Friday, December 1, 2023

மனிதம் எனும் கானகத்தில் - 1- ஸ்ரீ மைத்தி


மனிதத்தின் மகத்துவம் மனிதநேயத்தில் அடங்கியுள்ளது. மனிதநேயத்தின் அடிப்படை அன்பு என்பது மறுக்க இயலாதது. இன்றைய காலகட்டத்தில் அன்பு என்பது தேவைக்கு உட்பட்டதாகவும் ஓர் சூத்திரத்தின் அடிப்படையில் இயங்குவதாகவும் அமைந்துள்ளது. 

"அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
 நண்ன்னும் நாடாச் சிறப்பு."

என்னும் வள்ளுவனின் வார்த்தைகள் காற்றோடு கரைந்து போனது போல் ஒரு மாயை ஏற்படுத்தினாலும், இன்றும் பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருப்பது அன்பு என்னும் அச்சாணியில் தான்.

நாகரிக உலகில் மாற்றங்கள் சாதாரணமாகி விட்டன. அசாதாரணங்களை புதிய இயல்பு நிலைகளாக (new normality) ஏற்றுக் கொள்ள பழகி விட்டோம். எளிமையானவைகளும், சாதாரணங்களும் புறந்தள்ளப்பட்டும், சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டும், இடிபட்டும் காணாமலே போய் விட்டது. அகத்தை விடுத்துப் புறத்தை மட்டுமே இணைத்து தொடுத்துக் கொண்டே செல்கிறோமோ வாழ்வை? என்ற கவலை அடிக்கடி  மேலோங்குகிறது.

ஒரு திரைப்படத்தைப் பார்க்கலாம் என்பதை எதைப் பொறுத்து முடிவு செய்கிறோம்? அந்தத் திரைப்பட இயக்குனரின் அணுகுமுறை அல்லது அதில் நடித்திருக்கும் நடிகர் நடிகை அவர்களின் திறமை அல்லது இசை அமைப்பாளரின் மீது உள்ள ஈர்ப்பு. இதுபோல பல காரணிகள் உள்ளன. இவ்வாறாக மூன்று மணி நேரத் திரைப்படத்தை நோக்கவே அதோடு சம்பந்தப்பட்டவர்களின் அணுகுமுறை நமக்கு பிடித்திருந்தால் மட்டுமே தேர்வு செய்கிறோம்.

நம்முடன் நம் வாழ்வில் பயணிக்கும் சக மனிதர்கள் நம்மை இணைத்துக் கொள்ள, நம்மிடம் நெருங்க நிச்சயம் நமது அணுகுமுறை என்பது ஒரு மிகப்பெரிய காரணியாக அமையும் என்பது உண்மை அல்லவா.

நாம் யாரும் தனித்து இயங்கி விட முடியாது. எவ்வாறான மனம், பணம், பதவி, புகழ் பலங்கள் அமையப் பெற்றாலும் சக மனிதனின் அன்பென்னும் பலம் நம்மை அடித்தாங்கும் அஸ்திவாரம். அத்தகு அஸ்திவாரம் அமைந்திட நாம் மற்றொருவரின் வாழ்வின் அஸ்திவாரமாக ஏதேனும் பங்களித்திட வேண்டும் தானே.

இது எடுத்தால் கொடுக்கலாம், கொடுத்தால் எடுத்துக் கொள்ளலாம் என்ற வரைமுறைக்கு உட்பட்டது மட்டுமல்லாமல், கொடுக்க நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை அளிக்கும் வாழ்வின் வரம் ஆகும்.

இதோ ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர். பொருட்கள் அனைத்தும் உள்ளன. உங்களுக்குத் தேவையான பொருளை நீங்களே தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மற்றொரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நீங்கள் சென்றவுடன், உங்களுக்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என கேட்டு, அந்த பொருள் இருக்கும் இடத்தை உங்களுக்கு சுட்டிக் காட்டி விட்டு, அந்த பொருளில் ஏதேனும் ரகங்கள் இருந்தால் அந்தந்த ரகங்களைப் பற்றியும் அதன் விலை பற்றியும் உங்களுக்கு எடுத்துக் கூறி, இவ்வாறு பல விதமாக உங்களின் தேவையை அறிந்து செயலாற்றிப் பொருட்களை பெற்றுக்கொண்டு கடையை விட்டு வெளியே செல்லும் வரையான ஓர் உபசரிப்பு கிடைத்தால், அடுத்த முறை எந்த கடைக்கு நீங்கள் சொல்வீர்கள் ? 

இதையும் மீறி உணர்வுகளுக்கு இடையேயும், உறவுகளுக்கு இடையேயும் பிரச்சனைகள் வர காரணமாய் இருப்பது, நாம், நாம் நினைப்பது போலவே பிறரும் நினைக்க வேண்டும் என எண்ணுவதும், நம் எதிர்பார்ப்புகளின் படி பிறர் செயலாற்ற வேண்டும் என நினைப்பதும் தான். அவரவர் அவரவருக்கான புரிதல் தளத்தில் மட்டுமே இயங்க முடியும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். 

வாழ்க்கையில் ஒருவர் அவர் பெற்றிருக்கும் அனுபவ அறிவிற்கு தகுந்தாற்போல் அவரின் சிந்தனை ஓட்டம் இருக்க முடியும். பல ஆண்டுகளாக கார் ஓட்டி அனுபவம் இருப்பவர் அதைக் கையாள்வது எளிதாக இருக்கும். முதன்முறையாக கார் ஓட்டுபவர் அவரைப் போலவே லாவகமாக ஓட்ட இயலாது. ஏனெனில் அவருக்கு அதில் அனுபவம் இல்லை. அவ்வளவே தான். இதை வாழ்வின் அனைத்து படிநிலைகளிலும் பொருத்திப் பாருங்கள். யாரும் யாரை விடவும் பெரிதானவரும் அல்ல சிறிதானவரும் அல்ல என்பது புரியவரும்.

நான் மட்டும் ஏன் அன்பு செலுத்த வேண்டும்? என்ற கேள்வி அடிக்கடி உங்கள் மனதில் எழுந்தால், உங்களுக்கான புரிதலுக்காக இதோ  ஓர் சிறிய பரிசோதனை. நான் இங்கு முன்வைக்கும் நான்கு கேள்விகளுக்குள், எந்த கேள்விக்கான பதில் உங்கள் மனதில் சட்டென்று புலப்படுகிறது என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 

1. இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடைபெற்ற போது மத்திய நிதியமைச்சராக இருந்தவர் யார்?

2. தற்போது உலக செல்வந்தர்கள் வரிசையில் முன் நிற்கும் இந்தியர் யார்?

3. உலக அழகிப் பட்டம் பெற்றிருப்பவர் யார்?

4. உங்கள் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்திட்ட  சூழலில் பங்கேற்று துணை நின்றவர் யார் ?

இந்த நான்கு கேள்விகளுள் நிச்சயமாக நான்காவது கேள்விக்கான பதிலை நம் மனம் சட்டென்று உரைத்திருக்கும். இதுதான் அன்பின் ஆர்ப்பரிய பலம். இப்போது உங்கள் வாழ்வின் அந்த திருப்புமுனையான சூழ்நிலையையும் அதற்குத் துணை நின்ற நபரையும் நினைவுபடுத்திப் பாருங்கள். அவர் தனக்கான கம்போர்ட் ஜோனில் (Comfort zone) இருந்து சிறிதளவேனும் வெளிவந்து உங்கள் மீது அக்கறை கொண்டு, ஏதேனும் ஒன்றை செய்ததால் மட்டுமே இன்றும் அவர் பெயரும் முகமும் பசுமரத்தாணி போல பதிந்து இருக்கிறது. 

இதேபோல் உங்கள் உடன் இருக்கும் நபர் உங்களை அவரின் வாழ்வில் முக்கியமானவராகக் கருதிட நாமும் கொஞ்சம் அன்பிற்கான மெனக்கெடுதல் என்பதை செய்யத்தானே வேண்டும்.

அன்பினை மதிப்பு கூட்டிய விஷயமாக வழங்குவது என்பது மிகவும் எளிமையானது. உறவுகளின் தொடக்கத்தில் நாம் காட்டும் அக்கறையை ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்தினால் மட்டுமே போதும். அந்த உறுதியானது ஓர் நலம் விசாரித்தலாக இருக்கலாம்.

'கவலைப்படாதே', 'நான் இருக்கிறேன்', 'எல்லாம் சரியாகிவிடும்', 'பார்த்துக்கலாம்' என்ற நம்பிக்கை  வார்த்தைகளாக இருக்கலாம் , 'இன்றைய நாள் எப்படி இருந்தது ?' என்ற சாதாரண கேள்வியாக இருக்கலாம், பிறந்த நாள், புது வருடம், பண்டிகைகள் போன்ற நாட்களில் வாழ்த்துகளை சடங்காக இல்லாமல் உணர்வுகளுடன் பகிர்ந்து கொள்வதாக இருக்கலாம். அவ்வப்போது மிகச் சிறிய பரிசு பொருட்களை தருவதாக இருக்கலாம்.  அடிக்கடி,  'உன்னை நேசிக்கிறேன்', 'உன்னை மதிக்கிறேன் (I value You)' 'எனக்கு உன்னுடன் ஆன உறவு முக்கியமானது' என உரைப்பதாகவும் இருக்கலாம்.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் உங்கள் அன்பு வெளிப்படுத்தப்படும் போது தான் அதற்கான அங்கீகாரத்தைப் பெற இயலும். 'வெளிக்காட்டினால் தான் அன்பா', 'மனதிற்குள் உனக்காக எவ்வளவு அன்பினை சேகரித்து வைத்திருக்கிறேன்', 'சொன்னால் தான் தெரியுமா ',' எனக்கு அன்பினை வெளிப்படுத்தத் தெரியாது', என்ற பழைய பஞ்சாங்கங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு,  அன்பினை வெளிப்படுத்த ஆரம்பிப்போம். அன்பை ஒரு தொற்றுநோயாக மாற்றுவோம். 

வைரம் பட்டை தீட்டப்பட தீட்டப்பட மிளர்வதைப் போல், அன்பு வெளிப்படுத்தப்பட வெளிப்படுத்தப்பட உறுதியாகிறது. அந்த உறுதி எவ்வாறான தடைளையும் உடைத்தெறியக்கூடிய வலிமை பெற்றதாக அமைகிறது.

ஆகவே உங்கள் அன்புடன், உங்களது நேரம் மற்றும் வெளிப்பாடு என்னும் கிரியா ஊக்கிகளை இணைத்து மதிப்பு கூட்டிய, விலை மதிக்க முடியாத விஷயமாக சக மனிதர்களுடன் பகிரத் தொடங்குங்கள். 

மகிழ்ந்திருப்போம் மனிதம் எனும் கானகத்தில்.
                               
-கானகப் பயணம் தொடரும் . . . 

2 comments:

  1. அன்பாலே அன்பு செய்வோம். அவரவர் அவர் புரிதலுக்கான தளத்தில் இருந்து தான் இயங்க முடியும்..நல்ல கருத்து.. வாழ்த்துக்கள் மா

    ReplyDelete
  2. அன்பே வெறுப்பையும் வெற்றி கொள்ளும். உணர்வு மிக்க தொடர். சிறப்பான கருத்துகள்.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...