சாதாரணமாகக் கேட்கும் ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்தி நம்மைப் பதற்றம் அடையச் செய்து பின்தொடர வைக்கும். அப்படி மிக எளிதாக மனதுள் ஊடுருவி தினம் தேட வைத்த ஒரு செய்தி இது. இரண்டு வாரங்களுக்கு மேலாக எச்சூழ்நிலையிலும் இதை பின்தொடர்ந்துகொண்டே இருந்தேன். நெருங்கிய நட்புகளிடம் பேசி அங்கலாய்த்து கொள்வேன்.
Photo Credit : விக்கிப்பீடியா
இருபுறமும் பரந்து கிடக்கும் வயல்களுக்கு நடுவே கிராம சாலை. இயற்கையின் நேரடி பார்வை பட்ட இடமெனக் கொள்ளலாம். மிகுந்த உற்சாகத்தோடு குகையை அடைகிறார்கள். தாய்லாந்தின் நான்காவது பெரிய குகை தாம்-லுவாங். உறங்கும் பெண் போன்ற அமைப்பைக் கொண்ட மலை. அங்கே சிலையாக உறங்கும் பெண் கடவுளைக் குகை தொடங்கும் இடத்தில் எல்லோரும் வணங்கி உள்ளே செல்கிறார்கள். அவளும் சிரித்து வழியனுப்புவாள். முன்பே பழக்கப்பட்ட உள்ளூர் குகை என்பதால் வேகமாய் உற்சாகமாய் உள்ளே செல்கிறார்கள். உற்சாகமும், பேச்சும், சிரிப்பும் குகையில் ஆனந்தமாய் எதிரொலிக்கிறது. உள்ளே ஆர்வமாய் போய்க் கொண்டே இருக்கிறார்கள். தம் கைகளில் இருக்கும் டார்ச் வெளிச்சத்தைக் குகைக்கும் காட்டி முன்னேறுகிறார்கள். வெளியே திடீரென கருமேகம் சூழ்கிறது. பலத்த காற்றோடு மழை பிடிக்கிறது. வழக்கமாக ஜூலை மாதம் இறுதியில் தொடங்கும் பருவநிலை ஏனோ சொல்லாமல் கொள்ளாமல் அன்று தொடங்கியது. ஒவ்வொரு பருவமழையிலும் குகை நிரம்பும். மழை வெளுத்து வாங்குகிறது. சிரிப்பும் குதூகலமும் நிரம்பிய அந்த சிறுவர்களுக்கு இது எதுவும் தெரியவில்லை. இண்டு, இடுக்கு எல்லாம் நுழைந்து போன பிறகு பாறைகளில் நீர் வடியத் தொடங்குவதைச் சிலர் கவனிக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து உள்ளே செல்வதை நிறுத்தவில்லை.
மழையில் நனைந்த மலை, தன்பால் பெருகும் நீரைக் குகைக்குள் கொண்டு சேர்க்கிறது. அவர்களை நனையாமல் அழைத்துவர பெற்றோர்கள் வாகனம் எடுத்துக் கிளம்பி குகைக்குச் செல்கிறார்கள். காட்டிலாகா அதிகாரிகளும் வந்து சேர்வார்கள். குகையில் தண்ணீர் மட்டம் உயர்வதால் குகை மூடப்படுகிறது. உள்ளே சென்றவர்களை எதிர்பார்த்து வெளியே காத்திருப்புகள் தொடங்குகிறது. மழையும் நிதானமாய் விடாமல் தொடர்ந்து பெய்கிறது. Navy Seals, ராணுவம் என்று தாய்லாந்து நாட்டின் முக்கிய அரசுத்துறைகள் வந்தடைகிறது. மாகாண ஆளுநர் வருகிறார். மீட்புப் பணி தீவிரமடைகிறது. என்ன செய்வதென்ற பெரிய திட்டங்கள் இல்லாமல், நீரை வெளியேற்றி மீட்கும் முயற்சிகளோடு துவங்குகிறது. அதற்குள் உறவினர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் வரக் கூட்டம் கூடிக்கொண்டே போகிறது. 13 பேரையும் உயிரோடு மீட்டுவிட அனைவரும் தத்தம் முயற்சிகளைச் செய்கிறார்கள்.
Photo Credit : India Today
பயிற்சி பெற்ற Navy Seals உள்ளே செல்கிறார்கள். எங்குமே குறைந்தது மார்பளவு நீர் இருக்கிறது. பல இடங்களில் முழுவதுமாக மூழ்கும் நிலையே. இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டரோடு நுழைவாயிலிருந்து 800 மீட்டர் வரை சென்று திரும்புகிறார்கள். நீரின் வேகமும் அளவும் கூடிக்கொண்டே போக, வெளியேற்றமும் தொடர்கிறது. உள்ளே சென்ற Navy Seals நீரின் சீற்றத்தால் பாறைகளில் மோதி காயத்தோடு வெளியே வருகிறார்கள். வெளியே பயமும், பதற்றமும் அழுகையும் தொடங்குகிறது. நம்பிக்கை குறையும் போது தானே ஆறுதலும் தேற்றுதலும் தேவைப்படுகிறது. அமைச்சர், உள்நாட்டு ஆர்வலர்களும் வந்து உதவ ஆரம்பிக்கிறார்கள். மழை நின்ற பாடில்லை. மலையிலிருந்து குகைக்குச் செல்லும் நீரைத் தடுத்து வெளியேற்ற கிராம மக்கள் தங்களின் விளைநிலங்களைக் கொடுக்கிறார்கள் அணில் செய்த செயல் போல.
உலக நாடுகளிடமிருந்து உதவிகள் வரத்தொடங்குகிறது. அப்படியாகப் பிரிட்டிஷ் குகை மீட்புக் குழுவிலிருந்து ரிக்கி மற்றும் ஜான் வருகிறார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு புது முயற்சிகள் இவர்களால் துவங்குகிறது. நுழைவாயிலிருந்து 800 மீட்டர் முதல் 900 மீட்டர் வரை ஊசிப்பாறைகள் மேலேயும், கீழே நிலமட்டம் என மிகக்குறுகலான ஆபத்தான பாதையைக் கடந்து வருகிறார்கள். முதுகில் இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள். வாயில் எப்போதும் அதன் முகப்பு, இறுக்கமான உடை, நீச்சல் உடுப்புகள் என இவற்றோடு 900 மீட்டர் முதல் 1600 மீட்டரை கடக்க 3.50 மணிநேரம் எடுக்கிறது. சாதாரண மீட்பு இதுவல்ல என எல்லோருக்கும் தெரிகிறது. உடல் நைந்து போகும் பயணம் இது. எட்டாம் நாளும் அவர்களைக் காணாமல், மீட்க முடியாமல் நிறைவுபெறுகிறது. உயிரோடு இருப்பார்களா என்ற அவநம்பிக்கைக் கேள்விகள் பலருக்கும் தொடங்குகிறது.. மீட்புக்குழுவுக்கும்!சற்றே ஓய்ந்த மழையினால் பிரிட்டிஷ் மீட்புக் குழு ஆபத்தான T-ஜங்ஷனை கடந்து செல்கிறார்கள். உயிர் தேடல் துவங்கும் இடமும் இதுவே. நுழைவாயிலிருந்து 2500 மீட்டர் தொலைவில் வித்தியாசமான மணம் உணர்ந்து டார்ச் அடித்து குரல் கொடுக்க, வெளிச்சமும், முணுமுணுப்பும் கேட்கிறது. 13 பெரும் உயிரோடு இருக்கிறார்கள். அங்கிருக்கும் உயரமான இடத்தில் பயிற்சியாளர் சிறுவர்களைப் பத்திரமாக வைத்திருக்கிறார். பயம், பசியை ஏக்கமான கண்கள் சொல்கிறது. உதவி வருமென உயிரைக் கையில் பிடித்தபடி நம்பிக்கையோடு இருந்த அவர்களை 10 ஆம் நாளில், நுழைவாயிலிருந்து 2500 மீட்டர் தொலைவில், 6 மணிநேரம் 15 நிமிடங்களில் பார்த்து பிரம்மித்து போகிறார்கள் பிரிட்டிஷ் மீட்புக் குழு. படம் எடுத்துக்கொண்டு மறுநாள் உணவு மருந்து எடுத்து வருவதாக நம்பிக்கையளித்துக் கிளம்புகிறார்கள். யாரும் யாரையும் விட்டுக்கொடுக்காமல் ஒற்றுமையோடு ஒருவருக்குக்கொருவர் உதவியாய் இருப்பது இவர்களுக்கு நெகிழ்ச்சியை தருகிறது. காப்பாற்றப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கிறது. எப்படி காப்பாற்றப் போகிறோம் என்ற கேள்வி இவர்களுக்கு எழுகிறது. அவர்களாக நீந்த உடலில் வலு இல்லை, மழையும் விட்டபாடில்லை, நீர் மட்டமும் குறைந்தபாடில்லை. மீட்கும் ஆலோசனைகள் நடக்கிறது. புத்திசாலித் தனமா, பைத்தியகக்காரத்தனமா என்று சொல்ல முடியாத ஒரு முயற்சியில் பொட்டலங்களைக் கொண்டுவருவது போல 13 பேரையும், இறுதியான 3 நாட்கள் முயற்சியில் 19 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீட்கிறார்கள். எல்லோர் குரலும் கேட்டும் அதுவரை உறங்கிய மலையின் பெண் தெய்வம், எழுந்தாள். சகமனிதனுக்கு உதவி தேவைப்படும்போது உதவ நீளும் கரங்களுக்கு உதவுவதற்காகவாவது நம் கரங்கள் இருக்கட்டும்.
Photo Credit : Javier Zarracina/Vox
Photo Credit : The Times
ஒரே மூச்சில் சொல்லியிருக்கிறேன். ஆனால், இந்த சம்பவம் நடந்த ஒவ்வொரு நாளின் முடிவிலும் பெரிய முன்னேற்றமில்லாது நகர்ந்த போது, மனம் தவித்துப் போனது. ஏதாவது செய்யுங்களேன் என்று சலித்துக்கொண்டேன். வெகுதூரத்தில் நின்று 13 பேரையும் சீக்கிரம் மீட்கவேண்டும் என்று எண்ண முடிந்ததே தவிர, அந்த குகை பற்றியோ, மலை பற்றியோ, ஆபத்தைப் பற்றியோ தெரியவில்லை. வெற்றிகரமான அதிசய மீட்பு என்றே கூற வேண்டும். மீட்புக்குழுவின் தலைவரை அவரின் தலைமைப் பண்பிற்காகவே பாராட்ட வேண்டும். உள்நாட்டு மீட்புக்குழு, பல்வேறு நாட்டிலிருந்து வந்த மீட்புக்குழு, ராணுவம், தன்னார்வலர்கள், மக்கள், உறவினர்கள், உதவியவர்கள் எனப் பத்தாயிரம் பேரை அவர் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இவர்களின் கூட்டு முயற்சியே நிறைவான மீட்புக்கு காரணம். குகைக்குள் பயிற்றுனரின் தலைமைப்பண்பு அதனினும் அருமை. நிதானத்தோடும் நம்பிக்கையோடும் ஒற்றுமையோடும் சிறுவர்களைப் பேணிக்காத்தார். யார்மீதும் எந்த குற்றமும் சுமத்தாமல், பழி போடாமல் அனைவரும் ஒரே நோக்கத்திறக்காக உழைத்தது நம் அனைவருக்கும் சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அந்த நிகழ்வைத் திரைப்படமாகப் பார்க்கக் கிடைத்த போது தான் கள நிலவரம் புரிந்தது. உண்மையில் அசாத்திய நிகழ்வு இது. நீங்களும் பாருங்கள்.
படம்: 13 Lives (2022), Amazon Prime
மேலும் படிக்க: https://www.bbc.com/news/world-asia-44791998
நல்ல எழுத்து நடை அந்த இடத்திற்கே சென்று வந்த விவரிப்பு சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள் மகேஸ்வரி 💐
ReplyDelete