Thursday, February 1, 2024

என்றென்றும் காதல் - ஒரே ஒரு உதை தான் - Dr.K.தமிழ்செல்வன்

 


ள்ளிப்பருவத்தை முடித்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்த முதலாம் ஆண்டு புதிதாக கிடைத்த நண்பர்கள் சிலர் இரு சக்கர வாகனங்கள் வைத்திருந்தனர்.


கோவையில் தங்கி படிக்கும் பல மாணவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு, ஏன் வரம் என்று கூட கூறலாம். வாகனத்தை எடுத்துக்கொண்டு ஒரு கோப்பை தேநீர் அருந்துவதற்கு ஊட்டி மலைச்சாலை ஏறி ஊட்டி வரை சென்று அங்கு ஒரு தேநீர் அருந்திவிட்டு மீண்டும் திரும்பவும் இருசக்கர வாகனத்தில் பயணித்து தங்கும் விடுதியில் வந்து சேர்வது தான்.செல் கேமராக்கள் இல்லாத காலம் அது.அதற்கு நாங்கள் விதிவிலக்கு அல்ல.

எனக்கும் ஒரு இருசக்கர வாகனம் வேண்டும் என என் தந்தையிடம் போராடி உண்ணாவிரதம் இருந்து உணவு சாப்பிட வேண்டுமென்றால் எனக்கு இருசக்கர வாகனம் வாங்கி தந்தால் மட்டுமே நான் சாப்பிடுவேன்,சாப்பிடாத காரணத்தால் மயக்கம் வருவது போல எல்லாம் என் வீட்டில் நடித்து என்னென்னமோ போராட்டங்களை எல்லாம் கையில் எடுத்து அம்மாவை சாப்பிடாமல் இருப்பதாக ஏமாற்றி இறுதியாக தாயின் பரிந்துரையின் பேரில் அந்த வாகனம் இருக்கும் ஷோரூமிற்கு அப்பாவை அழைத்துச் சென்றேன்.

அந்த குறிப்பிட்ட வாகன நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பை காண்பித்து (Yamaha Crux) என் அப்பா என்னிடம் டேய் தம்பி அது 80 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் வாகனமாம் இது  ஒரு லிட்டர் பெட்ரோலில் 30 கிலோமீட்டர் முதல் 35  கிலோமீட்டர் கொடுப்பதே சந்தேகம் என்கிறார்கள்.அந்த வண்டி வாங்கிக்கோடா என்று அவர் என்னிடம் மன்றாடி கெஞ்சினார்.பெட்ரோல் அடிப்பதை பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும். அது உன்னோட வேலை. வண்டி ஓட்டுவது மட்டும் தான் என்னோட வேலை. எனக்கு இந்த வண்டி தான் வேண்டும் என்று நான் வாய்கிழிய வசனங்கள் பேசி வாங்கிக் கொண்ட வாகனம்.

இந்த வாகனம் என்னை வந்து சேர்ந்த அடைந்த போது என் தந்தை வீட்டில் ஐந்து லிட்டர் பெட்ரோல் கேனில் பெட்ரோல் வாங்கி இருப்பில் வைத்திருக்க வேண்டும்.எனக்கு தந்தை அது அவரது விதி.நான் ஒரு முறை சில கிலோமீட்டர் ரவுண்ட் அடித்துவிட்டு வந்தால் கூட பெட்ரோல் டேங்க் ஓபன் பண்ணி பார்ப்பதுவும் அதில் சற்று குறைவாக இருக்கும் பெட்ரோல் நிரப்புவது வழக்கம்.இந்த ஐந்து லிட்டர் கேன் அதை எடுத்து வருவதும் சிந்தாமல் பெட்ரோல் ஊற்றுவதும் கூட அவரது வேலை தான். இப்படியாக சில நாட்கள் சென்று கொண்டிருக்கும்போது ஒரு மாரடைப்பில் என் தந்தை திடீரென மரணித்து போனார்.என் வாழ்வில் சம்மட்டி அடி.

என் தாய் மிகவும் கண்டிப்பான தாய் மட்டுமல்ல அரசு பள்ளி ஆசிரியையும் கூட மாவட்ட அளவில் மாணவர்களை முன்னெடுத்துச் செல்லும் திறமையும் என்னை மட்டுமல்ல அவருடைய அனைத்து மாணவ மாணவிகளையும் நன்றாக அடிக்கவும், கன்னத்தைப் பிடித்து நல்லா வலிக்கிற மாதிரி இழுத்து கிள்ளும் திறனும் அதிகம் படைத்தவர்.இதையெல்லாம் நான் தான் அவரிடம் அதிகம் வாங்கியவன் அதில் பெரும்பாலும் நியாயங்களும் உண்டு.

அங்க அப்பாவிடம் வெந்த பருப்பெல்லாம் இங்க துளியும் வேகாது.விளைவு மாதாஜி மாதா மாதம் பட்ஜெட் ஜி. விடுதிக்கு இவ்வளவு மெஸ் பில் இவ்வளவு தானே உன் செலவுக்கு இவ்வளவு தான் ஓடிப்போ நாயே ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாரு.பட்ஜெட்டில் மட்டும் துண்டு விழவில்லை.என் வாழ்க்கையிலும் தான் வண்டி பெட்ரோல் இல்லாமல் அடிக்கடி தள்ள வேண்டிய நிலைமை வந்துவிட்டது. அதான் மைலேஜ் 30 கிலோமீட்டர் ஆச்சே.

எனக்கு தெரிந்து இது நாள் வரை ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓட்டி இருப்பேன் என்றால் 100 கிலோமீட்டருக்கு மேல் தள்ளி இருக்கிறேன்.இதில் பல நேரங்களில் மழையில் அழுது கொண்டும், வெயிலும்,மேடுகளிலும், வண்டி தள்ளும் நிலையை நினைத்து மட்டுமல்ல,என் தந்தை இருந்திருந்தால் இந்நிலைக்கு வந்திருக்க மாட்டேனே எப்படியாவது காச ஆட்டையப்போட்டிருப்பேனே என்பது உட்கருத்து.அதில் பல நேரங்களில் அப்பன் சாபம் வெப்பன் மாதிரி வந்து தாக்குதே என்று நினைத்துக் கொண்டு கூட தள்ளியது உண்டு.

இந்த வாகனத்தில் மிகப் பெரும் விபத்தொன்றையும் சந்தித்து நான்கு நாட்கள் சுயநினைவின்றி கிடந்த விட்டு கிட்டத்தட்ட உயிர் பிழைத்ததே சிரமம் என்றாகி மீண்டும் எழுந்து வந்தது உண்டு.ஆனால் வண்டிக்கு ஒன்றுமே ஆகவில்லை.விபத்து முடிந்து நான் எழுந்து சென்று என் வாகனத்தை பார்க்க ஆறு மாதங்கள் ஆனது.அன்று குப்பை அண்டிய நிலையில் ஒரு புதர் மண்டிய இடத்தில் எல் அண்டு டி புறநகர் சாலை டோல் அலுவலகத்தின் பின்புறத்தில் சாவியுடனே கூட நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.என்னைத்தவிர கேட்பார் யாருமின்றி.

அதற்கு முன் பலமுறை பெட்ரோல் அடிக்க போதிய அளவு காசு இல்லாமல் ஏதாவது ஒரு ஸ்டாண்டிலோ அல்லது தங்கியிருந்த விடுதியில் பல மாதங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்ததும் உண்டு.ஆனால் இது நாள் வரை எத்தனை மாதங்கள் கழித்து சென்றாலும் வண்டியில் ஒட்டடை பிடித்து வண்டி முழுவதும் மிகவும் அழுக்காக தூசி படிந்து மோசமான நிலையில் இருந்தாலும் என்னைப் பார்த்தவுடன் இந்த வண்டிக்கும் எனக்கும் இருக்கும் காதல் துளிர் விட தொடங்கி விடுகிறது.எத்தனை மாதங்கள் கழித்து எடுத்தாலும் இதுவரை ஒவ்வொரு முறையும் ஒரே கிக் தான் ஸ்டார்ட் ஆவதற்கு எடுத்துக் கொள்கிறது.

இது இந்த முறையும் நடந்தது.ஆம் வீட்டு வேலை நடப்பதால் என் வாகனத்தை சகோதரியின் வீட்டிற்கு கொண்டு போய் ஆறு மாதங்களுக்கு முன்பு கார் பார்க்கிங் இல் கடைசியாக கார்களுக்கு பின்னால் நிறுத்திவிட்டு வந்தவன் சிலமுறை அங்கு சென்றபோது கூட இந்த வாகனத்தை பார்க்கவோ தொடவோ இல்லை. அவ்வளவு ஏன் ஆயுத பூஜைக்கு கூட இது கணக்கில் வரவில்லை மூளையிலேயே கிடந்தது.இந்த முறை வண்டி வீட்டில் இருப்பதால் எல்லோரும் அந்த வண்டி வீனா போயிட்டுதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க.எனக்கு மட்டுமே தெரியும். இசையிலோ,பார்வையிலோ,பழகியதிலோ,கடிதத்திலோ ஏன் வேறு எந்தவொரு வெங்காயத்திலுமோ எங்கள் காதல் இல்லை ஒரே ஒரு உதையில் துவங்கி விடும் என்பது.

ஆம் தைப்பூசத்திற்கு முந்தைய நாள் சுமார் ஆறு மாதங்கள் கழித்து துடைப்பம் கொண்டு ஒட்டடை எல்லாம் அடித்து மீண்டும் ஒரு முறை ஒரே ஒரு உதை வண்டி புறப்பட தயாரானது.மீண்டும் என் வாகனத்திற்காக என் கண்களில் இருந்து சிந்திய இரண்டு சொட்டு கண்ணீருடன் காதலுடனும் வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்து வாட்டர் வாஷ் செய்துவிட்டு கிளினிக்கில் வந்தமர்ந்து விட்டேன்.

அங்கே வாட்டர் வாஷ் நடந்து முடியும் வரை நான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை விரும்புவதை பலர் அறிவர் சிலர் காதலிக்கவும் செய்கின்றனர். எத்தனை நாட்கள் மாதங்கள் ஏன்  வருடங்கள் பிரிவென்றாலும்  என் வாழ்வில் என்றென்றும் காதல் ஒரே ஒரு உதை தான் ரெடி....Rx 135 5 Speed TN33 P 7427

No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...