Thursday, February 1, 2024

கவனிக்கும் எல்லாமே கற்றல்தான் - ஈரோடு கதிர்

 


ரு பயணத்தின் நோக்கம் புதிய அனுபவங்களைப் பெறுவதன்றி வேறென்னவாக இருந்துவிடப் போகின்றது. 2020 வரை மிக எளிதாக அமைந்த, அமைத்துக்கொண்ட பயணங்கள் ஏனோ அதன்பிறகு மிக அரிதானதாக மாறிவிட்டது. சூழல், வாய்ப்பு என்பதைவிட மன நிலைப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

 

இன்னும் சொல்லப்போனால் தனித்து உருவாக்கிக்கொண்ட பயணங்கள், நட்புகளோடு மேற்கொண்ட பயணங்கள் முன்பு நிறைய வாய்த்தன. 2020-2022 வரை எந்தவிதமான பயணமும் அமையவில்லை. 2020, 2021ல் சூழல்கள் அனுமதிக்கவில்லை. அதன் நீட்சியாக 2022லும் பயணம் அமையவில்லை.

 

பயணங்கள் 2.0 என்றால் 2023ல் கோழிக்கோடு சென்றதுதான். அதன்பிறகு இந்த ஆண்டு கொச்சி பயணம். இனி பயணங்கள் அதிகரிக்கும் எனத் தோன்றுகின்றது. அதிகரிப்பதுதான் நல்லதும்கூட.

 

இந்த முறை கொச்சியைத் தேர்ந்தெடுத்தற்கு முதற்காரணம், கடந்த ஆண்டு வடக்கு என்பதால் இந்த ஆண்டு தெற்கு. கொச்சி பயணம் என்று முடிவானதும், வழி மற்றும் செல்ல வேண்டிய இடங்கள் குறித்து தேட ஆரம்பித்தேன். கொச்சி மற்றும் அது சார்ந்த ஊர்களின் பெயர்கள் மலையாளத் திரைப்படங்களின் வழியே ஓரளவு பரிட்சயம் என்பதால், அந்த ஊர்களையெல்லாம் கடக்கப்போகிறோம் என்பது பெரும் சுவாரஸ்யமாக இருந்தது.

 

கோவையிலிருந்து காலையில் புறப்பட்டு சுமார் ஐந்து மணி நேரத்தில் கொச்சியை அடைந்துவிட முடிந்தது. மொத்த தொலைவினை மூன்று பாகமாகப் பிரித்துக்கொண்டால், முதல் இரண்டு பாதிக்கு எடுத்த மொத்த நேரத்தைவிட மூன்றாவது பாதி கூடுதலாக எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தகுந்தது.

 

சுங்கக் கட்டணம் செலுத்திய நான்கு வழிச்சாலை என்றபோதிலும் சாலக்குடி தொடங்கி அங்கமாலி, ஆலுவா, இடப்பள்ளி என கொச்சி வரை சுமார் 60 கி.மீ  தொலைவிற்கு மதிய நேரத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பிடித்தது. காரணம் அத்தனை சந்திப்புகள் மற்றும் சிக்னல்கள்.

 

பார்க்க வேண்டிய பெரும்பாலான இடங்கள் ஃபோர்ட் கொச்சி பகுதி என்பதால், அங்குதான் அறை தேர்ந்தெடுத்திருந்தேன். அறையைத் தேர்ந்தெடுக்கும்போது கூகுள் ரேட்டிங் மற்றும்  ரிவ்யூ அதிகம் இருப்பதை வைத்து தேர்ந்தெடுத்திருந்தேன். ஆனால் அங்கு சென்ற பிறகு சூழல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. மிகப் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் மட்டுமே தங்கியிருப்பதை உணர முடிந்தது. மீண்டும் ரிவ்யூக்களை புரட்டும்போதுதான் புரிந்தது, ரிவ்யூ அளித்திருந்தவர்களில் 95% வெளிநாட்டவர் என்பது.

 

மட்டாஞ்சேரி அரண்மனை, Paradesi Synagogue,  Jew town ஆகியவை ஏறத்தாழ சில மணி நேரங்களை எடுத்துக் கொள்கின்றது. வேறொரு நாட்டிற்குள் இருக்கும் உணர்வும் அங்கு கிடைக்கின்றது. காரணம் கொத்துக்கொத்தாக வெளிநாட்டினர் உலவும் பகுதி அது. Synagogue வீதியில் இருக்கும் மோக்கா ஆர்ட் கபே மிக அழகிய அனுபவத்தைத் தருகின்றது. நிறைய ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இடத்தில், ஓய்வெடுக்க, உரையாட, வேலை செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். என்றென்றும் நினைவில் நிற்கும் தேநீர் அங்கே பருகக் கிடைத்தது.

 

சூரியன் விடைபெறும் அற்புதமான தருணம் ஃபோர்ட் கொச்சி கடற்கரையில் வாய்த்தது. மாலை நேரத்து கடற்கரையின் இதமும் அழகும் எப்போதும் ஈர்ப்பு மிகுந்தது. ஃபோர்ட் கொச்சி கடற்கரையில் பெரிய கப்பல்களைப் காணும் வாய்ப்பு கூடுதலாக அமைகின்றது. மிகப் பெரிய சரக்கு கப்பல் ஒன்று வர, இரண்டு படகுகள் சென்று வரவேற்று, இருபக்கமும் இணைந்து வழி நடத்திய காட்சியும் காணக் கிடைத்தது. இரவு உணவு கோழிக்கோட்டின் பிரபலமான பாரஹான் உணவகத்தில். சிறப்பான சுவை.

 

காலை அருகிலிருக்கும் தேவாலயங்களைப் பார்வையிட்டதோடு ஃபோர்ட் கொச்சி பயணம் நிறைவினை எட்டியது. இரண்டு நாட்கள் அனுபவத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் போர்த்துகீசியர்கள் உருவாக்கிய புராதானங்கள் பாதுகாக்கப்படும் விதம் பெரும் ஆச்சரியம் தந்தது. தமிழகத்தில் உள்ள பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சின்னங்கள், மக்களை ஈர்க்கும் விதமாக திட்டங்கள் தீட்டுவதும், பாதுகாக்கவேண்டியதும் முக்கியம் எனத் தோன்றியது.

 


 ஃபோர்ட் கொச்சியிலிருந்து 550 மீட்டர் தொலைவில் இருக்கும் வைப்பின் தீவிற்கு சாலை வழியே செல்வதென்றால் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு மேல் சுற்றி வர வேண்டும். வைப்பினை படகு வழியே சில நிமிடங்களில் அடைந்துவிட முடிகின்றது. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் படகு சேவை உண்டு. படகில் மனிதர்கள், சைக்கிள், பைக், ஆட்டோ, கார், டெம்போ, லாரி, பஸ் என எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு பயணிக்கலாம். மனிதர்களும், வாகனங்களும் வெவ்வேறு கட்டணங்களில் அனுமதிக்கப்படுகின்றன. முதன்முறையாக காரினை படகில் ஏற்றி மிதந்து கடந்த அனுபவம் மகத்தானது.

 

வைப்பின் தீவை எட்டியதும் செராய் கடற்கரை செல்லும் வழியில் இருக்கும் புத்துவேப்பி கலங்கரை விளக்கு செல்லும் வாய்ப்பு அங்கு பணியாற்றும் நண்பர் சூர்யநாராயணன் அழைப்பில் அமைந்தது. 2018ல் எழிமலா கலங்கரை விளக்கு அவருடைய அழைப்பில் சென்று வந்த அனுபவத்தில் இந்த முறையும் கலங்கரை விளக்கு செல்வதை நினைக்கவே உற்சாகம் சூழ்ந்தது. கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து ஒரு பக்கம் நிலத்தையும், மறுபக்கம் கடலையும் காண்பது மகத்தான அனுபவம்.

 

1979ல் கட்டப்பட்டுள்ளது புத்துவேப்பி கலங்கரை விளக்கு. தற்போது மத்திய அரசால் கலங்கரை விளக்குகள் சுற்றுலாத் தளமாக மாற்றப்படுவதையொட்டி அழகு படுத்தப்பட்டிருந்தது. பார்க்க வருகின்றவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.. இந்தக் கலங்கரை விளக்கில் மேலே செல்ல லிப்ட் வசதி உள்ளது.

 

அங்கிருந்து செராய் கடற்கரை செல்லும் வழியில் சாப்பிடுவதற்காக ஒரு இடத்தில் நிறுத்தி  அசைவ உணவகம் ஒன்றினுள் சென்று கைகள் கழுவி அமர்ந்த பிறகு பிரியாணி சாப்பிடலாம் என மகள் விருப்பம் தெரிவிக்க, அந்தக் கடையில் பிரியாணி இல்லை. எங்கள் தடுமாற்றத்தைக் கண்ட கடைக்காரர் எங்களிடம் வந்து விசாரித்தார். பிரியாணி விருப்பத்தைச் சொல்ல சிரித்துக்கொண்டே தங்களிடம் இல்லை என்றார். அதோடு அதே வழியில் சற்று தொலைவில் இருக்கும் உணவகத்தில் பிரியாணி கிடைக்கும் என விளக்கமாக்க் கூறி புன்னகையோடு அனுப்பி வைத்தது மிக முக்கியமானதொரு அனுபவம்.

 

நேர் கோட்டில் செல்லும் சாலையின், குறுக்கில் கடக்கும் நீர் வழிப் பாதைகளில் படகு போக்குவரத்தினையொட்டி சாலையில் பாலங்கள் பல இடங்களில் உயர்த்திக் கட்டப்பட்டிகின்றன. செராய், குழிப்புளி, முனம்பம் கடற்கரையின் அழகினை ரசித்தபடி பயணம் ஓரளவு நிறைவுக்கு வந்தது.

 

முனம்பம் தொடங்கி கொடகரா வரை வளைந்து நெளிந்த சாலைகளின் வழியே பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் பிரமாண்டமான அழகிய வீடுகள். ஆங்காங்கே ஊர்கள். மிக முக்கியமானது எதன் நிமித்தமாகவும் சாலைகளின் வளைவுகள் நேராக்கப்படவில்லை. சாலைகளை ஒட்டியிருக்கும் வீடுகளின் சுற்றுச் சுவர்கள் அப்படியே அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. எங்கும் சாலை அகலப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.

 

சாலையில் வளைவு நெளிவுகள் மேடு பள்ளங்கள் புதிதாகச் செல்வோருக்கு சற்று கடினமான அனுபவமாக இருந்தாலும், அங்கு வாழும் மக்களுக்கு மிகவும் பழகியதாகவே இருக்கலாம். அடுத்து கேரள மாநில மக்கள் தொகை மற்றும் வாகனப் பயன்பாட்டிற்கு அந்தச் சாலைகள் போதுமானதாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கலாம் என நினைக்கிறேன்.

 

பேருந்து போக்குவரத்தினைப் பொறுத்த வரையில் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே கேரள மாநில அரசின் சில KSRTC பேருந்துகளைக் காண முடிந்தது. ஃபோர்ட் கொச்சியைப் பொறுத்தவரையில் சற்று சிறிய அளவினால பச்சை வண்ண தனியார் பேருந்துகள்தான் முழுக்கத் தென்பட்டன. மற்ற பகுதிகளிலும் தனியார் பேருந்துகளை மட்டுமே காண நேர்ந்தது.

 

இந்தப் பயணத்திலும் அவதானிக்க ஏராளமான தருணங்கள் அமைந்தன. கவனிக்கும் எல்லாமே கற்றல்தானே. பலவிதமான மனிதர்கள்கள், அவர்களுடைய ஆர்வங்கள், தெரிவுகள் என்பதைக் காணும் நல்லதொரு வாய்ப்பு. இப்படியாக இந்தப் பயணத்தின் நோக்கமும் இனிதே நிறைவேறிய மனநிறைவு உண்டானது..


No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...