Monday, January 1, 2024

அந்தமான் இயற்கையின் மடி- 3- வி.அன்புமணி

 





அந்தமான் - தீவுகளின் கூட்டம் 


அந்தமானில் எங்களுடைய இரண்டாவது நாள் . அதிகாலை 7 மணிக்குள் தயாராகி வர வேண்டும் என வழிகாட்டி மற்றும் ஓட்டுனர் சம்சுதீன் சொல்லியிருந்தார்.அவர் என்னதான் நேரம் சொல்லிருந்தாலும் நாங்க கொஞ்சம் தாமதமாகத்தான் போவோம். அதனால அவரும் கொஞ்சம் ஒரு மணி நேரம் முன்னாடியே சொல்லி இருப்பாரு . எப்படியோ ரெண்டும் சமனாயிடும். 


அன்று அந்தமானில் உள்ள தீவுக் கூட்டங்களில் ரொம்ப பிரபலமான தீவு ஹேவ்லாக் தீவு. அந்த தீவுக்கு நாங்க படகில் போகப் போறோம்… அது பெர்ரி என்கிற வகைப் படகு.


அந்த அனுபவம் ரொம்ப வித்தியாசமானது.படகு கிளம்புற நேரம் காலை 8 மணி என்பதால் சீக்கிரமாக கிளம்பிச் சென்றோம் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் தங்கியிருந்த விடுதியில் காலை உணவு ரொட்டி மற்றும் முட்டை  ஒரு குளிர்பான  பாத்ரூம் அனைவருக்குமாக  அழகாகப்  பார்சல் பொட்டலமாக  தந்தது அருமை.  


படகு நிலையத்திற்கு சென்றபோது அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து பிரமித்து விட்டோம். ஏதோ ஒரு மினி விமான நிலையம் போல் இருந்தது அதற்குள் விற்கப்படும் உணவுகளோ விமான டிக்கெட்டுக்கு நிகராக இருந்தது. ஐ டி டி மெஜஸ்டிக் இதுதான் நாங்க போன அந்த படகுடைய பேர். நல்லா தோற்றதற்கு ஏற்ற கம்பீரமான பெயர். நமக்கென்று குறிப்பிட்ட இடங்களில் தான் நாம உட்கார வேண்டும். இருந்தாலும் அந்த ஜன்னல் பக்கத்தில் இருக்கிற இடத்திற்கு போட்டி போட்டுக் கொண்டு போய் உட்கார்ந்தோம். அற்புதமான ஒரு அனுபவம் கடலுக்கு நடுவில் பயணம். சுற்றியும் சின்னச் சின்னதாக நிறைய தீவுகள் பார்க்கவே மனசுக்கு ரொம்ப ரம்மியமாய் இருந்தது. நடு நடுவுல படகினுள் வீடியோப் படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதில் முக்கியமான ஒரு வீடியோ சென்டினல் அப்படிங்கற தீவில் உள்ள ஆதி பழங்குடிகள்தான். 




அந்தமானில் மட்டும் ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி நூற்றுக்கணக்கான பழங்குடியினர் இருந்து வந்திருக்கின்றனர். ஆனால் ஆங்கிலேயர்களது குடியேற்றத்திற்கு பின், அவர்கள் மிகவும் அருகி விட்டனர். அதில் ஒரு நான்கைந்து குடிகள் மட்டுமே மிகவும் குறைவான எண்ணிக்கையில் அங்குள்ள தீவுகளில் வசித்து வருகின்றனர். அதிலும் சென்டினல் பழங்குடியினர் மிகவும் வித்தியாசமானவர்கள். நம்மைப் போன்ற நாகரீக மனிதர்களை அவர்கள் விரும்புவதில்லை. அங்கு போக முயன்ற பொழுதெல்லாம் இரண்டொரு முறை தவிர உயிர்பலி தான் ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய அரசாங்கமே, ஆயிரம் வருடங்களாக அவர்கள் அப்படியே வாழ்ந்து விட்டனர்; நாம் இனி அவர்களை அறிவியல் வளர்ச்சி காலத்திற்கு அழைத்து வர வேண்டும் என்கிற அவசியமில்லை; அவர்கள் அதை விரும்பவும் இல்லை. எனவே அவர்களை நாம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டது.


இன்றுவரை அவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்ன உணவு உண்கிறார்கள் போன்ற பல வினாக்கள் விடை இல்லாத வினாக்களாக மட்டுமே இருக்கின்றன. உடையற்ற அவர்களைப் பார்க்கும் பொழுது எந்தவிதமான ஒரு அசூயையான எண்ணம் கூட மனதில் தோன்றவில்லை. நம் முன்னோர்களைப் பார்ப்பது போன்று ஒரு பாசப் பிணைப்பு தான் அவர்களுடன் உண்டானது. எனவே படகில் திரும்பி வரும்பொழுது நிர்வாகத்திடம் கூறி அந்த வீடியோவை மீண்டும் போட சொல்லி அதை அலைபேசியில் படமாகப் பதிவு செய்து கொண்டேன். 



சுமார் 300-400 பேர் அமர்ந்து போகக்கூடிய அந்தப் படகிலும்  ஆசிரியராக, மற்றவர்களுக்கு அவர்தம் தவற்றை உணர்த்த வேண்டிய தருணம் வந்தது. பல தரப்பட்ட வயதுள்ள, பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து  குடும்பங்களாக வந்துள்ள, நண்பர்களுடன் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மத்தியில் சில இளைஞர்களின் கோரிக்கைக்காக தரமற்ற பாடல் காட்சிகளை ஒளிபரப்பியதை எதிர்த்து கப்பல் தலைவரிடம் சென்று போர்க்கொடி உயர்த்திய பின்னர்தான் அவர்கள் அதைக் கைவிட்டனர்.


அந்த படகில் நாங்கள் இரண்டிரண்டு பேராக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஐ.ஏ.பி.யில் எடுத்துக்கொண்ட  புகைப்படத்திற்கு இணையான ஒரு தெளிவான புகைப்படங்கள். அதுமட்டுமல்ல படகின் முன் இருக்கையின் ஒரு இடத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் பின்புறம் தண்ணீர் தெரிவதும், மலைகள் தெரிவதும், தீவுகள் தெரிவதும் போன்ற ஒரு நல்ல ஒரு இடம். ஆனால் அங்கு உட்கார்ந்து இருந்ததோ புதிதாகத் திருமணமான ஒரு வடநாட்டு தம்பதிகள். அவர்களிடம் மிகவும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அந்தக் கோணத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டது மறக்க முடியாத ஒரு அனுபவம். அது மட்டுமன்றி, எங்களில் ஒரு தோழி கண்டிப்பாக படகுத் தலைவருடன் கேப்டனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி அவரிடம் அனுமதி வாங்கி எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் என்றும் வாழ்க்கையை மறக்க இயலாது.


இரண்டு மணி நேரம்  பயணத்திற்குப் பின்பு ஹேவலோக் தீவை அடைந்தோம். அந்தமானில் முக்கியமான ஒரு சிறப்பு அங்கு உள்ள கடல் நீர் அனைத்துமே தூய்மையாக உள்ளது. நீருக்கு அடியில் உள்ள அனைத்தும் நமக்கு அழகாகத் தெரிகின்றன. படகிலிருந்து இறங்கியதும் அங்கிருந்து கடற்கரையில் நாங்கள் கவனித்தது நீர் நிரம்பியிருந்தது கரை வரை.  ஆனால் மாலை நாங்கள் திரும்பி வரும் பொழுது திட்டுத்திட்டாக மண் குட்டைகளாய் இருந்தது. எப்படி இது சாத்தியம். கடல் உள்வாங்குமா என்று ஒரு சந்தேகம் எழுந்தது. அங்குள்ள கப்பல் கேப்டனிடம் கேட்டபொழுது உயர் அலைகள், நடு அலைகள், கீழ்மட்ட அலைகளைப் பொறுத்து இவ்வாறு இருக்கும் என்று கூறினார். இயற்கைக்கு முன் மனிதன் ஒன்றுமே இல்லை என அந்தமானில் இருக்கும் ஒவ்வொரு கணமும் தோன்றியது.


அந்தமானில் தனியார் சுற்றுலாத் துறை மிகவும் வியக்க வைக்கிறது. ஆங்காங்கு ஒருவருக்கொருவர் சங்கிலித் தொடர் போன்று தொடர்பு கொண்டு அழைத்துச் செல்கின்றனர். படகிலிருந்து தரை இறங்கியதும் அங்கிருந்து ஓட்டுனர் ஒருவர் வண்டியில் எங்களை ராதாநகர் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். மதியம் 2 மணிக்குத் தயாராக இருக்கவும். மீண்டும் இதே இடத்தில் அழைத்துச் செல்வோம் என்று கூறிவிட்டு அகன்றார்.


நடுவில் ஒரு மணிக்கு எங்களுக்கு அங்குள்ள ஒரு ஹோட்டலில் தமிழ்நாட்டு உணவு தயாராக இருக்கும். சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். அவரது குரல் கண்டிப்போடு இருந்தது. ஏனெனில் மீண்டும் எங்களுக்கு மூன்று மணிக்கு படகு அதை விட்டுவிட்டால் அடுத்த நாள் தான் கிளம்ப முடியும். எனவே யார் திட்டினாலும் பரவாயில்லை எங்களுக்குள், யாராவது ஒருவர் நேரத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். துரிதப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம்.


முதலில் நேராக நுழைந்தது கடைகளுக்கு தான் ஏனெனில் நல்ல வெயில் காலை 11 மணிக்கே. ஆசைஆசையாக அனைவரும் அழகாக தலைக்கு ஒரு தொப்பி வாங்கி அணிந்து கொண்டோம். பிறகு பசி லேசாக வயிற்றைக் கிள்ள ஆரம்பிக்க, அங்கிருந்த கடைகளில் கிளிமூக்கு மாங்காய்களையும் அன்னாசிப் பழங்களையும் ஸ்டார் பிஷ் பழங்களையும் பார்க்க பார்க்க நாவில் நீர் ஊற உடனடியாக வாங்கி சாப்பிட ஆரம்பித்தோம். அங்கு பருகிய இளநீரின் சுவை இன்னமும் நாக்கு நரம்புகளின் அடியாழத்தில் ஒருபுறம் சேமிக்கப்பட்டுள்ளது.



அந்தமானில் மக்கள்தொகையில் வங்காளிகளும் அதிகம். ஆனால் மேற்கு வங்காளத்தை விட கிழக்கு வங்காளத்தை சேர்ந்தவர்களே அதிகம். அந்தமானுக்கும் மேற்கு வங்காளத்திற்கும் இடையேயான தூரம் குறைவு என்பதும் ஒரு காரணம். பழங்களை மிக அழகாக துரிதமாக வெட்டிக்கொடுத்த அந்த வங்காளப் பெண்மணியிடம் அனுமதி பெற்று வெட்கச்சிரிப்புடன்  அவரை எடுத்த புகைப்படம்  இன்னும் எனது அலைபேசியில் அழகாய் புன்னகைக்கிறது. இந்தப் புகைப்படம்  எளிமை, யதார்த்தம் என்றுமே அழகுதான் என்பதை பறைசாற்றுகிறது. பழங்கள் கூட அந்தமானுக்கு இந்தியாவில் இருந்துதான் வருகின்றன குறிப்பாக இந்த ஸ்டார் பிஷ் பழங்களும், அத்திப்பழங்களும் ஏற்காட்டில் இருந்து அங்கு அனுப்பப்பட்டுகின்றன என்பதை நினைத்தபோது பிரமிப்பாக இருந்தது.


....தொடரும்....




1 comment:

  1. அந்தமானுக்கு உங்களுடன் பயணித்த அனுபவம்.. தருகிறது கட்டுரை... அடுத்த தொடருக்கு... வெயிட்டிங்

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...