Thursday, February 1, 2024

குரங்குப்பெடல் - தனபால் பவானி

 


னக்குத் தெரிந்து எங்கள் தெருவில் முதலில் சைக்கிள் வாங்கியது காமாட்சி அக்கா பையன் சரவணன் தான். எங்கள் வயதைவிட கொஞ்சமா மூத்தவன். பெரியவங்க ஓட்டுற பெரிய சைக்கிள் மட்டும் தான் இருக்குமென நம்பிக்கொண்டிருந்த எனக்கு அதைவிட சின்ன சைக்கிளும் இருக்குமென காண்பித்தது அவன் தான். நாங்கள் குழிப்பந்து விளையாடிக்கொண்டிருந்த பொழுதொன்றில் குழியில் விழுந்த பந்தை குழிக்கு சொந்தக்காரன் எடுத்து அடித்தபோது தான் அதைப்பார்த்தோம். சிவப்பு கலர், தண்டு வெச்சது, கைப்பிடிக்கும் பிரேக் கம்பிகளுக்கும் ஒரே கலர் உறைகள், சீட்டுக்கு பூப்போட்ட ஒரு கவர், சக்கரங்களில் கலர் பூ, மட்கார்டில் சேறு அடிக்காம இருக்க ஒரு தடுப்பு, பெருவிரல் வைத்து பெல் அழுத்தும் போது விரலுக்கு வலிக்காமல் இருக்க சிவப்பு கலரில் ஒரு கவர் என அந்த சைக்கிளை ஒரு அழகிய குதிரையைப்போல ஓட்டிக்கொண்டு வந்தான்.


நாங்கள் எல்லோரும் அதை அத்தனை அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்தோம். எங்கிருந்தோ பூஜை போட்டு ஓட்டி வந்த சைக்கிளை வீட்டுக்குள் கொண்டு போய்  நிறுத்தியவன் அன்று அதை மறுபடியும் எடுக்கவே இல்லை. நாங்களும் அவன் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தோம். விளையாடி முடித்து வீட்டுக்கு போய் தூங்கும்போது கூட கனவில் அந்த சைக்கிள் மிதந்து மிதந்து வந்தது. அடுத்த நாள் விளையாடும் போதுதான் மீண்டும் அந்த சைக்கிளைப் பார்த்தோம். அந்த பெல் சத்தம் காதுகளில் விழுந்தபோது எல்லோருடைய கண்களும் அவன் வீட்டை நோக்கி திரும்பின. சக்கரங்கள் சுழல சுழல, பெல் அடித்தபடியே எங்களைக் கடந்து தலையை சிலுப்பிக்கொண்டு ஒரு ராஜகுமாரனைப்போல அவன் அந்த சைக்கிளை ஓட்டிக்கொண்டு போனபோது அவனை அத்தனை பிரமிப்போடும் கொஞ்சம் பொறாமையோடும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அன்றிலிருந்து அவங்கவங்க வீட்டில் சைக்கிள் வாங்கிக்கொடுக்கச் சொல்லி ஒரே அடம். நானும் ஒன்றிரண்டு முறை என் வீட்டில் கேட்டுவிட்டு, என்ன குட்டிக்கரணம் போட்டாலும் கிடைக்காது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் அந்த ஆசையை கைவிட்டேன். அண்ணன்கள் இருக்கும் வீடுகளில் அண்ணன்கள் வளர்ந்தாலும் கூடவே அவர்களுக்கென வாங்கிய உடைகளோ, பொருட்களோ வளர்ந்து விடுவதில்லை, அப்படி அண்ணன்கள் பயன்படுத்தியதை தம்பிகளுக்கு பயன்படும் என்னும் பழைய சட்டமொன்றில் சிக்கிய என் ஆசைகளும் அங்கேயே பெரிய சத்தத்தோடு பிரேக் அடித்து நின்றுவிட்டன. அப்படி அண்ணனுக்கு வாங்கிய மூன்று சக்கர குட்டி சைக்கிளொன்று எங்க வீட்டில் ரொம்ப காலங்களாக இருந்தது. ஓட்றவங்களுக்குப் பின்னாடி இன்னொருத்தர் உக்கார்ந்து போலாம், அப்படி ரெண்டு பேர் போகக் கூடிய குட்டி சைக்கிள் தான் நான் அதுவரை ஓட்டிய சைக்கிளாக இருந்தது.

பவானி மேற்குத்தெருவில் லதா சைக்கிள் கடைன்னு ஒரு சைக்கிள் கடை வந்தது, குட்டி குட்டியாய் அழகழகாய், பல வண்ணங்களில் வாடகை சைக்கிள்கள் வந்தன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய், அரைமணி நேரத்துக்கு அம்பது காசு. எனக்கு அப்போல்லாம் தினமும் பத்து பைசா அல்லது இருபது பைசா தான் கிடைக்கும். கஷ்டப்பட்டு காசு சேர்த்து வெச்சி அம்பது காசு சேர்ந்ததும் வாடகை சைக்கிள் வாங்க ஓடுவேன். ஆனா நம்ம நேரம் நாம எதிர்பார்க்கும் சைக்கிள் அங்க இருக்காது. பிரேக் பிடிக்காதது, செயின் லூசா இருக்கிறது, எப்பவேணா பஞ்சராவேன்னு ஒத்த சக்கரத்துல நிக்கிறதுன்னு பழைய சைக்கிள்களா இருக்கும். புதுச்செல்லாம் வேற யாராவது வாடகைக்கு எடுத்துட்டு போயிருப்பாங்க. அதுல நீலக்கலர்ல ஒரு சைக்கிளும், சிவப்பு கலர்ல ஒரு சைக்கிளும் இருக்கும், அது ரெண்டும் ரொம்ப நல்ல கண்டிஷன்ல ஓட்டுவதற்கு இலகுவாக இருக்கும். வெத்தலை பாக்கு போட்டுக்கிட்டு, நெத்தில பெருசா குங்குமப்பொட்டு வெச்சிக்கிட்டு கடை ஓனரம்மா கம்பீரமா இருப்பாங்க. கடைல ஒரு பாய் இருப்பாரு, அவருக்கு ஒரு கை கொஞ்சம் சூம்பிப்போன மாதிரி இருக்கும், ஆனாலும் பெரிய சைக்கிள்களுக்கு பஞ்சர் பாக்கறது, வீல் பெண்டெடுக்கிறது, புது சைக்கிள் பூட்டுவது, பழைய சைக்கிள்களை சரிபண்றதுன்னு அந்த கைலயே எல்லா வேலைகளும் செய்வாரு. இந்த சைக்கிள் நல்லா இருக்கும் எடுத்துட்டு போன்னு சொல்வாங்க. அம்பது காசு சேர்த்த அஞ்சு நாள்கள் காத்திருந்த நான் இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க மாட்டேனான்னு மனசுல நெனைச்சிகிட்டு புது சைக்கிள் வர வரைக்கும் காத்திருப்பேன்.

ரொம்ப நேரத்திற்கு பிறகு வரும் சைக்கிளை எடுத்து அதுல உக்கார்ந்து கைப்பிடியை பிடிக்கும் போது வருமே ஒரு சிலிர்ப்பு, அதை சொற்கள் கொண்டோ, கற்பனை செய்தோ, சொல்வதைக் கேட்டோ உணர்ந்துவிட முடியாது. முழுக்க முழுக்க அனுபவித்தால் மட்டுமே அந்த சதோஷம் புரியும். ஒரு காலை கீழே ஊனி தட்டி தட்டி, தத்தி தத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டிப்பழகிய நாட்கள் நினைவுகளின் சிறகுகள் பொருத்தி இன்னும் இன்னும் சிறுவயது வானத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் யாரும் பின்னிருந்து பிடித்துக்கொண்டோ கூடவே ஓடிவந்தோ எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. நானாக தடுமாறி விழுந்து, எழுந்து பல சிராய்ப்புகளுக்குப் பின்னால் ஒருவழியாக குட்டி சைக்கிளை யாருடைய துணையும் இல்லாமல் ஓட்டிப்பழகி இருந்தேன்.

ஒருமுறை வீட்டுக்கு வந்த உறவுக்காரர் சைக்கிளைப் பூட்டாமல் வாசலில் நிறுத்திவிட்டு பக்கத்தில் போயிருந்தார். அது பெரிய சைக்கிள், தண்டு வெச்சிருந்தது, குட்டி சைக்கிளை மட்டுமே ஓட்டி அனுபவமிருந்த எனக்கு பெரிய சைக்கிளில் ஓட்டும் குரங்குப்பெடல் என்பதெல்லாம், வாய்வழி கேட்டதும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் பார்த்த நினைவுகளாக மட்டுமே இருந்தது. அந்த மாதிரியான சூழலில் தான் அந்த பெரிய சைக்கிளை எடுத்துக்கொண்டு குரங்குப்பெடல் போட்டு ஓட்ட முயற்சி செய்துகொண்டிருந்தேன். பலமுறை பெடல்களில் அடிவாங்கி, முட்டி வீங்கினாலும் விடாமல் முயற்சி செய்திருந்தபோது  குரங்குப்பெடல் மீதான பயத்தை நீக்க அந்த நாள் உதவியது. பின்னாளில் முதல் முறையாக வீட்டிலிருந்த பெரிய சைக்கிளில் குரங்குப்பெடல் போட்டு காலைக்  கீழே ஊனாமல் ஓட்டியபோது கிடைத்த சந்தோஷமென்பது விமானம் ஓட்டியதற்கு நிகரான ஒன்று.

காலங்கள் பல கடந்தோடிய பின்னும் சைக்கிளின் மீதான காதல் மட்டும் குறையாமலே இருந்தது. குமாரபாளையத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, இரவு ஓவர் டைம் வேலை முடிந்து காலை 7 மணிக்கு வீட்டுக்கு போய் குளிச்சு, சாப்பிட்டுட்டு மறுபடியும் 8 மணிக்கு வேலைக்கு வரணும், அப்போலாம் குமாரபாளையம் தெலுங்கு மாரியம்மன் கோவில் அருகில் குண்டா ஒருத்தர் வாடகை சைக்கிள் கடை வைத்திருப்பார், அவரிடம் வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு பழைய பாலம் வழியா வேகமா வந்து குளிச்சு சாப்பிட்டுட்டு மறுபடியும் வேலைக்கு போய்டுவேன். பசங்கக்கூட வரும்போது அப்பப்போ போட்டிகளும் வெச்சிக்குவோம். ஞாயிறுக்கிழமைகளில் சைக்கிளில் சினிமாவுக்குப் போவதும், சினிமா விட்டதும் ஊருக்குள் யார் முதலில் போகிறார்கள் என்று பார்ப்போமா என்றும் போட்டிகள் வைத்ததும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், பூக்கடைமுக்கு திருப்பத்தில் வலப்புறம் பார்க்காமல் வேகமாக திருப்பி, என்னைவிட வேகமாக வந்த பைக்கில் மோதி, இரண்டு நாட்கள் பயத்தில் சைக்கிள் எடுக்காமலே இருந்ததும்  என எத்தனை எத்தனை நினைவுகள். இப்போ அந்த சைக்கிள் கடைகளும் இல்ல, அதை நடத்தியவர்களும் இல்ல, ஆனா அந்த நினைவுகள் மட்டும் எப்போதும் பசுமையாக இருக்கின்றன.

பின்னாளில் அண்ணன் வேலைக்காக வெளியூர் போய்விட்டபின்பு, அவருடைய சைக்கிள் கொஞ்ச நாட்கள் எனக்கு வந்தது. அதில் டேப் ரெக்கார்டர் கேசட்டில் வரும் டேப்பை எடுத்து குஞ்சம் போல வைத்து இரண்டு பக்கமும் கைப்பிடிகளில் அலங்காரம் பண்ணுவது, சக்கரங்களில் பூ சுற்றுவது, முன்னாடி குட்டி கேரியர் வைப்பது, குழந்தைகள் சைக்கிளில் சத்தம் வரும் ஹாரன் போல பெரிய சைக்கிளில் வைப்பது, நம்பர் பிளேட்டுகளுக்கென அறிமுகமான ஸ்டிக்கர்களை கண்டபடி ஒட்டி அதகளம் பண்ணுவது, யாரையாவது முன்னாடி பின்னாடி உட்கார வைத்து டபுள்ஸ், ட்ரிப்பிள்ஸ் அடிப்பது, பெண்கள் கூட்டமாக போகும் போது இரண்டு கைகளையும் விட்டபடி ஓட்டுவதுன்னு அந்த வயது சுமந்த அத்தனை சந்தோசங்களையும், இப்போது வெகு சுலபமாக விலைகொடுத்து வாங்கி வரும் சைக்கிள்கள் கொடுப்பதேயில்லை.

சென்னையில் வேலைக்கு சேர்ந்த போது சிட்லபாக்கம் ஏரியாவில்  ஊருக்குள் இருந்த கம்பெனிக்கு செல்ல பேருந்து வசதி இல்லை, தினமும் ஆட்டோவில் போகுமளவுக்கு வசதியும் இல்லை, அப்பதான் பழைய சைக்கிள் ஒன்னு வேணும்னு சொல்லி, பவானில வாங்கி சென்னைக்கு ரயிலில் கொண்டு வந்தேன், சென்னை சென்ட்ரலில் இருந்து தாம்பரம் சேனிடோரியம் வரை ஓட்டிக்கொண்டே போனேன். இடையில் கிண்டி கத்திப்பாரா பாலத்தின் அருகில் நிறுத்தி ஒருகடையில் குளிர்பானம் குடித்தது, மீனம்பாக்கம் விமான நிலையத்தை கடக்கும் போது காதைப்பிளக்கும் சத்தத்தோடு தரையிறங்கிய விமானத்தை வாயைப்பிளந்துகொண்டு பார்த்தது, பல்லாவரம் ரயில் நிலையத்தை ஒட்டிய மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களை  வெகுநேரம் வேடிக்கை பார்த்தது, மேம்பாலம் வந்திராதபோது சானிடோரியம் ரயில்வே கேட்டில் தண்டவாளத்தைக் கடக்க சைக்கிளை தூக்கிக்கொண்டு போனது, அடுத்தநாள் முதல் வேலைக்கு சைக்கிளில் செல்லும்போது பட்டன் போனில், அப்போதுதான் ரிலீஸ் ஆகியிருந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாடல்களை ரேடியோவில் கேட்டபடி போவதென, சைக்கிள் சக்கரங்களைப்போல மனதின் எல்லாப்பக்கங்களிலும் அழகிய நினைவுகள் சுழல்கின்றன.  

வேலைகளும், இடங்களும், சம்பளங்களும் மாறியபின்பு எனக்கே எனக்கென சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்கினேன். தண்டு வைக்காத, கியர்கள் இல்லாத நினைக்கும் போதெல்லாம் வாடகை இல்லாமல் எடுத்து ஓட்டக்கூடிய சொந்த சைக்கிளாக அது இருந்தது. இப்போதும் இருக்கிறது. பெங்களூரில் வேலை செய்தபோது பவானியில் இருந்து பார்சல் அனுப்பும் லாரியில் போட்டு மடிவாலாவில் போய் எடுத்த அந்த சொந்த சைக்கிளில் தான் சில வருடங்கள் பெரிய IT கம்பெனிகளுக்கும், உடற்பயிற்சிக்காகவும், ஊருசுத்த பக்கமான இடங்களுக்கும்  எடுத்துட்டு போனேன். சுற்றிலும் கேமராக்கள், செக்யூரிட்டிகள், சைக்கிள் நிறுத்துவதற்கான தனி ஸ்டேண்ட் என பாதுகாப்பாய் இருக்கும் இடங்கள் அவை. இதோ இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது என்னுடைய சைக்கிள் வீட்டில் ஒரு ஓரத்தில் சக்கரங்களில் காற்று இல்லாமல் நின்றுகொண்டிருக்கிறது. உங்கள் நினைவுகளில் நீங்கள் சைக்கிள் ஓட்டிப்பழகிய நாட்கள் மின்னி மறைவதைப்போலவே உங்கள் சைக்கிளும் நினைவுகளுக்குள் வந்து போகும். என்னுடைய சைக்கிளும் இன்னும் இருக்கிறது ஆனாலும் அதை எடுத்து ஓட்டுவதற்கான காலச்சூழல் என்பது எப்போதாவதுதான் வாய்க்கிறது.

எத்தனை வயதானாலும் சிலவற்றின் மீதான காதல் குறைவதேயில்லை. எனக்கும் அப்படி குறையாமல் இருக்கும் பலவற்றில் சைக்கிளும் ஒன்றாகவே இருக்கிறது.


No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...