இந்த வருஷம் "முனியப்பசாமி கிடாவெட்டுக்கு என்ன செய்வியோ! ஏது செய்வியோ! ஊருக்கு வந்தே ஆகணும்" எனத், தன் தோழி வானதியிடம், அழுத்தமாக போனில் உத்தரவு போட்டுக் கொண்டிருந்தாள் கல்யாணி.
மறுமுனையில், "எங்கடி, நீயும் ஒவ்வொரு வருஷமும் தவறாம உங்க ஊரு நோம்புக்கு கூப்பிடற, எனக்கு மட்டும் அன்னைக்குனு பார்த்து வேலை வந்திடுது.. இந்த வருஷம் எப்படியும் வந்திடறேன்" எனச் சொல்லி இருந்த வானதி, ஒரு வழியாக நோம்பிக்கு தோழி வீடு வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்த மகிழ்வில் "உன்னை வரவேற்க மாமழையே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைடி எனச் சொல்லிக் கொண்டே வானதியை இறுக்க கட்டிக் கொண்டாள் கல்யாணி.
"என்னடி கல்யாணி, உன் வீடு நோம்பியும் அதுவுமா வெறிச்சோடிக் கிடக்குது வீட்டுல ஒருத்தரையும் காணல."
"அவங்கெல்லாம் இரண்டு நாளா கோவில்ல தான் கிடக்கறாங்க. இரண்டு வருஷத்துக்கு ஒருக்கா வரும் பொங்கல் இல்லையா!அதனால கொண்டாட்டமும் அதிகமா தான் இருக்கும்.."
சரிடி, "நீ போய் சீக்கிரமே குளிச்சிட்டு வா, தீத்தம் கொண்டு வர காவேரிக்கு போறாங்க நாமளும் போலாம்…"
"ஏய் என்னால எல்லாம் குடத்தை தூக்கிட்டு அவ்வளவு தூரத்தில இருந்தெல்லாம் வர முடியாது என்னைய விட்டுடு…"
"நீ ஒன்னும் தீத்தம் எடுக்க வேண்டாம் வேடிக்கை மட்டும் பார்க்க வா..நீ தான் நிறைய எழுதுவியே உன்னட பேனாவுக்கு நிறைய தீனி கிடைக்கும்."
"ஏண்டி, கறிசோறு சாப்பிட வந்தா, இங்கேயும் என்னை எழுதச் சொல்லறதிலே குறியா இருக்க, என்னைய கறி திங்க விடமாட்டே" என கேட்கும் வானதியும், கல்யாணியும் பால்ய கால சினேகிதிகள். வானதி படித்து முடித்ததும் வேலையில் இருப்பவருக்கு திருமணம் செய்துகொடுக்க, அவர் எங்கே பணி மாறுதல் பெற்றுச் செல்கிறாரோ, அங்கே அவர் பின்னால், ஊர் ஊராக மாறிக் கொண்டிருப்பவள்.
கல்யாணியை அவள் ஊருக்கு பக்கத்தில் ஒரு இருபது கிலோமீட்டர் தொலைவில் திருமணம் செய்து கொடுத்ததால், அவள் உள்ளூரில் இருந்தாள். வானதி, கல்யாணியின் ஊர்த் திருவிழாவிற்கு வந்துட்டு, அப்படியே தன் ஊருக்குச் சென்று தன் அம்மா, அப்பாவை பார்த்து செல்லும் எண்ணத்தோடு, தன் மகளையும், கணவரையும் கோவையில் விட்டு, வந்திருக்கிறாள்.
"ஏய், கல்யாணி இந்த கோவில் விழாவுக்கு இத்தனை கூட்டம் கூடுதே அப்படி என்னடி உங்க கோவில்ல விசேஷம்..?"
"ஒரு வருஷம் விட்டு, ஒரு வருஷம் வரும் இந்த முனியப்பசாமி கோவில் பொங்கலுக்கு, வேல் எடுத்து ஆடிட்டு வரும் பெருமாளை வேடிக்கை பார்ப்பதற்காகவே சுத்துபட்டு ஊருச் சனமும் கூடற கூட்டம்டி". அப்புறம் இந்த ஊர் எல்லையில் இருந்து ஊரைக் காக்கற முனியப்பசாமிக்கு கிடா வெட்டறது, கோழி அறுக்கறதுனு வேண்டிகிட்டவங்க, அவங்க அவங்க வசதிக்கு தகுந்தாப்பல, உறவுகளையும் கூப்பிடுவாங்க. பணங்காசு இல்லைனா கூட கடன உடன வாங்கியாவது கொண்டாடி தீர்ப்பாங்க..அதனால உறவுகள் கூட்டமும் அதிகமாதான் கூடும். கூட்டத்தை கட்டுக்குள் வைக்க காவல்துறை கூட இங்கே இருக்கும்."
"ஆமா, ஊரில் தீத்தம் எடுத்துட்டு வரும் போது, நிறையப் பேர் வேலடுத்து ஆடிட்டு வருவாங்க ஆனா, 'பெருமாள் மட்டும் எப்படி சாமி ஆனாரு.?'..அவரும் நம்மாளாட்டம் மனுஷன் தானே!".
"நீ உன்னட பகுத்தறிவு கண்ணை வச்சுட்டு தோண்டி துருவி ஆராய்ந்து பார்க்காதே. இங்கே சனங்களுடைய நம்பிக்கையும், பக்தியும் தான் முக்கியம்.".
பெருமாளின் முப்பாட்டன் காலத்திலிருந்து அவர்கள் குடும்பம் முனியப்பசாமிக்கு வேலெடுத்து ஆடிட்டு வருவது வழக்கம் பேசிக் கொண்டே கோவில் வளாகத்திற்குள் வந்தார்கள்.அங்கே நல்ல உயரமாக, மிகப்பெரிய உருவில் ஆஜனுபாவனுமான தோற்றத்தோடு, உருட்டி முழிக்கும் பெருங்கண்ணும், முரட்டு மீசையும் கோரப்பற்களுமாய், திறந்த வெளியில் ஒரு காலை மடக்கி வைத்து இரண்டு கைகளையும் தொடை மீது வைத்து உட்கார்ந்து இருந்தார் முனியப்பசாமி. வானதி, சாமி முன்னால் என்னடி செய்யறாங்க? என்றாள். அங்கே தேங்காய், பழம் வச்சு பூசைபோட்டு, தயாரானதும் சாமி உத்தரவு கேட்பாங்க.. உத்தரவு கிடைச்சதும் முனியப்பசாமிக்கு முன்னால நட்டு வச்சு இருக்காங்களே கூர்மையான
வேல் அதை உருவி எடுப்பாங்க.அந்த வேலை உருவி எடுக்கும் போது சலசலனு மணிச் சத்தம் கேட்கும் அந்தச் சத்தத்தில் பெருமாளுக்கு சாமி அருள் வந்திடும். எங்கிருந்து அவ்வளவு ஆக்ரோஷம் வருதுனே தெரியாது. உடம்பு கிடு கிடுனு நடுங்க,. முகத்தில ஒரு ஆக்ரோஷத்தோடு எழுந்து நின்னு அவர் போடுற சத்தம் ஊர் முழுக்க எதிரொலிக்கும். அதே அருளோடு தீர்த்தம் கொண்டு வர , ஊர் மக்களோடு காவிரிக்கரைக்கு கிளம்பும் பெருமாள்சாமிக்கு அந்த வேலை கொண்டு வந்து மீண்டும் முனியப்பசாமிக்கு முன்னால் நடுகிற வரைக்கும் அவருக்குள் அருள் இருந்துட்டே இருக்கும்.சனங்களும் அவரை முனியப்ப சாமியாவே நினைச்சு பொசுக்கு, பொசுக்குனு அவரு கால்ல விழுந்து வாக்கு கேட்பாங்க..
வேலை கையில வச்சுட்டு அவரு ஆடற ஆட்டத்தை பார்க்கறப்ப, அங்கே உட்கார்ந்து இருக்கிற முனியப்பசாமியே நேரில வந்து ஆடறமாதிரி இருக்கும்..அப்புறம் அரிவாள் மேல ஏறி நின்னு வாக்குச் சொல்லுவார்.. அவர் அப்போது சொல்லற வாக்கு பலிக்குனு ஊரே நம்புது. அங்கே கூடி நின்னு தன்னை கூப்பிடுவாரா, கூப்பிடுவாரானு ஒரு வித பக்தி பரவசத்தில பயந்துட்டே நிற்பாங்க.. அந்த கூட்டத்தில இருந்து ஒருத்தர கூப்புடுவாறு "டேய் கொழந்த உன்னட தகப்பன் வந்திருக்கேன் என்ன வேணுனு கேளு தீர்த்துத் தரேன்" கேப்பாரு. வாக்கு கேட்டவர், அவருடைய குறையச் சொல்லுவார். அந்த முனியப்பசாமிகிட்டயே தங்களுடைய குறையச் சொன்னதா நம்புவாங்க.
அவர் வாயிலிருந்து விழும் வார்த்தைகள் பெரும்பாலும் இவ்வாறாக இருக்கும். 'நான் உனக்கு பக்கத்துணையா இருந்து பாதுகாத்து கொடுக்கறேன் போனு சொல்லுவார்..இல்லைனா என்னட சன்னதியில வந்து பத்து வாரம் தீபம் போடு எல்லாமே நல்லது நடக்குனு சொல்லுவார்.' அவரைக் கண்டால் அன்னைக்கு ஊரே கையெடுத்து பயபக்தியோடு வணங்கி நிற்கும்.
மற்ற நாளில் எல்லாம் அவரை சாதாரண மனுஷனா தான் பார்ப்பாங்க. அன்னைக்கு மட்டும் அவருக்கு அத்தனை மாலையும், மரியாதையும் கிடைக்கும் .வேல் எடுக்கிறதுக்கு ஒரு மாசம் முன்பே அவரு பத்தியம் இருப்பார். ஒருவேளச் சாப்பாடு.. வெளியே எங்கையும் கை நனைக்க மாட்டார். செருப்புத் தொட மாட்டார். மற்ற நாளில் அவர் சாராயம் கூட குடிப்பாரு.
சரி சரி வா தீத்தம் கிளம்ப போவுது நாமளும் சனங்களோடு சேர்ந்திடலானு கல்யாணி, வானதியைப் பிடித்து இழுத்துக் கொண்டு கூட்டத்தில் தன் பிள்ளைகள் இருக்கும் திசை தேடி நகர்ந்தாள்..
வானதி அந்த பெருமாளை பார்த்துக் கொண்டே வந்தாள்..அவர் கையில் வேலோடு வேட்டியை வரிஞ்சு கட்டிய, கரிய உருவமும் ஆஜனுபாவன உடல்வாகும், மீசையும் பார்க்க சற்று பயமாகத் தான் இருந்தது.
அப்போது தான் வானதி கவனித்தாள். தன்னை கடவுளாகவே நினைச்சு வலம் வரும் அவர், அங்கே காவலுக்கு வரும் போலீஸைப் பார்த்தும் கடவுள் என்பதை மறந்து பவ்யமாக கையெடுத்து வணங்கினார்.
போலீஸ்காரர் இவரைக் கண்டதும் தன் கண்களை தாழ்த்திக் கொண்டு தலையசைத்து நகர்வதை கவனித்த வானதிக்கு ஆச்சரியம் கொப்பளித்தது.
"ஏய் கல்யாணி என்னடி, உங்க சாமி போலீஸ்காரரை கண்டதும் பயந்து நடுங்கற மாதிரி போவுது"
"அது நடுக்கம் இல்லடி...அவருக்கு மரியாதை".
"என்னடி அப்படி மரியாதை…"
"அது ஒரு கதை நடந்து போச்சு அன்னையிலிருந்து போலீஸைப் பார்த்தா இந்த பெருமாள் இப்படித் தான் கையெடுத்துக் கும்பிடுது".
"அதென்ன அப்பேற்பட்ட கதை?...சொல்லு நானும் தெரிஞ்சுக்கிறேன்."
"நாலஞ்சு வருஷத்துக்கு முன்னால ஊருல முனியப்பசாமி கோயில் திருவிழா நடந்திட்டு இருந்தது. அப்ப ஊரே தீத்தம் எடுத்துட்டு வர ஆத்துக்குப் போயாச்சு. வீதியில் சன நடமாட்டமே இல்லை..
அப்ப ஊருக்குள் தங்கள் வீட்டில் படபடப்போடு இருந்த ஒரு பொண்ணும், பையனும் ஏற்கனவே பேசியபடி இது தான் சமயம் என்று ஊரைவிட்டே ஓடிப் போக தோலு பேக்க மாட்டிட்டு கிளம்பிட்டாங்க.அந்த இரண்டு பேருல ஒன்னு மேல் சாதி, இன்னொன்னு கீழ் சாதி. இங்க இன்னும் சாதி வெறி தாண்டவமாடிட்டு இருக்கறது தெரிஞ்சும் கிளம்பிட்டாங்க. அதுவும் அந்த புள்ள யாரு தெரியுமா? நம்ம பெருமாள் மவதான்”.
"அய்யோ அப்புறம்"...அவங்க இரண்டு பேரும் கிளம்பி இங்க இருக்கிற முனியப்பசாமி கோவிலுக்கு வந்து
தனித்தனியா சாமியக் கும்பிட்டு கிளம்பி போறதை ஊருக்குள் காவலுக்கு இருந்த ஒரு போலீஸ்காரர் பார்த்துட்டார்.
அவங்கள முன்னால போக விட்டு இவரு பின்னாடியே போயிருக்கார். இரண்டு பேரும் பையைத் தோலுல்ல போட்டுட்டு கைகோர்த்துட்டு போறத பார்த்ததும் உஷராயிட்டார். அவங்கள குறுக்கு வழியில போய் தடுத்து நிறுத்தி விசாரிச்சா, அந்தப் புள்ள பெருமாள் மவ. "அவளைப் பார்த்து ஊருக்கே சாமி சொல்லற உங்கப்பாகிட்ட குறி கேட்டுட்டு கல்யாணத்தை பண்ணிக்கலா வா"னு போலீஸ்காரர் சொல்லியதைக் கேட்டதும் அந்த புள்ள அழுவ ஆரம்பிச்சிடுச்சு. அந்த பையனும் அவ்வளவு ஒன்னும் சரியானவன் இல்லை.. வேலைவெட்டி இல்லாம ஊரு சுத்தறவனு தெரிஞ்சுகிட்டவரு அவனை மிரட்டி அனுப்பி வச்சிட்டு, சத்தமில்லாம அந்த புள்ளையை ஊட்டுல கொண்டு போய் விட்டுட்டு, சாமி வரும் வரைக்கு வீட்டுக்கு வெளியே அந்த புள்ளைக்கு காவல் இருந்திருக்கிறார்.
ஆத்து, தீத்தத்துக்கு போயிட்டு வந்து கோவில சுத்தி வேல எடுத்துகிட்டு, என்றுமில்லாத கொடூர ஆக்ரோஷமாக ஆடிட்டு வந்த பெருமாள்சாமி முன்னாடி சனங்க நிக்கறதுக்கே பயந்து நடுங்கிட்டு இருந்தாங்க. ஒருநாளும் இத்தனை ஆவேசம் வந்ததில்லையே!
"சாமிக்கு என்னாச்சு? கொஞ்சம் பொறுமையா ஆடக்கூடாத"சாமினு ஊர் பெருசுக கெஞ்சிட்டு இருக்க, ஆவேசம் அடங்காம ஆடிட்டே இருந்தவரு "ஊருக்குள்ள ஒரு கெட்டது நடக்கப் போவுது... சாமிக்கு கிடா வெட்டு நடக்கிறதுக்குள்ள பெரிய வெட்டு ஒன்னு நடக்கப் போவுது"னு கத்தறதை கேட்டு ஊரே பயந்து நடுங்குது.
"சாமி, நீயே இப்படி சொன்னா எப்படி? ஊரக் காக்கற உன்னால் நடக்கறத தடுத்து நிறுத்த முடியலைனா, நீ சாமியா இருந்து என்ன பிரயோசனம்? முனியப்பசாமிக்கு நேந்து வுட்ட ஆடுதான் எப்பவும் போல முதல் பலியாவணும்" என மக்கள் கெஞ்சிக் கேக்குறாங்க..
வெகுநேரம் அன்னைக்கு சாமி ஆடிட்டே இருக்குது. அந்த புள்ளைய கூட்டிட்டு போனவனுடைய குடும்பம் சத்தமில்லாம ஊரே விட்டே போயிடுச்சுங்கிற செய்தி சாமி காதுக்கு வந்துடுச்சு.
அப்புறமென்ன...சாமி மலையேறிடுச்சு காலையில கிடா வெட்டு நடந்து போச்சு..
"ஆமா சாமிக்கு எப்படி செய்தி போச்சு.".
"அதுதான் சாமியாச்சே"! கல்யாணி சிரித்தாள்..
அப்புறம், அந்த புள்ளைக்கு காவல் இருந்த போலீஸ்காரர் தம்முடைய மவனுக்கு பல வருஷங்களா பொண்ணு கிடைக்காம தேடிட்டு இருந்திருக்கார். இது தான் சமயமுனு சத்தமில்லாம பெருமாளிடம் பேசி அந்தப் புள்ளைய மருமவளாக்கிட்டாரு.
அதனால பெருமாளுக்கு போலீசாரங்க மீது அத்தனை பயபக்தி. அன்னைக்கு மட்டும் அவரு கவனிக்காம இருந்தா, இன்னைக்கு வரைக்கும் ஊருல அவரு சாமி சொல்லிட்டு இருக்க முடியாது. எல்லாம் ஒரு கணக்குதான் போ.
"சரி சரி வாடி சாமி அருளு வந்து வாக்கு சொல்லப் போவுது வந்து வேடிக்கை பாரு" என கல்யாணி கூப்பிட"அரிவாள் மேல நின்னுட்டு வாக்கு சொல்லற சாமியை எல்லோரும் பயபக்தியோடு கை எடுத்துக் கும்பிட்டு நிற்க, வானதி மட்டும் ஆசாமியை நினைச்சு மனசுக்குள் சிரித்தபடியே வேடிக்கை பார்த்துட்டு இருந்தாள்.
அப்போது, "இங்கே வாம்மா குழந்தை"னு கை காட்டி சத்தமிட்டு கூப்பிட, உன்னைத்தான் கூப்பிடறாங்க போம்மா என பக்கத்தில இருக்கிறவர்கள் வானதியிடம் சொல்வதைக் கேட்டு திடுக்கிட்ட வானதி "சொல்லுங்க சாமி"னு கையெடுத்தாள்.
"ஏம்மா குழந்தை நீ பெரிய எழுத்தாளரா இருக்கியாமே!"
"ஆமாங்க சாமி.."
"இங்கே வந்து நோம்புல கலந்துட்டமா, வேடிக்கை பார்த்தமா, சந்தோஷமா கறி சாப்பிட்டமானு ஊருக்கு போம்மா.உன்னட குடும்பத்தை நான் பார்த்துக்கறேன்.
இந்த பெருமாள் சாமி வூட்டுக் கதையை ஊரு முழுக்க சொல்லி எழுதிட்டு இருக்காதே. எனக்கு இந்த தம்பட்டம் எல்லாம் புடிக்காது குழந்தே" என அவள் காதோராம் கிசுகிசுத்த பெருமாள் சாமியை பார்த்து விக்கித்த வானதி..
"அடேய் யாருடா நீ ! பெரிய கொம்பனாடா....நான் தான்டா உண்மையான முனியப்பசாமி வந்திருக்கேன்"என ஆக்ரோஷமாக சத்தம் போட்டவாறே, பெருமாளிடம் இருந்த அரிவாளை பிடிங்கி கீழே போட்டு...அதன் மீது ஏறி நின்றாள் வானதி.அரிவாள் படுகிடையாய் இருப்பதைத் கூட கவனிக்காத ஊர் மக்கள் அவளைப் பார்த்து முனியப்பசாமினு கன்னத்தில் போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள். பெருமாள் சாமி செய்வதறியாது திகைத்து நின்றார்.
-

No comments:
Post a Comment