Friday, December 1, 2023

வசந்தகால நதிகளிலே வைரமணி நினைவலைகள்...... கோதைநாயகி

திருவையாறு

அரசர் கல்லூரி விடுதி...

சரஃபோஜி மன்னர் தன் ஆசை நாயகிக்காக எழுப்பின கட்டடம்னு சொல்வாங்க. அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல.

என்னோட நினைவுகள்ல நெறைஞ்சு நிக்கற, நான் வாழ்ந்த விடுதியின் வரவேற்பறை (?!)....(அப்பப்ப சாப்பிடும் அறை, அப்பறம் படிக்கும் அறை ) அண்ணாந்து பாக்கற அளவுக்கு ஒசரமான செவுருங்க. இளமஞ்சள் நெறத்துல அங்கங்க காற பேந்து போயி, கொஞ்சம் பொலிவெழந்து நின்னாலும், அவ்வ்வளவு அழகா வரஞ்சு, பெருசும் சிறுசுமா, பல நெறங்கள்ல கண்ணாடிகளும் கல்லுங்களும் பதிச்சு, 'பளிச்' வண்ணம் தீட்டி, கவனத்த சுண்டி இழுக்கற சுதை ஓவியங்க கண்ணக் கவரும்.

அதத் தாண்டி உள்ள வந்தா, மேலாளர் அறை. ( கஞ்சி போடாமயே வெறப்பா இருப்பாரு. அதனாலேய எது கேக்கப் போனாலும் ஒடஞ்சு போயி, சத்தம் பெருசா கேக்கும்)......

அங்க இருக்கற ஒரு சின்னத் திண்ணை. அந்தத் திண்ணைல வெச்சு ஊத்தன '100 மில்லி' நல்லெண்ணெய் வாசம் ( வெள்ளிக்கெழம தலை தேச்சுக் குளிக்க)  இப்பவும் நாசிய வருடுது.

அதே திண்ணைல சனி ஞாயிறுகள்லயோ,விடுமுறை நாட்கள்லயோ, இசைத் துறை மாணவிங்க பாடன பாட்டுங்க. அதுக்கு நான் போட்ட ஆதி தாளம்.... (எனக்குத் தெரிஞ்ச ஒரே தாளம். பள்ளிக்கூடத்துல சொல்லிக் குடுத்தது) 'கலைவாணி நின் கருணை தேன் மழையே' பாடல் காத்துல கலந்து காதுல தேன் தடவும்.

கட்டிப் பிடிக்க ரெண்டு கைங்க பத்தாதுங்கற அளவுக்கு நல்லா வழவழன்னு, சும்மா நெகுநெகுன்னு அழகா இருக்கற பெரிய பெரிய  தூணுங்க....(முட்டைங்கள ஒடச்சு ஊத்தி கட்டுனதுன்னு சொல்வாங்க)

ஆத்துக்குள்ளயே கட்டன மாதிரி இருக்கற விடுதியோட ஜன்னலத் தெறந்தா, சிலுப்பிக்கிட்டு ஈரத்தோட வந்து உச்சந் தலைலருந்து உள்ளங்கால் வரைலும் வருடிப் போற காத்து...

அதே ஜன்னல் வழியாப் பாத்தா, பௌர்ணமியன்னிக்கு வானத்துலயும் தண்ணிலயும் வெள்ள வெளேர்னு, உருக்கி ஊத்துன வெள்ளி மாதிரி நெளியற நிலா...

கதவத் தெறந்தா கால் வெக்கற அளவுக்கு  ஆத்துப்படிங்க...(வருஷத்துக்கு ஒருமுற, மாணவிகள் கொறைவா இருக்கறப்போ தெறந்து விடுவாங்க)

ஒண்ணுக்கொண்ணு தொடர்பில்லாத, ஆனா, தொடர்போட இருக்கற இசைத் துறை மாணவர்களோட வசிப்பிடம். வேட்டி, சட்டைல வெக்கப்படற அந்தப் பசங்க அவ்ளோ அழகு. (எல்லாம் சின்னப் பசங்க) அவங்க சாப்ட்டுட்டுப் போனப்பறம்தான் பொண்ணுங்கள விடுவாங்க. அப்பப் பாக்கறதுதான். மத்தபடி, 'நீ அப்டிக்கா போ. நான் இப்டிக்கா போறேன்'....

வாசலுக்கு வெளில அலுங்காம எட்டிப் பாத்து, ரெண்டடி வெச்சா, ஒசசசந்ந்ந்த தென்னைங்க தல சாச்சு, தங்களோட ஓலைங்கள சாமரமாக்கி, வருடிக் குடுக்குற காத்து. தெக்கருந்து மட்டுமில்ல தென்னைலருந்தும் தென்றல் காத்து வரும்னு சொல்லி, மென்மையா சிரிக்கற மாதிரி தோணற உணர்வு....

இசைத் துறை மாணவிகளுக்கு மட்டுமே எழுதித் தந்த மாதிரியும், பகல்ல கூட பின்கட்டுக்குப் போகப் பயப்படற மாதிரியும் இருந்த 'C' பிளாக்....

எந்தக் காரணத்துக்காகவும் எப்பவுமே தெறக்கப்படாம, அத்தி பூத்த மாதிரி, வார்டன் மனசு வச்சா,  தெறந்து விட்ட மாடிப்பகுதி... அவ்ளோ ஒயரத்துலருந்து பாக்கும்போது, வளஞ்சு நெளிஞ்சு ஓடி, அலையாடி, குளிச்சிக்கற ஆறோட அழகு....

ஆலையில்லாத ஊருக்கு இலுப்பப்பூ சக்கரங்கற மாதிரி ஆக்கிக் கொட்டன மாமா மாமிங்க. "கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்" னு பாட முடியாத அளவுக்கு, வாய் நெறைய கொதப்பன வெத்தலையோட வலம் வந்த அவங்களோட அத்தி பூத்த மாதிரியான சிரிப்பு.....

வாரத்துல ஒருநாள் சனிக்கெழம சாய்ங்காலம் (மாசத்துல ஒரு தடவ) கெடைக்கற கடைவீதி உலா.... புரியலையா? அதாங்க 'ஷாப்பிங்'. முதல் வருஷம் படிக்கற எல்லாருக்கும் சேத்தி ரெண்டு பேர்தான் போகணும். அதே மாதிரிதான் ஒவ்வொரு வருஷத்துக்கும். ஷாப்பிங் என்ன பெரிய ஷாப்பிங்?..... எல்லாம் முக்குக் கடை சப்பாத்திக்காகத்தான்......

ஞாயித்துக் கெழம போட்ட இட்டிலி(?)க்காக சாப்படாமக் கெடந்த சனிக்கெழம ராத்திரிங்க.

வார முடிவுல, பக்கத்து ஊருங்கள்ல இருந்த தோழிங்களோட வீட்ல இருந்து வந்த சோத்து மூட்டைக்கான காத்திருப்பு. (ஒருத்தியின் அம்மா, அவளோட தோழிங்க அத்தன பேருக்கும் அன்னபூரணியா அவதாரம் எடுத்திருப்பாங்க)

இப்படி நெறைய....🙂

இது மட்டுமில்லாம, ராத்திரி 12 மணிக்கு, ஜல்ஜல்னு கொலுசு சத்தம் கேக்கும், மல்லிப்பூ வாசம் வரும், சரஃபோஜியோட ஆசை நாயகி உலா வருவாங்க... அப்படின்னெல்லாம் பயமுறுத்துன சீனியர் அக்காங்க...

திடீர்னு, அர்த்த ராத்திரில, எங்கிருந்து வந்தான்னே தெரியாம, திருப்பிப் படுக்கும்போது, பக்கத்துல 'எருமமாடு' மாதிரி படுத்திருந்தவனப் பாத்து பயந்து கத்துன புள்ளைங்க....

நிலாவும் காத்துமா களிச்சிருந்த அதே ஜன்னல்ல அரவமே இல்லாம,  அம்மணமா வந்து நின்னு பீதியடைய வச்ச பன்னாடைங்க....(சாயங்காலம் 5 மணிக்கு மேல ஜன்னல தெறக்கக் கூடாதுன்னு சட்டமே போட்டுட்டாங்க)

எவனோ ஒருத்தன் உள்ள நொழஞ்சுட்டான்னு யாரோ ஒருத்தர் கெளப்பி விட்ட சத்தத்துக்கு, அத்தன பேரும் ஓடி ஒளிய,  ஏதோ ஒரு அறைக்குப் போலாம்னா, அத்தன கதவும் பட்பட் பட்பட்னு சாத்த, ஒரு வாரம் கழிச்சு ஊத்த வேண்டிய உதிரம், கால் நனச்ச அந்த நொடி....

தியாகராஜர் உற்சவத்தப்போ, படிச்சுப் படிச்சுக் களச்சுப் போய்ட்டோம்னு எங்கள ஓய்வெடுக்க ஊருக்கு அனுப்பிருவாங்க. அப்படி ஊருக்குப் போறப்போ, ரெண்டே ரெண்டு பெரிய அறைங்கள்ல எல்லாரோட பெட்டிகளையும் கொண்டு போய் வெச்சுருவாங்க. மத்த அறைங்க எல்லாம் உற்சவத்தப் பாக்க வந்தவங்க தங்கறதுக்கு விட்ருவாங்க.

ஒரு தடவ, ஊருக்குப் போய்ட்டு திரும்பி வந்தப்போ, தூண்ல எழுதியிருந்த, படிச்சு, சிரிச்சுக் கெடந்த, மறக்க முடியாத ஒரு கவிதை.....

"ஜிப்பைத் திறந்து விட்டு
சிறுநீர் கழிக்கா விட்டால்
பெருநீர் பெருகி வந்து
பேண்ட்டை நனைத்து விடும்"....

👆இப்படியும்....

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்


3 comments:

  1. கல்லூரி வாழ்க்கை அனுபவம் எப்போதும் தொடர்ந்து வரும் கனவலைகள்.. சூப்பர் கோதை.. தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஹாஸ்டல் நினைவுகள் எப்போதும் இனிக்கும் ஒரு கவிதை மாதிரி.

    சிறப்பு.

    ReplyDelete
  3. விடுதி வாழ்க்கை மிகுந்த சுவாரசியத்தைத் தருகிறது..

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...