Friday, December 1, 2023

வாழ்க்கை- உதயபாஸ்கர் நாச்சிமுத்து

காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. 

[ காமம் = காதல், சான்ற = நிரம்பிய, கடைக்கோள் = கடைக்கோடி (the end), காலை = பொழுது, ஏமம் = இன்பம் அல்லது மகிழ்ச்சி, மக்கள் = பிள்ளைகள், துவன்று = நிறைந்து அல்லது கூடி நின்று, அறம்புரி(யும்) = நெறியுடன் வாழும், சுற்றம் = உறவு, நட்பு என்று சுற்றி வாழும் மனிதர்கள், கிழவன் = தலைவன், கிழவி = தலைவி, பயிற்றல் = பயின்றல்->பயில்தல்->பயிலுதல், சிறந்தது பயிற்றல் = அறம் பயிலுதல், இறந்ததன் பயனே = இறங்கியதன் -> காதல் வாழ்விலிருந்து (களவிலிருந்து) திருமண வாழ்வுக்குள் (கற்புக்குள் அல்லது திண்மையான வாழ்வுக்குள்) இறங்கியதன் பயன் ]

என்னும் தொல்காப்பிய நூற்பா பண்டைய தமிழரின் வாழ்க்கை முறை பற்றி பேசுகிறது. 

இதன் பொருள், “காமம் நிரம்பிய காலம் நிறைவுறும்பொழுது, இன்பந்தரும் பிள்ளைகளோடு நிறைந்து, அறம் புரிந்து வாழும் சுற்றத்தாரோடு இணைந்து தலைவனும் தலைவியும் அறம் பயின்று வாழ்தல் காதல் வாழ்விலிருந்து (களவிலிருந்து) மணவாழ்வுக்குள் (கற்புக்குள்) இறங்கியதன் பயனாகும்”.

+++++

இந்தத் தொல்காப்பிய நூற்பா நமக்குச் சில செய்திகளைக் கொடுக்கிறது. 

காதல் வயப்பட்டு, கண்ணோடு கண்கள் பேசி, ஊராருக்குமுன் முன்பின் தெரியாதவர்கள்போல் காட்டிக்கொண்டு, ஊருக்குத் தெரியாமல் சந்தித்துப்பேசி, சந்திக்க முடியாமல் தவித்து, ஒரு மயக்கத்தில் வாழ்வது களவு வாழ்வு. காலம் மாறினாலும் காதல் என்றும் மாறுவதில்லை! 

காமம் மனித இயற்கை. மதங்கள் சொல்வதுபோன்று அவை சிற்றின்பமோ பாவச்செயலோ இல்லை. மணமுடித்தபின்பு, காமத்தின் பயன் மக்கட்பேறு. தலைமுறைகள் கடந்து மனித இனம் செழித்து வந்திருப்பது காமத்தால்தான்!
அறஞ்சார்ந்த வாழ்வே சமூக வாழ்வு. தலைமுறைதலைமுறைகளாக, பண்டைய தமிழ்ச் சமூகத்தில் அறம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆணும் பெண்ணும் மணமுடித்து, காமத்தில் மயங்கிக் கிடந்து, பிள்ளைகளைப் பெற்றபின் அறம் பயிலுதல் சமூக வாழ்விற்கான அடிப்படை.

காதலிலிருந்து, மணமுடித்து இல்லறத்தில் இறங்குவதே சிறந்த சமூக வாழ்வை வாழ்வதற்காகத்தான்!

தொல்காப்பியத்தின் இந்த நூற்பா சொல்லும் வாழ்வியலை முழுமையாக விளக்கித் தொகுப்பது திருக்குறள். வாழ்க்கை இல்லறத்திலிருந்து தொடங்குகிறது. 

+++++

வாழ்க்கை என்பது தனிமனித வாழ்க்கை மட்டுமல்ல; உறவு, நட்பு, முன்பின் தெரியாத மனிதர்கள் என்று பலரோடு சேர்ந்து இயங்கி வாழ்வதே ரத்தமும் சதையுமான வாழ்க்கை. அதில், எது சரி, எது தவறு என்பது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. தனிமனித வாழ்க்கை நெறிப்படாமல் சமூக வாழ்க்கை நெறிப்படுவதில்லை. 

வாழும்முறையில் ஒரு எல்லை “தனக்கு எது லாபமோ அதுவே தர்மம்” என்று வாழ்வது. தனக்குப் பிடித்ததெல்லாம் கிடைக்கவேண்டும் என்று தேடுதலோடு நின்றுவிட்டால் பிறருக்கு எந்த பாதிப்பும் இல்லை. தனக்குப் பிடித்தது மற்றவருக்குக் கிடைக்கும்போது ஏற்படும் மன உளைச்சலால் பிறர் வாழ்க்கையைக் கெடுக்கத் துணியும் மனநிலை சமூகத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறது. மனதில் இருக்கும் ஆற்றாமையாலோ அல்லது திமிராலோ பலர்முன் பிறரைக் கேலி செய்வது, முன்விட்டுப் பின்னே புறம்பேசுவது, கூடவே இருந்து குழிபறிப்பது, பிறர் உழைப்பைச் சுரண்டி வாழ்வது என்று அளவு கடந்து போகும்போது சமூகம் சீரழியத் தொடங்குகிறது! 

“சகமனிதரை உயர்வு தாழ்வின்றி மதித்து, நேசித்து, பிறரிடம் கையேந்தி நிற்காமல் தன் உழைப்பில் ஈட்டிய செல்வத்தில் இயன்றளவு பிறருக்குக் கொடுத்து உதவி வாழ்வதே வாழ்க்கை” என்று வாழ்வது இன்னொரு எல்லை. இதில் எதிர்பார்ப்பு, வெற்று நம்பிக்கைகள், கோபம், பொறாமை போன்றவற்றுக்கு இடமில்லை. தெரியாமல் தவறு செய்வதும், அதற்கு ஒரு காரணம் சொல்லி நியாயப்படுத்தாமல் தவறை உணர்ந்து பாடம் கற்றுக்கொள்வதும் இயல்பாக அமைந்திருக்கும். கல்வி, செல்வம், காதல், காமம் என யாவும் மனிதவாழ்வின் இயற்கை என்று அமைந்திருக்கும். புனிதம், தீட்டு என்ற கற்பிதங்களைவிட சமூக அமைதி முன்னுரிமை பெற்றிருக்கும். அமைதியான சமூகத்தில் அறிவியல், பொருளாதார முன்னேற்றம் மேம்பட்டிருக்கும்.

இந்த இரண்டு எல்லைகளில் திருக்குறளும், தொல்காப்பியமும், பிற சங்கப்பாடல்களும் இரண்டாம் எல்லையைப் பேசுகின்றன. தனி மனித வாழ்க்கை நெறி என்பது இயன்றளவு மனதைச் சலனப்படாமல் வைத்திருப்பதே என்கிறது திருக்குறள். இந்த நெறியை அறம் என்று பண்டைய தமிழர்கள் அழைத்திருக்கிறார்கள். அறமற்ற செல்வமும் அதிகாரமும் சமூகப் புற்றுநோயாக மாறிவிடுகின்றன. அறமற்ற காமம் போதையாக மாறிவிடுகிறது! 

இதனாலேயே பண்டைய தமிழ்ச் சமூகம் அமைதியாக வாழ்ந்தது என்று சொல்வதற்கில்லை. மக்களின் வாழ்க்கை எல்லாக் காலத்திலும் இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடையிலேயே அமைகிறது. இயன்றளவு இரண்டாம் எல்லையை நோக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும் நெறியாக பண்டைய தமிழ்ச் சமூகம் வகுத்ததே அறம்-பொருள்-இன்பம் என்ற கோட்பாடு. 

+++++

இன்றைய காலக்கட்டத்தில் தனிமனித வாழ்க்கையை யாரும் யாருக்கும் கற்றுத் தருவதில்லை! மதமும் கடவுள் நம்பிக்கையும் மனிதனை நெறிப்படுகின்றன என்று சொல்லப்பட்டாலும், தான் வணங்கும் தெய்வத்தால்தான் இக்கட்டான சூழலிலிருந்து மீண்டதாக நம்பினாலும், தவறு செய்யும்போது மட்டும் கடவுளும் மதமும் நம் நினைவுக்கு வருவதில்லை! மாறாக, தவறு செய்வதற்கு ஒரு காரணத்தைச் சொல்லி நம்மை நாமே தேற்றிக்கொள்கிறோம். நினைவு தெரிந்த நாளிலிருந்தே நல்லது கெட்டது நம்முள் விதைக்கப்பட்டிருந்தால், தவறு செய்வதும் தடம் புரள்வதும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.  

நாம் கருவாக உருவாகி, குழந்தையாய்ப் பிறந்ததிலிருந்து, வளர்ந்து மணமாகி, அடுத்த தலைமுறைக்கான ஒரு குழந்தை பெறும் வரையிலான காலக்கட்டத்தை நெருங்குவதற்குள், ஏறத்தாழ முப்பதாண்டுகள் ஓடிவிடுகின்றன. இந்த இடைவெளியில் முதல் ஐந்தாண்டுகள் உலகைப் புரிந்து கொள்ளும் பருவம்; மூளை வேகமாகக் கற்றுக் கொள்ளும் பருவம். மொழியும், இயல்பும், பழக்க வழக்கமும், விருப்பு வெறுப்பும், நம்பிக்கைகளும் குழந்தைக்குள் விதைக்கப்படும் பருவம். பிஞ்சிலே விதைந்த இயல்பு போகும்வரை கூடவரும்! அடுத்த பதினைந்து, பதினெட்டு ஆண்டுகள் படிப்பும் விளையாட்டும் பாலின ஈர்ப்புமான ஒரு மாய உலகத்தில் மூழ்கியிருக்கும் பருவம். இதில் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பேதுமில்லை!

நிலையான வருமானம் அமைந்து, மணமான மயக்கத்தில் இருந்து மீள்வதற்குள் குழந்தைப்பேறு. குழந்தை பிறந்த பின்பு, தாய்க்கு நெருக்கடியான காலம். ஈன்றெடுத்த உடம்பு குழந்தைக்குப் பாலூட்டவும் வேண்டும்; வேலையும் செய்யவேண்டும்; நல்ல தூக்கமிருக்காது! எதற்கெடுத்தாலும் எரிச்சல் வரும். உடலும் மனமும் குழந்தைப் பேற்றிலிருந்து மீண்டுவரவே ஆண்டுகள் பிடிக்கும். இடையில் மூத்த தலைமுறையுடன் ஏற்படும் உரசல் என்று எல்லாம் சேர்ந்து கணவனிடம் வெடிக்கும். 

பிறந்த குழந்தை கண் விழிக்கும்போது, இருள் விலகி ஒளி கூசும். பார்வை நிலைப்பெறவே வாரங்கள் பிடிக்கும். தன்னைச் சுற்றியிருப்பவற்றைப் பார்த்து, கேட்டு, பசிக்கு அழுது, தூங்கியே சலிப்பதென சில மாதங்கள் ஓடிவிடும். பின்னர், தவழ்ந்து பழகி, ஆறு மாதங்களுக்குள் உட்கார்ந்து, நடைபோட ஓராண்டு முடிந்துவிடும். குழறலாக மழலை பேசும் அந்தப் பருவம் மிக அழகானது! புரிதலற்ற தாய்தந்தை கோபம், சண்டை, சச்சரவு என்று தவித்துக் கொண்டு இருக்கும்போதே, ஓராண்டு வளர்ந்த குழந்தைக்குப் புரிதல் தொடங்கி விடுகிறது. பெற்றோர், பெற்றோரின் பெற்றோர் என இரண்டு தலைமுறைகளின் உரசலில், “இருக்குற வேதனை போதாதுன்னு இந்தச் சனியன் வேற உசுர எடுக்குது” என்று தாய் தந்தையிடம் மொத்து வாங்கும்போதில் குழந்தையின் மனதில் படியத் தொடங்கும் கசடுகள், வளரவளர பெருகுமே யொழிய குறைய வாய்ப்பில்லை. அவரவர் வளரும் சூழலுக்கு ஏற்றவாறு கசடுகள் கூடவோ குறையவோ இருக்கலாம். 

கோபதாபங்களுக்குள் சிக்கித் தவித்து, மனதுக்கு இதமளிக்கும் புரியாத தத்துவக் குப்பைகளுக்குள் மூழ்கி, எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது புரிபடுவதற்குள் முதுமை வந்துவிடுகிறது. புரிபடாத வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. அந்த வேளையில் நிலைகுலைந்திருப்போம். 

++++++

அன்றைய மக்களுக்கும் “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்ற கேள்வி எழுந்திருக்கிறது. “நன்றாங்கால் நல்லவாக் காண்பவர், அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்” என்கிறது திருக்குறள். இதன் பொருள், “நல்லது நடக்கும்போது மகிழ்ச்சி கொள்பவர்கள், துன்பம்வரும் வேளையில் மட்டும் அல்லல் படுவது ஏன்? நல்லதை ஏற்றுக்கொள்பவர்கள் கெட்டதையும் ஏற்றுக் கொள்வதுதானே முறை?”

இதுமட்டுமல்ல, “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப (பொய்யும் புரட்டும் தோன்றிய பின்னர் பெரியோர் திருமணமுறைகளை வகுத்தனர்)” என்ற தொல்காப்பிய நூற்பா, எல்லோரும் அறஞ்சார்ந்து வாழ்ந்த தூய்மையான சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. அன்றைய காலக்கட்டத்தில் பொய்யும் புரட்டும் சமூகத்தில் இருந்திருக்கின்றன. அன்றைய மக்கட்தொகை குறைவு என்பதனால் அறநெறிகள் நிலைப்பட சமூக அழுத்தம் ஓரளவு உதவியிருக்கும். 

திருக்குறள் கூறும் அறநெறிகள் இன்றும் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதுபோன்று தோன்றுகின்றன. திருக்குறள் அறத்தைத் தவிர வேறெதையும் உயர்த்திப் பிடிக்கவில்லை. குறிப்பாக, திருக்குறள் இன்னார் இன்ன செய்யவேண்டும் என்று கூறும் சட்டங்களைப் பேசவில்லை. சட்டங்கள் அந்தந்த காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு மாறக்கூடியவை. ஆனால், நெறிகள் மாறுவதில்லை. 

திருக்குறள் தொகுத்துக் கூறும் நெறிகளில் பெரும்பான்மையானவை இன்றும் பொருந்துகின்றன. சில பொருந்தாமல் நிற்கின்றன. பொருந்தாதனவற்றைப் புறந்தள்ளிவிட்டு, மற்றவற்றிற்கு இன்றைய காலக்கட்டத்தின் நம்பிக்கைகளை வைத்து வண்ணம் பூசாமல் நோக்கி, அறம் பொருள் இன்பத்துக்கான தொடர்பைப் (checks-and-balances) புரிந்துகொண்டால் வாழ்க்கை புரிபடும். தெளிவும் கிடைக்கும்!

2 comments:

  1. நல்லது நடக்கும் போது மகிழ்ச்சி அடைகிறோம் துன்பம் வரும் போது அல்லல் படுகிறோம் ஏன்? மகிழ்ச்சி துன்பம் இரண்டையும் சரியாக பார்க்கும் மனநிலை வாய்க்க நிறைய மனப்பக்குவம் தேவையாக இருக்கிறதுங்க.. சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்க்கை பற்றிய ஆழமான, அழகான அலசல்..அதற்கேற்ற உங்கள் ஓவியம் கூடுதல் அழகு

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...