நீர் விளையாட்டுகளின் கூடாரம்
பிறகு ராதா நகர் கடற்கரையில் இருந்து பிரியா விடை பெற்று எங்களை இறக்கி விட்ட இடத்திற்கு வந்தோம். சுடச்சுட மதிய உணவு உண்டபின் அங்கிருந்து வேனில் கிளம்பி பெர்ரி (கப்பல்) இருக்குமிடம் சென்றோம். அதற்குள் அங்கு நாங்கள் பார்த்த அழகிய ஆட்டோ ரிக்ஷா போன்று வேறு எங்கும் பார்த்ததில்லை. செல்ஃபி பாயிண்டை விடுவோமா என்ன. ஆட்டோவில் இருந்து பயணி, அதுவும் வெளிநாட்டுப் பயணி இறங்கியதும் ஓட்டுனரிடம் ஓடிச் சென்று அனுமதி கேட்டோம். புன்னகையுடன் அவரும் தலை அசைக்க, இரண்டிரண்டு பேராக அந்த ஆட்டோ ரிக்ஷாவில் அமர்ந்து அழகாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் வந்த கப்பலிலேயே போர்ட் பிளேர் திரும்பினோம்.
ஒரு விஷயம் அந்தமானில் தேடித் தவித்தோம். அதாவது நம்மூர் போல் முக்கிய சாலைகளில் 100 அடிக்கு ஒரு தேநீரகம் இல்லாதது சிரமமாக இருந்தது. இறுதியாக ஒரு தள்ளு வண்டியில்தான் கிடைத்தது. கிடைத்த இடத்தில் பருகிய போது ஆஹா, அமிர்தமாக இருந்தது. அதற்குள் சம்சுதீன் இன்னும் ஒரு குழுவை வேறு இடத்தில் விட்டு விட்டு வருகிறேன். நீங்கள் சிறிது நேரம் பூங்காவில் அமர்கிறீர்களா என்றார். அன்றுதான் நாங்கள் இரவு நேரத்தில் ஒளியும் ஒலியும் சிறப்புக் காட்சியாக செல்லுலார் சிறையின் வரலாற்றைக் கேட்டது.
ஏற்கனவே பூங்காவின் தோற்றம் மனதை கவர்ந்திருந்தது. கரும்பு திங்கக் கூலியா. எனவே, நீங்கள் போய் வாருங்கள் என்று அவரை முழு மனதுடன் அனுப்பி வைத்து விட்டு ஒரு நல்ல இடம் பார்த்து அமர்ந்தோம். எங்களுக்குள் நாங்களே ஆடுவது, பாடுவது,கவிதை சொல்வது என நேரத்தை சிறப்பாகக் கழித்தோம். பூங்காவில் இருந்த சிலர் எங்களின் ரசிகர்களாகவே மாறி விட்டனர்.
இப்படியாக இரண்டாம் நாள் முடிந்தது.
அடுத்த நாள் அதிகாலையில் வழக்கம் போல் தயாரானோம். அனைவரும் ஒரே போல் வாங்கி இருந்த டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கிளம்பினோம். அன்று மிகவும் வித்தியாசமான நாளாக இருக்கும் என்று தோன்றி விட்டது. காரணம் அந்தமான் அதிலும் குறிப்பாக நார்த் பே தீவு கீழ்க்கண்ட நிலத்தடி நீர் (சாகச)விளையாட்டுகளுக்கு பெயர் போன இடம்.
•ஆழ்கடல் நீச்சல்
•கடல் நடை
•பாராசெயிலிங்
•டால்பின் கிளாஸ் பாட்டம் படகு
•கோரல் சஃபாரி நீர்மூழ்கிக் கப்பல் சவாரி
•ஸ்நோர்கெலிங்
•ஸ்கூபா டைவ்
முதலில் போட் மூலம் தீவை அடைந்தோம். எங்களுள் ஒருவர் நீர்ப்பயணம் என்றால் பயந்தவர் என்பதால்…சுராங்கனி பாட்டை கோரசாகப் பாடியபடி சென்றோம்.
தீவை அடைந்தவுடன் பல விளையாட்டு ஏஜெண்டுகள் சுற்றுலாப் பயணிகளைச் குழ்ந்து கொண்டனர். எங்களையும் தான். ஆனால் விளையாட்டுகளுக்கான கட்டணம் கொஞ்சம் அதிகம் என்றே தோன்றியது..ஆயிரங்களில்தான்..நா
ஸ்கூபா டைவிங் சென்றவர்களுக்கு முதலிலேயே சில பரிசோதனைகள் செய்து, பிறகு சில பயிற்சிகள் கொடுத்து, அதன் பிறகு அழைத்துச் செல்கின்றனர். கடலின் அடியில் ஒவ்வொரு வருடனும் ஒரு பயிற்சியாளர் செல்கிறார். அவர் தன்னிடம் உள்ள கேமரா மூலம் ஸ்கூபா டைவிங் செய்வதை அழகாகப் பதிவு செய்து மேலே வந்தவுடன் அதையும் நம்மிடம் ஒப்படைத்து விடுகிறார்கள் என்பது சாலச்சிறப்பு.
பாராசெயிலிங் செல்பவர் அடுத்த ராஸ் தீவிற்கு நேரே வந்து விடுவார் என்று சொன்னதால் நாங்கள் நேராக ராஸ் தீவிற்குப் பயணமானோம். 1941 கால கட்டம் வரை பிரிட்டிஷ்காரர்களின் நிர்வாகத்திற்கும் தங்கியிருப்பதற்கும் இத்தீவு பயன்படுத்தப்பட்டதாம். இரண்டாம் உலகப்போரின் போது 1942-இல் இருந்து 1945 வரை சப்பானியர் வசம் அந்தமான் தீவு வந்தது. இந்தக் காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசு இத்தீவில் இந்தியக் கொடியேற்றினார். அதன் நினைவாக 2018 இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோசு தீவு என்று மாற்றப்பட்டது. இருப்பினும் இன்னும் ராஸ் தீவு என்றே சொல்கிறார்கள். இங்கு இப்போதும் மக்கள் குடியிருக்க அனுமதி இல்லை. அந்தக் கால தேவாலயம் மற்றும். அரசுக் குடியிருப்புகள் உள்ளன. தற்போது இது இந்தியக் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தீவினைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையில் பாராசெயிலிங்க் சென்றவரும் இன்று எங்களுடன் இணைந்து கொண்டார். அங்கு ஒரு பெரிய மரம் வேர் பரப்பி என் மடியில் அமர்ந்து கொள் என்று அழைப்பது போல் இருந்தது. அதன் அடியில் நின்று அமர்ந்தும் பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
அடுத்து இன்னொரு சாகச நிகழ்வு…அதாவது வாட்டர் ஸ்கூட்டர் என்பது..கடல் நீரில் அலைகளின் மேல் ஸ்கூட்டர் போன்ற வாகனத்தை செலுத்துதல்.. 16-25 வயது வரை உள்ள ஓட்டுனர்கள் நம்மை உட்கார வைத்து ஓட்டி செல்கிறார்கள் நம்மையும் ஓட்ட வைக்கிறார்கள். ஒரு பத்து நிமிடப் பயணம் தான் அதற்குள் எனக்கெல்லாம் குலை நடுங்கி விட்டது. இளம்பெண்களில் ஒருத்தியோ இன்னொரு தடவை செல்ல வேண்டும் என்று கெஞ்சிப் போய் வந்தாள்.
அடுத்ததாக எனக்காக மற்றவர்களும் வந்த இடம் அந்தமான் தமிழ்ச்சங்கம். அந்தமான் போறேன்னு சொன்னவுடன் மறக்காம தமிழ்ச்சங்கம் போயிட்டு வந்துரு அப்படின்னு அக்கா சொல்லி இருந்தாள். ஏனென்றால் அந்தமான் மேல எங்கள் இருவருக்கும் சின்ன வயசில இருந்து ஒரு தீராத பாசம்..காரணம் எங்கள் தந்தையார் அவரோட 16 வயசுல அந்தமான் போயி ரெண்டு வருஷம் இருந்தார். 9-ம் வகுப்பு படிக்கும் சமயம் தமிழ்ப்பற்று மிக்க அவர் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகிட்டதால் பள்ளியை விட்டு வெளியே அனுப்பப்பட்டவர். ஆனால் அந்தமானுக்கு சென்றதால் ஹிந்தி மொழி பேசக் கற்றுக்கொண்டார். நான் எப்பவும் அதை பட்லர் ஹிந்தின்னு கிண்டல் அடிப்பது வழக்கம்.
ரெண்டு வருஷத்தில் திரும்பி வந்து விட்டார் என்றாலும் இந்த ரெண்டு வருஷத்துல அவர் தன் தடத்தை அங்கு பதித்து விட்டுத்தான் வந்திருந்தார். அங்குள்ள தமிழ் சங்கத்தின் ஆரம்ப கால செயலாளராக இருந்ததோடு, முதல் முறையாக, அங்குள்ள தமிழர்களுக்கு சென்னையிலிருந்து குமுதம், ஆனந்த விகடன் போன்ற அனைத்துப் பத்திரிக்கைகளையும் வரவழைத்து புத்தகக் கடை வைத்து இருந்திருக்கிறார். அப்போது அது அங்கு அரிது என்பதால் புத்தகம் வாங்க நான் நீன்னு போட்டி போட்டுட்டு முன்பதிவு செய்ய வருவாங்களாம்.
இதுபோல் அந்தமானில் அப்பா இருந்த அந்த வாழ்க்கையைத் பத்தி அப்பப்போ சொல்லி இருந்ததால், அது என் சின்ன வயசுல மனசுல பதிஞ்சு போச்சு. அந்தமான் போகப் போறோம்னு முடிவானவுடன் கண்டிப்பாக தமிழ்ச்சங்கம் பார்க்கணும்னு முடிவு செய்தேன். தற்போது அப்பா இருக்கும் போது இருந்த இடத்திலேயே புதுக் கட்டிடங்கள் வந்து அந்த கட்டிடத்தையும் செப்பனிட்டுக் கொண்டு இருந்தார்கள். சரியாக போகி அன்னைக்கு அங்கு போயிருந்தோம். தற்போதைய தலைவர்கிட்ட பழைய ரெக்கார்டுகள் இருக்குமா தந்தையின் கையெழுத்தைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டேன். ஆனால் அவரோ இப்போது எங்களிடம் 1960 முதல் மட்டுமே உள்ளது என்றார். அப்படி ஏதாவது கிடைத்ததால் எனக்கு ஒரு பிரதி அனுப்ப வேணும் என்று சொன்னேன் அவரும் என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, கண்டிப்பாகத் தேடி அனுப்புவதாக வாக்களித்தார்.
தமிழ்ச் சங்கத்திற்குள் நுழைந்தபோது அப்பாவோட அந்த பதினாறு வயசுக்குப் போய் விட்ட சந்தோஷம். நான் அங்கு நின்னு புகைப்படம் எடுத்து அனுப்பியபோது, என் அக்காவிற்கும் அவளும் அங்கு நிற்பது போன்ற உணர்வு, மகிழ்ச்சி..அதனை சொற்களில் விவரிக்க இயலாது.
மேலும், கொசுறுத் தகவலாக சொல்ல வேண்டும் என்றால், அந்தமானில் இருந்து அவர் திரும்பி வந்து, அவரது 38வது வயதில் நான் பிறந்து, பிறகு எனக்கு ஒன்பது வயது ஆகும் பொழுது வீட்டிற்கு தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அனைத்தும் ஹிந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே. அப்போதெல்லாம் அப்பா ராஜ்கபூரின் படத்தைப் பார், மனோஜ் குமாரின் படத்தைப் பார் என்பார். இப்படித்தான் இந்தி மொழி மீது எனது ஆர்வம் பெருகி இன்று ஹிந்திப் பேராசிரியராக மாறக் காரணமாயிற்று. எனவே எனது இந்தப் பணிப் பயணத்திற்கான விதை அன்று அந்தமானிலேயே விதைக்கப்பட்டு விட்டது என்பதால் அந்தமான் எனக்கு இன்னமும் கூடுதல் ஸ்பெஷல் தான்.
இப்படியாக மூன்றாம் நாள் இனிதே சாகசப் பய(ண)ங்களில் மற்றும் தமிழ் சங்கத்தில் கழிந்தது. நன்றாகச் சாப்பிட்டு விட்டு உறங்கலாம் என நினைத்தால் அதிகாலை(நள்ளிரவு) 2.30 மணிக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சென்றார் சம்சுதீன்..
…தொடரும்


No comments:
Post a Comment