Saturday, July 1, 2023

*தேனோற்சவம்* - கோதை

     
                                      
 

முதல் படத்துல இருக்கற தேன்கூட்டுக்கு வயசு சரியா 30 நாள். ரெண்டாவது படத்துல இருக்கற கூட்டுக்கு ஆறரை (61/2 )மாசம். இதே எடத்துல, ஒரே வருஷத்துல  ​மூணாவது தடவையா கூடு கட்டியிருக்குதுங்க. இதுக்கு முன்னாடி ரெண்டு தடவையும் ஆள் வரவெச்சு, கயிறு கட்டி எறங்கி, தீப்பந்தம் புடிச்சு தேன்கூடு இருந்த சுவடே இல்லாம சுத்தமா அழிச்சப்பறமும் அதே எடத்துல திரும்பத் திரும்ப வந்து கூடு கட்டற சூட்சுமந்தான் என்னன்னு தெரியல.


தொடக்கத்துல பத்துப் பதினஞ்சு பூச்சிங்கதான் பறந்துட்டிருந்துது. ஒவ்வொரு பூச்சியும் பெருசு பெருசா இருந்துது. திடீர்னு ஒண்ணு மேல ஒண்ணு, ஒண்ணு மேல ஒண்ணுன்னு உக்கார்ற மாதிரி இருந்துது. அஞ்சு நிமிஷத்துல குட்டி மாங்கா அளவுக்கு கூடு மாதிரி ஒண்ணு தெரிஞ்சுது. அந்த, 'மாதிரி' அதிகபட்சம் அரைமணி நேரத்துல இவ்ளோ பெரிய (முதல் படம்) தேனடையா உருமாறனது / உருவாக்கனது மிகப் பெரிய ஆச்சரியத்த உண்டு பண்ணுச்சு. ஆனா, அத என்னால ரசிக்க முடியல. ஏனோ ஒருவிதமான அருவெருப்புதான் வந்துது. அதுக்குக் காரணம் மொய்மொய்மொய்னு நகந்துக்கிட்டே இருந்த பூச்சிங்கதான். 

சுறுசுறுப்புக்கு உதாரணமா தேனீக்கள சொல்லுவாங்க. அது எவ்வளவு பெரிய உண்மைங்கறத நேர்ல, அதும் இவ்வளோ பக்கத்துல பாக்கும்போது நல்லாவே புரிஞ்சுக்க முடியுது.  ஒரு நொடி கூட  அதுங்க சும்மாவே இருக்கறதில்ல. நகந்துக்கிட்டே இருக்குதுங்க. வெளில எங்கேயும் போற மாதிரி தெரியல. அப்பறம் எங்கருந்து தேனக் கொண்டு வந்து சேக்குதுன்னும் புரியல. 

பயந்து பயந்து பாத்துட்டிருக்கறப்ப, இந்தப் புறாங்க வந்து பலகை மாதிரி இருக்கற கல்லு மேல உக்காந்து அலகோட அலகு கொத்தி, கழுத்த வருடி, தலைய சாச்சு, ஒண்ணு மொகத்த ஒண்ணு பாத்துன்னு காதல் செஞ்சுகிட்டே, 
'காற்றுச் சீரமைப்பி' அதான் 'AC', அதுலருக்கற குழாய் வழியா சொட்டற அந்தத் தண்ணிய தலைய சாச்சு, அலக மட்டும் உள்ள விட்டு, தண்ணி குடிக்கறது ரசனைக்குரியதா இருக்கும்.  அதே நேரம் பயமாவும் இருக்கும். ஆனா, இதுங்க அதுங்களையோ, அதுங்க இதுங்களையோ ஏறெடுத்தும் பாக்காதுங்க. "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே"ன்னு சொல்ற மாதிரியே இருக்கும்.

பகல்ல கூடப் பிரச்சனை இல்ல. ராத்திரி நேரத்துலதான் சிரமமா இருக்கும். கதவு, சன்னல் எதையும் தெறந்து வைக்க முடியாது. லைட் வெளிச்சத்துக்குப் பூச்சிங்க வந்துரும். அப்படியும் கொசு வலைதான் போட்டிருக்கறமேன்னு சன்னலத் தெறந்து வெச்சாலும் அங்க வந்து உக்காந்துக்கிட்டு,  'ஙொய்' ன்னு சத்தம் பண்ணி, அதுங்க பண்ணற அலப்பற இருக்கே....எந்திரிச்சுப் போயி நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளி உட்ரலாமான்னு கோபமா வரும்.


'இந்தக் கூட்ட அழிச்சிரு, விட்டு வெச்சா பெரிய பிரச்னையாயிரும்'

'அமாவாசைக்கு ரெண்டு நாள் முன்னாடி அழிச்சா தேன் நெறையாக் கெடைக்கும்'

' நான் வேணா கூட்ட அழிச்சுத் தர்றேன். காசு வேண்டாம். தேன மட்டும் எடுத்துக்கறேன்'

'இந்த மாதிரி தேன் பூச்சி கடிச்சு எனக்குத் தெரிஞ்சவங்க செத்தே போய்ட்டாங்க'

'அடே சாமி! எந்தாச் சோட்டுத் தேன்கூடு?'

இந்த மாதிரி பயமுறுத்தியும், ஆசகாட்டியும், ஆசப்பட்டும், வியந்தும்
நெறையப் பேரு நெறைய விதமா கருத்து சொன்னாங்க.

ஆனா, யாரு சொன்னதையும் எம் மனசு ஏத்துக்கல. 

அதுங்க எத்தனையோ கஷ்டப்பட்டு எங்கெங்கயோ அலைஞ்சு திரிஞ்சு தேனக் கொண்டு வந்து சேக்குதுங்க. அதுங்களோட வாழ்வுக்கு ஆதாரமும் ஆகாரமும் அதுதானேன்னு நெனச்சப்போ அந்தக் கூட்டக் கலைக்கக் கூடாதுங்கறதுல நான் உறுதியா இருக்க ஆரம்பிச்சேன்.

கிட்டத்தட்ட ஏழு மாசமா இந்தத் தேனீக்களப் பாத்துக்கிட்டு இருக்கேன். திடீர்னு நூறு எறநூறு தேனீங்க கும்பலா இங்கயும் அங்கயுமா கொறஞ்சது பத்து நிமிஷத்துக்காட்டம் பறக்கும். ஏன் இப்படிப் பறக்குதுன்னு நெறைய நேரம் யோசிச்சிருக்கேன். 

அதப் பத்தித் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சப்பதான் ரகசியம் புரிஞ்சுது. அது என்னன்னா, வேலைக்காரத் தேனீ ஒண்ணு தேன் நெறஞ்சிருக்கற மலருங்க இருக்கற எடத்தக் கண்டுபிடிச்சு தேனை எடுத்துட்டு வந்து மத்த தேனீங்களுக்குக் குடுக்கும். அதக் குடிச்ச மத்த தேனீங்கள்லாம் அந்தத் தேனோட தரம், அளவு, அந்தத் மலர் இருக்கற தூரம் இதெல்லாம் பொறுத்து அழகாவும் உற்சாகத்தோடயும் ரொம்ப நேரம் ஆடுமாம்.

இதத் தெரிஞ்சுக்கிட்டப்பறம் அந்தத் தேனீங்க,

"பூந் தேனே தேனே வா
தாளம் போட"ன்னு பாட்டுப் பாடிக்கிட்டே ஆடறப்ப 
அதுல ஒரு நளினமும் வேட்கையும் இருக்கறத உணர முடிஞ்சுது.

ஆரம்பத்துல அதுக பண்ணன ரவுசு எரிச்சலையும் கோவத்தையும் உண்டாக்கனாலும் போகப் போக அது பழகிடுச்சு. ( ஒரு செயல தொடர்ந்து 90 நாள் செஞ்சா அது பழக்கமாயிருமாமா)

இப்பல்லாம் அதுங்க பெருசா நகர்ற மாதிரி தெரில (ஒருவேள கண்கள் அந்த நகர்தலுக்குப் பழகிருச்சோ?!).

"பூக்களிலுள்ள தேனை உண்ணும் தேனீ அதைத் தவிர வேறு எதையும் உண்பதில்லை. ஆனால், பூக்களில் உள்ள தேனன உண்ணும் 'ஈ' யானது அதை மட்டுமின்றி 'அனைத்தையும்' உண்ணும். நீ எப்பொழுதும் தேனீயாகவே இரு."

அப்படின்னு பத்தாம் வகுப்பு முடிக்கும்போது, என்னோட சீனியர் அக்கா 'ஆட்டோகிராஃப்' போட்டுக் குடுத்தது ஞாபகம் வருது.

தெனம் காத்தால எந்திரிச்சு, அந்தக் கூட்டத்தையும் அப்பப்ப அதுங்க ஆடற தேனோற்சவத்தையும்  (எப்புடி??.... நாங்களும் கண்டுபுடிப்பம்ல) பாத்தா, மனசுக்குள்ள மகிழ்ச்சி இழையோட ஆரம்பிக்கும்.

கொசுறு: 

"தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்து விட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சமிருக்காது" என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நாம வாழணும்னா தேனீக்கள வாழ விடணும்.

1 comment:

  1. தேனீ போலவே விறுவிறு சுறுசுறு...நகைச்சுவை இழையோடவும்...

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...