ஒரு வழியாக அமெரிக்காவிற்குள் காலடி எடுத்து வைத்தாகிவிடாது இனி வேலை பார்க்கிறோமோ இல்லையோ காலிஃபோர்னியா மாகாணத்தையாவது ஒரு சுற்று வந்திடவேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டே ஹோட்டல் அறைக்கு சென்று செக்-இன் செய்துவிட்டு நண்பரின் காரில் ஏறி அவர் வீட்டிக்கு போய் ஒரு காபியை குடித்துவிட்டு வந்த பின்பு வார நாட்கள் அலுவலகத்தில் ஓடியது. நண்பரும் பே ஏரியா (bay area) பற்றிய ஒரு முன்னோட்டத்தை கதை போல் சொல்லி முடித்து இருந்தார். அலுவலகம் SFO என்று சொல்லப்படும் சான்பிரான்சிஸ்கோ நகர மையப்பகுதியானதால் இடைவேளை கிடைக்கும் போதெல்லாம் மலை போல் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களுக்கு நடுவே தெருக்கள் வழியாக நடக்க தொடங்கினேன். பே ஏரியா (bay area) என்றும் சிலிகான் பள்ளத்தாக்கு (silicon valley) என்றும் அழைக்கப்படும் பகுதி பல சிறிய மற்றும் பெரிய நகரங்களை கொண்டது .
பே ஏரியா பழைய காலத்து பெயராகவும் போன நூற்றாண்டின் 70களில் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் பல்வேறு இடங்களில் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்த பிறகு அங்கே IBM , HP போன்ற பல அதிதொழில்நுட்ப (High Tech) நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதால் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக கூகுளார் தெரிவிக்கிறார் . மேலும் Don Hoefler என்பவர் தான் முதன் முதலில் வார இதழான Electronic News என்னும் பத்திரிகையில் Silicon Valley என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்து வைத்திருக்கிறார். இன்று அன்றாடம் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களான கூகிள் , ஆப்பிள் போன் , ஆன்ட்ராய்டு போன் , யூடுயூப் போன்றவற்றை உருவாக்கிய ஜாம்பவான்கள் எல்லோரும் இங்கிருக்கும் ஏதோ ஒரு காப்பி கடையில் அமர்ந்து பொழுது போகாமல் வெட்டிப்பேச்சு பேசி கண்டுபிடிக்கப்பட்டவைகள் என்றால் அதை கேட்கும் நமக்கும் சுவராசியமாக தான் இருக்கிறது. சேப்பியன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல வெட்டிப்பேச்சு பேசுவதால் தான் (Gossip) மனித சமுதாயத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் பண்பாடு கலாச்சாரங்களும் புதுப்பொலிவு அடைந்து இன்று நம்மை வந்தடைந்திருக்கவேண்டும் என்பதற்கு இதை ஒரு உதாரணமாக கொள்ளலாம்.
சான்பிரான்சிஸ்கோ நகரமையம்
ஒரு வார நாள் மதிய உணவிற்கு பின்னர் நான் பங்கேற்க வேண்டிய அலுவலக கூட்டம் ரத்தானதால் அலுவலக நண்பர் ஒருவர் இன்று நீ ஏன் கோல்டன் கேட் பாலம் (Golden Gate Bridge) சென்று வரக்கூடாது என்று யோசனை கூறினார். சரியென உடனே கிளம்பி SFO நகர மையத்திலிருந்து சுமார் 20 நிமிட பேருந்து பயணம் சென்றபொழுது தான் ஒரு பிரமாண்ட பாலம் சிகப்பு கம்பளம் போர்த்தியதை போல எதிரே காட்சியளித்து நின்றது. இது ஒரு தொங்கு பால வகையறாவை சேர்ந்தது . நீண்ட இரும்பு கம்பிகளை இரண்டு புறமும் உள்ள உயர் கோபுரங்களில் இருந்து தொங்க விட்டு அந்த கம்பிகளில் பாலத்தை தொங்க விட்டு கட்டப்பட்டது . அதன் வடக்குபுறத்தில் சென்று பஸ்சில் இருந்து இறங்கி அதன் தெற்குப் பக்கத்திற்கு கால்நடையாக வந்து சேர்ந்தேன் . சுமார் 1.6 கிமீ தூர பயணத்தை கடக்கும் பொழுது மேகங்கள் நகர்ந்துவந்து பாலத்தை மூடி நின்றதால் சரியாக படம் பிடிக்க முடியாமல் என் போன்ற பார்வையாளர்கள் பலரும் ஏமாந்து நின்றார்கள் . இருந்தாலும் முடிந்தவரை படங்கள் எடுத்து நகர என்னை அங்கே ரோந்து பணிக்காக மிதிவண்டியில் சென்ற இரண்டு காவலர்கள் மறித்தது திக் என்று இருந்தது . அவர்களின் சில கேள்விகளுக்கு பதில் தந்துவிட்டு நகர அங்கே கேமராவுடன் படம் பிடித்து கொண்டிருந்த ஆப்பிரிக்கா அமெரிக்கர் ஒருவர் என்னை நட்பான தோனியில் காவலர்கள் நிறுத்தியதை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். பின்னர் தான் தெரிந்தது கடந்தவாரம் உலகின் மிகப்பெரிய IT நிறுவனத்தில் பணிபுரியும் தென்னிந்தியர் ஒருவர் லேப்டாப் எல்லாவற்றையும் பாலத்தின் மேலேயே விட்டுவிட்டு அங்கிருந்து கீழே குதித்து தன்னையே மாய்த்துக்கொண்டார் என்ற தகவல். நானும் ஒரு IT பணியாளன் என்ற முறையில் நீண்ட நேர பணிச்சுமை மற்றும் மனசோர்வடைதல் போன்றவை இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம் என்பது என் அனுமானம் . பின்னர் கூகிளில் தேடி அந்த செய்தியையும் உறுதிப்படுத்தி கொண்டு நகர்ந்து தென்புறம் இருக்கும் பாலம் பற்றிய தகவல் அருங்காட்சியகம் வந்தடைந்தேன்.
பாலத்தில் நடந்து வரும்வழியில் நல்ல குளிர் என்பதால் அங்கே செல்லும்பொழுது சரியான உடையணிந்து செல்லுவது மிகமுக்கியம் என்பதை மறுபக்கம் வந்த பின்னர் தான் உணர்ந்தேன். பின்னர் அருங்காட்சியகத்தில் பாலம் கட்டிய பொறியியல் குழு பற்றிய வரலாறு, அவர்களின் திட்டமிடல் மற்றும் அதற்கு பயன்படுத்திய இரும்பு உட்பட அனைத்து பொருட்களின் தகவல்களையும் அற்புதமாக கட்சிப்படுத்தி இருந்தது அருமை. ஜனவரி 1933ல் கட்ட தொடங்கி மே 1937ல் கட்டி முடிக்க பட்டதாகவும் மேலும் அது நிர்ணயிக்கபட்ட தேதிக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கிடைத்த தகவல்கள் ஆச்சரியப்படவும் வைத்தது. ஏனென்றால் அது கணிப்பொறி போன்ற சாதனங்கள் கண்டுபிடிக்கப்படாத காலகட்டம் . 1933 லேயே இப்படி ஒரு சாதனை புரிந்த அமெரிக்க தேசம் நோக்கி இன்று உலகெங்குமிருந்து வேலைக்காகவும் அமெரிக்க குடியுரிமைக்காகவும் படையெடுத்து செல்லும்படியாக இருப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை .
(அமெரிக்க பயணம் தொடரும் ....)



No comments:
Post a Comment