன் சேர்ந்து அவர்களுக்கு பின்னாடி, நாமும் ஆடுவது என்பது கற்றுக்கொள்வதுடன் களி ஆட்டம் போடுவது என்பது ஒருவித சந்தோஷம். அதை எப்படி வார்த்தையில் வர்ணிக்க முடியும். ஒன்று அவர்கள் போல் நானும் அதே மாதிரி ஆடினால் ஒரு பெருமை, இன்னொன்று அது முடியாவிட்டால் முயற்சி செய்வது ஒரு வித ஆறுதலான மகிழ்ச்சி ஆனாலும் எல்லாவற்றையும் மறந்து ஒருவிதமான நிலை அதற்குப் பெயர் என்ன என்று சொல்லத் தெரியவில்லை.
அப்படி ஒருநாள் அதிகாலை எழுந்து கோவிலில் வந்து ஆடிக்கொண்டிருக்கும் போது எனது தந்தை ஆறு மணி இருக்கும் என்று நினைக்கிறேன் வந்து அழைத்துச் சென்றுவிட்டார். அவர் மதிப்பிடும்படியான ஒரு கல்லூரியில் வேலை செய்வதால் நான் அங்கு ஆடுவது அவருக்கு கௌரவ குறைச்சல் என்பது எனக்கு மிகவும் கவலையான வருத்தம். இதில் தவறு ஒன்றும் இல்லை என்று சொல்லக் கூட திராணியற்ற, யோசிக்க முடியாத வயது. இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நமது விருப்பம், அதை முறியடித்து நமக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வது தவிர்க்க முடியாதது. அந்த புதன்கிழமை இரவு விளக்குமா எடுத்துக்கொண்டு அதன் பின்னாடி ஆடிக் கொண்டு கடைசிவரை செல்வது பல திருப்பங்கள் நிறைந்த மகிழ்ச்சியான பொழுதுபோக்கு..அப்படி வரும்போது, ஊர் நடுவில் திடீரென்று பூசாரிக்கவுண்டர் அவர்களுக்கு சாமி வந்தபின், அவரை பிடித்து அல்ல!, அல்ல! அந்த சாமியைப் பிடித்து கட்டுக்குள் கொண்டு வருவதற்குள், அது கோழியை கேட்க, பிறகு எலுமிச்சம் பழம் கொடுத்த போது அதை அப்படியே வாயில் போட்டு, பல்லில் நெறித்து, (கோழி இருந்தால் என்னவாகியிருக்கும் என நாம் யோசிக்க), திடீரென்று கிழக்குப்புரம் பொம்பிட்டியாருக்கும் சாமி வந்துவிட்டது..
எங்கள் ஊரில் இருக்கும் ஒரே சாமி மாரியாத்தா எப்படி இரண்டு பேருக்கும் வரும் என்று இப்போது யோசித்தது அன்றைக்கு மிரட்சியுடன் வேடிக்கை பார்க்க மட்டும் முடிந்தது. பிறகு ஒருவழியாக அவர்கள் பாட்டோடு கூடிய அருள்வாக்கு சொல்ல, சிலர் முற்றிலும் தெரிந்ததாக அவர்களிடம் பதிலுக்கு கேள்வி கேட்டு..அதில் ஒரு கேள்வி மட்டும் இரண்டு சாமிகளிடமும் கேட்கப்பட்டது, எப்பசாமி மழை வரும் என்பது, அவர்களிடமிருந்து பாட்டுதான் வந்தது சரியான பதில் வரவில்லை. பிறகு அவர்கள் மேல் குடம் குடமாக தண்ணீரை ஊற்றிய பிறகு, சாமி மலையேறிவிட்டதாக எல்லோரும் சொல்லும்போது, நான் பக்கத்தில் இங்கே மலை எங்கே இருக்கிறது என்று அப்பாவியாக யோசித்தது ஞாபகமிருக்கிறது. பிறகு அங்கிருந்து கோவில் வரை ஆடிக்கொண்டு விளக்குமா தட்டுகளுடன் பெண்கள் அனைவரும் கோவிலுக்குள் சென்று ஒரு ஓரமாக அதை வரிசையாக கிடத்துவார்கள்.
அடுத்த நாள் காலையில் கிடா வெட்டுவது..அது அருவெறுப்பு கலந்த விறுவிறுப்பு. மாரியம்மன் கோவிலுக்கு கிடாய் வெட்டுவது என்பது சமீப காலங்களில் வந்த பழக்கம் என்று என் தந்தையார் கூறியதை ஞாபகப்படுத்துகிறேன். அதற்கு அவர் சொன்ன காரணம் மாரியம்மன் ஒரு சைவச்சாமி என்பது. பிறகு எப்படி இப்படி ஆனது என்று தெரியவில்லை.
பலரும் தங்கள் தோட்டத்தில் வருடா வருடம் மாரியம்மன் பண்டிகைக்கு கிடாய் விடுவது என ஒரு குட்டியை வாங்கி அதற்காக வளர்த்துவார்கள். அது அன்று காலை கோவிலில் பூசாரியிடம் தீர்த்தம் வாங்கி துலுக்கிய பின் வெட்டப்படும். ஒரு சிலதின் ஆயுட்காலம் விரைவாக முடிந்துவிடும். அப்படியில்லாமல் சிலது என்னதான் தீர்த்தத்தை மேலே தெளித்தாலும் அப்படியே நின்று கொண்டிருக்கும். அந்த கிடாயின் உரிமையாளருக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கும். பக்கத்தில் நிற்பவர் கேட்பார் “என்ன சாமி குத்தம் ஆகி போச்சாட்ட இருக்குதே?!.. நீ நல்லா வேண்டிக்கப்பா..” எங்கள் ஊரில் குறும்பு செய்வதற்கென்றே ஒரு சிலர் இருப்பார்கள்.. துலுக்காத அந்த கிடாய் அசையாமல் நின்று கொண்டிருக்கும் திடீரென்று ஒரு அசைவு, அதாவது கழுத்தைத் திருப்பியோ அல்லது முன்னால் நகர்ந்து ஏதாவது செய்யும்போது அவர்கள் பாட்டுக்கு உடனே “ஓ.. ஓ.. கிலலல லோ..” என்று ஓசையிட்டு மற்றவர்களுக்கு அதிர்ச்சி உண்டுபண்ணி வெட்டுவதற்கு வழி வகுப்பார்கள். இங்கு யாரும் யோசித்து கேள்வி கேட்பதற்குள், வேலு நாயக்கரின் அருவா பதில் சொல்லியிருக்கும். இதையெல்லாம் தாண்டி ஒரு சிலது அப்படியே நிற்கும். பிறகு கோயில் பூசாரி மாரியம்மன் முன் சென்று ஒரு பூஜை செய்து திருநீறு கொண்டு வந்து மீண்டும் தலையிலிருந்து போட்டு தீர்த்தம் தெளித்து ஒரு வழியாக அதன் ஆயுளை முடித்து வைப்பார். பிறகு நமது மாநில அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது.. அதாவது மாரியம்மன் கோவிலில் யாரும் கிடாய் வெட்டக்கூடாது என்று. இப்போதெல்லாம் கோவிலில் தீர்த்தம் வாங்கிக்கொண்டு போய் அவரவர் தோட்டத்திலோ வேறு இடத்திலோ கிடாய் மீது தீர்த்தம் தெளித்து அது துலுக்குதோ இல்லையோ, வெட்டி விருந்து படைப்பது வழக்கமாகிவிட்டது.
அது போன்று எங்கள் வீட்டுக்கும் நிறைய உறவினர்கள் வந்ததைப் பார்த்தேன். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எனக்கு அந்யோன்யம் அல்ல. பிறகு எப்படி வீட்டில் உட்கார்ந்து இருக்க முடியும்.
மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு அந்த ரேடியோ பெட்டியை வைத்துக்கொண்டு கிராமபோன் ரெக்கார்டை மாத்தி மாத்தி வைப்பதை பார்த்துக்கொண்டு அவர்களுக்கு உதவியாக நானும் செய்து பார்ப்பதில் கொஞ்சம் பெருமையாக இருந்தது. அதைவிட மிக முக்கியமாக மைக்கை பிடித்து எல்லோருக்கும் அறிவிப்பு செய்வார்களே, அதை எப்படியாவது ஒரு முறை வாங்கி நானும் செய்ய வேண்டுமென்று அதற்காக அவன் சொல்லும் வேலையெல்லாம் செய்துகொண்டு ஒரு இரண்டு மூன்று மணி நேரம் அங்கேயே கிடந்தேன். ஒருவழியாக அது என் கைக்கு வந்தது. "விளக்குமா எடுத்துச் செல்பவர்கள் வந்து எடுத்துச் செல்லலாம்” என்பதும் அதன் கடைசியாக “இன்னும் இரண்டு மூன்று விளக்கமா தட்டுகள் எடுத்துச் செல்லாமல் அப்படியே இருக்கிறது வந்து எடுத்துச் செல்லவும்". இது போன்ற அறிவிப்புகள் எனது குரல் மூலம் எங்கெல்லாம் சென்று இருக்கும் என்று வானத்தில் பறந்த மகிழ்ச்சி. எவ்வளவு பெருமையான தருணம் அது. ஆனால் இது என் தந்தையின் காதுக்கும் போய் இருக்கும் என்பதை நான் மறந்துவிட்டேன் அப்போது. அழைப்பு வந்துவிட்டது வீட்டிலிருந்து. என்ன ஒரு கோபம், என்ன ஒரு வருத்தம், என்ன ஒரு ஏமாற்றம், என்ன ஒரு தோல்வி, என்ன ஒரு இயலாமை என்று என்னை நானே நொந்து கொண்டு வருத்தமுடன் வீட்டுக்குச் சென்றேன்.
"மத்தியானச் சாப்பாடு கூட சாப்பிடாம அப்படி அங்க என்னடா உனக்கு கோயில்ல" என்று அம்மா திட்ட, "இவரு பெரிய இவரு, மைக்கை பிடித்து பேசிட்டு..". என்று அதோடு என் தந்தை பார்வையால் அடக்கி விட்டு சென்றார். சாப்பிட்டேன்.. சாப்பாடு எப்படி இருந்தது என்று தெரியாமல். ஓரமாக உட்கார்ந்தேன். அப்போதுதான் கவனித்தேன், எல்லோரும் வெற்றிலையை எடுக்கிறார்கள், பாக்கை எடுக்கிறார்கள், பிறகு அந்த மூலையில் வைத்திருக்கும் சுண்ணாம்பு பானையில் போய் கையை உள்ளே விட்டு எடுத்து சுட்டுவிரலால் வெற்றிலை தடவி சென்று கொண்டிருக்கிறார்கள். இது நாள்வரை சுவைத்துப் பார்க்காத ஒன்று நம் வீட்டில் நமக்குத் தெரியாமல் இருக்கிறது.. நாம் ஏன் இதை பார்க்காமல் இருக்க வேண்டும்.? எனக்கு தெரியாது அப்போது அதுபற்றி. அதுவும் ஒரு விதமான இனிப்பு, பலகாரம் என்று தவறாக நினைத்த வயது அது. சரி என்று சொல்லி நானும் ஒரு வெற்றிலையை எடுத்துக் கொண்டு சுண்ணாம்பை அதிகமாக எடுத்து தடவி, நான் எப்போதும் சாப்பிடும் விஷயத்தில் அளவு பார்ப்பது இல்லை. கடைசியில் எல்லோரும் ஓடி வந்து என்ன என்று விசாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். நாக்கு வெந்துவிட்டது. அதன் பிறகு ஒன்றும் பிடிக்காமல் அப்படியே நடந்து மீண்டும் கோயிலுக்கு சென்றேன்.
மாலை ஐந்து மணி இருக்கும் தப்பட்டை ஒலி ஆரம்பித்தது. எல்லோரும் ஆடினார்கள். எனக்கு ஆடப் பிடிக்கவில்லை. ஆடியவர்கள் மேல் வெறுப்பு தோன்றியது. அவர்கள் சரியாக ஆடவில்லை போல நான் நினைத்துக்கொண்டேன். அப்பொழுது திடீரென்று துரை அவர்களுக்கு சாமி வந்தது. ஆனால் நேற்று இரவு விளக்குமா எடுக்கும்போது வந்த சாமிக்கு கொடுத்த மரியாதையை இவருக்கு யாரும் கொடுக்கவில்லை. எனக்கு அப்போது அதன் காரணம் புரியவில்லை. ஆனாலும் அவர் மிரட்டிக் கொண்டிருந்தார்.
பக்கத்திலிருந்த சுப்பு ஓடிச்சென்று ஒரு குடம் நிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மேலே ஊற்ற, “டேய், டேய், இருடா.. பீடி நலஞ்சு போயிருமடா..” என்று கலகலப்பூட்டினார்.. அப்போது நான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த கண்ணாடி, கண் கண்ணாடி, இரண்டு பக்கமும் வட்டமாக சிவப்பு கலர் பேப்பரால் ஒட்டப்பட்டு வட்டமாக இருக்கும். அதில் இரண்டு பக்கமும் கண்களில் சரியாக பொருத்தி தலையில் மாட்டிக் கொள்வதற்காக ஒரு ரப்பர் நூலோடு அங்கு இருந்தது. அதை அப்போதைக்கு வாங்கும் அளவுக்கு எனக்கு பாக்கெட்டில் காசு இருந்தது. அதை பார்த்துக்கொண்டு அதற்கடுத்து வேறு என்னவெல்லாம் பொருள்கள் கடையில் இருக்கின்றன என்று பார்த்தேன்.
கடை என்றால் ஒரு கட்டில் மேல் ஒரு துணியை விரித்து அதன்மேல் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் பிரித்து வைத்திருப்பார்கள். தேர் திருவிழாவுக்கு காஞ்சிகோவில் சென்று ஒவ்வொரு முறையும் பார்க்கும் அந்த பிரம்மாண்டமான கடைத்தெருக்கள் நம்மூருக்கு வராவிட்டாலும் இரண்டு அல்லது மூன்று கட்டில்களில் அவர்கள் கடை வைத்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கும்.
அதில் வாய் வைத்து ஊதும் ஊதி விசில், அதில் இரண்டு மூன்று வகை, பம்பரம், விசிறிகள், சிறியதும் பெரியதுமான பலூன்கள், ஆரஞ்சு மிட்டாய்கள், பிளாஸ்டிக்கில் செய்த சிறுசிறு கார்கள், விலங்குகள் போன்ற பொம்மைகள் என் இவையனைத்தும் விரவியிருக்கும். நான் எப்போதும் ஒரு சில கடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சில காரணங்களை வைத்திருப்பேன். அந்தக் கடைக்கு முதலாளி அதாவது அந்த கடையை போட்டு இருப்பவர் எப்படிப்பட்டவர் என்பதை பார்த்து, அவர் கடையில் போய் வாங்குவது வழக்கம். ஆனால் அந்த வயதில் யார் கொஞ்சம் கனிவாக பேசுகிறார்களோ, நமக்கு பிடிக்கிறதோ அப்படி ஒரு தேர்வு மட்டுமே அப்போது. நான் தேர்ந்தெடுத்தது ஒரு முதியவர் தலையில் பாதி முடியில்லாமல் கண்களில் ஏக்கம், கவலை மட்டுமே கொண்ட கருணை கொஞ்சம் சேர்த்து, அன்பு அதனுடன் அதிகமாக இருந்தது, பண்பாக பேசும் அந்த மனிதர் இப்போதும் என் மனதை விட்டு ஆம்அகலவில்லை. இந்த நொடி இதை எழுதும்போது என் கண்கள் பனிக்கின்றன. காரணம் உங்களுக்கு புரியப்போகிறது.
அப்படி அவரின் கடையில் நான் சில பொருட்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஆறடிக்கு மேல் வளர்ந்த ஆஜானுபாகுவான உடல் கொண்ட எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு குடிமகன், நன்கு குடித்துவிட்டு கோவிலில் ஆடிக் கொண்டிருந்தவர் ஓரமாக இருந்த இந்த கடையை நோக்கி வருகிறார். "டேய் கிழவா, எந்திரிச்சு வந்து ஆடுறா.." எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் ஓரமாக நின்று பயம், வெறுப்பு, கோபம் இப்படி பலதுமான அந்த சூழ்நிலையை பார்க்கிறேன். அந்த வயதானவர் என்ன செய்ய முடியும்?! அவருக்கு என்ன பதில் சொல்ல முடியும்?! ஏனென்றால் சூழ்நிலை அப்படி. அவர் கடையைவிட்டு போக முடியாது. இரண்டாவது அவர் வயதானவர் மூன்றாவது அவர் அந்தவயதிலும் சம்பாரிக்க கஷ்டப்படுகிறார். அவர் ஆடும் நிலையோ அல்லது அந்த ஊர்க்காரரோ என இதில் எதுவும் இல்லை.
இது எல்லாமே குடித்திருந்த அந்த தடிமாடுக்கு எங்கே தெரியும். அவர் மறுக்க, இவர் அழைக்க ஒரு சில நிமிடங்களில் பதட்டம் என்னை தொற்றிக் கொள்கிறது. ஆனாலும், அந்தப் பெரியவர் இரண்டு கைகளையும் எடுத்து குனிந்து கும்பிட்டு "சாமி வேண்டாங்க என்னால வர முடியாது... வயசானவனுங்க.. என்னால முடியாதுங்க" என்று சொல்ல "டேய், நான் சொல்ற, நீ வர மாட்டேங்குற" என்று சில காது கூசும் கெட்ட வார்த்தைகள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இது எப்படி முடியுமோ என்று அதாவது யாராவது வந்து இதை கேட்க மாட்டார்களா என்று திரும்பி பார்க்கிறேன், அந்த நொடியில், அந்த நொடியில் பாதியில் இவர் அந்த கட்டிலை எட்டி உதைக்க அனைத்தும் பறந்ததில் பாதி சாக்கடையிலும் மீதம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அனைத்தும் பரவிக் கிடக்க அந்தக் குடிகாரன் எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சியில் மீண்டும் ஆடப் போகிறார். அந்தப் பெரியவரின் முகம், தன் இயலாமை சோகம்.. அதை பார்த்து எனக்கு மனதில் ஒரே அழுகை. கண்களில் கண்ணீர் ஆனால், அங்கு நான் அழுவது மற்றவர்கள் கேலிக்கு ஆளாகும் என்று அடக்கி, நானும் கூடச் சென்று அந்தப் பெரியவருக்கு உதவி செய்து ஒவ்வொன்றாக எடுத்துக்கொடுத்து., அப்போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. யாரும் அதைக் கேட்கவுமில்லை. அதற்குமேல் அந்த கண்ணாடி வாங்கவும் எனக்கு விருப்பமில்லை.
சிவப்பு கண்ணாடி எனக்கு கருத்துவிட்டது.., இன்றைய வரைக்கும் மறக்க முடியாத நிகழ்வு அது.
மாரியாயி நோம்பிக் கொண்டாட்டத்தை கொண்டாட முடியாம சில அப்பாக்கள் இப்படித்தான்...நல்ல சுவரஸ்யமாக வாசித்துக் கொண்டே மாரியம்மன் கொண்டாடத்திலிருந்த நேரத்தில் சிவப்பு கண்ணாடி கட்டில் கடை பெரியவரின் நிலையை வாசிக்கும் போது, மனம் பதறி கொண்டாடத்தையே திசை திருப்ப வைத்தது..
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்
நன்றிங்க..
Deleteமாரியம்மன் திருவிழா பற்றிய தகவல்கள் மிக அருமை
ReplyDeleteநன்றிங்க
ReplyDelete