எங்கள் வீட்டிற்கு முன்னால் ஒரு வேப்பமரம். முன்னால் என்றால் எங்கள் வீடு முடிந்த அரை அடி தூரத்தில். (அருகில் இருக்கும் காலி மனையின் சாக்கடைக்கு முன்னால் சாலையோரத்தில்.) இவ்வீட்டிற்கு மகன் ஐந்து மாதம் எனும்போது வந்தோம். நாங்கள் வந்த சில மாதங்களில் அந்த வேம்பு வந்தது. தற்போது மகன் 17 வயதை கடந்துவிட்டான். அப்போதிலிருந்து எங்களுடன் இந்த வேம்பும் ஒன்று. சற்றே வளர்ந்ததும் கொஞ்சம் பராமரிப்பு செய்ய ஆரம்பித்தோம். பெரிதாக ஒன்றுமில்லை, வாசல் தெளிக்கும் நீர் மரத்தைச் சென்றடையும் வகையில் வழி செய்தோம். காலி மனை என்பதால் அப்பப்போ எங்கள் சுற்றுச்சுவர் ஒட்டிய புதர்களைச் சுத்தம் செய்யும் போது அவ்விடமும் சுத்தமாகும்.
சில வருடங்களில் நன்கு செழித்து வளரத்தொடங்கியது. எங்கள் வீட்டின் முதல் மாடியை எட்டியது. மேல் வீட்டில் இருப்பவர்கள் காலை எட்டிப்பார்ப்பதே இந்த வேம்பில் தான். காக்கை குருவிகளின் வாழ்விடமாக மாறியது. காலையும் மாலையும் ராகமில்லா பாடல் கேட்கும். அகன்றும் நேருமாக வளர்ந்த வேம்பு பெரிய லோடோடு வரும் கனரக வாகனத்தில் அடிபடத் தொடங்கியது. பராமரிக்க ஆள் வரசொல்லியாயிட்ரு. அவர் வந்து மரமேறும் போதுதான் வளர்ந்த பெரும் மரத்தை கவனித்தேன். அதுவரை பார்வை பரிமாற்றங்கள் மட்டுமே நிகழும் எங்களுக்குள். ஒரு பார்வையோடு, அதும் அதன் தண்டை மட்டுமே அதிகம் பார்த்துக் கடந்து சென்ற நான் அண்ணார்ந்து பார்த்த மாத்திரத்தில் அதன் வளர்ச்சியை உணர்ந்தேன். பருவப்பெண்ணும் ஆணும் டக்கென வளர்த்து நிற்பார்களே அப்படி.
ஒரே வருடத்தில் இரண்டாம் மாடியைத்தொட்டது. கொஞ்சம் கிளைகளை வெட்டினோம். சாலையில் யாருக்கும் எவ்வண்ணம் இடையூறு வராமல் பார்த்துக்கொள்வோம். மின்சாரக் கம்பிகளுக்கு எந்த சேதமும் இல்லாமல் அது வளர்ந்தது. மேலும் வளர்த்து மெல்ல எங்கள் மொட்டை மாடியைத் தொட்டது. அப்போதிலிருந்தே பறவைகளுக்கான தண்ணீர் தொட்டி வைத்தோம். தொட்டியின் மேலேறி குடிக்கும், சிறு பறவைகள் உள்ளிறங்கிக் குளிக்கும். மொட்டை மாடியில் நாங்கள் நால்வரும் காய வைக்கும் கோதுமை, ராகி மேலும் சமையல் பொருட்கள் அவர்களுக்கு உணவானது. நாங்கள் நல்ல நாள், சனிக்கிழமை, அந்த நாள் இந்த நாள் என உணவு வைக்களானோம். எங்கள் உணவின் சுவை பிடிக்கவில்லை போல,எங்கோ போய் கறி சாப்பிட்டு, இப்படியும் வைக்கலாம் எனத் தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்து நாங்கள் சுத்தம் செய்யும் போது உணரவைக்கும்.
எங்கள் வீட்டின் உயரம் தாண்டியது. எங்கள் வீட்டின் அடையாளமாக மாறியது. வீட்டுக்கு வழி சொல்லுங்கள் என்றால், "அந்த department store தெருவில் வலது பக்கம் பெரிய வேப்பமரம் இருக்கும் பாருங்க... அந்த வீடு" இப்படிச் சொல்லலானேன். மார்கழி தொடங்கினால் போதும், சற்றே கவலை வரும். காலை வாசலைக்கூட்டி வேப்ப இலைகளை குவிக்கக் கொஞ்சம் இல்லை... கூடவே மெனக்கெட வேண்டி இருக்கும். இப்போதெல்லாம் எல்லா பருவத்திலும் மழை வருகிறதே. எங்கள் sunshade முழுவதும் தினமும் இலைகள் நிரம்பி இருக்கும், அதில் மழையும் பெய்தால் நினைத்துப் பாருங்கள்... 10 நாட்களுக்கு ஒருமுறை அதையும் சுத்தம் செய்வதாக இருக்கும். அப்போதெல்லாம் கொஞ்சம் மரத்திடம் கடிந்துகொள்வேன். ஆடிக்காற்றில் மரம் ஆடும் போது சற்றே பீதி கொள்வேன். சிறிய இடத்தில் பெரிதாக வளர்ந்து நிற்கும் மரத்தை பார்த்து எனக்கே கொஞ்சம் பயம் வரும். வேர் நன்கு ஆழம் சென்றிருக்குமா? இப்படி ஆடி சாய்ந்துவிடுமோ என்ற தயக்கம். ஆனால் ஒருபோதும் ஒரு கிளை கூட விழுந்ததில்லை. வெயில் காலத்தில் மரம் எங்கள் வரம். வருடம் தோறும் புது உச்சத்தை அடையும் இவ்வெயிலில் வெளியே எங்கு சென்று வந்தாலும், வாசல் கதவைத் திறக்கும் போதே வேம்பின் நிழலும் அதன் ஈரப் பச்சை வாசமும் எல்லா அழுப்புக்கும் ஆறுதலாய் அமையும். மழைக் காலத்தில், சின்ன தூறல் எல்லாம் எங்கள் வாசலை வந்தடைய முடியாது. பலநேரம் மரநிழல் விழும் பாதி வாசல் பாசம் பிடித்துவிடும் அச்சமயத்தில். சற்றே கவனமாக வண்டியை வாசலில் நிறுத்துவோம். இப்படியாக எல்லா காலமும் எங்கள் மரத்தோடு நிற்போம்.
எப்போது மரம் பராமரிப்பு செய்ய ஆள் வந்தாலும் நம் வீட்டிலும், அண்டை வீடுகளிலும் உடனே கேட்பது, "வெட்டவா?" என்பது தான். பெருந்தொற்றுக்கு முன்னர் வண்டியில் வந்து அவர்களே பெரும் கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றார்கள். இதுவே இதுவரை செய்த மிகப்பெரிய வேலை. மற்றபடி எங்களோடு கொஞ்சம் தள்ளி நின்று எங்களை நன்றாகப் பார்த்துக்கொண்டு இருந்தது வேம்பு. எங்கள் வாழ்வின் ஒரு அங்கம்.
சும்மா கிடந்த இடத்தில் மேல்வீட்டு அக்கா காய், கீரை, பூ போன்ற எண்ணற்ற செடிகளை வளர்த்து வந்தார். கண்ணுக்கும் மனதுக்கும் நெருக்கமாக இருந்த இடம் அது. காலி மனை விலை பேசும் நடவடிக்கைகள் தொடங்கும் போதே பக்கத்து வீட்டு அண்ணா சொன்னார், நீங்களே இடத்தை வாங்கப் பாருங்க, உங்களோடே இருக்கட்டும்ன்னு. ஆசை தான், கையறு நிலை.
சரி, இப்போது விஷயத்துக்கு வருகிறேன். காலி மனை கை மாறியது. வாங்கியவர்கள் அப்படியே இடத்தை வைத்திருக்க வேண்டும் என்று வேண்டாத சாமி இல்ல. சாமி சொன்னாலும் ஆசாமி கேட்கணுமே.. வாங்கிய சில மாதங்களில் வீடு கட்டும் பணிக்கான பார்வைகள் வரத்தொடங்கின. சில வாரங்களிலேயே முடிவாகியும்விட்டது. எங்கிருந்தோ ஒரு பாரம் மனதில் வந்து தங்கியது. சொல்லவியலாத எதோ ஒன்று மனதைப் பிசைந்துகொண்டே இருந்தது. இடத்தை சுத்தம் செய்ய நாள் குறித்திட்டதும் அவர்கள் நாங்கள் வைத்த செடிகளை எங்களையே அழித்துத் தரச் சொன்னார்கள். மாதுளை பிஞ்சு வைத்திருந்தது. வாழை கன்று ஈன்றிருந்தது, மல்லி மலர்ந்திருந்தது, முருங்கை தளைத்திருந்தது, நெல்லி மரமாகி இருந்தது, செம்பருத்தி அழகிய இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்து நின்றது. நன்கு தளைத்திருக்கும் அதனை அவர்கள் வெட்டக் கூடாதாம். சொல்லி வைத்திருந்த ஆள் வராததால், வளர்த்ததை அக்காவே பெரும் வலியோடு அழித்துக்கொடுத்தார்.
பின்னர் பெரும் சப்தத்தோடு வண்டி வந்தது. எல்லாம் முடிந்தது. இடம் சுத்தமானது. வந்த புல்டோசர் சென்றுவிட்டது. அப்பாடா மரம் தப்பித்தது என்று அத்தனை மகிழ்ச்சி கொண்டேன். இரண்டு நாட்களில் வந்தது சேதி. வேர் நிலத்திற்குள் ஊடுருவும், பொறியாளர் அழிக்கச் சொல்கிறார் எனச் சொன்னார்கள். இடி இறங்கியது மனதில். நேரடியாக அந்த இடத்து அம்மாவைப் பார்த்து கோரிக்கை வைத்தேன். நல்லா வளர்ந்த மரம், கொஞ்சம் பாருங்களேன் என.. எல்லா இடத்திலும் அனுமதி வாங்கிவிட்டார்கலாம் அழிக்க.. அவர்கள் இரண்டு நாளில் ஆள் அனுப்புவார்கள் இல்லையெனில் இவர்களே எடுப்பதாகச் சொன்னார்கள். எனக்கு என்ன பேசுவதெனத் தெரியவில்லை. அந்த இரண்டு நாட்கள் சொல்ல முடியாத ஒரு வலியைச் சுமந்தேன். பிறரிடம் சொல்லும் போது “அவர்கள் இடம்”, “மரம் தானே” என்பது போன்ற பதில்கள். என்னால் பிள்ளையைப் போல என சொல்ல முடியவில்லை. சொன்னாலும் புரியுமா எனத் தெரியவில்லை. அந்த நாளும் வந்தது. எப்போதும் விடுப்பு எடுக்காமல் கல்லூரி செல்லும் நான், ஒருநாள் அதிசயமாக எடுக்க, அன்றே வந்தது அந்த மரம் வெட்டும் வாகனம். வந்தது முதல் என்னமோ பேரம் ஒத்துப்போகாமல் சத்தகமாக இருந்தது. எனக்கு இருப்புகொள்ளவில்லை. வேகமாய் கிளம்பினேன். எந்த திட்டமிடலும் இல்லை. செல்லும் முன் அண்ணாந்து பார்த்தேன். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தெரு முனையில் மீண்டும் ஒருமுறை பார்த்து நன்றி சொல்லி வாகனம் போன திசையில் போகலானேன். சிலமணி நேரம் கழித்து வந்தேன். வியந்து பார்த்த தண்டு துண்டு துண்டாக வாகனத்தில். கிளைகளும் இலைகளும் வீதியெங்கும். அடியோடு அறுக்கப்பட்ட மரத்தின் வாசம் எனக்கோ பிண வாசமாய்... இரண்டு நாள் உண்ண முடியவில்லை. வெளியில் வரப் பிடிக்கவில்லை.
காலம் மருந்து கொடுக்கும் தானே. கொடுத்தது. எப்படியும் அவ்விடம் மீண்டும் எங்கோ ஒரு வேர் விடும் என்ற அசரீரி மட்டும் கேட்கிறது. ஒரு சகாப்தம் அழிந்தது. அதைப் பராமரிப்பு மட்டுமே செய்து விட்டிருக்கலாம். வீதியில் போவோர் வருவோர் எல்லாம் கேட்ட கேள்விகளும், அடடா என்ற பார்வையும் ஒரு வாரம் இருந்தது.
கடந்த வாரம் பத்திரிக்கை வைக்க வந்தவர் அதே தெருவை 4 முறை சுத்தியும் எங்கள் வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் அழைத்திருக்கிறார். வகுப்பு முடிந்து வந்து நான் மீண்டும் அழைத்துப் பேசுகையில் சொன்னார்... "வேப்ப மரத்து வீடு கண்டு பிடிக்க முடியலை கண்ணு","பரவாயில்லைகா. நாங்க வந்துடறோம்". சொல்லி முடிக்கையில் வலியொன்று உணர்ந்தேன்.
வீட்டின் அடையாளத்துக்கு என்ன சொல்ல இனி... யோசிக்கிறேன்.




"Woah, Only you can see even a tree like this. This article has accomplished what the tree would have achieved in a century in someone else's care. Im gonna water my neem tree with tears of awe and appreciation! 🥺🌳
ReplyDeleteThank u dear
Deleteநீண்ட நாட்களாக மரங்கள் தரும் சௌகரியத்தில் இருந்தவர்களுக்கு அவை வெட்டப்படும் போது வலிக்கத்தான் செய்கிறது
ReplyDeleteநன்றி மூர்த்தி
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete