இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிய சரவணனிடம் அவன் அம்மா சிவகாமி "சரோ, அடுத்த வாரம் அப்பாவுக்கு சாமி கும்பிடலாமா?" என கேட்டாள்.
சரவணன் "சரிம்மா" என்றான்.
"அப்படின்னா நாம அப்பாவோட ஊருக்குப் போயி அங்க கும்பிடலாம்பா" என்றாள்.
"என்னது! அப்பாவோட ஊரா... அது எங்க? அப்பா ஊரும் இங்க தானு இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேன். அப்பாவுக்குப் பல வருஷமா இங்க தான சாமி கும்பிட்டோம், இப்ப மட்டும் என்னமா திடீர்னு அப்பா ஊர்ங்கற அதுவும் கிராமம் ங்கற" என்றான்.
"சரோ.. நீ மூனாவது படிக்கும் போதே அப்பா இறந்து விட்டார். நாமா இங்க கோயம்புத்தூருக்கு வந்ததே உன் படிப்புக்காகத் தான். நீ இங்க வந்து நல்லா படிச்சு, வேலை கிடைச்சு வெளிநாடு போயி நல்லா சம்பாதிக்கற அளவுக்கு ஆளாயிட்ட. ஆனா இது நம் சொந்த ஊர் கிடையாது. இது நான் பிறந்து வளர்ந்த ஊர் .உன் அப்பா இறந்ததற்குப் பின் என் உறவுக்காரங்க, உன் தாத்தா பாட்டி எல்லாம் நம்ம இரண்டு பேரையும் இங்க அழைச்சுட்டு வந்துட்டாங்க. நானும் அப்பா இறந்தப்ப வந்த சண்டையில்.. அப்பா உறவுக்காரங்க மேலே இருந்த கோபத்துல, இங்கயே வந்துட்டேன் அவங்களப் பத்தியும் எதுவும் நான் உன்கிட்ட பேசல.. காட்டிக்கல.
உன்கிட்ட அப்பாவப் பத்தி மட்டுமே பேசி இருக்கேன தவிர அப்பா ஊர் பத்தி பேசினது இல்ல, அப்பா ஊர் இங்கிருந்து கரூர் போற வழியில தென்னிலைக்குப் பக்கத்துல இருக்கிற கருநல்லிவலசு. நாம வரும் போது அது ஒரு சின்ன கிராமம், அங்க அப்ப.. நீ படிக்க நல்ல வசதி இல்லைன்ற காரணத்தால இங்க வந்தோம். நாளடைவில் இங்கேயே காலம் போயிருச்சு. தாத்தா பாட்டி எல்லாம் இறந்துட்டாங்க. இங்க என் உறவுக்காரங்க மட்டும் தான் இருக்காங்க.
அப்பாவோட உறவுக்காரங்க எல்லாம் ஊர்ல தான் இருக்காங்க, ஆறு மாசத்துக்கு முன்னாடி நீ ஊர்ல இருக்கும் போது உன் அத்தையோட வீட்டுக்காரர் மாமா, அதாவது உன் அப்பாவோட அக்கா வீட்டுக்காரர் இறந்து விட்டார் னு எனக்கு தகவல் வந்தது! நான் பழசை எல்லாம் மறந்துட்டு அங்க போனேன். அங்க அப்பா உறவுக்காரங்களும் பழசெல்லாம் மறந்துட்டாங்க. எல்லாம் நல்லா பழகுனாங்க. மூனு நாள் நான் அங்கயே.. உங்க அத்தை வீட்டிலேயே தங்கினேன். அப்ப அங்க நிறைய உறவுக்காரங்க கிட்ட நிறைய விஷயம் பேசினேன். அப்ப தான் புரிஞ்சுது நானும் தாத்தாவும் கோவப்பட்டு அவசரத்துல ஏதோ முடிவெடுத்து இங்க வந்துட்டமோனு.
அப்ப அத்தைட்ட பேசும் போது தான் தெரிஞ்சது அப்பாவோட அப்பா தாத்தா... உங்க அப்பா பெயர்லையும் ஒரு வீடு, இரண்டு ஏக்கர் தோட்டமும் அங்க ஊர்ல எழுதி வெச்சுட்டுத்தான் இறந்தார்னும்னு. பாட்டிக்கும் இதைப் பற்றி தெரியல. அதுவும் என்கிட்ட எந்தத் தொடர்பு இல்லாததால அத பாட்டியும் சொல்லாமலே இறந்துடாங்க. இப்ப உன் மாமா இழவுக்கு போன போது தான் தெரிஞ்சது தாத்தா, பாட்டி, அத்தை எல்லாம் உன் அப்பா மேலே எவ்வளவு பாசமா இருந்திருக்காங்கனு.
அப்பதான் முடிவு செஞ்சேன் நீ ஊருக்கு வந்தா அங்க கூட்டிட்டு போகனும்னு. இப்ப அப்பாக்கு சாமி கும்பிடறதையும் அங்க ஊருக்கு போயி அத்தை வீட்டில் தங்கி இருந்துட்டு கும்பிட்டுட்டு அப்படியே அப்பா உறவுக்காரங்க எல்லோரையும் உனக்கு அறிமுகம் செஞ்சு வெச்சு, குலதெய்வக் கோயிலுக்கும் போயிட்டு நம்ம வீடு நிலத்தையும் எல்லாம் பாத்துட்டு வரலாம்னு நினைச்சேன்ப்பா" என்றாள்.
"அம்மா, என்னமா இரண்டு வருஷம் வெளிநாடு போயிட்டு வந்தவுடனே பெரிய பெரிய விஷயமெல்லாம் சொல்ற" என்றான்.
சிவகாமி கண்ணோரம் நீர் கசிய "சரோ, என் வாழ்க்கை தான் என் உறவுக்காரங்களோடயே போயிருச்சு, உன் வாழ்க்கை அப்படி வேணாப்பா. இரண்டு உறவுக்காரங்களும் சேர்ந்து ஆசிர்வதிச்சு நல்ல வாழ்க்கையா உனக்கு இருக்கனும். அதுவும் அப்பா இல்லாம நான் இங்க வந்து சில நேரம் சந்தோஷமா இருந்தாலும் பல நேரம் என்னை ஒதுக்கி வைக்கப்பட்டதில் நான் வருத்தப்பட்டிருக்கிறேன். புருசன் இல்லாட்டியும் புருஷன் ஊர்ல வாழ்றது தான் கண்ணியம், மரியாதை எல்லாம்.
ஏன்னா.. இங்க பாசத்துக்கு பஞ்சமில்லை. ஆனால் அதே நேரம் சடங்கு சம்பிரதாயங்களில் நிராகரிப்பதும் குறையவில்லை. இதுக்கு நான் யாரையும் குத்தம் சொல்லல. என் கடைசிக் காலம் அப்பா ஊர்லயே போகட்டும்பா" என்றாள் கண்ணீரைத் துடைத்தவாறு.
"அம்மா.. மா போதும்மா இப்ப என்ன அப்ப ஊருக்கு போகனும் அங்க தங்கனும் அவ்வளவு தானே அடுத்த வாரமே போலாம் மா, அத்தை நம்பர் கொடு நான் பேசறேன் நீ அழுகாதேமா" என்றான் சரவணன்.
ஒரு வாரத்திற்கு பின் ஊருக்கு வந்த சிவகாமியையும், சரவணனையும் அவனின் அத்தை ஆனந்த கண்ணீரோடு வரவேற்று, இரண்டு நாட்களில் சரவணனின் அப்பாவுக்கும் சாமி கும்பிட்டு விட்டு குழதெய்வ கோயிலுக்கெல்லாம் போயிட்டு வந்து விட்டு மதியம் சரவணன் உறங்கி கொண்டிருந்தான். அப்போ சிவகாமி சரவணனின் அத்தையிடம் "அண்ணி அண்ணன் இறந்து ஆறு மாசம் ஆச்சு நீங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க" என்றாள்.
"என்ன பண்ணலாம்னா என்ன சிவகாமி" என்றாள்.
"இல்லை.. அண்ணா இறந்துட்டாங்க. நீங்க இங்கயே இருப்பிங்களா? அல்லது அண்ணா ஊருக்கு போயிருவிங்களா" என்றாள்.
"நான் அதபத்தி இன்னும் யோசிக்கல சிவகாமி. புள்ளைய அண்ணன் ஊருக்கு தான் கொடுத்தேன், அவ அங்க நல்லா இருக்கா, பையன் இங்க தென்னிலையில பெரிய கார்மென்ட் கம்பெனியில நல்ல வேளையில் இருக்கான். அவனுக்குக் கல்யாணம் முடிச்சிட்டுத் தான் எதாவது யோசிக்கனும்", என்று கூறிவிட்டு, "ஏன் சிவகாமி திடீர்னு இதெல்லாம் கேட்கற" என்றாள்.
"இல்லை அண்ணி, நான் சரவணன் அப்பா இறந்தும் கோபத்துல சண்டை போட்டுட்டு ஊருக்கு போயிட்டதால அவனுக்கு அப்பா உறவுக்காரங்க யாரையும் தெரியமலையே வளர்த்தி விட்டேன். அதனால அவனுக்கு கல்யாணம் பண்ணி இங்கயே இருந்து அவன் அப்பா உறவும் தெரிஞ்சு அம்மா உறவும் தெரிஞ்சுக்கனும்னு ஆசைபடறேன் அண்ணி", என்றாள்.
"ஓ அப்படியா சரி" என்று கூறிவிட்டு "சரவணனுக்கு பொண்ணு பாக்குரியா?" என்று கேட்டாள் அண்ணி.
"ஆமா அண்ணி அதுவும் இங்க தான்" என்றாள்.
"இங்கயா? இங்க யாரு?" என்றாள் அண்ணி .
"அண்ணி, சரவண அப்பாவுக்கு எழுதிக் கொடுத்த வீட்டில் குடி இருக்கும் ஈஸ்வரியின் மகளை அன்றைக்கு அண்ணா இறந்தப்ப இங்க தான் பாத்தேன், அந்தப் பொண்ணைக் கேக்கலாமானு தோணுது அண்ணி" என்றாள்.
"ஈஸ்வரி மக கீதாவையா.. நல்ல பொண்ணு, நல்ல படிச்சிருக்கா, பொறுமைசாலி. அந்தப் பொண்ணு கோயம்புத்தூருலதான் ஏதோ வேலை பாக்குறா, பொறுப்பான பொண்ணு, மரியாதை தெரிஞ்ச பொண்ணு, ஆமா அவளா எங்க பார்த்த?" என்றாள்.
"அண்ணி... அண்ணா இறந்தப்ப நான் இங்க இருந்த இரண்டு நாள் அந்தப் பெண்ணின் நடவடிக்கை பார்த்து யோசிச்சேன். உங்க கிட்ட பேசிட்டு முடிவெடுக்கலாம்னு யோசிச்சேன் அண்ணி. ஆமா ஈஸ்வரி மாமாக்கு சொந்தம். மக உறவுனாங்க அவங்க வீட்டுக்காரர் எந்த ஊர் அவங்க சொந்தம் எல்லாம் எப்படி அண்ணி ?", எனக் கேட்டாள்.
"ஈஸ்வரி! என் அப்பாக்கு பங்காளி மக, அவங்க குடுபத்தில் ஈஸ்வரி ஒரே பொண்ணு செல்லமா வளர்த்தி கரூருக்கு தான் கொடுத்தாங்க. அவரு தறி போட்டு நல்லா தொழில் செஞ்சாரு. காலப்போக்குல எல்லாம் போயி பொழப்புக்கு இங்க வந்து அப்பாட்ட நின்னாங்க, அப்போ அப்பா தான் தம்பி பெயர்ல இருந்த அந்த வீட்டையும் நிலத்தையும் கொடுத்துவிட்டு என் மருமவளோ பேரனோ வந்து கேட்டா கொடுத்து விடனும்னு நெருங்கிய உறவுக்காரங்கள வெச்சு பேசிட்டு கொடுத்தாரு.
ஈஸ்வரி வீட்டுகாரர் நல்ல பாட்டாளி. அந்த ரெண்டு ஏக்கர்ல வருமானம் பாத்து பக்கத்துல இருந்த ஆறு ஏக்கரையும் குத்தகை எடுத்து விவசாயம் பண்ணி நல்ல சம்பாதிச்சு குத்தகைல வந்த ஆறு ஏக்கர்ல இருந்து மூனு ஏக்கர் விலை குடுத்து வாங்கி குடும்பத்த நல்லா பாத்து கீதாவையும் படிக்க வெச்சாரு, நாலு வருசத்துக்கு முன்னாடி தான் இறந்தார். அந்த இரண்டு ஏக்கர் வருஷ குத்தகைக் காசுல அந்த வீட்டயும் நல்லா காட்டினாங்க. நீ கேட்டா அப்படியே கொடுத்து விட்டு இங்க ஊருக்குல்ல அவங்களுக்கு ஒரு வீடு இருக்கு. அங்க வந்துருவாங்க, ஈஸ்வரியும் நல்ல பொண்ணு தான். சிவகாமி..! நான் வேணா ஈஸ்வரிட்ட பேசட்டுமா" என்றாள்.
"பேசலாம் அண்ணி. ஆனா நான் ஒரு வார்த்தை சரவணன் கிட்ட பேசிட்டு சொல்றேன் இருங்க" என்று சொல்லி விட்டு "சரவணா" என அழைத்தவாறு அவன் இருக்கும் ரூமுக்குள் சென்றாள்.
சரவணனிடம் ஈஸ்வரி குடும்பம் மற்றும் கீதாவைப் பற்றியும், அவர்களின் குடும்ப உறவு தற்போதைய சூழலையும் சொல்லி சரவணனிடம் கல்யாணத்திற்கு சம்மதம் கேட்டாள். முதலில் "இப்ப எதுக்குமா கல்யாணம்" என்று தவிர்த்து விட்டு சிவகாமியின் வற்புறுத்தலால் "சரி" என்றான்.
"அப்போ.. வர ஞாயத்து கிழமை பொண்ணு பாக்க போலாமா? அத்தைட்ட சொல்லி பேச சொல்லட்டுமா" என்றாள்.
"அம்மா ஏன் இவ்வளவு அவசரமா" என்றான்.
"அவசரமெல்லாம் இல்லப்பா. நல்லது தானா சீக்கிரம் நடக்கும். அதோட நாமும் ஒத்து போகனும்பா" என்றாள்.
சரவணனும் "சரி" என்றான்.
முகத்தில் புன்னகையுடன் "அண்ணி" என அழைத்து கொண்டே வெளியே சென்றாள் சிவகாமி.
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த சரவணன் உடனடியாக மொபைலை எடுத்து கீதாவுக்கு போன் போட்டு "கீது.. success, success I am very happy இப்ப தான் அம்மா வந்து பேசிட்டு போனாங்க. ஞாயத்து கிழமை உன்ன பொண்ணு பாக்க வர அத்தை மூலம் உங்க அம்மாட்ட பேச சொல்றாங்களாம். நீ சீக்கிரமா கிளம்பி இங்க ஊருக்கு வா", என்று கூற எதிர்முனையிலும் கீதாவும் ஏதோ மகிழ்ச்சியில் சொல்ல, எல்லாம் நல்லா நடந்தா சரி. நீ சீக்கிரம் வா", என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்தான்.
"அண்ணி சரவணன் கல்யாணத்துக்கு சரின்னுட்டான். மேற்கொண்டு ஆக வேண்டியதை அதாவது முறைய எப்படி செய்யனும், என்னென்ன செய்யனும், சொல்லனும்.. சொல்லுங்க அண்ணி. வர ஞாயத்து கிழமையே பொண்ணு பாக்கப் போலாம்" என்றாள் சிவகாமி.
"சரி சிவகாமி. நாளைக்கு வெள்ளிக்கிழமை. குலதெய்வக் கோயிலுக்கு போயிட்டு ஆக வேண்டியதைப் பாக்கலாம். நான் ஈஸ்வரிக்கும் தகவல சொல்லி கீதாவை ஊருக்கு வரச் சொல்லி சொல்றேன்" என்றாள்.
"அண்ணி, நீங்க ஆக வேண்டியதை எல்லாம் பாருங்க இந்த ஈஸ்வரிட்ட பேசரது மட்டும் ஒரு எட்டு நானே நேர்லயே போயி வீட்டையும் பாத்துட்டு தகவலும் சொல்லிட்டு வரட்டுமா அண்ணி" என்றாள்.
"நீயே போறய. முதல்ல நீங்களே பேசிக்கிருங்களா" என்றாள்.
"இல்லை அண்ணி. நான் எதுவும் பேச மாட்டேன் நம்ம விருப்பம், ஞாயத்து கிழமை பொண்ணு பாக்க வரோம்ங்கிற தகவலை மட்டும் சொல்லிட்டு வரேன்" என்றாள்.
அண்ணியும் சம்மதிக்க உடனே கிளம்பி ஈஸ்வரி வீட்டை நோக்கி சென்றாள் சிவகாமி. ஈஸ்வரியிடம் நடந்ததை மகிழ்ச்சியோடு சொல்லி விட்டு "ஈஸ்வரி எம் பையனும் உன் பொண்ணும் நமக்கு எதுவும் தெரியாதுனு நினைக்கிறாங்க அதை அப்படியே தெரியாத மாதிரியே இருந்து கல்யாணத்த முடிச்சிடனும் சரியா ஈஸ்வரி" என்றாள் புன்னகையோடு.
"சரிங்க அண்ணி ரொம்ப சந்தோஷம். ஆனா ஒரே ஒரு சந்தேகம் உங்களுக்கு எப்படி தெரியும் இவங்க விஷயம்" என்றாள் ஈஸ்வரி.
" ஈஸ்வரி.. சரவணன் வெளிநாடு போகும் போது கீதா ஏர்போர்ட்டுக்கு வந்து எனக்குத் தெரியாம அவனைப் பார்த்து விட்டுப் போனா, அதை நான் பார்த்துட்டேன். அப்புறம் விசாரிச்சேன். விஷயம் தெரிஞ்சுதுட்டு உன்கிட்ட பேசினேன். புள்ளைங்களோட சந்தோஷம் பெத்தவங்க மனசுக்கு தெரியாதா என்ன?" என்றாள்.
வாழ்த்துக்கள் காதர் தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteநன்றிங்கமா🙏
Deleteநல்ல கதை.
ReplyDeleteநன்றிங்க 🙏
Delete