ஆரம்பத்தில் விருப்பமான நடிகர் என்றெல்லாம் யாரும் இல்லை. சண்டை படங்கள், நாயகன் போலீஸாக இருக்கும் படங்கள் தான் பெரும்பாலும் பிடிக்கும். அத்தை மகன் ஒருவர் விஜயகாந்த்தின் தீவிர ரசிகர். அவர் ஊரில் விஜயகாந்த் ரசிகர் மன்றம் இருந்தது. ஒவ்வொரு வருடமும் அந்த ஊருக்கு மாரியம்மன் திருவிழாவிற்கு செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த் ரசிகர் மன்ற பெயர் பலகை ஒரு ஈர்ப்பை கொடுக்கும். திரைப்படங்கள் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் அத்தை மகன் விஜயகாந்த் பற்றியே பேசுவார். இவையெல்லாம் என்னையும் மெல்ல மெல்ல விஜயகாந்த் ரசிகனாக மாற்றியது. அதன் பின் திரைப்படங்கள் என்றால் விஜயகாந்த் நடித்த படங்களை மட்டுமே ஆர்வமாக விரும்பி பார்ப்பேன். மற்ற படங்கள் என்றால் பொழுது போகனுமே என்று தான் பார்ப்பேன்.
VCD கேசட்டில் முதன் முதலாக பார்த்த படம் 1999'ம் ஆண்டு வெளிவந்த 'கண்ணுப்படப்போகுதய்யா'. இந்த படத்தில் ப்ளாஷ்பேக் காட்சியில் சிவக்குமார், லட்சுமியை ராதாரவி குத்தும்போது விஜயகாந்த் குறுக்கே பாய்ந்து அவர் முதுகில் கத்தி இறங்கி விடும். இந்த காட்சி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் நினைவில் உள்ளது. ஆரம்ப பள்ளியில் படிக்கும்போது பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்குவோம். அதில் கடவுள் உருவங்கள், நடிகர், நடிகையர் படங்கள் இருக்கும். நான் விஜயகாந்த் படம் போட்ட வாழ்த்து அட்டைகளை மட்டுமே வாங்குவேன். 'கண்ணுபடப் போகுதய்யா' விஜயகாந்த், காவல்துறை அதிகாரி விஜயகாந்த் போன்ற புகைப்படங்களை கொண்ட வாழ்த்து அட்டைகள் இன்னும் நினைவில் உள்ளன.
அடுத்ததாக பார்த்த திரைப்படம் 2000'ம் ஆண்டு வெளிவந்த 'வானத்தைப்போல'. இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு VCD'ல் படம் போட்டால் நிச்சயமாக வானத்தைப்போல VCD இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ரசிகர் கூட்டத்தை காண முடிந்தது. VCD'க்கள் தேய்ந்து போகும் அளவிற்கு ப்ளேயரில் திரும்ப திரும்ப சுற்றிக்கொண்டு இருந்தன.
இதே போல் VCD'க்களில் தேய்ந்த மற்றொரு படம் அதே ஆண்டு அடுத்து வெளிவந்த வல்லரசு திரைப்படம். உதவி இயக்குனராக இருந்த மாகாராஜனை அழைத்து தனியாக எதாவது படம் பண்ண வேண்டியது தானே என விஜயகாந்த் சொல்ல அதன் பிறகு உருவான திரைப்படம் தான் வல்லரசு. இந்த படத்தை விஜயகாந்த் தான் தயாரிப்பாளர்.
வல்லரசு வந்த பின் திருவிழா கடைகளில் வல்லரசு துப்பாக்கி, வல்லரசு கண்ணாடி போன்றவை வந்து இறங்கின. நாங்கள் அவற்றை வாங்கி மாட்டிக்கொண்டு வல்லரசுவாய் மாறி சுற்றிக்கொண்டு இருந்தோம். எங்கள் ஊரில் ஒரு பேருந்துக்கு 'வல்லரசு' என பெயர் வைக்கப்பட்டது. இப்போதும் கூட வல்லரசு என்று தான் அந்த பேருந்தை குறிப்பிடுவார்கள். பலர் தங்களது சைக்கிள்களில் வல்லரசு என எழுதிக்கொண்டு பறந்து கொண்டு இருந்தார்கள்.
வீடுகளுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வர துவங்கிய காலத்தில் தூர்தர்ஷனில் ஞாயிறு மாலை 4.30 க்கு ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் , திரைப்படங்கள் பார்ப்பதற்கான கால இடைவெளியை குறைந்தன. ஆனால் தூர்தஷனில் விஜயகாந்த் படம் அரிதாகவே பார்க்க முடிந்தது. டி.டி.ஹச் வந்த பின் சன் டிவியில் அவ்வப்போது பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. தனியார் டி.டி.ஹச் வந்த பிறகு கே டிவி, விஜயகாந்த் படத்தின் மீதான தாகத்தை தனித்து வந்தது. தேர்தல் சமயங்களில் சன் டிவி மற்றும் கே.டிவியில் கண்டிப்பாக விஜயகாந்த் திரைப்படம் ஒளிபரப்பப்படும். அது இப்போதும் தொடர்கிறது என நினைக்கிறேன்.
சொக்கத் தங்கம் திரைப்படம் வெளிவந்த சில நாட்களிலேயே 'இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..' வரிசையில் ஒளிபரப்பானது. அதிலிருந்து விஜயகாந்த் திரைப்படங்களை வெளிவந்த சில நாட்களிலேயே இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக பார்க்க முடிந்தது. ஆனால் நெறஞ்ச மனசு திரைப்படத்திற்கு பிறகு வந்த விஜயகாந்த் திரைப்படங்கள் மீதான ஆர்வம் குறைந்தது. ஆனாலும் எதாவது ஒரு வகையில் படங்களை பார்த்து விடும் வாய்ப்பு அமைந்து விடும்.
2002'ம் ஆண்டு வெளிவந்த ரமணா திரைப்படம் பல குற்றங்களை தோலுரித்துக் காட்டுவதாக இருந்தது. மருத்துவமனைகள் மீது சந்தேகங்களை உருவாக்குவதாகவும் இருந்தது. யாரையாவது ஐ.சி.யூவில் வைத்திருந்து இரண்டு மூன்று நாட்கள் ஆன பின்பு இறந்து விட்டால் 'எல்லாம் ரமணா படத்துல வர்ற மாதிரி தான்' என்ற பேச்சுகள் எழுந்தன. அது இப்போதும் தொடர்கிறது.
என்னதான் விஜயகாந்த்தின் தீவிர விசிறியாக இருந்தாலும் அவருடைய ஒரு படத்தை கூட தியேட்டரில் சென்று பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. விஜயகாந்த் திரைப்படங்கள் சமூக அவலங்களை தட்டி கேட்பதாகவும், சமூக அக்கறையையும் நாட்டு பற்றையும் வளர்ப்பதாகவும் இருந்ததாக தற்போது விஜயகாந்த் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துகிறார்கள். இவையெல்லாம் என்னவென்றே தெரியாத 8,9 வயதிலேயே அவருக்கு ரசிகனாக இருந்ததில் கொஞ்சம் பெருமை தான்.
பெரிதாக வெளி உலக தொடர்பு இல்லாத ஒரு கிராமத்தான் சமூக அக்கறையுடன், சமூக கோபத்துடனும் இருந்தால் அதற்கு விஜயகாந்த் திரைப்படத்தின் தாக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

விஜயகாந்த்ங்கற பேரக் கேட்டாலே என் கொழுந்தனார் ஞாபகந்தான் வரும். தீவிர ரசிகன். நீலமேகம்ங்கற அவனோட பேர விஜய நீலமேகம்னு மாத்தி வெச்சுக்கிட்டான்.
ReplyDeleteகல்யாணம் ஆனப்பறம் பாத்த மொதல் படம் விஜயகாந்த் நடிச்ச 'தமிழ்ச்செல்வன்'. 15 பேர் போனோம்.
இன்னைக்கு அவர் இறந்தப்பறம் நடக்கற நிகழ்வுகள், கேக்கற செய்திகள், படிக்கற விஷயங்கள் எல்லாம் அவர் மேல மதிப்பையும் மரியாதையையும் கூட்டுது.
விஜயகாந்த் இறந்த பிறகு தான் அவர் செய்த உதவிகளை கேட்டு மலைத்துப் போனேன்.. அவருடைய படங்களை நானும் நிறைய பார்த்து இருக்கேன். இந்த கட்டுரையை வாசிக்கும் போது பல காட்சிகள் கண்முன்னே வந்தது.
ReplyDelete